இன்னொரு ஜென்மம்

பச்சையிலை மாநாட்டில்
பனிவிழும் பூக்காட்டில்
வேர்நரம்பும் விட்டுவிடாமல்
விதைகளுக்கு உள்ளேயும்
தேடினேன் தேடினேன்

ஏழு வண்ணமா என் வண்ணமா
என்ற கேள்வியழகோடு
அன்றலர்ந்த ரோஜா ஒன்று
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் கவர்ச்சி வனப்பில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

நீண்டு நிதானமாய் நன்னீர் சுழித்தோடும்
நதியினுள் குதித்துத் துழாவித் துழாவித்
தேடினேன் தேடினேன்

வெள்ளிச் செதிள் சிவக்க
விளையாடும் செங்கண் சிரிக்க
கெண்டை மீனொன்று
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் ஒய்யார ஆட்டத்தில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

ஆழக் கடல் தொட்டு அடிச்சென்று மூச்சடக்கி
அகண்ட கண் விரித்து அதுவீசும் சுடரொளியில்
தேடினேன் தேடினேன்

குட்டிப் பவளப் பேழைகளாய்க்
கொட்டிக் கிடக்கும் சிப்பிகளின்
கதவு திறந்த முத்தொன்று
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் ஒளிரும் கர்வத்தில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

மெத்து மெத்தென்ற மேகக் கூட்டங்களை
முன்னும் பின்னுமாய் இழுத்திழுத்து விலக்கித்
தேடினேன் தேடினேன்

வானத்தின் வெண்பொட்டு
வயதேறா குமரி மொட்டு
வட்டநிலா ஓடிவந்து
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் பகட்டுப் பேரழகில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

அண்டப் பெருவெளியில் அயராத ராட்டினத்தில்
இங்கும் அங்குமாய் இமை கழித்த விழிகளோடு
தேடினேன் தேடினேன்

சில்லென்ற மேனியதிரச் சுற்றிவரும் தித்திப்பாக
செய்வாய்க் கோள் வந்து
என்னையா தேடுகின்றாய் என்றது
இல்லை இல்லை ஓடிப்போ
உன் புதிரான விளையாட்டில் எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

தேடினேன் தேடினேன்
அண்டவெளி எங்கிலும் அக்கினியாய்த் தேடினேன்
அகப்படா நிலையிலென்
ஆழுயிர்த் துடித்தே வாடினேன்

அத்தனைக் காற்றும் ஓய்ந்தே போனதோ
அத்தனை ஓசையும் ஒடுங்கியே போனதோ
அத்தனை ஒளியும் ஒழிந்தே போனதோ
நம்பிக்கை யாவும் நஞ்சுக்குழி விழுந்து
சுட்ட பிணங்களாகின

தேடித் தவித்த விழிகள்
இமைச் சுமை தாண்டி இதயச் சுமை தாண்டி
உயிர்ச் சுமையாகி உதிர்ந்து உடைந்தன

தேடும் தவம் துறந்து தேடா வரம் பெற்று
ஊனமுற்ற நாட்களுக்குள் உயிர்ப்பளு ஏற்றிக்கொண்டு
விந்தி விந்தி நடக்கையிலே

கிழிந்த விழிகளை மூடிக்கிடக்கும்
என் நைந்த இமைகளின் மேல்
ஒரு துளி உப்புக் கண்ணீர்

அடடா
என் கண்களுக்குள் நீர் வற்றித்தான்
நெடுநாட்கள் நகர்ந்துவிட்டனவே
இதென்ன இது உள்ளிருந்து வாராமல்
வெளியிலிருந்து விழிநீர்
அதுவும்
உள்விழி நீரின் அதே அடர்வு உப்போடு

யார் உகுக்கும்
கருணை நீர் இது

ஒரு பூர்வ ஜென்ம வாசனை
என் நாசிக் குகைக்குள் நர்த்தனம் ஆடுகிறது
நான் பிறந்த போதே இழந்துவிட்ட
என் பிறப்பு வாசனையல்லவா இது

ஓர் இளஞ்சூட்டு ஈரம்
என் இதழ்தொட்டு மூடுகிறது
அப்பப்பா காயங்கள் காயங்களோடு
ரணங்கள் ரணங்களோடு ரகசிய ஒத்தடங்கள்
படபடப்பாய்ச் சிறகடிக்கின்றன

காதுகளில் ஒரு கானம்
இதுவரை இசைக்கப்படாத
எனக்கான தாலாட்டாகத் தழுவுகிறது
உணர்வுக்குள் உணர்வுகள் உட்கார்ந்து
உரையாடுகின்றன
உயிருக்குள் உயிர்கள் எழுந்து
ஓடிவிளையாடுகின்றன
நானென்ன கனவு காண்கிறேனா

ஏக்க விழிகளுக்குக் கிடைக்கும்
செங்கோலும் சிம்மாசனமும்
கனவுகள்தானே

படக்கென
இமைகள் வெடிக்கிறேன் நான்
ஓ நீதான் நீதான்
அது நீயேதான் என்கிறேன்
உயிருக்குள் மௌனித்துக்கிடந்த
உள்ளுயிர்க் குரலில்

ம்ம்ம்..
நான் தேடியபோதெல்லாம் வராமல்
தேடாதபோது ஏன் வந்தாய் என்றேன்

'தேடிக்கொண்டிருந்தேன்' என்ற பதில்
எனக்குள் இன்னொரு ஜென்மத்தைப்
பொசுக்கென்று விதைத்தது

(மனதுக்கே ஜென்மங்கள் உடலுக்கல்ல)

அன்புடன் புகாரி

11 comments:

N Suresh said...

//இன்னொரு ஜென்மம்//

இன்னமும் எனக்கு விளங்கமுடியாத ஒன்று இந்த தலைப்பு. பலவேளைகளில் நம்பித்தான் ஆக வேண்டுமென்று தோன்றும் ஒரு பாவம் என்று கூட நினைப்பதுண்டு.


//பச்சையிலை மாநாட்டில்
பனிவிழும் பூக்காட்டில்
வேர்நரம்பும் விட்டுவிடாமல்
விதைகளுக்கு உள்ளேயும்
தேடினேன் தேடினேன்//

கண்களுக்கு குளிரூட்டும் கவிதை வரிகள்!

//ஏழு வண்ணமா என் வண்ணமா
என்ற கேள்வியழகோடு
அன்றலர்ந்த ரோஜா ஒன்று
என்னையா தேடுகின்றாய்
என்றது//

ரோஜாவோடு பேசுகிறாய்
நீயே கவிஞன்!

//இல்லை இல்லை ஓடிப்போ
உன் கவர்ச்சி வனப்பில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்//

தொடரட்டும் இந்த பேச்சுவார்த்தைகள்

//நீண்டு நிதானமாய்
நன்னீர் சுழித்தோடும்
நதியினுள் குதித்துத்
துழாவித் துழாவித்
தேடினேன் தேடினேன்//

அருமை

//வெள்ளிச் செதிள் சிவக்க
விளையாடும் செங்கண் சிரிக்க
கெண்டை மீனொன்று
என்னையா தேடுகின்றாய்
என்றது//

வார்த்தைகளால் ஓவியம் வரைத்து உயிரூட்டம் நிகழ்வு நடத்தும் வரிகள்.

//இல்லை இல்லை
ஓடிப்போ
உன் ஒய்யார ஆட்டத்தில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்//

ஹா ஹா

//ஆழக் கடல் தொட்டு
அடிச்சென்று மூச்சடக்கி
அகண்ட கண் விரித்து
அதுவீசும் சுடரொளியில்
தேடினேன் தேடினேன்//

அப்பப்பா...!!!

//குட்டிப் பவளப் பேழைகளாய்க்
கொட்டிக் கிடக்கும் சிப்பிகளின்
கதவு திறந்த முத்தொன்று
என்னையா தேடுகின்றாய்
என்றது//

என்ன பாக்கியம் செய்தனவைகள்
உந்தன் சிந்தனைகள்!

//இல்லை இல்லை
ஓடிப்போ
உன் ஒளிரும் கர்வத்தில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்//

இதற்கு என்ன மனம் வேண்டும்
நினைத்தது கிடைக்கும் வரை மற்றேதும் வேண்டாம் என்ற நிலை!

//மெத்து மெத்தென்ற
மேகக் கூட்டங்களை
முன்னும் பின்னுமாய்
இழுத்திழுத்து விலக்கித்
தேடினேன் தேடினேன்//

வானத்தை நோக்கி எழுதினீர்களோ -
நான் இதை மிகவும் ரசித்தேன்

//வானத்தின் வெண்பொட்டு
வயதேறா குமரி மொட்டு
வட்டநிலா ஓடிவந்து
என்னையா தேடுகின்றாய்
என்றது
இல்லை இல்லை
ஓடிப்போ
உன் பகட்டுப் பேரழகில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்//

நிலாவை பக்கட்டு பேரழகி என்பதில் எனக்கு ஈடுபாடில்லை கவிஞரே! வாதாடி நீங்கள் வெற்றி பெறலாம் ( பகலையும் அமாவாசை நாட்களும் காட்டி!)

//அண்டப் பெருவெளியில்
அயராத ராட்டினத்தில்
இங்கும் அங்குமாய்
இமை கழித்த விழிகளோடு
தேடினேன் தேடினேன்
சில்லென்ற மேனியதிரச்
சுற்றிவரும் தித்திப்பாக
செய்வாய்க் கோள் வந்து
என்னையா தேடுகின்றாய்
என்றது
இல்லை இல்லை
ஓடிப்போ
உன் புதிரான விளையாட்டில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்//

புகாரிக்கு புதிரான விளையாட்டில் ஈடுபாடில்லை தான். ஆனால் இந்த கவிதை ஒரு புதிராக என்னை அழைத்துக்கொண்டு செல்கிறதே!

//தேடினேன் தேடினேன்
அண்டவெளி எங்கிலும்
அக்கினியாய்த் தேடினேன்
அகப்படா நிலையிலென்
ஆழுயிர்த் துடித்தே வாடினேன்
அத்தனைக் காற்றும்
ஓய்ந்தே போனதோ
அத்தனை ஓசையும்
ஒடுங்கியே போனதோ
அத்தனை ஒளியும்
ஒழிந்தே போனதோ
நம்பிக்கை யாவும்
நஞ்சுக்குழி விழுந்து
சுட்ட பிணங்களாகின//

அடடே என்ன ஆயிற்று
என்று அடுத்த பத்திக்கு பறந்து செல்கிறேன்

//தேடித் தவித்த விழிகள்
இமைச் சுமை தாண்டி
இதயச் சுமை தாண்டி
உயிர்ச் சுமையாகி
உதிர்ந்து உடைந்தன
தேடும் தவம் துறந்து
தேடா வரம் பெற்று
ஊனமுற்ற நாட்களுக்குள்
உயிர்ப்பளு ஏற்றிக்கொண்டு
விந்தி விந்தி நடக்கையிலே
கிழிந்த விழிகளை
மூடிக்கிடக்கும் என்
நைந்த இமைகளின் மேல்
ஒரு துளி உப்புக் கண்ணீர்//

ஆகா!
நைந்த இமைகளின் மேல்
ஒரு துளி உப்புக் கண்ணீர் - மிக மிக அழகிய வரிகள், புஹாரி!!

//அடடா
என் கண்களுக்குள்
நீர் வற்றித்தான்
நெடுநாட்கள்
நகர்ந்துவிட்டனவே
இதென்ன இது
உள்ளிருந்து வாராமல்
வெளியிலிருந்து விழிநீர்
அதுவும்
உள்விழி நீரின்
அதே அடர்வு உப்போடு
யார் உகுக்கும்
கருணை நீர் இது//

யார்???

//ஒரு
பூர்வ ஜென்ம வாசனை
என் நாசிக் குகைக்குள்
நர்த்தனம் ஆடுகிறது
நான்
பிறந்த போதே இழந்துவிட்ட
என் பிறப்பு வாசனையல்லவா
இது//

ம்ம்ம்ம்

//ஓர்
இளஞ்சூட்டு ஈரம்
என் இதழ்தொட்டு மூடுகிறது
அப்பப்பா
காயங்கள் காயங்களோடு
ரணங்கள் ரணங்களோடு
ரகசிய ஒத்தடங்கள்
படபடப்பாய்ச்
சிறகடிக்கின்றன//

படபடப்பாய் சிறகடிக்கின்றன -
இதெல்லாம் எப்படித்தான் எழுத வருகிறதோ என்று வியந்து போகிறேன்

//காதுகளில் ஒரு கானம்
இதுவரை இசைக்கப்படாத
எனக்கான தாலாட்டாகத்
தழுவுகிறது
உணர்வுக்குள்
உணர்வுகள் உட்கார்ந்து
உரையாடுகின்றன//

பேஷ் பேஷ்!!!

//உயிருக்குள்
உயிர்கள் எழுந்து
ஓடிவிளையாடுகின்றன//

தெளிவு பெறவில்லை
அடுத்த பத்திக்கு செல்கிறேன்

//நானென்ன
கனவு காண்கிறேனா
ஏக்க விழிகளுக்குக் கிடைக்கும்
செங்கோலும் சிம்மாசனமும்
கனவுகள்தானே//

கனவு பார்ப்பதற்காகவே
உறங்கச் சென்ற நாட்களின் ஞாபகத்தில் யான்!

//படக்கென
இமைகள் வெடிக்கிறேன்
நான்

நீதான் நீதான்
அது நீயேதான் என்கிறேன்//

யார், யாரது!!!!

//உயிருக்குள்
மௌனித்துக்கிடந்த
உள்ளுயிர்க் குரலில்
ம்ம்ம்..
நான் தேடியபோதெல்லாம்
வராமல்
தேடாதபோது ஏன் வந்தாய்
என்றேன்
'தேடிக்கொண்டிருந்தேன்'
என்ற பதில் எனக்குள்
இன்னொரு ஜென்மத்தைப்
பொசுக்கென்று விதைத்தது//
(மனதுக்கே ஜென்மங்கள் உடலுக்கல்ல)//

மனதின் மறுஜன்மம்/மனதின் தேடல் இவைகளை ஒவ்வொருவருக்கும் இருந்தாலும் உணருவதில்லை, அதை தனிமையில் உணரிந்து கவிதையாய் பதிவு செய்த கவிஞருக்கு வாழ்த்துக்கள்

அன்புடன் என் சுரேஷ்

KarpagamElangovan said...

நான் பூஜிக்கும் கவிதைகளில்
கர்ப்பகிரத்துக் கவிதை இது!

தமிழும் அதனை ஆராதிக்கும் கவியும் வாழ்க!

- கற்பகம் இளங்கோவன்.

Unknown said...

===========
ஆகா!
நைந்த இமைகளின் மேல்
ஒரு துளி உப்புக் கண்ணீர் - மிக மிக அழகிய வரிகள், புஹாரி!!
===========

நன்றிகள் சுரேஷ்

Unknown said...

==============
தமிழும் அதனை ஆராதிக்கும் கவியும் வாழ்க!
==============

நன்றிகள் கற்பகம்

பூங்குழலி said...

முதலில் அந்த விழிகள் கொள்ளை அழகு .அப்புறம் கவிதையும் .

தேடினேன் தேடினேன்
அண்டவெளி எங்கிலும் அக்கினியாய்த் தேடினேன்

அக்கினியாய் தேடினேன் என்ற வரிகள் அருமையாக இருக்கின்றன


நான் தேடியபோதெல்லாம் வராமல்
தேடாதபோது ஏன் வந்தாய் என்றேன்
'தேடிக்கொண்டிருந்தேன்' என்ற பதில்

அருமை இந்த வரிகள்

கிரிஜா மணாளன் said...

அருமையான கவிதையை அளித்து அசத்தியுள்ளீர்கள் தலைவரே!

- கி.ம.

விசாலம் said...

அன்பு புஹாரி மிக அழகான கவிதை ஒவ்வொரு வரிகளும் முத்து எடுத்து
கோத்தாற்போல் பிரகாசிக்கிறது

ஹரன் ஜாஃபர் said...

ரோஜா=கவர்ச்சி வனப்பு
மீன்=ஒய்யார ஆட்டம்
முத்து=ஒளிரும் கர்வம்
நிலா=பகட்டுப் பேரழகு
செவ்வாய்=புதிரான விளையாட்டு

நல்ல கட்டமைப்பு.

தோட்டத்தில் அலைந்து, நதியில் விழுந்து, கடலில் கலந்து, பின்
மேகமாய் மாறி வானில் நிறைந்து, இறுதியாய் பூமி மண்டலத்தையும் தாண்டிய தேடல், அதன் அழகிய சொற்களில்..... அற்புதம்



தேடித் தவித்த விழிகள்
இமைச் சுமை தாண்டி இதயச் சுமை தாண்டி
உயிர்ச் சுமையாகி உதிர்ந்து உடைந்தன

இமையால் சுமக்க இயலா நிலையில், இதயத்தின் தலையில் இமைகளின் பாரம்; பின் இதயமும் களைத்து நடுங்கி ஒதுங்க, உயிரின் தலையில் அப்பாரம். அதுவும் தாங்கமுடியா நிலையில், விழிகளின் பாரம் மொத்தமாய் விழுந்து நொறுங்க.... மிகவும் ரசித்தேன்.

ஒரு சந்தேகம் புஹாரி..... உதிர்ந்து உடையுமா? உடைந்து உதிருமா (சிதறுமா) ?


ஏக்க விழிகளுக்குக் கிடைக்கும்
செங்கோலும் சிம்மாசனமும்
கனவுகள்தானே

உண்மை..உண்மை,,, உண்மையைத் தவிர வேறில்லை


'தேடிக்கொண்டிருந்தேன்' என்ற பதில்
எனக்குள் இன்னொரு ஜென்மத்தைப்
பொசுக்கென்று விதைத்தது

(மனதுக்கே ஜென்மங்கள் உடலுக்கல்ல)

ஒரு பிறப்பில் பல ஜென்மங்களோ!

-அன்புடன்
ஹரன்.
--
"Power over others is weakness disguised as strength"
"Die before you die"
-Eckhart Tolle

சீனா said...

அன்பின் புகாரி

அருமை அருமை - அழகுக் கவிதை அருமை

தேடுவது கிடக்கும் வரை - நடுவினில் எத்தனை விலை உயர்ந்தவை - பெருமை மிகுந்தவை கண்ணில் பட்டாலும் ஒதுக்கித் தள்ளும் இயல்பு பாராட்டத்தக்கது.

அன்பின் ஹரண் அருமையாக விமர்சித்து விட்டார். ஐயம் ஒன்றினையும் எழுப்பி விட்டார். அப்படியே உடன்படுகிறேன் அவரது கருத்துகளோடு.

வெள்ளிச்செதில்கள் - விளையாடும் செங்கண்கள்
கெண்டை மீனின் ஒய்யார அட்டம் - ரசிக்கும் வரிகள்.

//தேடிக்கொண்டிருந்தேன்' என்ற பதில்

எனக்குள் இன்னொரு ஜென்மத்தைப்

பொசுக்கென்று விதைத்தது //

நச்சென்ற முடிவு - வைர வரிகள்

கற்பனை வளமும், கவிதைத் திறனும், சுவாசிக்கும் தமிழும் - புகாரியின் பலம்.

வாழ்க நண்ப புகாரி

நட்புடன் ..... சீனா
-----------------------------

காந்தி said...

புகாரி...

கவிதை பரவசம்!

அதேப்போல ஹரனின் விமர்சனமும்....!

விஷ்ணு said...

அன்பின் புகாரி ...அருமையான கவிதை ..
நல்ல தேடல் .. அருமையான கருத்து ...
கவிதை வரிகளும் வர்ணனைகளும் மிக மிக அருமை ..
மிக அதிகம் ரசித்தேன் கவிதையை ...

மனமார்ந்த நன்றிகளுடன்
விஷ்ணு ..