கேள்வி:
இறைவன் உண்டு என்று மனிதன் தோன்றியதிலிருந்து சொல்லி கொண்டு இருக்கிறோம். உலகம் அமைதிப்பூங்காவாகாவா மாறியுள்ளது? ஆனால், அதே இறைவன் பெயரை சொல்லித்தான் காலம், காலமாக உலகம் அமைதியே இல்லாப்பூங்காவாக மாறிவிட்டது. அது உண்மைதானே!
பதில்:
இறைவன் உண்டு என்றாலும் உலகம் அமைதிப் பூங்காவாக இல்லை இறைவன் இல்லை என்று சொன்னாலும் உலகம் அமைதிப் பூங்காவாக இல்லை
இதுதானே நீங்கள் சொல்வது?
உலகம் அமைதிப் பூங்காவாக மலர்வதற்கான முன்னெடுப்புகள் பல
1. தனிமனித ஒழுக்கம். அதை யார் சொல்லித் தருவது? பெற்றோர்கள் என்று கொள்ளலாம். அந்தப் பெற்றோருக்கே சொல்லித்தர ஒரு கட்டமைப்பு தேவைப்படுகிறது
2. தனிமனித ஒழுக்கத்திற்கு சட்டம் ஒழுங்கு முறையாக இருந்து தண்டனைகள் மூலம் குற்றத்தை நிறுத்த வேண்டும். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார் பட்டுக்கோட்டை. சட்டம் ஒழுங்கு என்பது முழு சக்தி கிடையாது
3.அற நூல்கள் மனிதனைப் பண்படுத்தவேண்டும். அறநூலை ஏற்க ஓர் அச்சம் தேவைப்படுகிறது. இந்த நிலையில்தான் இறைவன் மதம் எல்லாம் வருகிறன
இறுதியாக இப்படி முடிப்போம்:
மனிதர்கள் யாவரும் தனிமனித ஒழுக்கம் பேணி நடப்பவர்களாய் இருந்தால், சட்ட ஒழுங்கு தண்டனை என்று எதுவும் தேவையில்லை. அதைப் போலவே மதங்களும் தேவையில்லை.
சரி, இனி உங்களிடம் என் கேள்வி:
மனிதர்களின் தனிமனித ஒழுக்கத்திற்கு உங்களிடம் என்ன மருந்து இருகிறது. மனித வக்கிரங்களை எப்படி அழிப்பது? சூது, குற்றம், வஞ்சகம் போன்ற அனைத்தையும் எப்படி இல்லாமல் செய்வது?
கேள்வி:
கடுமையான சட்டதிட்டங்கள் மூலமாகத்தான் இதற்கு எடுத்துக்காட்டாக அரேபிய நாடுகள்.
பதில்:
கடுமையான சட்டங்களாலும் மனித வக்கிரங்களை ஒன்றுமே செய்யமுடியவில்லை.
கடுமையான தண்டனைகள் அவசியம் வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது. பிறப்பிலிருந்தே அறம் போதிக்க ஓர் அமைப்பு வேண்டும். அதுதான் மனித வக்கிரத்தை மட்டுப் படுத்தும்.
கேள்வி:
உண்மையாக சொல்ல வேண்டுமெனில் தனிமனித ஒழுக்கத்திற்கு யாரிடமும் மருந்து இல்லையென்பது எனது கூற்று.
பதில்:
உண்மை. ஆனால் அந்தத் தனிமனித ஒழுக்கம் இனி வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
சிறுவயதிலேயே இறைவன்மீது அச்சம் என்று தொடங்கி அறம் போதிக்கப்படுகிறது. பசுமரத்தாணியாய் நல்ல செயல்கள் மனிதில் பதியச் செய்யப்படுகிறது
இப்படி எந்த மதம் செய்யவில்லையோ அதை விமரிசியுங்கள்.
மதம் சொன்னதையே மாற்றிச் சொல்லும் கயமையிலிருந்து நம்மை நன் அறிவே காக்க வேண்டும்.
மதத்தால் மட்டுமே தனிமனித ஒழுக்கம் வந்துவிடாதுதான்.
ஆகையினால் தான் கடும் தண்டனைகள் என்று ஒன்று வருகிறது. அந்தத் தண்டனைகளைச் சரியாகத் தர நீதி, காவல் என்றெல்லாம் இருக்கிறது
இத்தனையையும் மீறி தனிமனித ஒழுக்கம் கெட்டுவருகிறது என்பதுதான் பலரும் வைக்கும் குற்றச் சாட்டு.
ஆனால் இதனுள் ஒரு பெரும் உண்மை மறைந்திருக்கிறது.
இன்று உலகில் கெட்ட செய்திகள் மட்டுமே ஈசல்கள் போலப் பரவுகின்றன.
ஒரு மில்லியன் பேருந்துகள் ஒழுங்காகச் செல்கின்றன. விபத்துக்கு உள்ளான அந்த ஒரே ஒரு பேருந்துதான் உலகம் முழுவதும் தினம் தினம் செய்தியாக வருகின்றது.
ஒவ்வொருநாளும் நல்ல செய்திகளாய் மட்டுமே வெளியிடும்போதுதான் இளைய தலைமுறை அதை வாசித்து நாமும் நல்லவர்களாய் வாழவேண்டும் என்று விரும்பும்.
இங்கே செய்திகளும் அப்படி, திரைப்படங்களும் அப்படி, தொலைக்காட்சிகளும் அப்படி, ஊடகங்களே அப்படித்தான்.
ஒரு சாதாரணமாகவன் என்ன நினைக்கிறான். இதெல்லாம் (தவறுகள் எல்லாம்) பிழை இல்லை என்று நினைக்கிறான். எல்லோரும்தான் செய்கிறார்களே என்று சமாதானம் அடைகிறான்.
உலகம் உள்ளங்கையில் வந்த இந்த நாட்களில், நீங்கள் ஒரு நாளில் வாசிப்பது இந்த உலகம் முழுவதும் நடந்த அத்தனை கெட்ட செய்திகளையும் மட்டுமே?
அவை எத்தனை விழுக்காடு? மில்லியன் நல்லவை நடக்க ஒரே ஒரு கெட்டது. உண்மைதானே?
நாம் ஏன் மில்லியனுக்கு ஒன்று குறைவான நல்லவர்களை அதிகம் பேசமாட்டேன் என்கிறோம்.
அப்படிச் செய்தால், ஊடகம் காசு சம்பாதிக்க முடியாது?
ஊடகத்திற்கு தர்மம் வேண்டும். அதைத் தருவதுதான் நல்ல மதம், அதன் அற அறிவுரைகள்.
கேள்வி:
இப்பொழுது மதம் என்னதான் அறத்தை போதித்தாலும் அதை செயல் படுத்துபவர்கள் தங்களது மனசாட்சியை விற்றல்லவா நடக்கிறார்கள். இதில் எந்த மதம் போதித்து என்ன பயன்?
பதில்:
மனசாட்சியை மட்டும் விற்கவில்லை, தங்கள் மதத்தின்மீது கரியைப் பூசிவிட்டுத்தான் நடக்கிறார்கள். தங்கள் இறைவன் மீது கல்லெறிந்துவிட்டுத்தான் நடக்கிறார்கள்.
இதற்கான காரணம் என்ன என்பதுதான் என் சிந்தனை.
அறம் அழுத்தமாகப் போதிக்கப்படவில்லை
இறையச்சம் முழுமையாக இல்லை
இளவயதிலேயே பசுமரத்தாணியைப்போல அறம் பதிக்கப்படவில்லை
இங்கே மத உணர்வு என்றால் அற உணர்வு இல்லை. அது வெறும் பகை உணர்வாக மட்டுமே இருக்கிறது. ஒரு மதத்தவன் இன்னொரு மதத்தின் மீது காட்டும் துவேச உணர்வுதான் உயர்வான மத உணர்வு என்று காரியங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.
சரியானதைச் சொல்லித்தராமல் இந்த சண்டையை ஊக்கப்படுத்தி நாட்டைச் சூரையாடிக்கொண்டிருக்கின்றன ஊடகங்கள், அரசியல், மற்றும் போலி மதத் தலைவர்கள்.
அன்புடன் புகாரி
No comments:
Post a Comment