Showing posts with label * * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும் 2. Show all posts
Showing posts with label * * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும் 2. Show all posts
உனக்கு ஒருநாள்
நான் ஒரு
கவிதை எழுதுவேன்...

அது
உன்னைப்போலவே
வெகு அழகானதாக
இருக்கும்

ஆனால்
நீயே கவிதையாக
இருப்பதால்தான்
அதை
எப்படி எழுதுவதென்று
யோசிக்கிறேன்

கவிஞர் புகாரி
20171122
கணினிக்குள் கனிந்துருகும்
கண்ணறியாப் பொன்நிலா
அவள் என்நிலா

அன்பு கொய்து கனவு நெய்யும்
உறவு நெஞ்சப் பொய்கை
அவள் என் நம்பிக்கை

முகம்காணும் ஏக்கம்
நெஞ்சக் கூட்டில்
ஆயிரம் பெண்டுலம்
அதை
அழகாய் மறைக்கும்
வண்டுளம்

உனக்காகப்
பின்னப்படும் சொல்லாரங்களை
ஏதுமறியாதவளைப் போல
யாருக்கென்று கேட்பது
சொல்லவொண்ணாச்
செல்லக் குறும்பு செல்லம்

வாழ்க நீ
பஞ்சுப்பொதி நெஞ்சே

என் தனிமைக்குள்
ஏற்றிவைத்த உன் தீபங்களில்
என் விழிகள் மலர்கின்றன
விழாக்கோலம் பூண்டு

நன்றிகளின் ஊர்வலத்தை
உன் நாடுவரச் செய்கிறேன்
கடவுச்சீட்டு கேளாமல்
கதவு திறந்து நில்

ஏதோ ஒரு புள்ளியில்
எதிர்பாரா தருணத்தில்
இதய விரல்கள் கவ்வி
புல்லரித்துகொள்வதை...
தடைகளேதுமின்றி
அனுபவிக்கும் அனுபவிப்புக்கு
ஒரு பெயர் சூட்ட வேண்டுமென்றால்
என்னவென்று சூட்டுவது?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி
நிறைந்த விழி விரித்து
நிலவைப் பார்த்து
காதலிக்கிறேன்
உன்னை எப்போதும் என்று
உயிரின் உதடுகளும்
ஓசையெழுப்ப
சொல்லித் திரிகிறேன்

சட்டென்று
நிலவுக்கு இன்று
பேச்சு வந்துவிட்டால்?

என்னைப் பார்த்து
அது
பேசவும் தலைப்பட்டால்?

என்னதான் சொல்லும்
அந்த நிலா என்னிடம்?
 
 உலகுக்கே
  ஒளித்தேன் பொழிவதன்றோ
  என் வழமை

 பிதற்றிச் சரிவதோ
 உன் நிலைமை?

 என்னைத்
 தொடும் தூரத்தில்
  உன் விரல்கள் இல்லாதவரை
  பித்தனே நீ
  பிழைத்தாய் போ....


நிலா
இப்படியும் பேசுமா?
ஆச்சரியம்
என்னை ஆக்கிரமிக்க
 எண்ணச்சிறகுகள்
எனக்குள் படபடகின்றன

 உறங்கும்போதுமட்டுமல்ல
  இதயம் காணாததைக் கண்டு
  விழித்துக்கொள்ளும்போதும்
  கனாக்கள் பீறிடுகின்றன

 உறக்கக் கனவென்பது
  விழிக்கு உள் நிறையும்
  விருப்பச் செழிப்பு

 உறங்கா கனவென்பதோ
  விழிக்கு வெளியில்
 விரிந்து பரந்து
 விண்முட்டி நிறைந்து
  கொதிக்கும் உயிரழிப்பு

ஓ..
என்றால்
நான் நிலவிடம்
இனி என்னதான் சொல்வேன்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

காதலித்ததுண்டா கிறுக்கனாய்ப் பினாத்தி




















இருநீல மலர்களைச்
சிறுமுகப் பொய்கையில் பூத்தவளே
நான் உன்மீது கொண்ட பிரியத்துக்குப் பெயர் காதலென்றால்
காதல் தெய்வீகமானது அழிக்க முடியாதது இணையே இல்லாதது

ஒருநாள் உன்னை வர்ணிக்கும் தாகத்தில்
உனக்கொரு உவமைதேடிப் புறப்பட்டேன்
என் புறப்பாடு விரயமாகிவிடுமோ என்றுநான் அஞ்சியபோது
நீயே கிடைத்தாய் நான் மகிழ்ந்துபோனேன்

நீல நதிக்கரையில் நீ ஒருநாள் பாதம் பதித்தபோது
அது நின்றுவிட்டதைக் கண்டு நீ திடுக்கிட்டுப் போனாய்

உன்னைக் காணத்தான் அது நின்றுவிட்டது
என்று நான் புரியவைத்தபோது
உன் புன்னகை மலர்களை என்மீது அபிசேகித்தாய்

ஒருநாள் நான் பிரம்மனைக் கனவில் கண்டு
கொன்றுவிட்டேன் என்றபோது நீ அதிசயித்தாய்

அவன் மட்டும் என் பௌர்ணமியைத்
தொட்டுத் தீட்டியிருக்கலாமோ என்றபோது
நீ சிணுங்கினாய் நான் சிதைந்துபோனேன்

சூரியக் கதிர்களின் சர்வாதிகாரத்தில் ஓர்நாள்
நான் உன்னைக் கண்டேன்
என் முகத்தில் பூத்த வியர்வை மொட்டுக்களைப்
பனிமலர்களோ என்று நான் பறித்துக்கொண்டேன்.

உன் இதய வனத்தில் நான் ஒதுங்கிக்கொள்ள
கொஞ்சம் நிழல் கேட்டேன்
நீயோ உன் இதயத்தையே பெயர்த்துக் கொடுத்தாய்

உன் முக முற்றத்தில் வந்துவிழும்
கூந்தல் கற்றைகள் மேகங்களா - எனில்
அவை என்னைத்தவிர வேறெவர்க்கும்
பொழிவதில்லையே

உன் விழிக் குளத்தில் பூப்பதெல்லாம் கவிதைகளா - எனில்
அவை என்னைத் தவிர வேறெவர்க்கும் புரிவதில்லையே

நான் உன்னைத் தரிசிக்கும்
பொழுதுகளில் மட்டுமே என் உடலின்
இரத்த ஓட்டத்தை உணர்கின்றேன்

அன்றொருநாள் நானுன்னைத் தொடாமல் தொட்டபோது
என்னுள் மூடிக்கிடந்த கோடி புஷ்பங்கள்
ஒரே சமயத்தில் விழித்துக்கொண்டன

உன் சிலம்பற்ற பாதங்களின் மென்மையான நாட்டிய நடையில்
சங்கீதம் கேட்டபோது நான் மிதந்துகொண்டிருந்தேன்

உன் இதழ் மலர்கள் மொட்டாகவே இருந்தபோதும்
எனக்குக் கேட்ட மெல்லிய சிரிப்பொலியில்
நான் தினமும் புரியாமல் விழித்திருக்கிறேன்

நீ பொட்டிடுவது உன் நெற்றியை அலங்கரிக்க
என்றுநான் என்றுமே நினைத்ததில்லை
பொட்டை அலங்கரிக்கவே என்று மட்டும் நினைத்ததுண்டு

நான் கவிஞனானதால் உன்னை வர்ணிக்கவில்லை
உன்னை வர்ணித்ததால் நான் கவிஞனானேன்

இன்றெல்லாம் நான் விழித்திருப்பதால்
உன்னை நினைத்திருப்பதில்லையடி
உன்னை நினைத்திருப்பதால் நான் விழித்திருக்கிறேன்

நான் வருசங்களை நிமிசங்களாய்க் கணக்கிட்டபோது
நீ என்னருகில் அமர்ந்திருந்தாய்

அன்றொருநாள் சூரியக் கண்களை பூமி இமைகள்
மூடிக் கொண்டிருந்தபோது
நம் கண்கள் விழித்திருந்தன நேருக்கு நேராய்
நினைவுகள் மட்டும் உறங்கிவிட்டன

நாம் விழித்தபோது என் உன் எனக்கு உனக்கு
என்னுடைய உன்னுடைய எல்லாம் மறந்தோம்

சமாதிகள் பூக்களை மறுப்பதில்லை


ஓர் வசந்தத்தின் விடியலில்
என் இதய வனத்தின்
இளைய மடிகளில்
குங்கும நிலவாய் வந்து பூத்தவளே

என் பருவ அணுக்கள்
ஒவ்வொன்றும் அன்று
இனம்புரியா புதுத் துடிப்புகளுடன்
இன்ப ரோஜாக்களாய்ப் பூத்துத் திணர
இரு நீல விழிகளின் ஓர நகங்களால்
என் ஈர நெஞ்சினில் முதல் கோலமிட்டாயே
உனக்கு நினைவிருக்கிறதா?

ஓர் இரவொழுகும் முதுமாலையில்
உன் தேன்குழல் இசைத்து
நீ கேட்டது என்அன்பை மட்டும்தான்
நான் கொடுத்ததோ
வேரோடு பெயர்த்தெடுத்த
என் இதயக் கொடியையல்லவா

பின் ஒரு நாள்
நம் காதல் மலர்ப் பூங்காவினில்
விதியின் காலடிச் சுவடுகளைக் கண்டு
நான் திடுக்கிட்டேன்

உன் சின்னச் சிறகுகள்
தீயில் கருக்கப்பட்டன

ஓர் அராஜகக் கூண்டு
உன்னை விழுங்கிக் கொண்டு
என்னைப் பார்த்த்து ஏளனம் செய்தது

போராட என் பிஞ்சுவிரல்களையே
தீப்பந்தங்களாய்க்
கொளுத்திக்கொண்டேன்

இருந்தும் என் அன்பே
நம்மை நம் காதல் வென்றதைப் போல்
பிரிவினை நெஞ்சங்களை
என் போராட்டம் வெல்லவில்லையே

வெறும் நாளேடுகள் மட்டுமே சொன்ன
அடுத்த சுபதினத்தில் (!)
உன் கல்யாணக் கடுதாசி
நம் பிஞ்சு இதயங்களைப்
பிழிந்துவந்த சிவப்பு மையினால்
அச்சிடப் பட்டுவிட்டனதே

மௌனம் உனக்குப் பிடித்தமொழி
அன்று இமைகளும்
கண்ணீர் மணிகளாய்க் கழன்றுவிழ
உன் கண்கள் கதறியதை
என் செவிகேட்டுச் செவிடானது
திறந்த விழிகளில்
மையிருட்டைக் கண்டேன்

நம் இருவரையும் விட்டுவிட்டு
இந்த ஈன உயிர்கள் அத்தனையும்
மண்ணோடு மண்ணாக மடிந்துவிடாதா

உன்னில் நிஜமாய்ச் சுரந்த
காதலெனும் அமுதச் சாரு
என் தாக நிலத்தின் முழுமையிலும்
செம்மையாய்ப் பாய்ந்து
ஓர் அழியாத தோப்பையே
உருவாக்கிவிட்டபின்
எஞ்சிய சக்கையில்
ஓர் அன்னிய ஆணுக்கு
வாழ்வுத் தொடக்கமா?

ஒரு நிச்சயப் போலி வாழ்க்கைக்கு
நம் ஈனச் சமுதாயம்
தன் அத்தனைக் கரங்களாலும்
பூக்களை அள்ளி இறைக்கிறது

ஏற்றுக்கொள்
ஏனெனில் சமாதிகள் என்றுமே
பூக்களை மறுப்பதில்லை