இந்த முறை தமிழ்நாடு சென்றிருந்த சமயம் சில ஆம்புலன்ஸ் எனப்படும் அவசர உதவி வாகனங்களைக் கண்டேன்.
மிகவும் பலகீனமான வாகங்கள். உயிருக்குப் போராடும் நோயாளியால் அந்த வாகனங்களில் பயணம் செய்வது பாதுகாப்பாக இருக்கமுடியுமா என்ற கேள்வியே எழுந்தது.
இந்த வாகனமே இப்படி ஊசலாடும்போது உள்ளே உயிர் ஊசலாடும் நோயாளியின் கதி எப்படி இருக்கும் என்று எழும் கவலையைத் தடுக்க முடியவில்லை.
விழுந்து எழுந்து ஆட்டோவைப் போல ஓடும் அந்த வாகனங்களும் இல்லை என்றால் அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேறு வசதிகளும் இல்லை ஏழைகளுக்கு என்ற உண்மையும் தெரியவந்தது.
சில மத அமைப்புகள் இப்படியான வாகனங்களை இலவசமாகச் சேவையில் வைத்திருப்பது பாராட்டுக்குரியதாகவும் இருக்கிறது.
அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் இந்த வாகனங்கள் துரிதமாய்ச் செல்ல சாலையில் பலரும் ஒதுங்கி வழிதருவதில்லை. ஆனாலும் சிலர் சரி பரவாயில்லை ஒதுங்குவோமே என்று ஒதுங்குவதைக் காண்பதும் ஆறுதலாய் இருந்தது.
ஏழை பணக்காரர் இவர்களுக்கு இடைப்பட்ட தூரம் பூமிக்கும் நிலாவிற்கும் இருக்கும் தூரத்தைப் போல நீண்டு இருப்பது இந்தியாவின் அரசியல் அமைப்பால்தான் என்று எண்ணத்தோன்றுகிறது. அந்த அரசியல் அமைப்பின் மூல காரணம் நிச்சயமாக தனிமனித ஒழுக்கம்தான்.
எப்படியோ ஏதோ ஒரு வாகனம் அவசர அவசரமாய் ஓர் ஏழையை அழைத்துக்கொண்டு எங்கோ ஒரு மருத்துவ மனைக்கு விரைகிறது இன்றெல்லாம். இதுவும் இல்லாமல் இருந்தோமே நேற்றெல்லாம் என்பதும் உண்மைதானே?
அத்தனை இடர்பாடுகளுக்கு இடையிலும் மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது நம் ஊர்.
இந்தமுறை நான்கு மாதங்கள் நானே கார் ஓட்டிச் சென்றேன் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும். அந்த தைரியம் முன்பெல்லாம் எனக்கு வந்தது கிடையாது. பத்தாண்டுகளுக்குமுன் அடுத்தடுத்த ஊர்களுக்கு மட்டுமே ஓட்டிச் சென்றுகொண்டிருந்தேன். இம்முறை தமிழ்நாடு கேரளா இரண்டு மாநிலங்களையும் சுற்றி வந்தேன்.
ஊருக்கு வெளியே சாலைகள் நன்றாகவே இருக்கின்றன. ஊருக்குள் வாகனம் ஓட்டுவதை எழுதத் தொடங்கினால் அது பெரும் துயரம்.
ஒலி எழுப்பாமல் வழி கிடைக்கவே கிடைக்காது.
அப்படி ஒலி எழுப்பினாலும், ஆடு ஒதுங்குகிறது மாடு ஒதுங்குகிறது நாயும் ஒதுங்குகிறது மனிதர்கள் மட்டும் ஒதுங்கவே மாட்டேன் என்கிறார்கள்.
என் வாகனத்தில் இருபுறக் கண்ணாடிகள் எவரை இடித்துத் தள்ளுமோ என்ற அச்சம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டேதான் இருந்தது.
கூட்ட நெறிசலில் என் வாகனத்திற்கும் ஒரு பேருந்துக்கும் இடையில் மிக மெல்லிய கோடாய் மட்டுமே ஒரு சந்து இருந்தது, பேருந்தில் உராசிவிடுவேனோ என்று அச்சப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், சடால் என்று நான்கு இருசக்கர வாகனங்கள் அந்தச் சந்திச் சீறிப் பாய்ந்து சென்று பேருந்துக்கு முன்சென்று பேருந்தை வழிமறித்துக்கொண்டு எதிரி முகாம் சிப்பாய்களைப் போல நின்றன.
அடடா, இப்படித்தான் கற்பனைகளை விஞ்சிய, ஹாலிவுட் திரைப்படங்களின் சாகசங்களை விஞ்சிய காட்சிகளை வாகனச் சாலைகளில் காணலாம் நம் ஊரில்.
சாலைகள் எங்கும் ஒரே சத்தம். காதைப் பிளக்கும். பெரும்பாலும் எந்த வாகனத்திலும் ஆட்டோமேடிக் கியர் இல்லை. இரண்டு காலும் இரண்டு கையும் எப்போதும் முழு பயன்பாட்டில் இருக்கவேண்டும். கூடவே கூர்ந்து பார்க்கும் கண்களும் சத்தத்தைக் கேட்கும் செவிகளும் என்று உடலின் அத்தனைப் புலன்களும் மிக நன்றாக இயங்க வேண்டும். இல்லாவிட்டால் நம் ஊரில் வாகனம் ஓட்டவே முடியாது.
சில ஊர்களில் சில சந்துக்களில் நுழைந்துவிட்டு வெளியேற வழியில்லாமல் நான் பட்ட பாடு பெரும்பாடு.
ஜிபிஎஸ் என்னும் வழிகாட்டியும் ஊரில் படு சொதப்பல். அங்கங்கே நிறுத்தி வழிகேட்டுச் செல்வதே உத்தமம். கனடாவைப் போல ஜிபிஎஸ் காட்டும் வழியில் சென்றால் போகும் இடம் வரவே வராது. எங்காவது ஒரு இடத்தில் சென்று முட்டிக்கொண்டு நிற்க வேண்டியதுதான்.
இப்படியாய் ஏராளமான அனுபவங்கள். ஆனாலும் ஊர் ஊராய்ச் சுற்றியது மறக்கமுடியாத நினைவுகள்.
அன்புடன் புகாரி