தேர்தல் 2016
குளத்தைக்
குத்தகைக்கு எடுத்து
அத்தனை மீனையும் 
பிடிக்கப் போகும்
பாக்கியம்
இந்த முறை
யாருக்குங்க?
உங்கள்
பொய் மூட்டைகள்தான்
குத்தகைப் பணம்
அதுவன்றி
இந்த வணிகத்தில்
தனியே ஏதும்
பணம்தரத் தேவையில்லை
தவிர
மீன்களுக்குக் கொஞ்சம்
பொரி தூவினால்
போதும்
அம்புட்டும் சிக்கிடும்

தேர்தல் 2016
காசு பாக்கணும்னா ஒரு நல்ல காண்ட்ராக்ட் கிடைக்கணும்!
இந்த காண்டிராக்ட் யாருக்குக் கிடைக்குமோ?
நாக்குத்தள்ளி சூது நடக்குது.
நல்ல வியாபார உத்திகள்

கூட்டிக்கழிச்சுப் பாத்தா
தேர்தல் என்றால் வேற ஒண்ணுமே இல்லீங்க.
காசு பணம் money துட்டு சில்லறை நோட்டு கத்தை கரன்சி ரொக்கம் பொட்டி .. ...

ஆகா
ஒவ்வொரு மேடையிலும்
எத்தனை எத்தனை
அபார
நடிகர்கள் நடிகைகள்
தேர்தல்
நெருங்க நெருங்க
போட்டி வலுக்கிறது
மக்களின்
விருது யாருக்கு
வெற்றிக்குப்பின்
விருது தந்தவர்களையெல்லாம்
ஐந்தாண்டுகள்
நொக்கி நொறுக்கி
தோற்கடிக்கப் போகும்
அந்த வெற்றியாளர்
யார்? யார்? யார்?

ஒரு வாரம்தான் இருக்கு!
தேர்தலை நினைத்துத் தூங்காதவர்கள் எத்தனைபேர்?
ஆயிரமா? லட்சமா? கோடியா?
வாக்காளப் பெருமக்களே உங்கள் கனவில் வருவது ஐநூறா? ஆயிரமா? இல்லை அதுக்கும் மேலயா?
அப்டீன்னா, தேர்தலில் நிக்கிறவங்க கனவில் எத்தனை சைபர்கள் கொண்ட தொகை ஊஞ்சலாடும்?
இந்த வியாபாரம் நல்லபடியா நடக்கணும்னு சாமியை வேண்டிக்கிறேன் மக்களே!
கவிதை என்பது 
சொந்த 
உணர்வுகளிலிருந்து 
சிறகடித்துப் 
பறக்கும் 
வார்த்தைப் பறவை

அன்புடன் புகாரி
20160507
*****

கனடாவில்...

தமிழ்ப் பிள்ளைகளுக்குத்
தமிழ் தெரியவில்லை

கன்னடப் பிள்ளைகளுக்குக்
கன்னடம் தெரியவில்லை

தெலுங்குப் பிள்ளைகளுக்குத்
தெலுங்கு தெரியவில்லை

பாகிஸ்தானிக்கு
உருது தெரியவில்லை

பங்களாதேசிக்கு
பெங்காளி தெரியவில்லை

சீனருக்கு
மாண்டரின் தெரியவில்லை

தெரிந்ததெல்லாம்
ஆங்கிலம் ஒன்றுதான்

காதல் சந்தை
கல்யாணச் சந்தை எல்லாம்
அமர்க்களப்படுகின்றன

எல்லோரும் ஓரினம்
எல்லோரும் ஓர்மொழி
எல்லோரும் கனடா மக்கள்

ஊரிலிருந்து
ஒருவன் வந்தால்
அவன்தான் வேற்று ஆள்

தேடிக் காதலிக்க
அவனிடம்
ஒன்றுமே ஒட்டவில்லை

கூடி மணமுடிக்க
அவனிடம்
பிடித்ததாய் ஏதுமில்லை

பங்களாதேசி மச்சான்
பாகிஸ்தானி மாமன்
தெலுங்கு மைத்துனி
கன்னட நாத்தனார்
சீன மாமியார்
தமிழ்ப் பெண்

போதுமா
எங்கள் பொன்னான
புலம்பெயர் வாழ்க்கை!

அன்புடன் புகாரி
20160506
சுயநலம்
விரிந்து விரிந்து
சூறையாடியது
உலகை

பலங்கொண்ட சுயநலம்
பதரான சுயநலங்களைக்
கொன்று மென்று
தின்று செரித்தது

இறுதியாய்...

ஒரே ஒரு
சுயநலம் மட்டுமே
மீந்தது
வாழ்ந்தது

ஒற்றை உயிரைச்
சுமக்கக் கசந்து

தன்னைத் தானே
சுருக்கிச் சுருக்கி

மீண்டும்
கருந்துளைக்குள்ளேயே
காணாமலே போனது
பரிதாபப் பிரபஞ்சம்

அன்புடன் புகாரி
20160505