என் பெயர் கொரோனா

வில்லும் நானே
அம்பும் நானே

துப்பாக்கியும் நானே
தோட்டாவும் நானே

காற்றிலும் சுழல்வேன்
கைப்பிடியிலும் காத்திருப்பேன்

இந்த
மானிட உலகமே
கண்ணுக்குத் தெரியாத
என் காலடியில்

மனித உயிர்த் தாகம்
வெறிகொண்ட என் மோகம்

தேடித் தேடித் திரிகிறேன்
தென்படுவோரையெல்லாம்
தின்று செரிக்கிறேன்

கோவில் சென்றேன்
ஒருவரையும் காணவில்லை

தேவாலயம் சென்றேன்
தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை

பள்ளிவாசல் சென்றேன்
அங்கேயும் ஏமாற்றம்

எங்கே எங்கே
என் மனிதத் தீனிகள்
எங்கே எங்கே என்று
வீடுகள் நோக்கி ஓடினேன்

அடடா
வீட்டுக்குள் மட்டும்
என்னால்
நுழையவே முடியவில்லையே

வாசலிலேயே
கழற்றி எறியப்பட்ட
கையுரைகளில்
கதறிக் கிடக்கிறேன்

வீதிகளில் நடந்த
ஓரிருவரைத் தொற்றிக்கொண்டு
வீட்டின் கதவுகள் திறந்து
விட்டேனா பார் என்ற வெறியோடு
உள்ளேயே நுழைந்துவிட்டேன்

அய்யகோ
அவசரமாய் அவர்கள்
கையைக் கழுவி கையைக் கழுவி
என் கழுத்தை அறுத்துப்
போட்டுவிட்டார்களே

யார் சொல்லித் தந்தார்
இந்தத் தந்திரத்தை

எங்கே கற்று வந்தார்கள்
இந்த மந்திரத்தை

ஆயினும்
என் வெற்றிக்காக
நான் அவர்களின்
வாசலிலேயே காத்திருக்கிறேன்

காற்றில் என் மூச்சு
சில மணிநேரம் தாங்கும்

கைப்பிடிகளில்
என் உயிர்
ஓரிருநாள் நீடிக்கும்

பிளாஸ்டிக் பொருட்களில்
என் ஆயுள்
ஒரு வாரமாவது நீளும்

ஆனால்
கதவடைத்தவர் எவரும்
வெளியில் வரவே இல்லையே

தொற்றியவனிடமிருந்து
ஊரையே தொற்றலாம் என்றால்
இந்த முகமூடி தடுக்கிறதே

இதுதான் என் கதியா
இன்னும் பதினைந்தே தினங்களில்
எனக்குச் சமாதியா
இறைவா
இது உன் சதியா
என்று கர்ஜிக்கிறேன்

அவனோ
மனிதர்களுக்கு நான்
சுயமாய்ச் சிந்திக்கும்
அறிவைத் தந்திருக்கிறேன்
நீ
போடா போ
என்று நகைக்கிறான்

அன்புடன் புகாரி


கொரோனா கொலைகாரனா?

2020 ஜனவரி மாத தொடக்கத்தில் எழுதிய கவிதை இது. கொரோனாவைப் பற்றிய அப்போதைய எண்ணங்களும் அச்சங்களும் எனக்கு இப்படித்தான் இருந்தன..
                               
      கொரோனா
      நீ ஒரு கொலைகாரனா?

மதவெறியர்களின்
மறுஜென்மமா?

அரசியல் பொறுக்கிகளின்
அடுத்த ஜென்மமா?

சைனாப் பொருட்கள்
நீடித்து உழைப்பதில்லையாமே
நீ எப்படி?

சட்டென நொறுங்கிப் போ
உன்னைப் பற்றிய
அவசரச் செய்திகளின் அச்சமே
உனக்குமுன் எங்களைக்
கொன்று போட்டுவிடும்
போலிருக்கிறது

திருடர்கள் அணியும் முகமூடி
உன்னால் இன்று
சர்வதேசப் பயணிகளின்
முகத்தில்

நேற்றுவரை
நண்பனாய் கட்டியணைத்த
சைனாக்காரன் இன்று
நச்சுப் பொதியாய்த் தெரிகிறான்

ரகரகமான சைனா உணவை
இனி எந்த சாக்கடைச் சந்தில்
கொட்டி நிறைப்பது?

இது என்ன ஆட்டம்

ஓய்ந்து கிடக்கும்
மருத்துவ மனைகளுக்கு
உற்சாகம் தரவந்த வதந்தி வைரஸா?

நின்ற நிலையில்
தடாலென விழும் மனிதன்
நடிகனா? நோயாளியா?

ண்மையில் நீ
உயிர் மிரட்டும் வைரஸ்தானா

அல்லது….
மக்கள் மனதை திசை திருப்பும்
உலக அரசியல் சதியா?

#கொரோனாகவிதைகள் #கவிஞர்புகாரி


வந்தது கொரோனா வராதது புத்தி

இந்து முஸ்லிம் என்று
பார்க்காது

பிராமின் தலித் என்று
நோக்காது

வெள்ளை கறுப்பு
என்று காணாது

ஆரியம் திராவிடம்
என்று ஒதுக்காது

இந்தி தமிழ்
என்று பிரிக்காது

பிஜேபி காங்கிரச்
என்று விடாது

ஆர்எஸ்எஸ் ஐஎஸ்ஐஎஸ்
என்று விலகாது

வரும் வரும்
கொன்றழித்தே தீரும்

ஆம்
கொரோனா
கொடிய வைரஸ்தான்
என்றாலும்
வேற்றுமை பார்க்கும்
விழிகள் அதற்கில்லை

மனிதசக்திகள் ஒன்றுகூடி
மரணத் தூதை தடுக்கா விட்டால்
உண்டு இல்லை என்று
ஆக்கிக்கொண்டேதான் இருக்கும்

அதர்மத்திலும்கூட
தர்மம் என்று
தலை நிமிர்த்திப் பரவுகிறது
வைரஸ்

மதிகெட்ட மனிதனோ
தன் ரத்தத்தில்
இயற்கையாய் ஓடும்
தர்மத்தையும்
கீறிக் கீறி வெளியேற்றுகிறான்

எத்தனை எத்தனை
வேற்றுமைகளை வைத்து
சொற்ப வாழ்வில்
எப்படி எப்படி எல்லாம்
ஆட்டம் போடுகிறான்?

கொரோனாவை விடவுமா
கொடியவன் மனிதன்?

மதவெறி இனவெறி
மொழிவெறி சாதிவெறி
என்று மனிதன் சாதித்ததென்ன
வெட்கப்பட வேண்டாமா?

வேற்றுமை விதைக்கும்
வரட்டு இருமலைக்
கைவிடு மனிதா

கொடுங் காய்ச்சல்
வெறியிலிருந்து
வெளியேறு மனிதா

கெட்ட எண்ணங்களைத்
துடைத்துத் துடைத்து எறிந்து
கை கழுவிக்கொண்டே
இரு மனிதா

காலங்காலமாய்
வரிசைகட்டி வரும்
வைரஸ்களுக்கு
ஒற்றை மருந்து
மனித ஒற்றுமை
என்ற
மகத்துவம்தான்

வாழலாம்
வா மனிதா