நிறைந்த விழி விரித்து
நிலவைப் பார்த்து
காதலிக்கிறேன்
உன்னை எப்போதும் என்று
உயிரின் உதடுகளும்
ஓசையெழுப்ப
சொல்லித் திரிகிறேன்

சட்டென்று
நிலவுக்கு இன்று
பேச்சு வந்துவிட்டால்?

என்னைப் பார்த்து
அது
பேசவும் தலைப்பட்டால்?

என்னதான் சொல்லும்
அந்த நிலா என்னிடம்?
 
 உலகுக்கே
  ஒளித்தேன் பொழிவதன்றோ
  என் வழமை

 பிதற்றிச் சரிவதோ
 உன் நிலைமை?

 என்னைத்
 தொடும் தூரத்தில்
  உன் விரல்கள் இல்லாதவரை
  பித்தனே நீ
  பிழைத்தாய் போ....


நிலா
இப்படியும் பேசுமா?
ஆச்சரியம்
என்னை ஆக்கிரமிக்க
 எண்ணச்சிறகுகள்
எனக்குள் படபடகின்றன

 உறங்கும்போதுமட்டுமல்ல
  இதயம் காணாததைக் கண்டு
  விழித்துக்கொள்ளும்போதும்
  கனாக்கள் பீறிடுகின்றன

 உறக்கக் கனவென்பது
  விழிக்கு உள் நிறையும்
  விருப்பச் செழிப்பு

 உறங்கா கனவென்பதோ
  விழிக்கு வெளியில்
 விரிந்து பரந்து
 விண்முட்டி நிறைந்து
  கொதிக்கும் உயிரழிப்பு

ஓ..
என்றால்
நான் நிலவிடம்
இனி என்னதான் சொல்வேன்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆக்கிரமிக்கும் ரசினையான எண்ணச்சிறகுகள் எங்களுக்குள்ளும் படப்படக்கின்றன...

வாழ்த்துக்கள்...