சமாதிகள் பூக்களை மறுப்பதில்லை


ஓர் வசந்தத்தின் விடியலில்
என் இதய வனத்தின்
இளைய மடிகளில்
குங்கும நிலவாய் வந்து பூத்தவளே

என் பருவ அணுக்கள்
ஒவ்வொன்றும் அன்று
இனம்புரியா புதுத் துடிப்புகளுடன்
இன்ப ரோஜாக்களாய்ப் பூத்துத் திணர
இரு நீல விழிகளின் ஓர நகங்களால்
என் ஈர நெஞ்சினில் முதல் கோலமிட்டாயே
உனக்கு நினைவிருக்கிறதா?

ஓர் இரவொழுகும் முதுமாலையில்
உன் தேன்குழல் இசைத்து
நீ கேட்டது என்அன்பை மட்டும்தான்
நான் கொடுத்ததோ
வேரோடு பெயர்த்தெடுத்த
என் இதயக் கொடியையல்லவா

பின் ஒரு நாள்
நம் காதல் மலர்ப் பூங்காவினில்
விதியின் காலடிச் சுவடுகளைக் கண்டு
நான் திடுக்கிட்டேன்

உன் சின்னச் சிறகுகள்
தீயில் கருக்கப்பட்டன

ஓர் அராஜகக் கூண்டு
உன்னை விழுங்கிக் கொண்டு
என்னைப் பார்த்த்து ஏளனம் செய்தது

போராட என் பிஞ்சுவிரல்களையே
தீப்பந்தங்களாய்க்
கொளுத்திக்கொண்டேன்

இருந்தும் என் அன்பே
நம்மை நம் காதல் வென்றதைப் போல்
பிரிவினை நெஞ்சங்களை
என் போராட்டம் வெல்லவில்லையே

வெறும் நாளேடுகள் மட்டுமே சொன்ன
அடுத்த சுபதினத்தில் (!)
உன் கல்யாணக் கடுதாசி
நம் பிஞ்சு இதயங்களைப்
பிழிந்துவந்த சிவப்பு மையினால்
அச்சிடப் பட்டுவிட்டனதே

மௌனம் உனக்குப் பிடித்தமொழி
அன்று இமைகளும்
கண்ணீர் மணிகளாய்க் கழன்றுவிழ
உன் கண்கள் கதறியதை
என் செவிகேட்டுச் செவிடானது
திறந்த விழிகளில்
மையிருட்டைக் கண்டேன்

நம் இருவரையும் விட்டுவிட்டு
இந்த ஈன உயிர்கள் அத்தனையும்
மண்ணோடு மண்ணாக மடிந்துவிடாதா

உன்னில் நிஜமாய்ச் சுரந்த
காதலெனும் அமுதச் சாரு
என் தாக நிலத்தின் முழுமையிலும்
செம்மையாய்ப் பாய்ந்து
ஓர் அழியாத தோப்பையே
உருவாக்கிவிட்டபின்
எஞ்சிய சக்கையில்
ஓர் அன்னிய ஆணுக்கு
வாழ்வுத் தொடக்கமா?

ஒரு நிச்சயப் போலி வாழ்க்கைக்கு
நம் ஈனச் சமுதாயம்
தன் அத்தனைக் கரங்களாலும்
பூக்களை அள்ளி இறைக்கிறது

ஏற்றுக்கொள்
ஏனெனில் சமாதிகள் என்றுமே
பூக்களை மறுப்பதில்லை

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ