சவுதிதான் இஸ்லாம்

இஸ்லாம் என்றதுமே பலர் சவுதி அரேபியாவோடு அதை முடிச்சுப் போட்டுவிடுகிறார்கள்.

சவுதிதான் இஸ்லாம். இஸ்லாம்தான் சவுதி என்ற உச்சத்துக்கே சென்றுவிடுகிறார்கள்.

சவுதியின் மீதான பயபக்தி சவுதி செய்யும் எந்த வகை அறமற்ற செயலையும் அறவழிதான் என்று அடித்துக் கூறும் அளவுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

உணர்வுப் பூர்வமாக அணுகும் இவர்கள் அறிவுப் பூர்வமாக அணுகத் தயங்குகிறார்கள்.

காரணம் மதத்தை அல்லது மார்க்கத்தைப் பலரும் உணர்வுகளில் கட்டிப்போடுகிறார்களே தவிர அறிவோடு அலசுவதில்லை.

முகம்மது நபிபெருமானார் ஓர் உலக மகா புரட்சி நாயகர். இதுவரை அவரைப்போல மனித உள்ளங்களில் தலைகீழ் மாற்றங்களைச் செய்த மகத்தான சாதனையாளர் இன்னொருவர் கிடையாது என்று அறிஞர்கள் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உலக சரித்திரத்தில் அதிக செல்வாக்கினைப் பெற்ற 100 சிறந்தவர்களை மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவர் தொகுத்தார்.

அதில் அவர் தேர்வு செய்த முதலாமவர் முகம்மது நபி அவர்கள்தான். நியூட்டனுக்கு இரண்டாம் இடம். ஏசுவுக்கு மூன்றாம் இடம். புத்தருக்கு நான்காம் இடம்.

மைக்கேல் ஹார்ட் ஒரு கிருத்தவராக இருந்தபோதும் வேற்றுமத இறைத்தூதரான முகம்மது நபிக்கு முதலிடம் கொடுத்தார்.

அத்தனை உயரிய பகுத்தறிவாளர் முகம்மது நபி. ஆனால் அவரைப் பின்பற்றும் முஸ்லிம்களில் சிலர் சிந்திக்கவே மாட்டேன் என்று அடம்பிடிப்பது வேடிக்கை, வினோதம்.

இஸ்லாம் தோன்றியது கி.பி. 610. சௌதி அரேபியா தோன்றியது கி.பி. 1932. இடையில் எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

சவுதி என்ற நாட்டின் சட்டதிட்டங்கள் வேறு இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் வேறு. இதை முஸ்லிம்கள் புரிந்துகொள்வது அவசியம்.

அதோடு இப்படி வரிந்துகட்டிக்கொண்டு முஸ்லிம் நாடு என்று பறைசாற்றிக்கொள்ளும் பெரும்பாலான நாடுகள், அறிவியல் அறிவில் மிகவும் பின் தங்கியவர்களாக இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் முகம்மது நபி பெருமான் அன்றே கூறியதுபோல சீனாவுக்குச் சென்றேனும் கல்வி கற்றுக்கொள் என்பதன் பொருள் புரியும்.

 

No comments: