#தமிழ்முஸ்லிம்
தாடி - மீசை
தாடி நிச்சயமாக கம்பீரத்தின் அடையாளம்தான். ஆண்மையின் முக்கியமான அங்க அடையாளமாகத்தான் தாடி தொடக்கம் முதலே பார்க்கப்படுகிறது
கொரவம் மிக்க மனிதனின் அடையாளமாகவும் தாடி பலநேரங்களில் பார்க்கப்படுகிறது.
ஆனாலும் அப்படியே தாடியை ஐந்து பிளேட் சவரக்கருவியால் சரசரவென்று மழித்துவிட்டு கண்ணாடியில் பார்க்கும்போதே ஏற்படும் உற்சாகத்தை ஒவ்வொரு நாள் அதிகாலையும் இன்றே புதிதாய்ப் பிறந்ததைப் போல அனுபவிக்கும் ஆண்கள்தாம் உலகில் அதிகம்.
அன்றெல்லாம் இரண்டுநாள் தாடியோடு நின்றால், அவன் ஏதோ காதலில் தோல்வியடைந்தவன் அல்லது எதையோ பறிகொடுத்துவிட்டு நிற்பவன் என்று அர்த்தம். ஆனால் இன்று இரண்டு நாள் தாடியோடு இருக்கும் இளைஞன் உற்சாகமானவன்.
பூனை முடியோடு வளரும் முதல் தாடி மீசை என்பது பதின்ம வயது வாலிபர்களின் குறுகுறுப்பும் கிளர்ச்சியும் ஆகும்.
இன்றைய இளம் பெண்களில் பலருக்கும் ஒட்ட மழித்த ஆணின் முகத்தைவிட கதிரறுத்த வயல் போன்ற தாடி முக ஆணைத்தான் அதிகம் பிடித்திருக்கிறது. ஆனாலும் சில பெண்களுக்குத் தாடியைக் கண்டாலே பிடிக்காது. இது என்ன வேசம் என்று வசைபாடவே தொடங்கிவிடுவார்கள்.
ஒரு தாடி நண்பர் என்னிடம் ஒருமுறை சொன்னார். உன் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று தன் மனைவியிடம் கேட்டாராம். ஒரே ஒரு முறையாவது உங்கள் கன்னங்களை முழுதாகப் பார்க்க வேண்டும் என்று ஆசை என்று சொன்னாராம்.
தாடி வைத்தால் கண்டுகொள்ளாத பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நீ தாடி வைத்துத்தான் ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கும் ஒரு பெண் இருக்கிறாரா என்று தெரியவில்லை.
தாடியும் வழுக்கையும் ஆண்களுக்குச் சுரக்கும் ஒருவகை வேதிப்பொருளால்தான் வருகிறதாம். தாடியும் புல்தரைகளைப் போல கோடைகாலத்துக்கும் குளிர்காலத்துக்கும் மாறுபட்டு வளர்கின்றது.
கோடையில் தாடியின் வளர்ச்சி குபீர் என்று செழுமையாய் இருக்கும். ஆகவே பாலைவனத்தில் உள்ளவர்களின் தாடி இயல்பாகவே மிக விரைவாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்திருக்கும்.
உலகின் பெரும்பணக்காரர்கள் பெரும்பாலும் சுத்தமாக மழித்துவிட்டு அழகு காட்டுபவர்கள். மரத்தொழில், போர், குத்துவெட்டு போன்றவற்றில் ஈடுபடுவோரில் அதிகமானோர் தாடி வளர்ப்பவர்களாய் இருக்கிறார்கள்.
தாடி வைப்போர் பலவகைப்படுவர்.
தாடி வைப்பவர்களில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காட்டினர் சோகத்தில் மூழ்கிக் கிடப்பவர்கள்தாம். ஒரு இருபது விழுக்காட்டினர் சோம்பேறிகள் என்று சொல்லலாம். மீதமுள்ளவர்கள் கவர்ச்சி, கம்பீரம், அடையாளம், மதம், அரசியல் என்று பல காரங்களுக்காக தாடி வளர்ப்பவர்கள்.
விரதம் இருப்பவர்கள் தாடி வளர்க்கிறார்கள்.
ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டவர்கள் தாடி வளர்க்கிறார்கள்.
சன்னியாசிகள் தாடி வளர்க்கிறார்கள்.
பிச்சைக்காரர்கள் தாடி வளர்க்கிறார்கள்.
தங்களை அறிவு ஜீவிகள் என்று காட்டிக்கொள்ளும் முகமாக சில கவிஞர்கள் எழுத்தாளர்கள் தாடி வளர்க்கிறார்கள்.
கேரளாவில் பாதிக்குப் பாதி தாடி வளர்ப்பவர்கள்தாம்.
அந்தக்காலத்தில் எஜிப்துதான் தாடி வளர்ப்பதில் பெயர்போன நாடு. அதற்கு இணையாக இந்தியாவும் இருந்தது. இந்தியாவில் தாடி வளர்ப்பது என்பது ஞானிகளின் அடையாளம்.
எஜிப்தில் தாடியை மிக சிறத்தையாக அழகுகூட்டி வண்ணம் தீட்டி இடையிடையே தங்கச் சரிகைபோல் அமைத்து பெருமைபட்டுக்கொள்வார்களாம்.
மத அடிப்படையில் பார்த்தால் இந்துமதத்தில் பலரும் முஸ்லிம் மதத்தில் சிலரும் தாடி வளர்க்கிறார்கள். கிருத்தவ மதத்தவர் பெரும்பாலும் தாடியை மழித்துவிடுகிறார்கள்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தாடிக்கு சில அரசுகள் வரி விதித்தன. தாடியைக் கண்டாலே உறக்கமும் பிடிக்காத எலிசபெத் ராணி தாடி வரியில் பிரபலமானவர்.
சரி, இனி தாடியும் தமிழ் முஸ்லிமும் என்ற நிலைப்பாட்டிற்கு வருவோம்.
அன்று தாடி தமிழ்முஸ்லிகளின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. தாடி வளர்ப்பவர்கள் தாடியை பல மாதிரியாக வளர்த்தார்கள்.
மிக நீண்ட தாடி, அழகு படுத்தப் பட்ட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் நீளமுள்ள தாடி. மீசை இல்லாமல் வெறுமனே தாடி. தலையைச் சுத்தமாய் மழித்துவிட்டு தாடியும் மீசையும் மட்டும்.
இவர்கள் இப்படி தாடி வளர்ப்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள்.
அந்தக் காரணங்களைக் காண்பதற்கு முன்னர், வரலாற்றுக் குறிப்புகளின் படி நபி பெருமானார் அவர்கள், சில வேளைகளில் தாடி வைத்திருந்தார்கள், சில வேளைகளில் மழுங்க சவரம் செய்திருந்தார்கள், சில வேளைகளில் நிறைய முடி வைத்திருந்தார்கள், சில வேளைகளில் மிகக் குறைவாக முடிவைத்திருந்தார்கள். நபி பெருமானார் தனக்கென விருப்பமான ஒரு சவரத் தொழிலாளியையும் வைத்திருந்தார்.
இறைவன் ஆண்களுக்கு என்று தாடியைத் தந்திருக்கிறான் என்றால் அதை மனிதன் மழிக்கக்கூடாது என்று சிலர் கூறுகின்றர்.
இறைவன் தாடியை மட்டுமா தந்திருக்கிறான், நகத்தையும்தான் தந்திருக்கிறான், மீசையையும் தலை முடியையும்தான் தந்திருக்கிறான்.
நகத்தை அப்படியே விட்டுவிடலாமா? அது இஸ்லாத்தில் கூடாதல்லவா?
மீசையை அப்படியே விட்டுவிட்டால் என்னாகும்? வாயை மூடிவிடும், உணவு உண்ணும்போது சுகாதாரமாக உண்ண முடியாது. அதனால் நோய்வந்து மடியவேண்டும். இதுவும் இஸ்லாத்தில் கூடாதல்லவா?
மாற்று மதத்தவர்களிடமிருந்து வேறுபாடு காட்டுவதற்காக தாடி வளருங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். மாற்று மதத்தவர்களுள் மிக முக்கியமானவர்கள் தாடி வளர்க்கிறார்கள் என்பதால் இதுவும் செல்லுபடியாகாது.
அதுமட்டுமல்லாமல் மாற்றுமதத்தவர் செய்வதை செய்யக்கூடாது என்று சொல்வது அறிவில்லாமலும் ஆழ்ந்து வாசிக்காமலும் கூறுவதாகும். மாற்றுமதத்தவர்களின் மதச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும்தான் இன்னொரு மதத்தவர் செய்யக்கூடாதே ஒழிய உலகப் பழக்க வழங்கங்களை செய்யக்கூடாது என்று குர்-ஆன் தடுக்கவில்லை. அப்படித்தடுத்தால் மாற்றுமதத்தவர் உணவு உண்கிறார்கள் நாம் உண்ணக்கூடாது என்றளவுக்கு அபத்தம் ஆகிவிடும்.
முஸ்லிம்கள் தாடி வளர்ப்பதில் மதம் நுழைய வேண்டும் என்றால் முக்கியமான ஒன்றைப் பார்க்க வேண்டும். அதுதான் குர்-ஆன். குர்-ஆன் எந்த முஸ்லிம்களையும் தாடி வளர்க்கக் கட்டாயப்படுத்தவில்லை. அது ஏதும் சொல்லாத நிலையில், வேண்டும் என்றால் வைத்துக்கொள், வேண்டாம் என்றால் விட்டுவிடு என்பதே பொருளாகும்.
மற்றபடி ”தமிழ்முஸ்லிம் தாடி” என்ற இந்த சிட்டுரையே (சிறுகட்டுரையே) தேவையில்லை.
எப்படியோ முன்புபோல் இல்லாமல் இன்றெல்லாம் தமிழ் முஸ்லிம்களிடையே தாடி வளர்க்கும் எண்ணம் கிட்டத்தட்ட அழிந்தேபோய்விட்டது. யாரும் யாரையும் தாடி வைக்கச் சொல்லி பரிந்துரைப்பதும் இல்லை. அப்படிப் பரிந்துரைத்தாலும் கேட்பதற்கு பெரும்பாலான ஆட்கள் இல்லை.
இப்படித்தான் மதத்தில் இல்லாததையெல்லாம் பாலைவனக் கலாச்சாரப் பழக்கம் காரணமாக பலகாலமும் உட்புகுத்தியே வந்திருக்கிரார்கள். அந்த அறியாமை மெல்ல மெல்ல நீங்கும் நிலையில், தாடி பற்றிய பேச்சுக்கே இஸ்லாத்தில் இடமில்லை.