#தமிழ்முஸ்லிம்

தொப்பி - குல்லா - முண்டாசு - தலைப்பாகை - தலைத்துணி - ஒட்டகக்கயிறு

முதலில் மனிதர்கள் ஏன் தொப்பி அணிகிறார்கள் என்று பார்க்கலாம்.

தலையை நேரடி சூரியத் தாக்குதலில் இருந்து காக்காவிட்டால், அப்படியே மயங்கிவிழ நேரிடும், பைத்தியம் பிடிக்க வாய்ப்புண்டு, ஏன் சாவுகூட நிகழக்கூடும்.

ஆனால் இந்த தேவை கருதிய இயற்கைக் காரணம் தாண்டி மக்கள் தொப்பியை வேறு சில காரணங்களுக்காகவும் அணிகிறார்கள்.

தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலர் அணிகிறார்கள். எம்ஜிஆர் அப்படித்தான் அணிந்தார். பட்டிணப் பெண்கள் தங்களை அழுகுபடுத்திக்கொள்ள அணிகிறார்கள்.

முடிசூடும் ராஜவம்சங்கள் அழிந்தாலும் அப்படி ஒரு கௌரவம் தரும் என்ற நினைப்பில் சிலர் தொப்பி அணிகிறார்கள் முடிசூடிக் கொள்வதைப் போல.

சிலருக்கு இது ஒரு சமூக அல்லது தங்கள் கொள்கையின் அங்கீகாரமாக இருக்கிறது. நேத்தாஜி, நேரு போன்றவர்களை இந்த வகையில் சேர்க்கலாம்.

மதம் சார்ந்த அடையாளமாக சிலர் அணிகிறார்கள். முஸ்லிம்கள், சர்தார்ஜிகள் போன்றவர்களை இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

ராணுவத்தில் தேசப்பற்றின் அடையாளமாகத் தொப்பி அணிகிறார்கள்.

அப்புறம் இந்த சுதந்திரப் போராட்டக்காரர்கள் அவர்களுக்கான ஓர் அடையாளமாக அணிந்தார்கள். இன்றும் அதை ஒரு பண்பின் அடையாளமாக ஆக்கி அரசியல்வாதிகள் சிலர் அணிகிறார்கள். இது போன்று அணிபவர்கள் வட இந்தியாவில்தான் அதிகம்.

இந்தத் தலைப்பாகை என்பதையும் நாம் தொப்பி என்றுதான் கொள்ளவேண்டும். ஒரு தொப்பியை உருவாக்க அறியாத காலத்தில் தோளில் உள்ள துண்டையே தலையில் கட்டிக்கொள்வார்கள், வெயிலுக்காகவும் வசதிக்காகவும்.

பின் தலைப்பாகை கட்டுவது என்பது உயர்ந்தவர் என்ற அடையாளமாகவும் பாரம்பரிய வழக்கமாகவும் சில சாதிகளின் அடையாளமாகவும் இருக்கிறது.

போலீஸ்காரர் தொப்பி அணிந்து தங்களை அடையாளப் படுத்திக்கொள்வார்கள். பதிவிக்கு ஏற்ப தொப்பிகள் மாறும்.

இப்படியே தொப்பிகளைப் பற்றி ஆராயப்போனால், ஏகப்பட்ட விசயங்கள் வந்துகொண்டே இருக்கும்.

தொப்பிகளில் எத்தனை வகை தொப்பி என்று கணக்கெடுக்கத் தொடங்கினாலும் அது சீக்கிரத்தில் முடிவதாய் இருக்காது.

ஆனால் அன்று அராபியர்கள் தேவை கருதியே தொப்பி அணிந்தார்கள்.

பாலைவனத்தில் இரண்டு பெரும் தொல்லைகள் இருக்கும்.

ஒன்று சூரியன் தலைக்கு மேல் ஏறி நடு உச்சியில் உட்கார்ந்துகொண்டு கடப்பாறை சுத்தியல்களால் மண்டையைப் பிளக்கும்.

அடுத்தது அங்கே வீசும் கொடு மணற் புயல்.

இந்த இரண்டையுமே தாங்க முடியாது. சூரியன் சுட்டெருக்கும் என்றால் இந்த மணற்புயல் கடுமையான மூச்சுத் திணறலில் கொண்டுபோய் விட்டுவிடும்.

கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மண்ணள்ளிக் கொட்டிக்கொண்டே இருந்தால் எப்படித் தாங்கிக்கொள்வது?

இந்த இரண்டிலிருந்தும் தப்பிக்க, அராபியர்கள் ஒரு தொப்பியும் ஒரு மேல்துண்டும் வைத்திருப்பார்கள். கூடவே ஒட்டகங்களைக் கட்டுவதற்கான, அல்லது மேய்ப்பதற்கான ஒரு கயிறும் வைத்திருப்பார்கள்.

இந்த தொப்பி துண்டு கயிறு ஆகிய மூன்றையும் தலையில் வசதியாகக் கட்டிக்கொள்வார்கள். இதனால் சூரியனையும் மணற்புயலையும் அவரால் சமாளிக்க முடிந்தது.

இதையே சில முஸ்லிம்கள் கண்மூடித்தனமாகப் பிடித்துக்கொண்டு, பாலைவனம் இல்லாத சோலைவனத்தில் வாழும்போதும் இஸ்லாத்தில் கட்டாயம் தொப்பி அணியவேண்டும் இல்லாவிட்டால் நாம் முஸ்லிம் இல்லை என்று மூட நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

அராபியர்களுள் ஆண்களும் சரி பெண்களும் சரி தலையில் துணி கட்டி இருப்பார்கள். இல்லாமல் மணல் புயலையும் வெயிலையும் சமாளிக்கவே முடியாது அல்லவா?

மணற்புயல் வீசும்போது, தலைத்துணியைச் சுற்றிச் சுற்றிக் கட்டி கண்மட்டுமே தெரியும்படி அமைத்துக்கொள்வார்கள். ஏன் என்று காரணம் சொல்லி இனியும் விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால், இதுவே முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் ஆனது, முஸ்லிம் ஆண்களுக்குத் தொப்பி ஆனது.

ஹிஜாப் என்றால் முக்காடு போட்டுக்கொள்ளும் தனியான ஒரு தலைத்துணி.

கனடாவில் பல முஸ்லிம் பெண்கள் ஜீன்ஸ் போட்டிருப்பார்கள், டிசர்ட் போட்டிருப்பார்கள், ஆனால் தலையில் மட்டும் ஒரு துணியால் முக்காடு போட்டிருப்பார்கள். முகம் மூடப்பட்டிருக்காது, திறந்துதான் இருக்கும்.

அதாவது, தலையின் ”முடியை” மட்டும் மறைத்து வைத்திருப்பார்கள்.

ஏன் தலையின் முடியை மட்டும் மறைக்க வேண்டும்?

முடிதான் ஒரு பெண்ணின் உடலில் மிகவும் கவர்ச்சியான பகுதியா? இந்தக் கேள்விக்கு அவர்களுக்கு விடை தெரியாது.

பிறகு ஏன் அணிகிறார்கள் என்றால், ஒரு பயம்தான். மதம் சார்ந்த பெரியோர்கள், நீயெல்லாம் ஒரு முஸ்லிம் பெண்ணா என்று கேவலமாகப்
பேசுவார்களே என்ற பயம்தான்.

வேறு சிலருக்கு அப்போதுதான் தான் ஒரு முஸ்லிம் என்று அடையாளப்படுத்தப்படுவோம் என்றும் நினைக்கிறார்கள்.

இந்தத் தலைத்துணி முஸ்லிம் ஆண்கள், பெண்களிம் மீதான அவநம்பிக்கை காரணமாக, தன் பாதுகாப்பின்மை கருதி பெண்களிம் மீது சுமத்திய ஒரு காரியம் என்பதை சற்றே சிந்தித்தால் புரியும்.

ஆகவே அராபியர்கள் தங்களின் பாலைவன ஒட்டக வாழ்க்கை காரணமாக அணிந்த தொப்பி தலைத்துணி ஒட்டகக் கயிறு ஆகியவற்றை இந்த நவீன காலத்திலும் முஸ்லிம்கள் அணிவது அறியாமை மட்டுமே.

மற்றபடி இஸ்லாத்தில் இதெல்லாம் கிடையாது.

காம உணர்வுகளைத் தூண்டும் அங்கங்களை பெண்கள் மறைத்துக் கொள்ளும்படியே குர்-ஆன் பரிந்துரைக்கிறது. ஆணும் சரி பெண்ணும் சரி வெறித்து நோக்குவதை விடுத்து காம உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தருணங்களில் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொண்டு கண்ணியமாக நடந்து கொள்ளுதல் வேண்டும் என்றே சொல்கிறது. மற்றபடி ஆடைகளால் தங்களை அழகு படுத்திக் கொள்வதை குர்-ஆன் வரவேற்கவே செய்கிறது.

இந்த உலகை அனுபவித்து வாழ்வதை இஸ்லாம் ஒருபோதும் தடுக்கவே இல்லை.

முன்பெல்லாம் தமிழ்முஸ்லிம்கள் தொப்பி அணியாமல் பள்ளிவாசலுக்கு வரவே மாட்டார்கள்.

தொப்பி அணியாமல் இறைவனிடம் எதையும் வேண்டிக்கொள்ள மாட்டார்கள்.

தொப்பி அணியாமல் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள்.

தொப்பி அணியாமல் தொழ மாட்டார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் அது மாறிவிட்டது. வகாபியம் அதைப் பெரிதாய் வலியுறுத்தவில்லை என்றதும், சவுதி அதை பெரிதாய்ப் பார்க்கவில்லை என்றதும், தமிழ் முஸ்லிம்களும் தொப்பியைச் சற்றே கழற்றிவைத்துவிட்டார்கள்.

தொப்பியில்லாத தலைகள் இன்றெல்லாம் தமிழ் நாட்டின் பள்ளிகளில் நிறையவே தொழுதுகொண்டு நிற்கின்றன.

இப்படி சவுதிக்காரர்களைப் பார்த்தே தங்களின் ஒவ்வொன்றையும் ஏற்பதும் துறப்பதுமே உண்மையான முஸ்லிமின் சிறந்த செயல் என்று நினைக்கும் முஸ்லிம்கள், நிச்சயமாக குர்-ஆனை நிராகரிக்கிறார்கள் என்றே சொல்வேன்.

நல்ல வேளையாக ஒட்டகக் கயிறையும் தலையில் கட்டுவேன் என்று எந்த தமிழ் முஸ்லிமும் நிற்கவில்லை. அரபுக்காரன் ஒட்டகக் கயிறு கட்டினான் என்றால் அவன் ஒட்டகம் மேய்த்தான் என்பதை புரிந்துகொண்டுதான் கட்டாமல் இருந்திருப்பார்கள் என்று நம்புவோமாக.

எந்த ஐயம் வந்தாலும் ஒரு முஸ்லிம் அனுகவேண்டியது ஐயங்களே அற்ற ”ஆதண்டிகேட்டட்” - ஏற்புடைய என்று சொல்லத் தேவைப்படாத குர்-ஆன் மட்டுமே அன்றி வேறு எதுவும் அல்ல என்பதை முழுதாய் உணரும் காலம் ஒன்று நிச்சயம் வரும் என்று நம்புவோமாக.

தொப்பி இடுவதும் இடாததும் அன்றைய சீதோஷ்ண தேவையைப் பொறுத்தது.

குடை ஏன் வேண்டும்?


Comments

ஆசான்,

இங்கே முஸ்லிம்கள் தலைப்பாகை தொப்பி அணிவதன் பின்னால் இருக்கும் ஒரே காரணம் முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறை (சுன்னத்). அறியாமை கால பழக்கமோ / அறியாமையோ அல்ல. அணிவதும் / அணியாமல் இருப்பது அவர் அவர் விருப்பம். சுன்னத்தை கடைபிடிப்பது என்பது கட்டாயமல்ல.

பெண்களை பொறுத்தவரை அல்-குரான் சொல்கிறது, அவர்கள் தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அன்னியர் பார்வையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. எனவே இதுவும் முஸ்லிம் ஆண்களின் அவநம்பிக்கையோ பெண்கள் மீதான அடக்கு முறையோ அல்ல. பெண்கள் விரும்பினால் அவர்கள் விருப்பப்படி இருந்து கொள்ளட்டும். சொல்வது கடமை. தீர்ப்பு அல்லாஹ்வின் கையில்.

ஆசான் உங்களிடம் இருந்து இப்படி முரணான ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை.
என் அன்பிற்கினிய முகமது இஸ்மாயில் புகாரி,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நான் ஏதும் தவறாக எழுதவில்லை. உண்மையைத்தான் எழுதினேன். தொப்பி ஏன் அணிய வேண்டும் பர்தா ஏன் அணிய வேண்டும் என்று குர்-ஆன் வழியே வசனங்களைத் தேடித் தாருங்கள்.

முதலில் தொப்பி பற்றி பிஜே என்ன ஆய்வினை மேற்கொண்டு பதில் தந்திருக்கிறார் என்று பாருங்கள். நான் சொன்னால் கேளாதவர்கள் அவர் சொன்னால் கேட்பார்கள்.

http://onlinepj.com/books/thoppi_or_ayvu/

குர்-ஆன் படி பர்தா அணிய வேண்டும் என்று முஸ்லிம் பெண்ணை இஸ்லாம் கட்டாயப்படுத்த வில்லை.

நான் முரணாக எழுதி இருக்கிறேன் என்று நினைக்காதீர்கள். நான் உண்மையையையே எழுதி இருக்கிறேன்.

சில விசயங்கள் பழக்கம் காரணமாகவும். சில விசயங்கள் சில நம் மீது திணிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாகவுமே வருகின்றன.

என்றும் அன்புடன் புகாரி
அன்பின் ஆசான்,

வ அலைக்கும் சலாம்

P.J அவர்கள் நிறைய விஷயங்களில் தன்னுடைய கருத்தை இன்று மாற்றிக் கொண்டுள்ளார். உதாரணதிற்கு நோன்பு திறக்கும் துஆ. இதை பற்றி நீங்கள் இணையத்தில் தெரிந்து கொள்ள இயலும். அவரை கேட்பவர்கள் தொப்பி அணிவதில்லை, ஆனால் அவர் எப்போதும் தொப்பியோடு தான் இருப்பார்.

அல்-குரான் வசனம் 24:31 இப்படி சொல்கிறது.
24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

பெண்கள் தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது, வெட்கத் தலங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மார்பகங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. இப்படி மறைத்துக் கொள்வதானால் பர்தா தான் சிறந்த உடையாக இருக்க முடியும். பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அதே தான். இறுக்கமான உடை அணிவது, தங்கள் உடல் அழகை ஈர்க்கும் வகையில் வெளிக்காட்டுதல் மறுக்கப்பட்டதே.

தொப்பியை பொறுத்த மட்டில், உங்களுடைய 'அறியாமை' என்ற வார்த்தையை தான் நான் மறுக்கிறேன். கண்மூடித்தனமாக இல்லாமல் முஹம்மது(ஸல்) அவர்களின் நடைமுறை, தலையை மறைத்துக் கொண்டு தொழும் சுன்னத்தை பின்பற்றவே அன்றி வேறு காரணம் இல்லை.

உங்களுக்கு சரியான பதில் வேண்டும் என்றால் திரு.ஜாகிர் நாய்க் அவர்களின் ஆராய்ந்த பதிலை (www.irf.net - PeaceTV) பாருங்கள்.

//சில விசயங்கள் பழக்கம் காரணமாகவும். சில விசயங்கள் சில நம் மீது திணிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாகவுமே வருகின்றன.//

தொப்பி - பழக்கமோ, கட்டுப்பாடோ அல்ல. நபி அவர்களின் சுன்னத். அணியாமல் இருப்பது அவர் அவர் விருப்பம். கட்டாயம் அல்ல.

பர்தா - அவசியம். காரணம் குர்ஆன் கூறும்படி நடந்து கொள்ள அதுவே சிறந்த உடை. முழு உடலையும் மறைக்கும் உடை இருப்பின் அதுவே போதுமானது.

ஜஜக்கல்லாஹ் ஹைர். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
அன்பிற்கினிய முகம்மது இஸ்மாயில் புகார்,

அஸ்ஸலாமு அலைக்கும். அக்கறையான மறுமொழி மகிழ்வினைத் தருகிறது

>>>>அல்-குரான் வசனம் 24:31 இப்படி சொல்கிறது.<<<<

இந்த இறைவசனத்தின் மிகச் சரியான மொழிபெயர்ப்பைப் பலரும் தருவதில்லை.

வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பை இந்தத் தளம் மிக அருமையாகத் தருகிறது. இதையும் கொஞ்சம் பாருங்கள்.

http://corpus.quran.com/wordbyword.jsp?chapter=24&verse=31#(24:31:1)

>>>>இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்<<<<

இதுதான் அழுத்தமாகக் கூறப்பட்டது. மார்பகங்களையும் இன்னபிற காம உணர்வுகளைத் தூண்டும் அங்கங்களையும் பெண்கள் திறந்து போட்டுக்கொண்டு அலையக்கூடாது. அவை உடைகளால் மூடப்பட்டிருக்க வேண்டும். இதை ஒரு சுரிதார், ஒரு சேலை என்று எதுவேண்டுமாலும் செய்யும். தலைத்துணி பற்றி இந்த வசனத்தில் பேச்சே இல்லை.

மார்பகங்களை மூடும் கூடுதல் துணியைச் சிலர் தலைத்துணி என்று ஆக்கிக்கொள்வது அவர்கள் வசதிக்குத்தான். மற்றபடி அது இறைவன் சொல் அல்ல.

அன்புடன் புகாரி

ஆசான்,

அந்த வசனம் தெளிவாக சொல்கிறது. நீங்கள் கொடுத்த இணைப்பிலே இருக்கிறது.

And let them draw their head covers over their bosoms - இதன் அர்த்தம் என்ன ஆசான்? அவர்களின் தலைதுணியை மார்பகத்தை மறைக்கவும் பயன்படுத்த சொல்கிறது அல்-குரான்.

ஒரு முறை முஹம்மது(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தான் நோன்பை விட்டு விட்டதாக சொன்னார். நபி அவர்கள் காரணம் கேட்டதிற்கு என் மனைவியின் கெண்டை காலை பார்த்து நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்று சொன்னார். நபி அவர்கள் அதை கேட்டு சிரித்தார்கள்.

ஒரு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் ஈர்ப்பு உடையவர்களாகவே படைக்கப்பட்டு உள்ளார்கள். தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது அவர் அவர் கடமை. நீங்கள் சொல்வது போல் சேலையோ சுடிதாரோ - உடல் அமைப்பை, மார்புகளை முழுமையாக மறைப்பதில்லை. உடலை ஒட்டிய இறுக்கமான அங்கங்களை அறிவிக்கும் ஆடைகள் தடை செய்யப்பட்டவை. பெண்களுக்கான பாதுகாப்புக் காரணமே அன்றி வேறு எதுவும் இதில் இல்லை.

அல்லாஹ் மிக அறிந்தவன். அவனே அனைவருக்கும் போதுமானவன்.

ஜஜாக்கல்லாஹ் கைர்

முஹம்மத்
அன்பின் முகம்மது இஸ்மாயில் புகாரி,

உங்களுக்காக இன்று மேலும் விளக்கமாக, இதுபற்றி எழுதி, வலைப்பூவிலும் முகநூலிலும் இட்டிருக்கிறேன். இதோ அந்த இடுகை:


முஸ்லிம் பெண்களின் தலைத்துணியும் குர்-ஆன் வசனம் 24:31 ம்
”பெண்கள் உடலின் அந்தரங்க பாகங்களை மறைத்துக்கொள்ளட்டும்,
அவர்களின் கவர்ச்சியான பகுதிகளை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டாம்
மார்பகங்களின் மீது (”கிமர்ஸ்” khimars) தாவணி இட்டுக்கொள்ளட்டும்”

இதுதான் குர்-ஆன் 24:31 வசனத்தின் பெண்களின் ஆடை பற்றிய குறிப்புகள். இது மார்மீது தாவணி இட்டுக்கொள்ளச் சொல்வதைத் தலைத்துணி என்று தவறாக போதிக்கிறார்கள் சிலர்.

ஒரு முக்கியமான குறிப்பு இந்த 24:31 எதுவெனில். இந்த வசனத்தில் எங்குமே ”தலைமுடி” ”தலை” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.

பெண்களே உங்கள் தலையை மூடிக்கொள்ளுங்கள், உங்கள் சிகையை மூடிக்கொள்ளுங்கள் என்று குர்-ஆனில் எங்கேனும் உள்ளதா என்றால் எங்குமே கிடையாது.

அராபிய கலாச்சாரத்தை வைத்துக்கொண்டு புராதன ஆய்வாளர்கள், தாவணியைத் தலைத்துணி என்று தவறாகச் சொல்கிறார்கள். அராபியர்களின் பழக்க வழக்கங்களை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் மீது திணிக்கப்பார்க்கிறார்கள்.

தலையையும் தலைமுடியையும் மறைப்பது முக்கியமென்றால் இறைவன் தன் வசனங்களில் அதைத் தெளிவாகவே சொல்லி இருப்பான். அவனோ மார்பங்களை மறைப்பது பற்றியே கூறுகிறான். மார்பகங்களை மறைப்பது தாவணிதானே தவிர தலைத்துணி அல்ல.

இந்தத் தலைத்துணி என்று தவறாகச் சொல்லப்படும் தாவணிக்கு குர்-ஆனில் உள்ள சொல் ”khimar - கிமர்”

khimar என்ற அரபிச் சொல்லுக்கு cover - மூடி என்றுதான் பொருள். இந்த கிமரைக்கொண்டு மார்பகங்களை மூடச் சொல்கிறது குர்-ஆன். அவ்வளவுதான்.

ஹிஜாப் என்ற சொல் குர்-ஆனில் பல இடங்களில் வருகிறது அந்த ஹிஜாபுக்கும் இந்தக் கிமருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. வசனம் 7:46, 17:45, 19:17, 33:53, 38:32, 41:5, 42:51 களைப் பார்த்துக்கொள்ளலாம்.

இறைவன் உங்கள் தலைமுடியையும் மார்பங்களையும் கிமர் இட்டு மூடிக்கொள்ளுங்கள் என்றால் குழப்பமே இல்லை. ஆனால் இறைவன் சொல்வதோ, உங்கள் மார்பங்களை கிமர் இட்டு மூடிக்கொள்ளுங்கள் என்றுதான்.

முடியை ஏன் மூடவேண்டும்? அதுவா பெண்ணின் கவர்ச்சியான பகுதி? சற்றே சிந்திக்க வேண்டாமா?

இறைவன் சொல்லாததை மனிதர்கள், மனிதர்கள் மீது சுமத்துவது கண்டிப்பாகக் கூடவே கூடாது என்று இறைவனே சொல்கிறான்.

முஸ்லிம் பெண்கள் தங்கள் மார்பகங்களை மூடிக்கொண்டால், கவர்ச்சியான பகுதிகளை மூடிக்கொண்டால், இறைவனின் கட்டளையை ஏற்றவள் ஆகிவிடுகிறாள்.

தலையோ தலைமுடியோ கவர்ச்சியானவை என்று இறைவனும் சொல்லவில்லை, நாமும் அறிவோம்.

”ஒரு முறை நபிகளாரிடம் ஒருவர் வந்து தான் நோன்பை விட்டு விட்டதாக சொன்னார். நபி அவர்கள் காரணம் கேட்டதிற்கு என் மனைவியின் கெண்டை காலை பார்த்து நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்று சொன்னார். நபி அவர்கள் அதை கேட்டு சிரித்தார்கள்.”

இப்படி ஒரு ஹதீதைச் சொல்லி பெண்களின் கெண்டைக் காலையும் மூடும் மிகப்பெரிய போர்வையைப் போட்டுப் போர்த்திவிடவேண்டும் என்று ஒருவர் சொன்னார்.

உணர்ச்சி வசப்படுவதற்கு கெண்டைக்காலையா பார்க்க வேண்டும். அவள் எங்கோ விட்டுச்சென்ற நகம் போதுமே? அவளின் நினைவு போதுமே. பர்தா போட்டு முழுவதும் மூடிக்கொண்டு நின்றால் மட்டும் பட்டினி கிடக்கும் ஒருவனுக்குக் காமம் கொப்பளிக்காதா?

உறக்கத்தில்கூட அவளே இல்லாதபோது அவளைப்பற்றிக் கனவு கண்டு என்னென்னவோ செய்து தொலைக்கிறானே ஏக்கத்தில் உள்ளவன். ஒருவன் காமம் கொண்டுவிட்டால், இந்த பர்தா தலைத்துணியெல்லாம் பொருட்டாகுமா?

அன்பேவா படத்தில் சரோஜாதேவியின் அழகைக் கூட்டுவதற்கு ஒரு தலைத்துணியையும் கறுப்புக் கண்ணாடியையும்தான் பயன்படுத்தி இருப்பார்கள். வழமையைவிட அழகாகத் தெரிவார் சரோஜாதேவி. அப்படியென்றால் தலைத்துணி கவர்ச்சியைக் கூட்டுகிறதா குறைக்கிறதா?

பிரச்சினை பெண்ணிடம் இல்லை, அவளை நோக்கும் ஆண்களின் பார்வையில் இருக்கிறது, அவனின் நோக்கத்தில் இருக்கிறது, அவன் மனோநிலையில் இருக்கிறது, அவனது காமப்பட்டினி காலத்தில் இருக்கிறது.

இது இப்படி இருக்க, ஓர் ஆண் தன் விருப்பம்போல் உடையுடுத்துகிறான், வாலிபக் கட்டுடலை வசீகரமாகக் காட்டும் ஆடை அணிகிறான். தலையையும் தலைமுடியையும் நன்கு அலங்காரம் செய்து திறந்து வைத்திருக்கிறான். இவனைக் காணும் பெண்களுக்கு இச்சைகள் வராதா? பெண் என்ன இச்சைகள் அற்றவளா?

இச்சைகளை அடக்குவதுதான் பண்பாடு கலாச்சாரம் நாகரிகம். ஆகவேதான் இறைவன் இந்த வசனத்தின் முதல் அடியிலேயே, பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று ஆணுக்கும் பெண்ணுக்கு சேர்த்தே சொல்கிறான்.

செய்யவேண்டியது இறைவன் சொல்வதைப்போல, மனிதன் நாகரிகம் பெறுவதுதானே தவிர உச்சிமுதல் கணுக்கால்வரை பெண்ணை மூடி வைப்பதல்ல.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்