மதுவா? மதமா? அரசியலா?

ஒரு மனிதனைச் சிந்திக்கக்கூடாது என்று சொல்லும் மூன்று விசயங்கள்: மது, மதம், அரசியல். இதில் எது அதிக கொடுமைகளை விளைவிக்கக் கூடியது, ஏன்?

முதலில் இந்த மூன்றும் தரும் நன்மைகளைப் பார்க்கலாம்.

மதுவால் என்ன நன்மை?

ஒரு நன்மையும் கிடையாது. மன ரீதியான மயக்கமே இதில் அதிகம் இருக்கிறது. தன்னை மறக்கிறேன் என்று குடிக்கிறேன் என்பவர்களும், தன்னை மறந்து உற்சாகமாக இருக்கிறேன் என்பவர்களும்தான் பெரும்பாலானவர்களாய் இருக்கிறார்கள். ஒரு சிகரெட்டைப் போல, போதை மருந்தைப் போல மதுவும் உடலையும் உள்ளத்தையும் கெடுக்கும் ஒரு கெட்ட பழக்கம்.

அரசியலால் என்ன நன்மை?

தனிமனிதர்களாய் இருப்பவர்கள் ஒன்றுபட்டு ஊராகி நாடாகி ஆட்சி செய்யும்போது, அதன் வளர்ச்சி அபாரமானது. சாலை, காவல், சட்டம், நீதி என்று பொதுவான காரியங்களை அரசியலே செய்யும். அதோடு தன் சட்டதிட்டங்களால் எது சரி எது தவறு எது தண்டனைக் குரியது என்பதைச் மக்களுக்குச் செய்து மக்கள் இன்னல்கள் இல்லாமல் யாவரும் நலமுடன் அருமையாக வாழ வழிசெய்கிறது, எதிரிகளிடமிருந்தும் காக்கிறது. ஆகையால் மது அரசியலின் அருகில் நிற்கக்கூட அருகதை அற்றது.

மதத்தால் என்ன நன்மை?

மனிதன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்தான், மன்னர்கள்கூட கொடுங்கோலர்களாய் இருந்தார்கள். நீதி நியாயங்கள் எதுவென்றே அறியாத நிலைப்பாடே அன்றெல்லாம் இருந்தது. அப்போது தோன்றியவைதான் இந்த மதங்கள். மனிதர்களை நல்வழிப்படுத்தவும் எது சரி எது தவறு என்று வரையறுக்கவும், கடவுள் இருக்கிறார் அவர் உன்னைக் கூர்ந்து பார்க்கிறார் தண்டனைகள் வழங்குவார் என்ற பயத்தை உருவாக்கி தீமைகளிலிருந்து தடுக்கவும் நல்வாழ்க்கைக்கான அனைத்தையும் செய்வதற்காகவும் உருவானதுதான் மதம். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்றார் பட்டுக்கோட்டையார். திருடன் ஏன் திருந்தப் போகிறான்? நாட்டின் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைத்தால் போதுமே அவனுக்கு? யாரும் அறியாவிட்டால் அவன் செய்வதெல்லாம் சரிதானே அவனுக்கு, அவன் எளிதாகத் தப்பித்துக்கொள்வானே? இங்கேதான் சாமி கண்ணைக்குத்தும் என்ற பயங்கள் அறிமுகமாகின்றன. அவன் மதத்தில் பற்றுடையவனாய் ஆகிவிட்டால், கடவுளை முழுவதும் நம்பிவிட்டால், அவன் திருடமுடியாது, குற்றங்கள் செய்யமுடியாது, நல்ல வாழ்க்கையே வாழமுடியும். அன்று நாட்டின் சட்டதிட்டங்கள் அமைக்கப்படும்போதுகூட மதமே வழிகாட்டியாய் இருந்திருக்கிறது.

சரி இதெல்லாம் நன்மைகள். நன்மைகளைக் கொண்டுமட்டுமா ஒரு விசயம் நல்லது என்று தீர்மானிக்க முடியும்? அதன் கேடுகளைக் கணக்கில் கொண்டுதானே அதன் அவசியம் உறுதிசெய்யப்பட முடியும்?

குடியால் கெடுபவன் முதலில் அவன் மட்டுமே. பின் அவனைச் சார்ந்துள்ள குடும்பம். கண்ணதாசன் சொல்வார், என்னால் என் குடியால் எனக்குத்தான் நஷ்டம், யாருக்கும் எந்தக் கேடும் இல்லை. ஆனால் ஒரு கெட்டவனால் ஊருக்கும் நாட்டுக்கும் கேடு என்று. ஆக குடி குடியைத்தான் கெடுக்கும்.

பிழையான அரசியல் தனி மனிதர்களையும் நாசம் செய்யும் ஊரையும் நாசம் செய்யும் நாட்டையும் நாசம் செய்யும்.

ஆனால் மதம் கேடாகிப் போனால், அது உலகத்தையே அழித்து முடித்துவிடும்.

அளவில்லாமல் குடிப்பவன் செத்துத் தொலைவான். அளவில்லாமல் ஊழல் செய்பவன் வீட்டை நாட்டைக் குட்டிச்சுவராக்குவான். அளவில்லாமல் மதவெறிகொண்டவன் வீட்டை நாட்டை மட்டுமின்றி இந்த உலகத்தையே அழித்துப் போடுவான்.

ஆகவேதான் மிதவாதம் என்பது வாழ்க்கைக்கு முதன்மையானதாகிறது! மதத்தை வேறோடு அழிப்பது என்பதெல்லாம் சாத்தியப்படாத ஒன்று. அது அழியும்போது அழியட்டும் அல்லது இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டு, மதச் சகிப்பு மத நல்லிணக்கம் என்பதை வெகுவாகப் போற்றி வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால், மதத்துக்கும் கடவுளுக்கும் பயந்து தீமைகளிலிருந்து விடுபட்டு வாழ்வோரின் விழுக்காடு அதிக அளவில் இருக்கும். சட்டம்மட்டும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்திவிட முடியாது.

மது, அரசியல், மதம் என்ற இந்த மூன்றையும்விட கொடூரமான ஒன்று யாதெனில் அது மனித வக்கிரம் மட்டும்தான்.

மனித வக்கிரத்தைக் கட்டுக்குள் வைப்பதற்காகவே மதங்கள் தோன்றின. அரசியல் தன் சட்டங்களை வகுத்தன.  ஆனாலும் உலகில் மனித வக்கிரங்கள் வளர்ந்த வண்ணமாய்த்தான் இருக்கின்றன.

ஒரு பெண்ணை ஓர் ஆண் அடக்க நினைப்பதன் பின்னணியிலும் வக்கிரம்தான் இருக்கிறது.

பஸ்ஸில் நிகழும் கற்பழிப்புக்கு மதுவல்ல காரணம், அரசியல் அல்ல காரணம், மதம் அல்ல காரணம், மனித வக்கிரம் மட்டும்தான் காரணம்.

மனித வக்கிரம் குடியோடு சேர்ந்தால் நிச்சயம் ஒரு கொடியது நிகழும். ஆனால் அதன் எல்லை சிறியதாகவே இருக்கும்.

மனித வக்கிரம் அரசியலோடு சேர்ந்தால் அதன் நாசம் மிகப்பெரிய அளவில் இருக்கும்.

மனித வக்கிரம் மதத்தோடு சேர்ந்தால் அதன் நாசத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

மதுவும், அரசியலும், மதமும் மனிதர்களைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருக்கின்றன. ஏன்?

மதுவின் செயல்பாடே சுயத்தை இழக்கச் செய்யும் ஆதிக்கம்தான். அரசியலின் ஆதிக்கம் ஏன்? ஒரு சிலர் மட்டும் உயரத்தில் இருப்பதும் ஏனையோரைச் சுரண்டித் தின்பதும் என்ற கொடிய சுயநலம்தான். மதத்தின் ஆதிக்கம், உலகம் வக்கிரத்திலிருந்து விடுபடவேண்டும் என்பததால்தான். ஆக மதுவும் மதமும் இங்கே சுயநலமில்லாதவை.

ஒரு குடிகார சுயநல அரசியல்வாதிக்கு மதவெறி பிடிக்கிறது. என்னாகும்?

Comments

ரொம்ப சிறப்பா சொல்லியிருக்கீங்க!! யோசிக்கவேண்டிய கருத்துக்கள்..வாழ்த்துக்கள்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ