ஔவைத் தமிழன்

மாறிப்போன தமிழரின் பண்பினால் நொந்துபோன நண்பர் ஒருவர் என்னிடம் ”கவிஞரே, தமிழர் பண்புகள் என்பன யாவை? ஒன்று இரண்டு என்று அவற்றை வரிசைப்படுத்தி பாடுக.” என்றார். அவரின் அங்கதம் என்னையும் தொற்றிக்கொள்ள, உடனே இப்படி எழுதினேன்.


ஒன்றானவன்
எதிலும் ஒன்றானவன்

ஒன்றுமற்ற பேச்சினிலோ
இருண்டானவன்

முறையற்ற குறைவாயை
மூடானவன்

என்றும்
இனிய சொல்லேதும் சொல்ல
நான்காணான் அவன்

ஆயுளுக்கும் மனம் புழுங்கி
அவிந்தானவன்

அவிந்து
அடுத்தோரைத் தூற்றுவதில்
ஆறான் அவன்

எங்கெதிலும் நிறைகாண
ஏழான் அவன்

எட்டி
உயரத்துப் பண்பெதையும்
எட்டான் அவன்

நரகத்து அவலங்கள்
உண்பதானவன்

மறந்தும்
இதயத்தில் நியாய தர்மம்
பற்றான் அவன்


நண்பரே இப்படியெல்லாம் எழுதிவிடுவேன் என்றுதானே என்னை உசுப்பிவிட்டீர்கள். நான் இப்படியெல்லாம் எழுதமாட்டேனாக்கும், நான் எப்போதும் தமிழர்களைப் பாராட்டி வாழ்த்தவே செய்வேன் :)

அன்புடன் புகாரி

3 comments:

cheena (சீனா) said...

அன்பின் நண்பரே

தாங்கள் இங்கேயும் தமிழரை வாழ்த்தித்தான் பாடியுள்ளீர்கள். பாடல் பாடுவது என்றாலே வாழ்த்து தானே.

என்னுடைய பதிவில் தங்களின் சில கவிதைகளைப் பற்றி எழுதி இருக்கிறேன். நேரமிருப்பின் வந்து பார்க்கவும்.

http://padiththathilpidiththathu.blogspot.com/2007/10/blog-post_12.html

http://padiththathilpidiththathu.blogspot.com/2007/10/blog-post_21.html

Unknown said...

அன்பிற்கினிய சீனா,

நீங்களும் தஞ்சையைச் சேர்ந்தவர் என்று அறிகையில் மகிழ்வு கூடுகிறது.

உங்கள் பதிவில் என் கவிதைகளைப்பற்றி எழுதி இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். அதற்கு என் நன்றிகள்.

தமிழர்களை வாழ்த்தித்தான் நான் பாடி இருக்கிறேன் என்று நேர்மறையாய்த் தாங்கள் எழுதி இருப்பதைக் காண பெருமகிழ்வடைந்தேன்.

மிகச்சிறந்த கவிதை 10 என்ற என் பதிவைக் கண்டு உங்கள் கருத்துக்களைப் பதித்தால் இன்னுமொரு நன்றியறிவிப்பேன் :)

அன்புடன் புகாரி

mohamedali jinnah said...

உங்கள் குழந்தைகளில் எது உயர்ந்த குழந்தை ? இது என்ன கேள்வி ! எனது பிள்ளைகள் அத்தனையும் உயர்ந்த வைரங்கள் . ஓவ்வொன்றும் தனக்கே உரிய வகையில் உயர்ந்து தனிதன்மையுடன் மிளிரும் நட்சத்திரங்கள் .
அதுபோல் .அன்புடன் புகாரி அருமையாக தரும் கவிதைகள் அத்தனையும் மிகச்சிறந்த கவிதைகள்தான் .
இதில் என்ன உயர்ந்த பத்து!