பொங்கல் வாழ்த்துக்கள்

இன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை. 




மஞ்சள் கொத்தோடு
        மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
        எறும்பூரும் கரும்போடு

வட்டப் புதுப்பானை
        வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
        பொங்கிவரும் பொங்கலிது

கரும்பைக் கைபிடிக்க
        கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
        குமரியிதழ் தேன்வடிக்க

வயலில் வாய்க்காலில்
        ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
        பாடிவரும் பொங்கலிது

வீட்டுப் பசுமாடும்
        வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
        பொன்னழகுப் பொட்டுவச்சி

தோட்டத் தெருவெல்லாம்
        தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
        அழகுமணிப் பொங்கலிது

மண்ணைக் கையெடுக்க
        மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
        பெருமிதத்தில் கண்விரிய

அன்னம் கொடுப்பவளின்
        அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
        நிலம்புகழும் பொங்கலிது

4 comments:

Kavinaya said...

மிக அழகான வாழ்த்துக்கு நன்றி! உங்களுக்கும் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

சீனா said...

அன்பின் புகாரி

அருமையான பொங்கல் வாழ்த்துகள் - கவிதை நெஞ்சை அள்ளுகிறது.

மஞ்சள் கொத்து, மாவிலை, இஞ்சி, கரும்புடன்
புதுப்பானையில் பால் பொங்க
குமரி இதழில் தேனுடன், கையில் கரும்புடன், கண்ணில் கட்டழகனுடன், குறும்புச் சொற்களூடன்
பய - புள்ளைக வயல் வாய்க்காலில் ஒய்யார நடை நடந்து
மகிழ்ச்சியுடன் பாடல் பாடிக் கொண்டாடும் பொங்கலிது.

பசுக்களும் எருதுகளூம் காலில் சலங்கையும் கழுத்தில் மாலையும் நெற்றியில் பொட்டுமாக பவனி வரும் பொங்கலிது
சோறு போடும் நிலத்தினிற்கு உழவர்கள் நன்றி செலுத்தும் நற்பொஙகலிது
அருமையான கவிதை - சொற்கள் தேர்ந்தெடுத்திட்ட கவிதை
மிக மிக இரசித்தேன் - மகிழ்ந்தேன் - உரிமையுடன் பகிர்கிறேன் - நட்புகளுடன்.
நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

mohamedali jinnah said...

பொங்கல் வருது பெருமையாய் இருக்குது
பொங்க வைக்க பானை வைக்க அடுப்பு இருக்குது

பொங்கலுண்ட மக்கள் பெருமையாய் இருப்பார்
பொங்கலன்று பொங்கி வரும் ஆற்றை காணாமல் தேடுவார்

பொங்கல் வாழ்த்தை பெருமையாய் பகிர்வார் பலர்
பொங்கலன்று வாழ்த்தழுதி கவிதைப் பகிர்வார் புகாரி

குருமூர்த்தி said...


அருமையான கவிதை. பொங்கலைக்காட்டிலும் இனிமை. நிற்க.

தஞ்சையின் வளமையெல்லாம் காவிரியில் தொலைந்துபோன காலம் இது. என்றாலும் பொங்கல் பொங்கியே தீரும். நீங்கள் கனடாவில் இருப்பதால் தஞ்சையை மனக்கண்ணில் கொண்டுவந்து எழுதிய கவிதை அற்புதம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். நலமுடன் வாழ்க...குருமூர்த்தி