02 இதயத்தில் ஸ்வீட்ட வெச்சியா

படம்: சொகுசு கப்பலில் எங்கள் அறையின் பால்கனி வழியாக முதன் முதலில் எடுத்த படம் இதுதான்

*
பயணத்தில் ஸ்வீட்ட வெச்சியா
பாதையில் ஸ்வீட்ட வெச்சியா
இருக்கையில் ஸ்வீட்ட வெச்சியா
இதயத்தில் ஸ்வீட்ட வெச்சியா
இனிக்கின்றதே இன்னமும்
எம்எஸ்சி மியூசிகா

அதென்ன இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியா என்ற கேள்விக்கு இதுவரை யாரும் பதில் எழுத நேரம் இல்லாமல் இருப்பதால் நானே எழுதுவதாக முடிவெடுத்துவிட்டேன் ;-)

எங்களுக்குத் திருமணம் ஆனதிலிருந்து நானும் என் மனைவியும் ஒரு தேன்நிலாவைக் கண்டதே இல்லை.

சவுதியிலிருந்து உறவுகளின்மீதுள்ள தாகத்தோடு ஊர் சென்றதால் உறவுகளோடு உறவாடிக்கிடப்பதையே விரும்புவோம். தனியே எங்கும் சென்று தேன் நிலவு என்று சில தினங்களை அனுபவித்ததே இல்லை. ஆகவே இதுதான் முதன் முறை. நானும் என் மனைவியும் ஒரு உல்லாச சொகுசு கப்பலில் எங்களின் தேன்நிலவை வைத்துக்கொண்டது ;-)

இனி ஒவ்வொரு வருடமும் தேன் நிலவுதான் என்ற முடிவுக்கும் வந்துவிட்டோம்.

எங்களுக்குத் திருமணம் ஆனதும் நாங்கள் என் மாமனார் பணியாற்றிய காடம்பாறை சென்றோம். அது ஒரு அருமையான மலையும் மலை சார்ந்த இடமும். அதுதான் எங்களின் தேன்நிலவு என்று சொல்ல வேண்டும் என்றாலும் நாங்கள் எங்கள் மாமனார் மாமியார் மற்றும் தம்பி மைத்துனன் என்று அனைவரோடும் இருந்தோம். அந்த மலை ஆறு அணை அனைத்தையும் அனுபவித்தோம்.

அங்கே இருந்து ஒரு கவிதையும் நான் எழுதினேன். கவிதை நான் எழுதினேன் என்பதைவிட அந்தக் கவிதை என் விரல்களைக் கொண்டு தானே எழுதிக்கொண்டது என்பதுதான் உண்மை.

அந்தக் கவிதையை பிறகு ஒரு பாடலாக மாற்றினேன். மூலக்கவிதை என்னிடம் இருக்கிறதா அல்லது தொலைத்துவிட்டேனா என்று தெரியவில்லை, ஆனால் பாடலை என் மூன்றாவது கவிதைத் தொகுப்பான சரணமென்றேன் நூலில் இட்டேன்.

சந்தனப் பேழை சிந்தியதாலோ
வந்தது மாலை - அந்தச்
செந்தேன் மலரில் வண்டின் தழுவல்
தந்ததோ ராத்திரி

மன்மதக் கருவண்டு தேனுண்டதாலோ
வெளுத்தது வானம் - அவள்
நாணத்தை மொழியும் தோழிகள்தாமோ
வைகறைப் பூவிதழ்கள்

பன்னீர்ப் பனியில் பொன்முகம் நாணக்
குளிப்பவள் நிலவாளோ - அவள்
பருவ மலர்தழுவி மணக்கும் தென்றலில்
கூந்தல் உலர்வாளோ

மழைத்துளி மணிகளை வழியெங்கும் தூவியே
முகிலவன் வருவானோ - அவன்
மார்பினில் துயிலும் மோகத்தில் நிலவாள்
மெல்லத் தவழ்ந்தாளோ

இது இந்திரன் நந்தவனம்
என்றும் இளமை மணங்கமழும்
பல யுகங்கள் கழிந்தாலும்
உயர் காதல் உயிர்வாழும்

மலைமான் இடையில் அருவிகள் நழுவுது
காவியம் இதுதானோ - குமரி
ரோசாப்பு நாணம் இலைகளில் வழியுது
காதலன் வந்தானோ

கரைகளில் ஓவியம் வரைந்திடும் அலைகள்
நதிகளின் தூரிகையோ
தினம் ஒரு கவிதை பாடிடும் குயில்கள்
தேவனின் தூதுவரோ

என் இதயம் குளிர்காயும் - இந்த
இயற்கை உயிர்காக்கும்
பெரும் சோகத்தில் தள்ளாடும் - எந்த
நெஞ்சும் இளைப்பாறும்

டொராண்டோவில் உள்ள என் கவிதை நண்பர் ஒருவர் சொல்வார். இதுபோன்ற ஓசை நயம் மிக்கவை எல்லாம் கவிதைகள் அல்ல. ஏனெனில் அவை செய்யப்படுகின்றன. கவிதைகள் தாமே ஊற்றெடுத்து அதுவே பொழிய வேண்டும் என்பார்.

அவர் சொல்வதில் 50 விழுக்காடு மட்டுமே உண்மை இருக்கிறது.

தானே சுரப்பவைதான் கவிதைகள். ஆனால் இசைகூட்டி வரும் கவிதைகளும் தானே சுரப்பவை என்பதை அவர் அறிய மாட்டார். ஏனெனில் அவர் தன் நாற்பது வயதில்தான் கவிதையே எழுதத் தொடங்கினார். என்னைப்போல் பத்து வயதில் இசையுடன் தானே சுரந்து வழியும் கவிதைகளை அவர் சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை.

அதோடு பாரதியின் கவிதைகள் இசைகூட்டிச் சுரந்தவை. அந்த மகாகவி கவிதை எழுதவில்லை துணிக்குகள்தான் செய்தான் என்றால் எப்படி?

சரி நாம் மேலும் கவிதைகளுக்குள் செல்ல வேண்டாம். அது முடிவற்ற கதை.

இந்த இட்டாலியில் ஸ்வீட்ட வெச்சியாவை என்னவென்று கண்டுபிடிப்போம்.

அட இன்னுமா நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.

சரி இதோ ஒரு தடயம் தருகிறேன். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

எங்களின் சொகுசு கப்பல் சென்ற துறைமுகங்கள் ஏழு.

1. Civitavecchia - Italy
2. Palermo - Italy
3. Tunis - Tunisia
4. Palma - Spain
5. Valencia - Spain
6. Marseille - France
7. Genoa - Itali

இப்போதும் கண்டுபிடிக்காவிட்டால் நானே சொல்லித்தொலைக்க வேண்டியதைத்தவிர வேறு வழியே இல்லை ;-)

No comments: