Showing posts with label * * 08 அன்புடன் இறைவன். Show all posts
Showing posts with label * * 08 அன்புடன் இறைவன். Show all posts

மதங்களால் என்ன பயன்

கேள்வி:

இறைவன் உண்டு என்று மனிதன் தோன்றியதிலிருந்து சொல்லி கொண்டு இருக்கிறோம். உலகம் அமைதிப்பூங்காவாகாவா மாறியுள்ளது? ஆனால், அதே இறைவன் பெயரை சொல்லித்தான் காலம், காலமாக உலகம் அமைதியே இல்லாப்பூங்காவாக மாறிவிட்டது. அது உண்மைதானே!

பதில்:

இறைவன் உண்டு என்றாலும் உலகம் அமைதிப் பூங்காவாக இல்லை இறைவன் இல்லை என்று சொன்னாலும் உலகம் அமைதிப் பூங்காவாக இல்லை

இதுதானே நீங்கள் சொல்வது?

உலகம் அமைதிப் பூங்காவாக மலர்வதற்கான முன்னெடுப்புகள் பல

1. தனிமனித ஒழுக்கம். அதை யார் சொல்லித் தருவது? பெற்றோர்கள் என்று கொள்ளலாம். அந்தப் பெற்றோருக்கே சொல்லித்தர ஒரு கட்டமைப்பு தேவைப்படுகிறது

2. தனிமனித ஒழுக்கத்திற்கு சட்டம் ஒழுங்கு முறையாக இருந்து தண்டனைகள் மூலம் குற்றத்தை நிறுத்த வேண்டும். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார் பட்டுக்கோட்டை. சட்டம் ஒழுங்கு என்பது முழு சக்தி கிடையாது

3.அற நூல்கள் மனிதனைப் பண்படுத்தவேண்டும். அறநூலை ஏற்க ஓர் அச்சம் தேவைப்படுகிறது. இந்த நிலையில்தான் இறைவன் மதம் எல்லாம் வருகிறன

இறுதியாக இப்படி முடிப்போம்:

மனிதர்கள் யாவரும் தனிமனித ஒழுக்கம் பேணி நடப்பவர்களாய் இருந்தால், சட்ட ஒழுங்கு தண்டனை என்று எதுவும் தேவையில்லை. அதைப் போலவே மதங்களும் தேவையில்லை.

சரி, இனி உங்களிடம் என் கேள்வி:

மனிதர்களின் தனிமனித ஒழுக்கத்திற்கு உங்களிடம் என்ன மருந்து இருகிறது. மனித வக்கிரங்களை எப்படி அழிப்பது? சூது, குற்றம், வஞ்சகம் போன்ற அனைத்தையும் எப்படி இல்லாமல் செய்வது?

கேள்வி:

கடுமையான சட்டதிட்டங்கள் மூலமாகத்தான் இதற்கு எடுத்துக்காட்டாக அரேபிய நாடுகள்.

பதில்:

கடுமையான சட்டங்களாலும் மனித வக்கிரங்களை ஒன்றுமே செய்யமுடியவில்லை.

கடுமையான தண்டனைகள் அவசியம் வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது. பிறப்பிலிருந்தே அறம் போதிக்க ஓர் அமைப்பு வேண்டும். அதுதான் மனித வக்கிரத்தை மட்டுப் படுத்தும்.

கேள்வி:

உண்மையாக சொல்ல வேண்டுமெனில் தனிமனித ஒழுக்கத்திற்கு யாரிடமும் மருந்து இல்லையென்பது எனது கூற்று.

பதில்:

உண்மை. ஆனால் அந்தத் தனிமனித ஒழுக்கம் இனி வேண்டாம் என்று சொல்ல முடியுமா?

சிறுவயதிலேயே இறைவன்மீது அச்சம் என்று தொடங்கி அறம் போதிக்கப்படுகிறது. பசுமரத்தாணியாய் நல்ல செயல்கள் மனிதில் பதியச் செய்யப்படுகிறது
இப்படி எந்த மதம் செய்யவில்லையோ அதை விமரிசியுங்கள்.

மதம் சொன்னதையே மாற்றிச் சொல்லும் கயமையிலிருந்து நம்மை நன் அறிவே காக்க வேண்டும்.

மதத்தால் மட்டுமே தனிமனித ஒழுக்கம் வந்துவிடாதுதான்.

ஆகையினால் தான் கடும் தண்டனைகள் என்று ஒன்று வருகிறது. அந்தத் தண்டனைகளைச் சரியாகத் தர நீதி, காவல் என்றெல்லாம் இருக்கிறது
இத்தனையையும் மீறி தனிமனித ஒழுக்கம் கெட்டுவருகிறது என்பதுதான் பலரும் வைக்கும் குற்றச் சாட்டு.

ஆனால் இதனுள் ஒரு பெரும் உண்மை மறைந்திருக்கிறது.

இன்று உலகில் கெட்ட செய்திகள் மட்டுமே ஈசல்கள் போலப் பரவுகின்றன.

ஒரு மில்லியன் பேருந்துகள் ஒழுங்காகச் செல்கின்றன. விபத்துக்கு உள்ளான அந்த ஒரே ஒரு பேருந்துதான் உலகம் முழுவதும் தினம் தினம் செய்தியாக வருகின்றது.

ஒவ்வொருநாளும் நல்ல செய்திகளாய் மட்டுமே வெளியிடும்போதுதான் இளைய தலைமுறை அதை வாசித்து நாமும் நல்லவர்களாய் வாழவேண்டும் என்று விரும்பும்.

இங்கே செய்திகளும் அப்படி, திரைப்படங்களும் அப்படி, தொலைக்காட்சிகளும் அப்படி, ஊடகங்களே அப்படித்தான்.

ஒரு சாதாரணமாகவன் என்ன நினைக்கிறான். இதெல்லாம் (தவறுகள் எல்லாம்) பிழை இல்லை என்று நினைக்கிறான். எல்லோரும்தான் செய்கிறார்களே என்று சமாதானம் அடைகிறான்.

உலகம் உள்ளங்கையில் வந்த இந்த நாட்களில், நீங்கள் ஒரு நாளில் வாசிப்பது இந்த உலகம் முழுவதும் நடந்த அத்தனை கெட்ட செய்திகளையும் மட்டுமே?

அவை எத்தனை விழுக்காடு? மில்லியன் நல்லவை நடக்க ஒரே ஒரு கெட்டது. உண்மைதானே?

நாம் ஏன் மில்லியனுக்கு ஒன்று குறைவான நல்லவர்களை அதிகம் பேசமாட்டேன் என்கிறோம்.

அப்படிச் செய்தால், ஊடகம் காசு சம்பாதிக்க முடியாது?

ஊடகத்திற்கு தர்மம் வேண்டும். அதைத் தருவதுதான் நல்ல மதம், அதன் அற அறிவுரைகள்.

கேள்வி:

இப்பொழுது மதம் என்னதான் அறத்தை போதித்தாலும் அதை செயல் படுத்துபவர்கள் தங்களது மனசாட்சியை விற்றல்லவா நடக்கிறார்கள். இதில் எந்த மதம் போதித்து என்ன பயன்?


பதில்:

மனசாட்சியை மட்டும் விற்கவில்லை, தங்கள் மதத்தின்மீது கரியைப் பூசிவிட்டுத்தான் நடக்கிறார்கள். தங்கள் இறைவன் மீது கல்லெறிந்துவிட்டுத்தான் நடக்கிறார்கள்.

இதற்கான காரணம் என்ன என்பதுதான் என் சிந்தனை.

அறம் அழுத்தமாகப் போதிக்கப்படவில்லை

இறையச்சம் முழுமையாக இல்லை

இளவயதிலேயே பசுமரத்தாணியைப்போல அறம் பதிக்கப்படவில்லை

இங்கே மத உணர்வு என்றால் அற உணர்வு இல்லை. அது வெறும் பகை உணர்வாக மட்டுமே இருக்கிறது. ஒரு மதத்தவன் இன்னொரு மதத்தின் மீது காட்டும் துவேச உணர்வுதான் உயர்வான மத உணர்வு என்று காரியங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

சரியானதைச் சொல்லித்தராமல் இந்த சண்டையை ஊக்கப்படுத்தி நாட்டைச் சூரையாடிக்கொண்டிருக்கின்றன ஊடகங்கள், அரசியல், மற்றும் போலி மதத் தலைவர்கள்.

அன்புடன் புகாரி

இறை நம்பிக்கை இறை மறுப்பு மதம் அன்பு அறிவு அறம்

அறிவு வளரவேண்டும்.
வெறும் அறிவு மட்டும் வளர்ந்தால் வெறுப்புதான் வளரும்.
அறிவோடு அன்பும் வளரவேண்டும்.
அறிவும் அன்பும் மட்டும் போதாது, அது சாய்வுநிலைகளை உருவாக்கிவிடும்.
ஆகவே அறிவும் வேண்டும் அன்பும் வேண்டும் கூடவே அறமும் வேண்டும்.
இந்த மூன்றையும் சொல்லித்தரும் பல்கலைக்கழகங்களே மதங்கள்

அன்புடன் புகாரி

*
மனித நேய அழிவுகளைத் தடுப்பதற்காக வந்தவையே மதங்கள்.
அவற்றால் இயலாதது நாத்திகத்தால் இயலும் என்று நீங்கள் நம்புவது ஒருபட்சமானது.
இறைவன் இல்லை என்று சொன்னதுமே உலகம் அப்படியே அமைதிப் பூங்காவாய் மாறிவிடுமா?
இது வேடிக்கை இல்லையா?

அன்புடன் புகாரி

*
மனிதநேயம்தான் இறை மறுப்பாளர்களின் நோக்கம் என்கிறீர்கள். அதே மனிதநேயம்தான் இறை நம்பிக்கையாளர்களின் நோக்கமும் என்பதை நீங்கள் உணர்ந்ததே இல்லையா?
இல்லை என்றால் உங்கள் சிந்தனையில் பெரும் குறை உள்ளது என்றுதான் பொருள்.
”எல்லா மக்களும் அன்புடன் எல்லாம் பெற்று வாழவேண்டும்”
இதை நீங்கள் உங்கள் வழியில் முயலுங்கள். இறை நம்பிக்கையாளர்கள் அவர்கள் வழியில் முயலட்டும்.
இருவரும் முட்டிக்கொள்ள வேண்டுமா?
ஏன்?

அன்புடன் புகாரி

*
இறைவன் இருக்கிறான் என்பது ஒருவரின் நம்பிக்கை.
இறைவன் இல்லை என்பது இன்னொருவரின் நம்பிக்கை.
இரண்டுமே நம்பிக்கை என்பதால் அதில் ஏதும் பிழையில்லை.
ஆனால் ஒன்று இன்னொன்றின் மீது சொல்லாலோ செயலாலோ வன்முறையை அவிழ்த்துவிட்டால் அங்கே பெரும் பிழை இருக்கிறது.
அன்புடன் புகாரி

*

மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான, மனித நேயத்தைக் காப்பதற்கான எந்த ஒரு நம்பிக்கையும் மில்லியன் பகுத்தறிவுத் தாக்குதல்களைக் காட்டிலும் உயர்வானது
அன்புடன் புகாரி

அல்லாஹூ அல்லாஹ்
201708


நண்பர் ஹனிபா அழைத்தார். நண்பரே என் மகன் இஸ்லாமிய மரபு மாத விழாவில் ஒரு பாடல் பாடுகிறான். அதற்கான மெட்டினை அனுப்புகிறேன் தமிழில் பாட்டெழுதி அனுப்ப முடியுமா என்று கேட்டார். கனடா வந்த நாளிலிருந்தே நண்பர் ஹனிபாவை நான் அறிவேன்.  எப்போது பாடல் வேண்டும் என்றேன். இன்னும் பத்து நிமிடத்தில் என்றார் ;-)

நானோ சிறகுப்பந்தாட சென்றுகொண்டிருக்கிறேன். எப்படி? ஆனாலும் வேண்டுகோளை அப்படியே விட்டுவிட விருப்பமில்லை. கார் ஓட்டிச் செல்லும்போதே சில வரிகளை எழுதி முடித்தேன். அப்படி உருவான பாடல் தான் இது.

இதை இசையமைப்பாளர் நண்பர் ஹாஜி அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அவரும் ஒரு புதுத்தனி மெட்டுப் போட்டு அனுப்பிவிட்டு. இன்னும் சில வரிகள் எழுதினால் முழுப்பாடலாய் ஆக்கிவிடலாம் என்று பெருந் தூண்டில் போட்டார். நண்பர் ஹனிபா கேட்டது நான்கு வரிகள். இப்போது இது எப்படி வளரப் போகிறதோ தெரியவில்லை. எளிமையான இசைக்கு ஏற்ற என் பாடல் வரிகள் இதோ:


கதிர் வீசிடும் காலை
       
உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
       
உன்னாலே அல்லாஹ்

நல்வாழ்வினில் பேரருள்
       
நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
       
நீயே அல்லாஹ்

திருவேதம் நபிநாதர்
       
தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் தீனுக்கும்
       
நீயே அல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ்
 
அல்லாஹ் அல்லாஹ்

அல்லாஹூ அல்லாஹூ
 
அல்லாஹூ அல்லாஹ்


Nadodi Tamilan
குர்-ஆனுக்கு ஏன் ஹதீதை இணைவைக்கிறார்கள் சிலர்? - முடியாது. குரானுக்கு முரண்படும் ஹதீதுகள் நிராகரிக்கப்படவேண்டும் என்பது ஹதீத் கலையின் விதிகளுள் தலையானது.
அவ்வளவுதான் அடிப்படைக் கருத்து.
இதை ஒத்துக்கொள்ள விரும்பாத ஹதீதுப் பிரியர்களை ஏராளமாகக் காண்கிறேன்.
ஹதீதுகள் நிராகரிக்கப்படக் கூடாது. உண்மை. மாற்றுக் கருத்தே இல்லை.
ஆனால் ஹதீது என்பதற்காகவே முரணானவைகளும் மூட நம்பிக்கைகளும் நம்ப முடியாத கதைகளும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது.
குர்-ஆன் தான் ஆதாரம். வேறு எதுவும் ஆதாரமாக ஆகமுடியாது. குர்-ஆனுக்கு விளக்கமாகவே ஆக முடியும்.
ஆதெண்டிக் - ஆதாரப் பூர்வமான என்ற ஒரு சொல்லை ஹதீதுக்கு பயன்படுத்துவார்கள்.
என் கேள்வி:
ஆதாரப் பூர்வமான வசனம் என்று எதையாவது குர்-ஆனில் சொல்வீர்களா?
எல்லாமே ஆதாரப் பூர்வமானதானே?
ஹதீதில் ஆதரப் பூர்வமான என்ற சொல் பயன்படுத்தப் பட்டுவிட்டாலே ஐயம் என்ற ஒரு சொல் அடிக்கடி ஊடாடத்தானே செய்யும்.
இது ஏன் பலருக்கும் புரிவதில்லை.

*
சகோதரரே....,
பொதுவாக சிம்பிள் ஆக எழுதிவிட்டீர்கள். நீங்கள் சொன்ன விதத்தில் குர்ஆனுக்கு முரன்படும் போது மறுப்பதில் என்ன தவறு.? என்று சாதாரண அறிவு உள்ளவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். நாம் ஹதீஸ்களை அனுகும்போது நிதானம் மிகவும் அவசியம். ஹதீஸ்களை தொகுத்த இமாம்
களும் , அவைகளை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்த மார்க்க அறிஞர்களும் சஹீஹான ஹதீஸ்களையும் , லயீஃபான ஹதீஸ்களையும் தரம் பிரித்து அடையாளம் காட்டியுள்ளார்கள். ஹதீஸ்களின் ஆராய்ச்சி என்பது சாதாரணமானதல்ல. மிகவும் ஆழமானது. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சஹீஹான ஹதீஸ்கள் எக்காலத்திலும் குர்ஆனுக்கு முரன்படாது என்பதுதான். அப்படி முரன்படுவது போல் தெரிந்தால் அது நாம் புரிந்து கொள்வதில் உள்ள தவறாகத்தான் இருக்கும். இதை சொன்னது யார் தெரியுமா.? இப்போது ஹதீஸ்களை மறுத்துக் கொண்டிருக்கும் PJ , 90களில் காதியானிகளுக்கு சவால் விட்டு பேசியது. ஆனால் அந்த காதியானிகளின் நிலைக்கே அவர் மாறியது எதிர்பாராதது. வர வர ஆளாளுக்கு இஷ்டத்திற்கு தனது அறிவுக்கு ஒத்து வரவில்லை என்று ஹதீஸ்களை மறுக்கும் அளவுக்கு நிலமை ஆகி விட்டது. இவர்கள் மறுத்த அனைத்து ஹதீஸ்களுக்கும் தெளிவான பதில்கள் கொடுக்கப்பட்டு விட்டன.
அவைகள் உங்களுக்கு இணையத்தில் கிடைக்கும்.

-இக்பால் ஹசன்
 >>>ஹதீஸ்களின் ஆராய்ச்சி என்பது சாதாரணமானதல்ல. மிகவும் ஆழமானது. <<<

உண்மை. நான் அதை வாசித்திருக்கிறேன். கடுமையான சட்டங்களை உருவாக்கிக்கொண்டு அதிலெல்லாம் தேர்ந்து வருகின்ற ஹதீதுகளைத்தான் ஏற்றுக்கொண்டார்கள். மற்றவற்றை மறுதளித்தார்கள். சிறப்பான சேவை. பாரா
ட்டுக்குரிய சேவை

அப்படி கடுமையாகத் தேர்வு செய்ததால் இமாம் புகாரியின் ஹதீதுகள் மட்டும் 99% நீக்கப்பட்டன.

நான்கு லட்சம் ஹதீதுகளைத் தொகுத்து உலகெங்கும் பரப்பிக்கொண்டிருந்தார் இமாம் புகாரி. அவை அனைத்துமே ஆதண்டிக் என்று அவர் உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தார்

ஆனால் கடுந்தேர்வில் தேறிவந்தவை நூற்றில் ஒன்றுதான்.

அந்த ஒன்றும் மீண்டும் மீண்டும் சில இடங்களில் வரும், அதன் தொடர்ச்சி மற்றும் சொன்னவர் பெயர் காரணமாக.

முன்பு 4 லட்சம் ஹதீதுகளை வைத்துக்கொண்டு குர்-ஆனுக்கு முரணான என்று சொன்னால் இப்படித்தான் சொன்னார்கள். சண்டைக்கு வந்தார்கள். 

பின் கடுமையான தேர்வுக்குப் பின் சுமார் வெறும் நான்காயிரத்தை மட்டும் கொடுத்தபோது அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

இறைவன் ஒருவருக்கு மேல் ஒருவரை அறிவில் உயர்வானவர்களாகவே படைக்கிறான் என்று குர்-ஆன் சொல்கிறது.

மனிதர்களால் தேர்வு செய்யப்பட்டவை எல்லாம் இந்த அறிவுத் தேர்வுக்கு ஆளாகக் கூடியவையே.

இறைவனால் அருளப்பட்ட குர்-ஆன் வரிகளைத் தவிர மற்ற எல்லாமும் எல்லாக்காலமும் ஆய்வுக்கு உள்ளாக்கப்படக் கூடியவையே

இதில் மிக முக்கியமாக இன்னொரு விடயமும் இருக்கிறது.

அன்றைய கடுந் தேர்வுக் குழுவில் இருந்த எல்லோருமே எல்லா ஹதீதையுமே முழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை. 

ஓட்டெடுப்பு நடத்தி 50+% வாக்குகள் வாங்கிய ஹதீதுகளே ஏற்புடையன என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று வரலாறு சொல்கிறது.

அன்றே தேர்வு அறிஞர்களால் ஐயம் கொண்ட ஹதீதுகள் உண்டு என்பதையும் நீங்கள் ஏற்க வேண்டும்.

இப்படி நான் எழுதுவதால் நான் ஹதீதுகளை மறுப்பதாக நீங்கள் எண்ண வேண்டாம். 

அன்புடன் புகாரி

புகாரி இமாம் மட்டுமல்ல. மற்ற இமாம்களும் லட்சக்கணக்கான ஹதீஸ்களை திரட்டி அவைகளை அவர்களே தரம் பிரித்து சில ஆயிரங்களையே நமக்குத் தந்தார்கள். அவர்களும் மனிதர்கள்தான். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தற்காலத்தில் வாழ்ந்து மறைந்த ஹதீஸ் கலை வல்லுனராகிய நாசிருத்தீன் அல்பானி அவர்களும் மிகவும் ஆராய்ந்து சில ஹதீஸ்களை லயீப் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள். ஆனால் அவர்கள் சுட்டிக் காட்டிய முறையில் கண்ணியம் இருந்தது. அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த மற்றொரு அறிஞரான ஷேக் பின் பாஸ் அவர்களுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கண்ணியத்துடன் கூடிய நட்புடன்தான் அவர்கள் பழகினார்கள். ஆனால் இப்போது இவர்கள் மறுக்கின்ற ஹதீஸ்கள் வேறுவிதமானவை. தங்கள் வார்த்தைகள் நிலைக்க வேண்டுமே என்பதற்காக மிகவும் ஆபாசமான முறையில் சித்தரிக்கின்றனர். அதை டி.வி.யில் ஒளிபரப்பி அனைவரும் பார்க்கும் வகையில் செய்தது மிகவும் வேதனையானது.
அரைகுறை அறிவுள்ள இளைஞர்கள் சஹாபாக்களையும் இமாம்களையும் எடுத்தெரிந்து பேசுகின்ற நிலமை ஆரோக்கியமானதல்ல.
அல்லாஹ் அனைவர்களையும் நேர்வழியில் செலுத்துவானாக.

-இக்பால் ஹசன்
>>>புகாரி இமாம் மட்டுமல்ல. மற்ற இமாம்களும் லட்சக்கணக்கான ஹதீஸ்களை திரட்டி அவைகளை அவர்களே தரம் பிரித்து சில ஆயிரங்களையே நமக்குத் தந்தார்கள்.<<<

இல்லை சகோ. லட்சங்களைச் சில ஆயிரங்களாய் மாற்றியவர்கள் பிறகு வந்தவர்கள். அவரின் மாணவர்கள். தேர்வுக
் குழுவினர்.

இமாம் புகாரி தன் தொகுப்புகளை உலகெங்கும் எடுத்து அனைத்து மேடைகளிலும் உரையாற்றினார் என்ற குறிப்பைத்தான் நான் வாசித்தேன்.

மாற்றமான தகவல் இருந்தால் எனக்கு அதைத் தாருங்கள்.

 >>>அவர்களும் மனிதர்கள்தான். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.<<<

இதையேதான் நானும் சொல்கிறேன் சகோ

ஹதீதுகளைத் தொகுத்தவர்களும் மனிதர்கள்தாம். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்

ஹதீதுகளை ஆய்ந்து சீர்தூக்கிப் பார்த்து தேர்வு செய்து லட்சங்களை சில ஆயிரங்களாய் மாற்றியவர்களும் மனிதர்கள்தாம். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்.

இது ஆதண்டிக் இது ஆதண்டிக் இல்லை என்று சொன்னவர்களும் மனிதர்கள்தாம். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்.

குர்-ஆன் மட்டுமே இறைவாக்கு. அது ஒன்றே ஆதண்டிக். அது ஒன்றே யாரும் ஆதண்டிக் என்று குழு அமைத்துத் தீர்மானம் நிறைவேற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதது.

குர்-ஆன் சொல்வதுபோல ஒருவரைவிட அறிவில் சிறந்த இன்னொருவர் பிறந்துகொண்டேதான் இருப்பார்கள். அவர்களின் அலசல் மேலும் தரமானதாக இருக்கும் என்பது தெளிவு.

நான் ஹதீதுகளை வேண்டாம் என்று சொல்பவனல்ல. ஹதீது என்றால் என்ன என்று தெளிவாகத் தெரிந்துகொண்டு அதன் வழி செல்லவேண்டும் என்று சொல்பவன்.

*

>>>தற்காலத்தில் வாழ்ந்து மறைந்த ஹதீஸ் கலை வல்லுனராகிய நாசிருத்தீன் அல்பானி அவர்களும் மிகவும் ஆராய்ந்து சில ஹதீஸ்களை லயீப் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள். ஆனால் அவர்கள் சுட்டிக் காட்டிய முறையில் கண்ணியம் இருந்தது. அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த மற்றொரு அறிஞரான ஷேக் பின் பாஸ் அவர்களுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கண்ணியத்துடன் கூடிய நட்புடன்தான் அவர்கள் பழகினார்கள். <<<<

பாராட்டுக்குரியவர்கள்

*

 >>>ஆனால் இப்போது இவர்கள் மறுக்கின்ற ஹதீஸ்கள் வேறுவிதமானவை. தங்கள் வார்த்தைகள் நிலைக்க வேண்டுமே என்பதற்காக மிகவும் ஆபாசமான முறையில் சித்தரிக்கின்றனர். <<<

நான் அவர்களின் ஆதரவாளன் அல்லன். என் நிலைப்பாடுகள் என் சொந்த அலசல் ஆய்வு காரணமானது. அனுபவம் சார்ந்தது. நான் எந்த இறுதி முடிவையும் எவருக்கும் வலியுறுத்துவதும் இல்லை. என் கருத்தைச் சொல்லிப் போவேன் அவ்வளவுதான்

*
சகோதரரே..,
நீங்கள் ஹதீஸ் மறுப்பாளர்களின் ஆதரவாளர் இல்லை என்று சொன்னது குறித்து மகிழ்ச்சி. ஒரு ஹதீஸ் குர்ஆனுக்கு முரனாக இருந்தால் அதைப் பின்பற்ற வேண்டும் என்று எந்த அறிஞரும் சொன்னது இல்லை. அப்படியிருந்தால் அது லயீஃபான ஹதீஸாகத்தான் இருக்கும். சஹீஹான ஹதீஸ
் குர்ஆனுக்கு முரன்படாது. ஹதீஸ்கள் விஷயத்தில் நாம் மேலும் நமதறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மார்க்கத்திற்காக தங்களை அர்ப்பணித்த மறைந்த அறிஞர்களின் கூற்றுக்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

-இக்பால் ஹசன்


>>>ஒரு ஹதீஸ் குர்ஆனுக்கு முரனாக இருந்தால் அதைப் பின்பற்ற வேண்டும் என்று எந்த அறிஞரும் சொன்னது இல்லை<<<

அதைத்தான் நானும் சொல்கிறேன். அன்று தொகுத்தார்கள் என்பதற்காக ஏற்காமல் முரணாக இல்லை என்பதற்காக ஏற்போம்.


குர்-ஆனுக்கு முரண் என்பதை பல வழிகளில் உணரலாம்.

- அறம் சாராதது
- நம்ப முடியாத கதை
- மூட நம்பிக்கைக்கு வித்திடும் கருத்து
- அயலானை நேசிக்காதவை

இப்படியே அடுக்கிக்கொண்டு செல்லலாம்

 >>>ஹதீஸ்கள் விஷயத்தில் நாம் மேலும் நமதறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மார்க்கத்திற்காக தங்களை அர்ப்பணித்த மறைந்த அறிஞர்களின் கூற்றுக்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். <<<

மிகவும் சரி. நாம் நமதறிவை மேலும் வளர்த்துக்கொண்டு அதற்கேற்ப ஹதீதுகளை அ
னுகவேண்டும்.

நிச்சயமாக தங்கள் நேரங்களை அற்பணித்த மார்க்க அறிஞர்களை நாம் மதித்தல் வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக, இஸ்லாம் மூட நம்பிக்கைகள் அற்ற மார்க்கம் என்பதில் களங்கம் வரக்கூடாது

குர்-ஆன் கூறும் அறம் அப்பழுக்கற்றது என்பதில் ஐயம் வரக் கூடாது

*
அன்பினிய இக்பால் ஹசன், உங்களின் அக்கறையான அறிவுப் பூர்வமான பதில்கள் இதை ஒரு நல்ல கருத்தாடலாகக் கொண்டு செல்வதில் நான் மகிழ்வடைகிறேன்.

ஹதீதுகள் ஏன் குர்-ஆனைவிட அதிகம் பேசப்படுகினறன என்று என்றாவது சிந்தித்தீர்களா?


இஸ்லாம் பற்றிய உரைகள் நிகழ்த்தவரும் மார்க்க அறிஞர்களுள் பலர்.... ஏன் மேடைகளில் ஹதீதுகளைப் பற்றியே பேசுகிறார்கள். ஏன் குர்-ஆன் வரிகளை அத்தி பூத்தாற்போல் பேசுகிறார்கள் என்று சிந்தித்தீர்களா?

சியா சுன்னா பிளவுதான் அதற்கான காரணம்.

அவர்களுக்கும் இவர்களுக்கும் குர்-ஆன் தான் ஒரே நூல். அதை இருவரும் மறுப்பதே இல்லை. மறுக்கவும் முடியாது. 

பிறகு எப்படித்தான் வேறுபாட்டைக் கொண்டுவருவது என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு, உனக்கொரு ஹதீதுத் தொகுப்பு எனக்கொரு ஹதீது தொகுப்பு. நாம் வேறுபட்டவர்கள். நம் மத நம்பிக்கையே வேறு என்று ஓர் அரசியல் பிரிவுக்கு மதச் சாயம் பூசினார்கள்.

அவ்வளவுதான்!

எனக்கு இறைவன் என்பவன் மனிதன் அல்ல.
உருவமே இல்லா இணையே இல்லா மாபெரும் சக்தி.
ஆகவே ஆண்பால் பெண்பாலுக்கு அப்பால் அவன்.
பிறகு ஏன் இறைவனை அவன் என்கிறாய் என்கிறீர்களா?
என் மகளை வாடா என்று நான் அழைத்தால் என் மகள் ஆண்பிள்ளையாகிவிடுமா?
என் மகள் வந்தது நின்றது சென்றது என்று நான் சொன்னால் இலக்கணம் தடுக்கலாம் இதயம் தடுக்குமா? என் மகள் விலங்கினம் ஆகிவிடுமா?
என் மகளைப் பஞ்சவர்ணக்கிளி என்று கொஞ்சினால் என் மகள் பறவையினமாகிவிடுமா?
இலக்கணத்தை எப்போதுமே இலக்கியம் வென்றெடுத்தே செல்லும்.
கற்பனைகளை எப்போதும் உண்மை களையெடுத்தே நடக்கும்
இறைவனை அவன் என்று அழைப்பதால் இறைவன் மனிதன் ஆகிவிடமாட்டான்.
இது என்னுள்ளக் கருத்து.
மறுப்போரை வெறுப்போனும் நானில்லை ஏற்போனும் நானில்லை.
அன்புடன் புகாரி
கீழே உள்ள இரண்டு கவிதைகளும் ஒன்றுதான். இறைவன் என்றாலும் அல்லாஹ் என்றாலும் பொருளில் யாதொரு மாற்றமும் இல்லை. 

அல்லாஹ் (அரபி) = இறைவன் (தமிழ்) = God (ஆங்கிலம்)

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் ’இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலை மாற்று மதத்தவர் பலரும் அனுபவித்துப் பாடுவார்கள். அப்படியானதோர் அற்புதப் பாடல் அது. மனித உயிர்கள் நெஞ்சுருக நேசிக்கும் இறைவனின் குணாதிசயங்களை அருமையாகப் பாடிச் செல்லும் அந்தப் பாடல்.   

இறைவன் இறைவன் என்றே எல்லா இடங்களிலும் வரும் அந்தப் பாடலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ’அல்லா’ என்ற அரபிச் சொல்லைப் பயன்படுத்திவரும்.

அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்

இதை ஒரு மேடையில் ’ஆண்டவனின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று மாற்றிப்பாடினார்கள். பிழையே இல்லை. ஆனாலும் தமிழர்களாகிய நாம் எத்தனையோ வடமொழிச் சொற்களையும் அரபுமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தமிழுக்குள் அழகாகக் கொண்டுவந்து பயன்படுத்துகிறோம். அதுபோலவே அல்லா என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். ஏனெனில் அல்லா என்றால் இறைவன் என்றுதான் பொருள். God என்றுதான் பொருள். 

நான் அறிந்து சில மாற்றுமத எழுத்தாளர்கள் இன்சால்லா என்ற சொல்லை வெகு சாதாரணமாக அன்றாடம் பயன்படுத்துகிறார்கள். 

நான் மதநல்லிணக்கம் பாடுபவன். இதுபோல் எழுதி இணக்கம்தேட விழைபவன்.

*
அல்லாஹ் அல்லாஹ்

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே அல்லாஹ்
நல்வாழ்வினில் பேரருள்
நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
நீயே அல்லாஹ்
திருவேதம் நபிநாதர்
தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே அல்லாஹ்

*
இறைவா இறைவா

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை இறைவா
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே இறைவா
நல்வாழ்வினில் பேரருள்
நீயே இறைவா
நிறைவான அன்பாளனும்
நீயே இறைவா
திருவேதம் இறைதூதர்
தந்தாய் இறைவா
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே இறைவா

அன்புடன் புகாரி
20171120
நிகழ்ச்சி என்ன?

கட்டிப்பிடி 
வைத்தியம்



எப்போது?

பெருநாள்
தொழுகையின் 
நிறைவில்



எங்கே?

டொராண்டோ
இஸ்லாமியக் 
கல்விநிறுவனப் 
பள்ளிவாசல் 
திடலில்



ஏன்?

யாதும் ஊரே
யாவரும் கேளிர்



எதற்கு?

இனிய 
ஈகைப் பெருநாள்
வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி