Showing posts with label * * 28 பயணங்கள். Show all posts
Showing posts with label * * 28 பயணங்கள். Show all posts

03 சிவிட்டவேக்கியா, இட்டாலி - Civitavecchia, Italy


இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

என்பதற்கான பொருளை முகநூலில் நண்பர் @Raphel Canada கமுக்கமாகக் கண்டுபிடித்துவிட்டார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

பயணம் முடிவானதும், ட்ரான்சாட் என்ற விமானம் மூலம் டொராண்டோவிலிருந்து ரோம் - இட்டாலி செல்கிறோம் என்று என் மனைவியிடம் சொன்னேன். அவருக்கு ஒரே உற்சாகம். அப்புறம்? என்றார்.

அங்கே Civitavecchia என்ற துறைமுகத்துக்குச் சென்றால் நமக்கான உல்லாச சொகுசு கப்பல் காத்திருக்கும் என்றேன். இதென்னங்க எழுத்துக்கூட்டிப் படிக்கக்கூட முடியல, இதை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்றார்.

அது ரொம்ப சுலபம். Civitta ஸ்வீட்ட vecchia வெச்சியா என்று முதலில் பிரித்துக்கொள். ஸ்வீட்ட வெச்சியா என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டால், பின் சிவிட்டவேக்கியா என்பது தானே வந்துவிடும் என்றேன். அப்போதிருந்து ஸ்வீட்ட வெச்சியா ஸ்வீட்ட வெச்சியா என்று ஒரே மகிழ்ச்சி மனைவிக்கு.

பயணம் முடிந்ததும் மனைவியிடம் கேட்டேன், ஸ்வீட்ட வெச்சியா? எங்கே வெச்சே? என்று. நெஞ்சுக்குள்ள வெச்சேன் நெனப்புக்குள்ள வெச்சேன் பத்திரமாய்ப் பலகாலம் நிச்சயமா இருக்கும் நன்றி நன்றி என்றார்.

ஆம் இந்த உல்லாச சொகுசு கப்பல் பயணம் எங்கள் கண்களிலும் கருத்தினிலும் ஸ்வீட்டை வெச்சிருச்சி ;-) மிகவும் நிறைவான ஓர் பயணம் இது எங்களுக்கு.

இனி சிவிட்டவேக்கியா இட்டாலிக்குப் போன கதையை அடுத்த பதிவில் எழுதுகிறேன்

02 இதயத்தில் ஸ்வீட்ட வெச்சியா

படம்: சொகுசு கப்பலில் எங்கள் அறையின் பால்கனி வழியாக முதன் முதலில் எடுத்த படம் இதுதான்

*
பயணத்தில் ஸ்வீட்ட வெச்சியா
பாதையில் ஸ்வீட்ட வெச்சியா
இருக்கையில் ஸ்வீட்ட வெச்சியா
இதயத்தில் ஸ்வீட்ட வெச்சியா
இனிக்கின்றதே இன்னமும்
எம்எஸ்சி மியூசிகா

அதென்ன இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா என்ற கேள்விக்கு இதுவரை யாரும் பதில் எழுத நேரம் இல்லாமல் இருப்பதால் நானே எழுதுவதாக முடிவெடுத்துவிட்டேன் ;-)

எங்களுக்குத் திருமணம் ஆனதிலிருந்து நானும் என் மனைவியும் ஒரு தேன்நிலாவைக் கண்டதே இல்லை.

சவுதியிலிருந்து உறவுகளின்மீதுள்ள தாகத்தோடு ஊர் சென்றதால் உறவுகளோடு உறவாடிக்கிடப்பதையே விரும்புவோம். தனியே எங்கும் சென்று தேன் நிலவு என்று சில தினங்களை அனுபவித்ததே இல்லை. ஆகவே இதுதான் முதன் முறை. நானும் என் மனைவியும் ஒரு உல்லாச சொகுசு கப்பலில் எங்களின் தேன்நிலவை வைத்துக்கொண்டது ;-)

இனி ஒவ்வொரு வருடமும் தேன் நிலவுதான் என்ற முடிவுக்கும் வந்துவிட்டோம்.

எங்களுக்குத் திருமணம் ஆனதும் நாங்கள் என் மாமனார் பணியாற்றிய காடம்பாறை சென்றோம். அது ஒரு அருமையான மலையும் மலை சார்ந்த இடமும். அதுதான் எங்களின் தேன்நிலவு என்று சொல்ல வேண்டும் என்றாலும் நாங்கள் எங்கள் மாமனார் மாமியார் மற்றும் தம்பி மைத்துனன் என்று அனைவரோடும் இருந்தோம். அந்த மலை ஆறு அணை அனைத்தையும் அனுபவித்தோம்.

அங்கே இருந்து ஒரு கவிதையும் நான் எழுதினேன். கவிதை நான் எழுதினேன் என்பதைவிட அந்தக் கவிதை என் விரல்களைக் கொண்டு தானே எழுதிக்கொண்டது என்பதுதான் உண்மை.

அந்தக் கவிதையை பிறகு ஒரு பாடலாக மாற்றினேன். மூலக்கவிதை என்னிடம் இருக்கிறதா அல்லது தொலைத்துவிட்டேனா என்று தெரியவில்லை, ஆனால் பாடலை என் மூன்றாவது கவிதைத் தொகுப்பான சரணமென்றேன் நூலில் இட்டேன்.

சந்தனப் பேழை சிந்தியதாலோ
வந்தது மாலை - அந்தச்
செந்தேன் மலரில் வண்டின் தழுவல்
தந்ததோ ராத்திரி

மன்மதக் கருவண்டு தேனுண்டதாலோ
வெளுத்தது வானம் - அவள்
நாணத்தை மொழியும் தோழிகள்தாமோ
வைகறைப் பூவிதழ்கள்

பன்னீர்ப் பனியில் பொன்முகம் நாணக்
குளிப்பவள் நிலவாளோ - அவள்
பருவ மலர்தழுவி மணக்கும் தென்றலில்
கூந்தல் உலர்வாளோ

மழைத்துளி மணிகளை வழியெங்கும் தூவியே
முகிலவன் வருவானோ - அவன்
மார்பினில் துயிலும் மோகத்தில் நிலவாள்
மெல்லத் தவழ்ந்தாளோ

இது இந்திரன் நந்தவனம்
என்றும் இளமை மணங்கமழும்
பல யுகங்கள் கழிந்தாலும்
உயர் காதல் உயிர்வாழும்

மலைமான் இடையில் அருவிகள் நழுவுது
காவியம் இதுதானோ - குமரி
ரோசாப்பு நாணம் இலைகளில் வழியுது
காதலன் வந்தானோ

கரைகளில் ஓவியம் வரைந்திடும் அலைகள்
நதிகளின் தூரிகையோ
தினம் ஒரு கவிதை பாடிடும் குயில்கள்
தேவனின் தூதுவரோ

என் இதயம் குளிர்காயும் - இந்த
இயற்கை உயிர்காக்கும்
பெரும் சோகத்தில் தள்ளாடும் - எந்த
நெஞ்சும் இளைப்பாறும்

டொராண்டோவில் உள்ள என் கவிதை நண்பர் ஒருவர் சொல்வார். இதுபோன்ற ஓசை நயம் மிக்கவை எல்லாம் கவிதைகள் அல்ல. ஏனெனில் அவை செய்யப்படுகின்றன. கவிதைகள் தாமே ஊற்றெடுத்து அதுவே பொழிய வேண்டும் என்பார்.

அவர் சொல்வதில் 50 விழுக்காடு மட்டுமே உண்மை இருக்கிறது.

தானே சுரப்பவைதான் கவிதைகள். ஆனால் இசைகூட்டி வரும் கவிதைகளும் தானே சுரப்பவை என்பதை அவர் அறிய மாட்டார். ஏனெனில் அவர் தன் நாற்பது வயதில்தான் கவிதையே எழுதத் தொடங்கினார். என்னைப்போல் பத்து வயதில் இசையுடன் தானே சுரந்து வழியும் கவிதைகளை அவர் சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை.

அதோடு பாரதியின் கவிதைகள் இசைகூட்டிச் சுரந்தவை. அந்த மகாகவி கவிதை எழுதவில்லை துணிக்குகள்தான் செய்தான் என்றால் எப்படி?

சரி நாம் மேலும் கவிதைகளுக்குள் செல்ல வேண்டாம். அது முடிவற்ற கதை.

இந்த இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியாவை என்னவென்று கண்டுபிடிப்போம்.

அட இன்னுமா நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.

சரி இதோ ஒரு தடயம் தருகிறேன். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

எங்களின் சொகுசு கப்பல் சென்ற துறைமுகங்கள் ஏழு.

1. Civitavecchia - Italy
2. Palermo - Italy
3. Tunis - Tunisia
4. Palma - Spain
5. Valencia - Spain
6. Marseille - France
7. Genoa - Itali

இப்போதும் கண்டுபிடிக்காவிட்டால் நானே சொல்லித்தொலைக்க வேண்டியதைத்தவிர வேறு வழியே இல்லை ;-)

01 இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்? அல்லது இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

நான் ஒரு கணிஞன். கணினியில் நிரலிகள் எழுதும் துறையில் உயர் ஆலோசகனாக கனடாவில் வேலை செய்கிறேன். Senior Consultant DW/BI/SQL. எனக்கு இன்றைய நாட்களில் நிரந்தரம் என்று சொல்லப்படும் வேலையில் விருப்பம் இல்லை. அதை மறுதளித்து ஒப்பந்தப் பணிகளையே ஏற்றுக்கொள்வேன். அதில் பலன்கள் அதிகம் என்பதலால். ஆனால் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்துவிட்டு ஓய்வுக்காக தவமிருக்கவும் நேரமில்லாமல் வேலையில் மூழ்கிக் கிடப்பேன்.


Equal Opportunity, Hire and Fire என்றெல்லாம் சொல்லப்படும் சம வேலை வாய்ப்புகள், எடு-விடு கொள்கைகளைக் கொண்ட வட அமெரிக்க பணிக் கொள்கையில் நிரந்தரப் பணி என்பது நிரந்தரம் அல்ல. நம்மை எப்போது வெளியேற்றுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. ஒப்பந்தப் பணி என்றால் நமக்கு ஒரு வசதி உண்டு. எப்போது ஒப்பந்தம் முடியும் என்று முன்பே தெரியும். ஆனால் ஒப்பந்தப் பணி செய்பவர்களுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். கணினித் துறையில் இருந்தால் வாய்ப்புகள் அதிகம்.

என் தற்போதைய ஒப்பந்தப்பணி டொராண்டோவின் சிறப்பு மருத்துவமனை ஒன்றில். மார்ச் 2014ல் தொடங்கினேன், ஓய்வே இல்லாமல் தவித்ததால் ஒரு வாரம் விடுமுறை விண்ணப்பித்து இருமுறை அது மறுக்கப்பட்டு இறுதியாக ஜூலை 25 லிருந்து ஆகஸ்ட் 4 வரை எனக்கு விடு தலை/முறை கிடைத்தது.

அவசர அவசரமாக ஓர் உல்லாச சொகுசு கப்பல் பயணத்திற்கு ஏற்பாடு செய்தேன். செலவு அதிகம்தான் என்றாலும் நான் இதுநாள் வரை சொகுசு கப்பல் பயணம் சென்றதே இல்லை. சின்னச் சின்ன (Ferry) கப்பல் பயணங்கள்தான் செய்திருக்கிறேன்.

பயணச்சேவையாளரின் உதவியுடன் விரைந்து ஒரு சொகுசு கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்துவிட்டேன்.

அதெல்லாம் சரி, அதற்கும் இந்தக் கேள்விக்கும் என்ன சம்பந்தம்?

அதென்ன இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா?

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பாருங்கள். ஏதாவது குறிப்பு கிடைக்கிறதா என்று சொல்லுங்கள்.

நாம் இந்த இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியாவை என்னவென்று பார்த்துவிடலாம்