ஞான வெளிச் சொர்க்கம்

செவி மூடியவர்களிடம்
பேச்சு வார்த்தை நடத்துவதும்
செருப்பில்லாமல்
நெருஞ்சி முட்காட்டில் நடப்பதும்
ஒன்றுதான்

வாய் திறக்க விடாமல்
குரல் மட்டும் உயர்த்துவதால்
சாதிக்கப் போவதுதான் என்ன -
புரிந்துணர்வைப் போட்டுப்
புதைப்பதைத் தவிர

கதறி அழுது சிதறிப்போகும்
நட்பை... நல்ல உறவை...
சற்றும் பொருட்படுத்தாமல்
துடித்து வெடிக்கும்
துப்பாக்கி ரவைச் சொற்களுக்கு
வாழ்க்கை அகராதிகளில்
பொருள்தான் என்ன -
பிதற்றிப் பின்னழும் வைபவத்துக்கு
விழிநீர் சேர்க்கும் எத்தனம்
என்பதைத் தவிர

இடைவிடாமல்
இரு முழு நீள மணி நேரமும்
தொலைபேசியில்
பேசமட்டுமே செய்தான்
சொந்தம் ஒருவன்

அவன்
குற்றச்சாட்டுக் குத்தீட்டிகளையும்
அறிவில்லா
அறிவுரைத் தோரணங்களையும்
ஏந்திக்கொண்டே
நான்

ஒரு
நம்பிக்கைதான்
எனக்கும் ஒரு வாய்ப்புத் திறப்பான்
நானும் பேசலாமென

”ரொம்ப நேரமா பேசிட்டோம்
அப்புறம் ஒருநாள் பேசலாம்”
சட்டெனத் துண்டித்தான்
தொலைபேசி சாதுர்யன்

அட இனி எப்போது
பேசப்போகிறானோ என்று
நிலை குலைந்து
நடுங்கித் தவிக்கிறது நெஞ்சு

கல் விழுந்த கண்ணாடிக் குடுவையைப்போல
உடைந்துதான் போனது
வெகுகாலம் குரல் நீட்டா மோனத்தில்
களித்திருந்த நெஞ்சு

சட்டென ஒரு பொறி
அக்னி பரவியது அகமெங்கும்

சொல்வதை
வாங்கு வாங்கென்று வாங்கிக்கொண்டு
மௌனத்தையே பதிலாகக்
கொடு கொடு என்று
கொடுத்திருந்தால்?

கேட்கும் செவியோடு
என்றாவது வாவெனக்
காத்திருப்பதல்லவா
ஞானவெளிச் சொர்க்கம்! 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு
நம்பிக்கைதான்


வாழ்த்துக்கள்...