இந்தக் கல்வியால் பயனடைபவர்கள்
பெரு நிறுவனர்கள் மட்டுமே
நம்மை அவர்களுக்காக
உழைக்கத் தயாராக்குகிறார்கள்
வாழ்நாளெல்லாம்
நாம் அவர்களுக்காகவே உழைக்கிறோம்
சின்னச் சின்னப் பகுட்டுகளை
ஜென்ம வசதி என்று
வாய்கிழியச் சொல்கிறோம்
அறம் வலியுறுத்தும் கல்வி
நம்மிடம் இல்லை
இருந்தால் மனிதநேயம் பெருகும்
மனிதம் வாழும்
அறம் வலியுறுத்த எதுவந்தாலும்
அதை அப்படியே குறைகூறித்
தூக்கி எறிந்துவிடுகிறோம்
தூக்கி எறிந்தால் மட்டுமே
நாம் பகுத்தறிவாளர்கள் என்றுவேறு
சொல்லிக்கொள்கிறோம்
மூடநம்பிக்கைகளை அழித்துப்போடும்
கல்வி நம்மிடம் இல்லை
எது அறிவு என்று சொல்லித்தரும்
கல்வி நம்மிடம் இல்லை
எது உண்மையான வாழ்க்கை என்று
வரையறுக்கும் கல்வி நம்மிடம் இல்லை
எல்.கே.ஜி க்குக் கதறிக்கொண்டுபோகும்
பிள்ளையைத் தயார் படுத்தி
படுத்தி எடுத்து அனுப்பிவைக்கும்
பெற்றோர்களின் கண்களில் மிளர்வது
டை கட்டிய உத்தியோகம் மட்டுமே
டாக்டராவதைவிட
மனிதனாவது முக்கியம்
எஞ்சினியராவதைவிட
நல்லிணக்கம் பயில்வது முக்கியம்
வக்கீலாவதைவிட
வன்முறையற்றவனாவது முக்கியம்
கணிப்பொறியாளனாவதைவிட
சக உயிர் நேசிப்பவனாவது முக்கியம்
கலெக்டராவதைவிட
ஊழலற்றவனாவது முக்கியம்
கல்வியே உனக்குக்
கல்வி கற்றுத் தரப்போகும்
கல்வி எப்போது வரப் போகிறது

No comments: