எத்தனை உயிர்களோ யாருக்குத் தெரியும்?

இன்றே பிறந்த இளையவனே
உன்னிடம் ஒரு கேள்வி

பூமிக்குப்
புதியவனா
நீ

இல்லையடா
நீ பூமிபோல் பழையவன்

அறிந்துகொள்
பூமிக்கும் உனக்கும்
ஒரே வயதுதான்

ஆச்சரியமாய்
இருக்கிறதா

எங்கிருந்தோ வந்தா
நீ இந்த
பூமியில் விழுந்தாய்

இல்லை இல்லை
இந்த
பூமியிலிருந்துதான்
இப்படியாய்
நீ
மாறிக்கொண்டாய்

ஒரு
புதியவனைப் போல்
உன் மண்ணிலேயே
நீ விழுந்து
காயம்பட்டவனைப் போல
அழுகிறாய்

என்றால்
இது உன்
இன்னொரு பிறவியா

இல்லையடா
இல்லை

இந்த பூமி
ஐம்பூதங்களால்
ஆனது

ஐம்பூதங்களுக்குத்தான்
இங்கே
நாளும் பொழுதும்
நொடியும் நொடித்துகளும்
மாற்றங்கள்

அதன்
இன்றைய
ஒரு மாற்றமான
நீ
புதியவன் என
அழைக்கப்படுகிறாய்

மாற்றங்கள் எப்போழுதும்
புதுயனதானே

முந்நொடிபோல்
இந்நொடி இல்லை
இந்நொடி போல்
மறுநொடி இல்லை

நீ என்பது
ஓருயிர் அல்ல
உடைந்தழிந்து உயிர்மாறும்
பல நூறு மில்லியன்
உயிர்கள்

சாவும் பிறப்பும்
நூறு வருடம் என்பது
கூட்டுயிரான உனக்குத்தான்

கூட்டுயிருக்குள்
கூடுகட்டி வாழும்
கோடி கோடி உயிர்களுக்கல்ல

அவை
முந்நொடியில் சில லட்சமும்
பின்நொடியில் பல லட்சமுமாய்
அழிந்து பிறக்கும் அதிசயங்கள்

இந்த பூமியின்
ஒவ்வொரு துகளிலும்
எத்தனை உயிர்களோ
யாருக்குத் தெரியும்

அன்புடன் புகாரி
20160414

No comments: