இறை நம்பிக்கை இறை மறுப்பு மதம் அன்பு அறிவு அறம்

அறிவு வளரவேண்டும்.
வெறும் அறிவு மட்டும் வளர்ந்தால் வெறுப்புதான் வளரும்.
அறிவோடு அன்பும் வளரவேண்டும்.
அறிவும் அன்பும் மட்டும் போதாது, அது சாய்வுநிலைகளை உருவாக்கிவிடும்.
ஆகவே அறிவும் வேண்டும் அன்பும் வேண்டும் கூடவே அறமும் வேண்டும்.
இந்த மூன்றையும் சொல்லித்தரும் பல்கலைக்கழகங்களே மதங்கள்

அன்புடன் புகாரி

*
மனித நேய அழிவுகளைத் தடுப்பதற்காக வந்தவையே மதங்கள்.
அவற்றால் இயலாதது நாத்திகத்தால் இயலும் என்று நீங்கள் நம்புவது ஒருபட்சமானது.
இறைவன் இல்லை என்று சொன்னதுமே உலகம் அப்படியே அமைதிப் பூங்காவாய் மாறிவிடுமா?
இது வேடிக்கை இல்லையா?

அன்புடன் புகாரி

*
மனிதநேயம்தான் இறை மறுப்பாளர்களின் நோக்கம் என்கிறீர்கள். அதே மனிதநேயம்தான் இறை நம்பிக்கையாளர்களின் நோக்கமும் என்பதை நீங்கள் உணர்ந்ததே இல்லையா?
இல்லை என்றால் உங்கள் சிந்தனையில் பெரும் குறை உள்ளது என்றுதான் பொருள்.
”எல்லா மக்களும் அன்புடன் எல்லாம் பெற்று வாழவேண்டும்”
இதை நீங்கள் உங்கள் வழியில் முயலுங்கள். இறை நம்பிக்கையாளர்கள் அவர்கள் வழியில் முயலட்டும்.
இருவரும் முட்டிக்கொள்ள வேண்டுமா?
ஏன்?

அன்புடன் புகாரி

*
இறைவன் இருக்கிறான் என்பது ஒருவரின் நம்பிக்கை.
இறைவன் இல்லை என்பது இன்னொருவரின் நம்பிக்கை.
இரண்டுமே நம்பிக்கை என்பதால் அதில் ஏதும் பிழையில்லை.
ஆனால் ஒன்று இன்னொன்றின் மீது சொல்லாலோ செயலாலோ வன்முறையை அவிழ்த்துவிட்டால் அங்கே பெரும் பிழை இருக்கிறது.
அன்புடன் புகாரி

*

மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான, மனித நேயத்தைக் காப்பதற்கான எந்த ஒரு நம்பிக்கையும் மில்லியன் பகுத்தறிவுத் தாக்குதல்களைக் காட்டிலும் உயர்வானது
அன்புடன் புகாரி

No comments: