மொழி ஒரு வாகனம் மட்டும்தான்


நேற்று நவம்பர் 5, 2011 டொராண்டோவில் எழுத்தாளர் நரசய்யா அவர்களின் உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒற்றை வெற்றுச் சொல்லும் இல்லாத அதே சமயம் மிக இயல்பான பேச்சாக அது இருந்ததால் எனக்குப் பிடித்திருந்தது. தமிழன் புனைவிலக்கியங்களில் காட்டிய அக்கறையை ஆராய்ச்சி இலக்கியங்களில் காட்டவில்லை என்ற உண்மையைப் பல சம்பவங்களின் மூலமாக உணரச்செய்தார்.

தமிழில் முதல் சிறுகதை எழுதியவர் பாரதி, இந்தியாவில் முதலில் விமானம் வாங்கியவர் ஆவுடையப்பச் செட்டியார் என்ற தமிழர், கப்பல் என்பது தெலுங்குச் சொல் என்று பல சுவாரசியமான தகவல்களை அநாயாசமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

நீயா நானா கோபிநாத் மொழியைப் பற்றி இவரிடம் கேட்டபோது, மொழி ஒரு வாகனம் மட்டும்தான் அதுவே போய்ச்சேரும் இடம் அல்ல என்று கூறியதாகச் சொன்னார்.

நிகழ்ச்சி முடிந்தததும் நரசய்யாவோடு தனியே உரையாடும் வாய்ப்புக்கிடைத்தது. ஐயா ஒரு சிறு கேள்வி, உங்கள் கடல்வழி வாழ்வில் எத்தனையோ மனிதர்கள் புலம்பெயர்ந்து செல்வதையும் வாழ்வதையும் கண்டிருப்பீர்கள் கேட்டிருப்பீர்கள், அவர்கள் சென்ற இடங்களின் தங்களின் கலாச்சாரம் பண்பாடு போன்ற சொந்த அடையாளங்களைத் தொலைக்காமல் வாழ என்னென்னவெல்லாம் அவசியம் என்று நினைக்கிறீர்கள், ஒவ்வொன்றாக கூறுங்கள் என்று கேட்டேன்.

மொழி மட்டும்தான் என்று சட்டென பதில் அளித்தார். என்றால் மொழி என்பது ஒரு வாகனம் மட்டும்தான் அதே சமயம் சுய அடையாளத்தோடு வாழும் பலருக்கு அதுவே வாழ்க்கை என்று அவர் கூறுவதாக நான் எடுத்துக்கொண்டேன்.

இவரின் எந்த நூலை வாசிக்காவிட்டாலும் ’கடல்வழி வணிகம்’ என்ற நூலை கட்டாயம் வாசித்துவிடுங்கள் புகாரி என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் என்னிடம் கூறினார். நரசய்யாவின் அத்தனை எழுத்துக்களையும் வாசித்துவிடவேண்டும் என்ற ஆவல் மூளையில் கோடு கிழித்துக்கொள்ள விடை பெற்றுக்கொண்டேன்.

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ