நன்றியுரை

என் புத்தக வெளியீட்டிற்கு வந்து சிறப்பித்த டொராண்டோ வாழ் தமிழர்களுக்கு நான் சொன்ன நன்றியுரையின் துவக்கமாக இப்பாடலை வாசித்தேன். இது சிந்துவகைப் பாடல். இசைகூட்டிப் பாடிப்பார்க்கலாம்.

*


இந்தியா இன்பத்திரு நாடு - இங்கே
  இருப்போரில் பலருக்கும்
  அதுதானே கூடு

சிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில்
  சிரிக்கின்ற தமிழ்நாடோ
  வைரப்பொன் மாலை

வந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த
  வளமான மண்ணுக்குப்
  பொருள்தந்த பெருமை

செந்தாழம் பூவாகத் தஞ்சை - எங்கும்
  செழித்தோங்க நெல்வார்க்கும்
  எழிலான நஞ்சை

நானந்த மண்பெற்ற பிள்ளை - நெஞ்சில்
  நாளெல்லாம் அணைக்கின்றேன்
  நல்லதமிழ்ச் சொல்லை

மானந்தான் தமிழர்தம் எல்லை - உண்ட
  மண்தாண்டி வந்தும்மண்
  மறந்ததே இல்லை

வானத்தின் வண்ணங்கள் கூடி - எந்தன்
 வார்த்தைக்குள் உயிராக
 வரவேண்டும் ஓடி

தேனொத்த வாழ்த்துக்கள் பாடி - வந்த
   டொராண்டோ தமிழர்க்கென்
   நன்றிகளோ கோடி

No comments: