எங்கே இல்லை பாம்புகள்

பாம்புகள் நெளிகின்றன
கழுத்துப்பட்டிகளுடன்
பணியிடங்களில்

நாற்காலிகளில் அமர்கின்றன
கணினி பார்க்கின்றன
புதுப்பணியாளனின்
மேலான்மைத் திறன்கண்டு
கண்கள் சிவப்பேற
நெளிகின்றன பாம்புகள்

வட்டமேசையின் இடையிடையே
ஏராளமான பாம்புகள்
வனப்பான ஆடைகளில்
துடியாகப் பேசுகின்றன

கொத்துவது தெரியாமல்
கொத்தத் தெரிந்த பாம்புகளால்
அயராப் பணிசெய்து கிடக்கும்
அபலை எலிகள் அவதியுறுகின்றன

எடு விடு என்கிற
இணைவாய்ப்புத் திட்டத்தால்
விடுபட்டு வீதியில் அலைய
வஞ்சிக்கப்படுகின்றன

எங்கே இல்லை பாம்புகள்
எப்போது இல்லை பாம்புகள்

ஆப்பிளிலா இருந்தன பாம்புகள்
ஆதாமிலல்லவா இருந்தன பாம்புகள்
என்றுரைக்கின்றன இந்தப் பாம்புகள்

நாவடிக் கட்டளை ஆங்கிலத்தில்
நடிப்பறியா நடிப்புச் சாதுர்யத்தில்
கரைகண்ட பாம்புகளைக் காண
எங்கே செல்ல வேண்டும்

வயல்வெளிப் பாம்புகள்
வெட்டிக்கொண்டு சாகும்
மூர்க்க முட்டாள் பாம்புகள்

அலுவலகப் பாம்புகளின் கைகளிலோ
நஞ்சு கக்கும் கோடரியே இருக்கும்
காணும் கண்களுக்கு
வெண்ணிற ஆடை மட்டுமே தெரியும்

எங்கே இல்லை பாம்புகள்
எப்போது இல்லை பாம்புகள்

இத்தனைப் பாம்புகளின்
முட்டைகளையும் யார்தான் இட்டது

அன்புடன் புகாரி

No comments: