தமிழ்முஸ்லிம் ஜனாப் என்றுதான் அழைக்கவேண்டுமா திரு என்று அழைக்கக்கூடாதா?

தமிழ்நாட்டில் சில தமிழ்முஸ்லிம்கள் பிற முஸ்லிம் ஆடவரை மரியாதையாக அழைப்பதற்கு ஜனாப் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள். உதாரணம் ஜனாப் அப்துல் காதர், ஜனாப் அப்துல்ரகுமான், ஜனாப் முகமது பரூக்.

இந்த ஜனாப் வந்த வரலாறு என்ன என்று காண்பதற்கு முன் அது தொடர்பான உலக வழக்கங்கள் சிலவற்றை முதலில் காண்போம்.

ஆங்கிலத்தில் ஆடவரை மிஸ்டர் என்று அழைப்பார்கள். இது பெரும்பாலும் குடும்பப் பெயர் சொல்லி அழைக்கவே பயன்படும். உ-ம்: மிஸ்டர் கேட்ஸ். அல்லது முழுப் பெயரையும் சேர்த்து அழைக்கும்போதும் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. உ-ம்: மிஸ்டர் பில் கேட்ஸ். முதல் பெயரை மட்டும் அழைப்பதற்கு வட அமெரிக்கர்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஆரம்பக் காலங்களிலும், இன்று சில நாடுகளிலும், வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும்கூட முதல் பெயரை அழைப்பதற்கு மிஸ்டரைப் பயன்படுத்துகிறார்கள்.

துவக்கத்தில் மிஸ்டர் என்பது மனைவி கணவனை அழைப்பதற்குப் பயன்பட்டிருக்கிறது. மிஸ்டர் என்றால் கணவன், காவலன், புருசன், துணைவன், நெருக்கமானவன், உயிரானவன், மணமகன், வீட்டுக்காரன் என்றெல்லாம் பொருள் உண்டு.

மிஸ்டர் என்ற சொல்லே மாஸ்டர் என்ற சொல்லில் இருந்து மருவி வந்ததுதான். மிஸ்டர் என்பதையும் மாஸ்டர் என்பதையும் மாற்றிப் பயன்படுத்தத் தொடங்கியதே பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானாம்.

மாஸ்டர் என்ற சொல்லின் மூலத்தைப் பார்த்தால் அது லத்தீன் மொழியில் மாஜிஸ்டர், மாஜிஸ்ட்ரம் என்ற சொற்களின் மூலச் சொல்லான மாகுஸ் அதாவது ”க்ரேட்” என்ற பொருளுடைய சொல்லிலிருந்து வந்திருக்கிறது. அதாவது ”க்ரேட் மேன்” உயர்ந்த மனிதர் என்று அழைப்பதாகத்தான் மிஸ்டர் என்பது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. கிரேக்க மொழியில் மெகாலொ என்ற சொல்லின் மூலமான மெக் என்ற சொல்லும் ‘க்ரேட்’ என்ற பொருளுடையதுதான். இளையராஜாவை மேஸ்ட்ரோ என்று அழைக்கிறார்களே அதுவும் இந்த வேர்ச்சொல்லில் இருந்து வந்ததுதான்.

”சார்” என்று அழைப்பதற்குப் பதிலாகவும் இந்த மிஸ்டர் என்ற சொல் பயன்படும். ராணுவத்தில் இந்த மிஸ்டரின் பயன்பாடு வெகு அதிகம்.

ஆடவரை மரியாதையாக அழைக்கும் இந்தச் சொல்லின் வழக்கம் அப்படியே தமிழுக்குள் வந்தது. தமிழர்கள் பெயருக்கு முன் திரு என்று இட்டு மரியாதையாக எவரையும் அழைப்பார்கள். உதாரணம் திரு மணிவண்ணன், திரு செல்வராகவன், திரு வெற்றிவேல்

இந்தத் திரு என்ற சொல்லை மதம் சார்ந்த ஆன்மிகவாதிகள் புனிதமான, தெய்வீகமான போன்ற சொற்களுக்கு இணையாகப் பார்க்கிறார்கள். திரு என்றால் செல்வம் என்ற பொருளும் உண்டு. ஆனால் பொதுப் பயன்பாட்டின்படி திரு என்று பெயரின் முன் இட்டு எவரையும் அழைக்கும்போது அது மரியாதைக்குரிய என்று மட்டும்தான் பொருள்படும்.

அதாவது மிஸ்டர் என்றாலும் திரு என்றாலும் ஒரே பொருள்தான். ஒருவரைக் குறிப்பிடும்போது அல்லது அழைக்கும்போது இந்த திரு என்ற சொல் மொழி சார்ந்த சொல்லே தவிர மதம் சார்ந்த சொல் அல்ல. ஆகவே திரு என்ற சொல்லை தமிழர்கள் அனைவரும் மதம்கடந்து பயன்படுத்தலாம்.

தமிழ்முஸ்லிம்கள் திரு என்ற சொல்லை ஒருவரின் பெயருக்குமுன் இட்டு பயன்படுத்தினால் ஏதேனும் பிழையாகக்கூடும் என்று நினைத்து ஜனாப் என்று பயன்படுத்தினர். ஜனாப் என்ற சொல் எங்கிருந்து எப்படி வந்தது என்று தேடிப்பார்த்தேன். இது அரபு மொழி வழக்கமாக இருக்கும் என்றுதான் நான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். நான் சவுதி அரேபியா சென்று அங்கே அவர்களோடு உரையாடியபின்தான் புரிந்துகொண்டேன் அராபியர்களுக்கு ஜனாப் என்றால் என்னவென்றே தெரியாது என்ற உண்மையை.

முகம்மது நபி அவர்கள் ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அவரையும் யாரும் ஜனாப் என்று அழைத்ததும் இல்லை. பிறகு எங்கிருந்து இந்தச் சொல் வந்திருக்க முடியும் என்று தேடினேன். பார்சி மொழியில் ஜனாப் என்றால் உயர்வான என்று பொருள். பார்சிக்காரர்கள் இச்சொல்லை பரப்பி இருக்கக் கூடும் அல்லது அவர்களிடமிருந்து தமிழ் முஸ்லிம்கள் பெற்றிருக்கக் கூடும்.

தமிழ்முஸ்லிம்கள் ஒன்று அரபிச் சொல்லைப் பயன்படுத்தலாம் அல்லது நேரே நம் தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தலாம். அதைவிட்டுவிட்டு ஏன் பார்சி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

சவுதி அரேபியாவில் ஜனாப் என்பது அல்-கசீம் என்ற மாநிலத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர். அதைப்போய் தமிழ் முஸ்லிம்களின் பெயர்களுக்கு முன் இட்டு அழைப்பது ஏற்புடையதா என்று சிந்திக்க வேண்டும்.

இதில் சிலர் பெண்களை ஜனாப் என்ற சொல்லுக்கு பெண்பாலாக ஜனாபா என்ற சொல்லைக் கொண்டு அழைத்துவிடுகிறார்கள். ஜனாபா என்றால் அசுத்த நிலை என்று பொருள். காம உணர்வின் காரணமாக அசுத்தமாகிவிடுதலையே இது குறிக்கிறது. ஜனாபாவாக இருப்பவர்கள் தொழுகைக்கு முன் குளித்துவிட வேண்டியது இஸ்லாத்தில் கடமை.

அராபியர்களின் மரியாதைக்குரிய வழக்கம்தான் என்ன? சேக் என்று அழைப்பதுதான் அவர்களின் வழக்கம். வயதில் மூத்தவர்களையும் கற்றறிந்தவர்களையும் உயர் பதவி வகிப்பவர்களையும் மரியாதையாக அவர்கள் சேக் என்றே அழைக்கிறார்கள்.

பிறகு தமிழ் முஸ்லிம்கள் எப்படித்தான் மரியாதையாக இன்னொரு தமிழ் முஸ்லிமை அழைப்பது? இது நியாயமான கேள்விதான். இதற்கான விடையைத் தேடி நாம் வெகுதூரம் செல்லவேண்டியதில்லை. நமக்கு மிக மிக அருகிலேயே இருக்கிறது.

குர்-ஆனை தமிழ் முஸ்லிம்கள் எப்படி அழைக்கிறார்கள்?  திருக்குர்-ஆன் என்றுதானே? திருமறை என்றுதானே? அப்படி இருக்க திரு அப்துல் காதர் என்று அழைத்தால் அதைவிட தமிழ் முஸ்லிம் சகோதரர்களை மரியாதையாக அழைப்பதற்கு ஏற்ற சொல் வேறு எதுவாக இருக்க முடியும்?

அன்புடன் புகாரி


ஊடகத்திரு எஸ்தி 50+ நூல் வெளியீடு 20190309
  
எத்தனையோ நூல் வெளியீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அத்தனையிலிருந்தும் மொத்தமாய் மாறுபட்ட ஒரு வித்தியாசமானதொரு நூல் வெளியீடு இதுதான். இது நூல் வெளியீடு அல்ல கண்ணீர் வெளியீடு. ஆமாம் நூல் வெளியீடு என்றுதான் அழைத்தார்கள் ஆனால் அது எல்லோருடைய கண்ணீர் வெளியீடாகவும் மாறிவிட்டது.

விழா நாயகர் திருச்செல்வம் அவர்கள் ஏற்புரை வழங்கியபோது அரங்கில் நிலவிய அமைதியை மறக்கவே முடியாது. இதழ்கள் மூடி மௌனம் நிரம்பிக்கிடக்க அதன்மீது கண்கள் திறந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

ஊடகத்துறையில் எல்லோரும் பத்திரிகை செய்கிறார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் மேற்கொண்ட சவால்களைச் சொல்லி மாளாது. அதிலும் திருச்செல்வம் அவர்கள் இலங்கையில் நேர்கொண்ட கொடும் இன்னல்களைக் கேட்கவே மரண பயம் சூழ்கிறது. அவரின் இழப்புகளும், எந்த இழப்பையும் பொருட்படுத்தாமல் ஊடகத்துறையில் முன்னேறிச் சென்ற உறுதியுள்ளமும் அவரை மிக உயரத்திற்கு ஏற்றி வைத்துவிட்டன.

மூன்றாண்டு காலத்திற்கும் மேலாக திருச்செல்வம் அவர்களைப் பற்றிய கட்டுரைகளை உலகின் பல பாகங்களிலும் வாழும் பலரிடமும் கேட்டு 51 கட்டுரைகளை காத்திருந்து காத்திருந்து பெற்று பெருவெற்றிபெற்ற பொன்னையா விவேகானந்தன் மற்றும் எஸ். ஜெகதீசன் அவர்களை எத்தனைப் பாராட்டினாலும் தகும்.

ஒரு நூல்வெளியீடு என்றால், பொன்னாடைகள் போர்த்தவேண்டாமா? மலர் மாலைகள் சூட்டவேண்டாமா? வாழ்த்துக்கவிதைகள் வாசிக்க வேண்டாமா? வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்றே அனைத்தையும் தடுத்து ஒரு புதுமையான நூல்வெளியீடு செய்தார்கள்.

ஆனால் வந்திருந்த உள்ளங்கள் அத்தனைபேரும் திருச்செல்வம் அவர்களை இறுகக் கட்டியணைத்துத்  தங்களையே பொன்னாடைகளாய் ஆக்கிப் போர்த்தினார்கள். கண்ணீராலும் பெருமிதப் புன்னகையாலும் கோத்தெடுத்த மாலைகளையும் செண்டுகளையும் அணிவித்து நெகிழ்ந்தார்கள்.

வந்தால் வா வராவிட்டால் போ என்று பொருளைப் பின்தள்ளி நடக்கும் தமிழர் தகவனின் சிறப்புமிக ஊடகப் பெருமைக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக வெகு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல காலம் காத்திருந்துக் கோத்தெடுத்த பெரும் உழைப்பைக் கொட்டி படைத்த ஊடகத்திரு எஸ்தி 50+ என்ற அருமையான நூலை இலவாசமாகவே தருவோம். எவரும் அதற்காக ஒரு டாலரும் கொடுத்துவிடக் கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார்கள்.

கூடியிருந்த கூட்டம் பொருள்தந்து அந்த நூலைப் பெற்றிருந்தால், குறைவாகப் பார்த்தாலும் ஒரு பத்தாயிரம் டாலர்களாவது தேறியிருக்கும். அந்தப் பத்தாயிரம் அரங்கம், நூல் அச்சு, சிற்றுண்டி ஏற்பாடு என்றவற்றுக்காவது பயன்பட்டிருக்கும். ஆனால் அது எதுவுமே தேவையில்லை என்று சொந்த செலவிலேயே வெளியிடப்பட்டது ஊடகத் துறையை மெய்சிலிர்க்க உயர்த்திப் பிடித்த தனித்தரம்.

உண்மையில் இந்த நூலை உலகநாடுகள் அனைத்திலும் வெளியிட்டுப் பொருள் சேர்த்தால் நுறாயிரம் டாலர்களை வெகு சுலபமாக ஈட்டித் தந்துவிடும். அத்தனை நண்பர்களோடும் நன்மதிப்போடும் உலகம் முழுவதும் பெயர் பெற்றவர் ஊடகத்திரு திருச்செல்வம்.

இப்படியே நிறைய விடயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். கண்ணீர் வெளியீடு நிகழ்ந்ததற்கான காரணங்களைச் சொல்லப் போனால் இங்கும் கண்ணீர் பெருக்கெடுத்துவிடும்.

51 கட்டுரைகள் ஒன்றாய் ஒரு நூலில் சேர்ந்து திருச்செல்வம் அவர்களின் 55 ஆண்டுகால ஊடக வாழ்க்கைப் பாதைக்கு வீசுவொளி பாய்ச்சி இருக்கின்றன. 

ஒரு பத்திரிகையாளன் எப்படி இருக்க வேண்டும், போர்க்காலத்தில் பத்திரிகைத் துறையின் சவால்கள் என்னென்ன, எதையெல்லாம் இழந்து உண்மையான ஊடத்துறையாளர்கள் பொற்தடம் பதிக்கிறார்கள் என்ற பல விடயங்களை ஒரு நூலில் வாசிக்க வேண்டுமா? அந்த பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது, உங்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.

உண்மையான நேர்மையான தரமான சத்தியமான ஊடகத்துறை என்பது என்ன என்பதற்கான முழுவிளக்கம் இந்த நூல் வெளியீட்டுவிழா என்றே எனக்குத் தோன்றியது.

கவிஞர் புகாரி



தமிழ்முஸ்லிம் மகளிர்தின வாழ்த்துக்கள்


பெண்ணுக்குப்
படிப்பெதற்கு என்றார்கள்

………..தாய் போராடினாள்

வேறுவழியின்றி
மார்க்கக் கல்விமட்டும்
போதுமென்றார்கள்

………..சகோதரன் போராடினான்

சம்மதித்து
ஐந்தாம் வகுப்புவரை என்றால்
பரவாயில்லை என்றார்கள்

………..மாற்றுமதத் தோழி போராடினாள்

அப்படியென்றால்
பள்ளி இறுதியோடு
நின்றுவிட வேண்டும் என்றார்கள்

………..தந்தை போராடினார்

அதெல்லாம் ஒருவழியாய்
ஓய்ந்து முடிந்துவிட்டது

எம்.ஏ, எம்.எஸ்.சி, பி.ஹெச்டி
என்றெல்லாம் ஆகிப்போய்விட்டது

இப்போது
பொதுவெளிகளில்
பொழுதுபோக்கு அம்சங்களில்
பெண்கள்மட்டும் எழுதக்கூடாதென்று
ஆரம்பிக்கிறார்கள்

இவர்களும்
ஒருநாள் மாறுவார்கள்

மாறாவிட்டால்
இன்று வளரும்
இளைய பெண்கள்
விட்டுவிடுவார்களா என்ன

தமிழ்முஸ்லிம்
மகளிர் தின வாழ்த்துக்கள்

கவிஞர் புகாரி


யாதும் ஊரே யாவரும் கேளிர்

எல்லாமும் எங்கள் ஊரே
எல்லோரும் எங்கள் உறவே

தீயதும் நல்லதும்
பிறர் தந்து வருவதில்லை

வறுந்துதலும் தணிதலும்கூட
மற்றவரால் வருவதில்லை

சாதல் புதுமையில்லை
வாழ்தல் இன்பமென்று
மகிழ்வதும் இல்லை
வெறுத்து வாழ்வே துன்பமென
விலகியதுமில்லை

மின்னலோடு வானம்
குளிர்மழை பொழிய
கல் மண் புரட்டி இறங்கிப்
பெருகியோடும் ஆற்றின்
திசையிலேயே செல்லும்
சிறு படகினைப் போலே
ஆருயிர் வாழ்வும் செல்லுமென்று
பகுத்தறிவோர் ஊட்டிய
அறிவினால் தெளிந்தோம்

ஆகையினாலேயே
பெரியோரை வியந்து
போற்றுவதுமில்லை
அதைவிடச்
சிறியோரை இகழ்ந்து
தூற்றுவதுமில்லை

*

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ”மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப் படூஉம்” என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

கணியன் பூங்குன்றன்
(புறம்: 192)