காதலியின் கடிதம்

நான் நிறைய காதல் கவிதைகள் எழுதி இருக்கிறேன்.

அவற்றுள் சில, காதலியின் அழகை வர்ணித்து வர்ணித்து அதன் சொற்கள் எல்லாம் தனித்தனி நிலாத் துண்டுகளாய் ஒளிர்ந்து மிளிர்ந்து ஒன்றிணைந்து ஒரு பேரழகைக் காட்டி நிற்கும். சில, உணர்வுகளை எடுத்து ஒவ்வொரு அட்சரத்திலும் பதித்து தாகமாய் தவிப்பாய் ஆர்வமாய் ஆசையாய் கொதித்துக் கிடக்கும். சில, ஏக்கத்தில் தன்னை முழுவதும் இழந்து கரைந்து உருகி ஒவ்வொரு வார்த்தையும் கூட்டிவைத்த மணல் மேடு கொடுங்காற்றில் கரைவதைப் போல கரைந்து போய்க்கொண்டிருக்கும்.

ஆனால்….

அனைத்துக் காதல் கவிதைக்கும் பொதுவான குணம் என்று ஒன்று உண்டென்றால் அது கனவுதான். ஆசையின் கனவுகள், தனிமையின் கனவுகள், வியப்பின் கனவுகள், தவிப்பின் கனவுகள், என்றென்றும் இனிமை நிறைந்து அவளோடு வாழவேண்டும் என்ற விழைவின் விட்டுவிடா கனவுகள். ஏக்கம் எகிற எகிற ஒருநாள் ஒரு பொழுது அவளோடு வாழமாட்டோமா என்று கேட்கும் கனவுகள். சரி, அந்த ஒரு நாள் ஒருபொழுது கிடைத்துவிட்டது. பின் விட்டுவிடப்போகிறதா அந்தக் காதல்? விட்டுவிட்டால் அது காதலா?

நான் நிறைய காதல் கவிதைகள் எழுதி இருக்கிறேன்.

அவற்றுள் பல ஓர் ஆணின் பார்வையில் உருவான கவிதைகள். சில, ஆணும் பெண்ணும் உரையாடிக்கொண்டிருப்பதுபோன்ற கவிதைகள். வெகு சில மட்டுமே ஒரு பெண் பேசுவதாய் அமைந்த கவிதைகள். ஒரு பெண்ணின் மனதுக்குள் புகுந்து அவளாகவே உயிர்மாறி நின்று எழுதிய கவிதைகள்.

இந்தக் கவிதை அப்படியாய் உருவான ஒரு பெண்ணின் மெல்லிய மனதை எடுத்துச் சொல்லும் கவிதை. இது முழுவதும் கற்பனை அல்ல, உண்மைக்கு மிக நெருக்கமான கவிதை என்ற பெருமை இக்கவிதைக்கு உண்டு.

கா காத்திருந்து தவித்திருந்து ல் பின் இல்லாமல் போவதுதான் காதல் என்று எவனோ ஒருவன் சொன்னான். அதற்கான காரணம் என்ன? அன்றெல்லாம், காதலிக்கும் தைரியம் ஒன்று சேர்வதில் இருந்ததில்லை. இயலாமையே காதலைக் கசக்கி பிய்த்தெறிந்து, குழியில் போட்டுப் புதைத்தும்விடும். இன்றெல்லாம் தைரியம் நிறைய இருக்கிறது ஆனால் காதல்தான் தன் அர்த்தத்தை இழந்து வேறு வடிவம் கொண்டுவிட்டது. ஆனாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரே பெயர்தான், அதுதான் காதல்.

இறுதியாக காதல் வாழ்வது என்பது கனவுகளை நினைத்துப் பார்க்கும் நெஞ்சக் குழிப் பொந்துகளில்தானோ என்று தோன்றுகிறது. ஜென்மங்களை நம்பாதவர்களெல்லாம் ஜென்மம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது காதலின் நிராசைகளால்தான். இப்போது சாதிக்காதவர்கள் அடுத்த ஜென்மத்தில் மட்டும் சாதித்துவிடப் போகிறார்களா என்ற அறிவுக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது காதல் உணர்வுகள்.

சிலருக்கு காதல் என்றால் மகா உன்னதம். சிலருக்கோ காதல் என்றால் ஒருவகை முகச்சுழிப்பு. அட காதலா என்று கலுக்கென்று சிரிப்போரும் உளர். அது அவர்களின் இயலாமையின் வந்த வரட்டுக் கலுக்காகவும் இருக்கலாம்.

இயற்கை தன்னைப் புதுப்பித்துக்கொள்ள ஒரே சக்தியைத்தான் வைத்திருக்கிறது. அதன் பெயர்தான் காதல். காதல் என்ற உணர்வுதான் ஆணையும் பெண்ணையும் இணைத்து, புத்துயிர்களை உருவாக்கி உலகை உய்வடையச் செய்கிறது. அந்தக் காதல் மனிதர்களிடம் மட்டும் இல்லை, புல் பூண்டு செடி கொடி விலங்குகள் பறவைகள் என்று அனைத்தினுள்ளும் இருந்து இந்தப் பிரபஞ்சத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றது.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம்வரை ஆயிரம் ஆயிரம் திரைப்படங்கள் வந்துவிட்டன, நாவல்கள் வந்துவிட்டன, சிறுகதைகள் வந்துவிட்டன. அவற்றுள் சொல்லும் கதையும் நிகழ்த்தும் சாகசங்களும் மாறிமாறி வந்திருக்கின்றன. ஆனால் காதல் என்ற ஒன்று மட்டும் காட்டப்படாமல் அல்லது சொல்லப்படாமல் இருந்ததே இல்லை. திரைப்பாடல்களில் 90 விழுக்காடு காதல் பாடல்களே

சரி, இந்தக் கவிதையில் இந்தப் பெண்ணின் உணர்வுகளை எப்படி நீங்கள் விமரிசிக்கப் போகிறீர்கள்? அவற்றின் மீதுதான் இப்போதைக்கு என் காதல் மையம் கொண்டுள்ளது.

என்னுயிர்க் காதலனே
காதல் என்ற
பரவசப் பட்டாம்பூச்சியை
இந்தப் பெண்மைக்குள்
பறக்க விட்ட
என்னழகுக் கள்வனே

துளையில்லா என் இதயத்துள்
ஊரறியாத் தருணத்தில்
தேர்பூட்டி நீ மெல்ல
ஊர்ந்ததுதான் எப்படி

என் நாவினில் சுரப்பில்லை
நடனமாடிய விழிகளில் அசைவில்லை
உன் முகம் மட்டுமே காட்டும்
கண்ணாடிச் சில்லானேன்

நீ உதிர்க்க உதிர்க்க
உயிர்ப்போடு சிறகடிக்கும்
உன் வண்ணத்து மொழிகள்

நீ சிரிக்கச் சிரிக்க
சிலிர்ப்புக்குள் சிக்கவைக்கும்
உன் கன்னத்துக் குழிகள்

நீ அசைய அசைய
அங்குமிங்குமாய்த் தெறிக்கும்
பொற் கவிதை வரிகள்

அப்பப்பா
நான் எப்படிச் சொல்ல

நீ என்னை
அகலும் இமைப்பொழுதோ
இந்தச் சின்னஞ்சிறு மெல்லிதயம்
அகதியாய் அலறிக்கொண்டு
உயிரின் வேர்களில்
ஓங்கி ஓங்கி இடிக்க
மொத்தமாய்த் தகர்கின்றன
எனக்குள் அத்தனையும்

என் ஆருயிர்க் காதலனே

நீ என் உயிருக்குள்
உதடு வைத்து
ஒத்தி ஒத்தி எடுப்பதனால்தானோ
என்னைச் சுற்றி
புரியாத காற்றொலிகள்
ரிதம் மீட்டுகின்றன

அவை மல்லியைப்போல்
என் மனம்தொட்டு
மங்கா மணம்வீச நீ
எந்நாளும் என்னருகே
இருப்பாயா என்
காதலனே காதலனே காதலனே

என்று நான் உன்முன்
உருகி உருகி நின்றதெல்லாம்
சத்தியம் சத்தியம் சத்தியமே

ஆனால்
என் காதலனே

என் இதயத்தின்
ஒவ்வோர் அணுவையும்
ஆக்கிரமித்த உன்னையும்
உன் இதயத்தின்
ஒட்டுமொத்தத் துடிப்புகளுக்கும்
சொந்தக்காரியான என்னையும்

இன்று நானே
சிலுவையில் அறைந்துவிட்டேன்

காதல் என்ற தெய்வீகத்தையும்விட
இங்கே சமுதாயம் என்ற
சாத்தான் தானே வலிமையானவன்

அவன் சட்டங்களுக்குள்
சிக்கிக் கிடக்கும்
பிணக் குவியல்களில்
இன்று நானும் ஒருத்தி

முனகவும் அனுமதியில்லாத
இந்தப் பெண்மை
மௌனிப்பதையே துறவாய்ப் பூண்டது

இன்று எனக்குள்
பரிதவித்துத் துடிக்கும்
ஒவ்வோர் அணுவும் நீ
என்னை மறந்து எங்கேனும்
நிம்மதியாய் வாழமாட்டாயா என்றே
கணந்தவறாது தவித்துக்கொண்டிருக்கும்
நான் மண்ணுக்குள் புதைந்த பின்னும்

* (அக்டோபர் 1994)



#பச்சைமிளகாய்இளவரசி
#கவிஞர்புகாரி
#கவிதை
கொடிமுல்லை மூக்கழகா

எனக்கு இரண்டு பிள்ளைகள். முல்லைச்சரம் மாதிரி மகள் ஒன்று. முத்துப்பேழை மாதிரி மகன் ஒன்று.

மகள் பிறந்தபோது நான் ஊரில் இல்லை. சவுதி அரேபியாவில் பணியில் இருந்தேன். பனிரோஜா வம்சத்தின் முதல் இளவாசியான என் மகளே மகளே என்று தொடங்கி ஒரு கவிதை எழுதினேன்.

அந்தக் கவிதையை என் மகளுக்கு அப்போது வாசிக்கத் தெரியாது. ஆனால் அதை வாசித்த தாயின் பூரிப்பு என் மகளின் கன்னங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் முத்தக் கவிதைகளாக.

பின் சவுதியிலேயே என் மகன் பிறந்தான். இருவருக்கும் சேர்த்து பாடல்கள், கவிதைகள் என்று பலகாலும் எழுதி வந்திருக்கிறேன். ஆனால் நான் அதிகம் எழுதியது என் மகளுக்குத்தான் என்று என் மகனிடம் ஒரு மனக்குறை இருப்பதைக் கண்டேன். இல்லை அது உண்மையில்லை என்று சொல்லும் முகமாக எழுதிய கவிதைதான் இது.

ஒரு தகப்பன் தன் பிள்ளையைக் கொஞ்சுவது பலவகை. கள்ள படுவா, திருட்டுப் பயலே, ராசுக்கோலு, இப்படியாய் நீளும். ஆனால் இதெல்லாம் மகனைக் கொஞ்சும்போதுதான். மகளைக் கொஞ்சும்போது அப்படிக் கொஞ்சுவதில்லை. என் ராசாத்தி, என் கண்ணு, என் செல்லம், என் ரத்தினம், என் பொண்ணுமணி, என் கண்ணுமணி, இப்படியாகத்தான். தமிழன் பெண்களுக்கு இயற்கையாகவே அதிகம் மரியாதை தருகிறானோ? அதைக் காட்டும் வழிகளில் ஒன்றுதான் இதுவோ?

என் மகன் பதின்ம வயதில் நின்றபோது, அவன் முகத்திற்கு மூக்கு சற்றே பெரியதுபோல இருக்கும். அப்படித்தான் எனக்கும் என் பதின்ம வயதில் இருந்தது. அப்படியே என்னைப் போலவே அவனுக்கும் இருந்தது. வளர்ந்து பெரியவனான இப்போது அவனுக்கு அப்படி இல்லை. அத்தனையும் செய்து கோத்தவைபோல அம்சமாக இருக்கின்றன. அவன் ஆணழகன்தான் என்று இந்தத் தந்தை உள்ளம் பெருமைப்படுகிறது.

ஆனால் அன்று அக்கவிதையை எழுதியபோது ‘கொடைமிளகாய் மூக்கழகா’ என்று செல்லமாகத் தொடங்கி எழுதினேன் என் கவிதையை. அதை மகனிடம் கொடுத்தேன். வாசித்து வாசித்துப் பார்த்தான். நேசித்தான். ஆனாலும் முகத்தில் ஒரு வாட்டம் தென்பட்டது. என்னவென்றேன். அக்காவை மட்டும் தங்கம் வைரம் வைடூரியம் என்றெல்லாம் சொல்லி கவிதை எழுதறீங்க. ஆனால் என்னை ஏன் கொடைமிளகாய் மூக்கழகா என்று எழுதி இருக்கீங்க என்றான்.

அடடா, இது என் கொஞ்சல் மொழியடா. மனதில் உயர்வே கொண்டு எழுதினேன். ஆனாலும் மாற்றிவிடுகிறேன் என்று சொல்லி கொடிமுல்லை மூக்கழகா என்று மாற்றினேன். ஆனாலும் பச்சைமிளகாய் இளவரசி என்ற என் நான்காவது கவிதைத் தொகுப்பில், கொடைமிளகாய் மூக்கழகா என்றுதான் இருக்கும்.

பச்சைமிளகாய் இளவரசிக்கு அணிந்துரை தந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம் இந்தக் கவிதையைப் பாராட்டத் தவறவில்லை. அவர் சொன்னதை அப்படியே கீழே தருகிறேன் அவருக்கான என் நன்றியோடு:

இவருடைய நாட்டுப்புறப் பாடல்கள் நயத்துடன் அமைந்திருக்கின்றன இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே என்று தோன்றுகிறது.

          கொடை மிளகாய் மூக்கழகா
          கொத்தவரும் கண்ணழகா
          விடை சொல்லாச் சிரிப்பழகா
          ஊசிவெடிப் பேச்சழகா

இப்படி இவர் வர்ணிக்கும்போது, எமக்கு பரிச்சயமான, மிக இயல்பான ஒரு காட்சி எம் கண்முன்னே விரிகிறது.”

இனி நீங்கள் சொல்லுங்கள், உங்களுக்குக் கொடைமிளகாய் மூக்கழகா பிடித்திருக்கிறதா அல்லது கொடிமுல்லை மூக்கழகா பிடித்திருக்கிறதா.

இந்தக் கவிதைக்கு மிக அழகான மெட்டொன்றைத் தேர்வு செய்து மகனின் திருமண பெண்ணழைப்பு நிகழ்ச்சி மண்டபத்தில் அருமையாகப் பாடி அசத்தினார் தேன்நிறைக் குரலோன் தேரிழந்தூர் தாஜுதீன். அந்தப் பாடல்கள் அடங்கிய கணியிசைத்தட்டை அன்று அனைவருக்கும் வழங்கினேன்.

நான் இதை எழுதும்போது CD என்பதற்கு கணியிசைத்தட்டு என்று எழுதியிருக்கிறேன். இதுவரை இச்சொல்லை நான் பயன்படுத்தியதில்லை. யாரும் பயன்படுத்தி இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. எழுதும்போது தானே வந்து விழுந்தது.

அன்று இசைத்தட்டு என்போம் இன்று கணியிசைத்தட்டு என்றால் ஒரு தொடர்ச்சி கிடைப்பதாகப் படுகிறது எனக்கு. நற்சொல்லா என்று சொல்லுங்கள் நண்பர்களே.



கொடிமுல்லை மூக்கழகா
   கொத்தவரும் கண்ணழகா
விடைசொல்லாச் சிரிப்பழகா
   ஊசிவெடிப் பேச்சழகா


தொடைமீறும் நடையழகா
   தொட்டழியா ஆணழகா
எடையில்லா இடுப்பழகா
   எஃகிரும்புத் தோளழகா


மீசைவரும் மணியோசை
   மேலுதட்டில் கேட்குதடா
ஓசையில்லாச் சொல்நூறு
   உதட்டோரம் ஏங்குதடா


ஆசைகொட்டிப் பேசயிலே
   அடிவயிறு ஊறுதடா
மேசையிலே பூங்கொத்தா
   மனசெல்லாம் நிறையுதடா


சின்னஞ்சிறு விரலெடுத்து
   சிக்கெடுக்க வருகின்றாய்
இன்னுமின்னும் வேண்டுமென்று
   இனிப்பள்ளித் தூவுகிறாய்


எண்ணயெண்ண  இனிக்குதடா
   இதயவெளி மணக்குதடா
தின்னத்தினம் திகட்டாத
   திங்கள்முகம் யோகமடா


விழுதாடும் ஆலமரம்
   தானூஞ்சல்  ஆடுதடா
உழுதநில எழிலான
   உன்னழகைக் கொஞ்சுதடா

நழுவிவிழும் விழித்துளிகள்
   நன்றிமழை கொட்டுதடா
பழுதில்லாப் பிள்ளைபெற
   புண்ணியமோ கோடியடா

* (ஏப்ரல் 2004)
அன்புடன் புகாரி

#பச்சைமிளகாய்இளவரசி
#கவிஞர்புகாரி
#கவிதை
 







மௌனம்...

வரவழைத்த மௌனம்.... ஒரு பழைய கவிதை
காணாமல் போன என் பதின்ம வயதுக் கவிதைகளுள் சில கவிதைகளே சிக்கின என்று எழுதி இருந்தேன். அப்படிச் சிக்கிய கவிதைகளுள் இதுவும் ஒன்று.
ஆனால் ’புதுச்செருப்பு’ என்ற கவிதையைப் போல இது எனக்கு அத்தனை பிடித்தமானதாய் இல்லை. ’புதுச்செருப்பு’ கவியநயம் அதிகம் கொண்டதாய் இருந்தது. கற்பனையும் போதிய அளவு இருந்தது. ஆனால், இது ஒரு அனுபவக்கவிதையாய் இருக்கிறது. அனுபவம் என்றால் ஒரு துக்கத்தைப் பகிரும் அனுபவம்.
நான் என் பழைய கவிதைகளை மீண்டும் எடுத்துப் பார்க்கும்போது, நம்பிக்கையைத் தட்டி எழுப்பாத கவிதைகளை கவிதைகளாய் ஏற்பதில்லை. இக்கவிதையும் நம்பிக்கை தரும் கவிதையாய் இல்லை என்பதால் கிழித்தெறிவது என்ற முடிவுக்குத்தான் வந்தேன்.
இருந்தாலும், இப்போதைக்கு இதை என் முகநூலில் மட்டும் இடலாம் என்று இடுகிறேன்.
இழப்பும் அதற்கான துக்கமும் மனித வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத பக்கங்கள்தாம். அதனுள்ளேயே மூழ்கிவிடுவதும் மனதுக்குப் பிடித்த செயல்தான். ஆனால் அதிலிரிந்து வெளிவந்துவிடுவதுதான் அறிவுடைமை. அந்த அறிவின் தேடலுக்கு மனதைப் பழக்கவேண்டும். காலம் அதற்குத் தன் ஆயிரம் பல்லாயிரம் கைகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
சென்ற தென்றல் திரும்பாதா என்று அழுவதைவிட புதுத்தென்றல் வீசாதா என்று காத்திருப்பதே சிறப்பு.
உங்கள் பாடல்களுள் மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய பாடல்கள் எவை என்று கேட்டபோது, கண்ணதாசன் சொன்னார், வாழ்க்கையின் தத்துவங்களை, சோகங்களை எடுத்துச் சொல்லும் பாடல்களையே பலரும் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள் என்றார்.
அப்படிப் பார்த்தால், இந்தக் கவிதையும் காயம்பட்ட இதயங்களின் மயிலிறகாய் ஆகலாம்தான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
மௌனம்....
உள்ளுக்குள்
ஒரு தேடல்....
மிக நிரந்தரமாய்....
எப்போதோ வந்து
எங்கேயோ தொலைந்த
வசந்த காற்றின்
வாசனை
இன்னமும் மிச்சமிருந்து
என்
நிம்மதிப் பொக்கிசத்தை
மிச்சமின்றிச்
சுரண்டிவிட்டது....
எப்பவும்
ஆடிக் கொண்டிருந்த
கால்களும் மனமும்
இப்போதெல்லாம்
மேகங்கள் கருக்காதா
சென்ற தென்றல் திரும்பாதா
என்றே
மடக்கிய தோகைகளுடன்
தவமிருக்கின்றன...
நிலைக்கத் தெம்பில்லாத
கானலைத் தேடியே
இந்த
நெஞ்சம் அலைவது
ஒரு
விசித்திரம்....
மனதுக்கும் மூளைக்கும்
மதிப்பிடமுடியாத
தூரம் இருப்பது
இப்போதுதானே தெரிகிறது....
தெரிந்தும்....
தூரத்தைத் தகர்த்து
கண்ணீர்க் கண்களை
அடைக்க
என்
பிஞ்சு விரல்களின்
பிரயத்தனங்களெல்லாம்
வெறும்
வீண் என்றானபோது
நான்
மௌனத்துக்குள்
புதைந்துபோனேன்.

புதுச்செருப்பு.... பழைய கவிதை....



என் பதின்ம வயதுகளில் நான் ஏராளமான கவிதைகள் எழுதி இருக்கிறேன்.  சவுதி அரேபியா சென்றபோது பாதுகாப்பாய் இருக்கும் என்று வீட்டில் விட்டுச் சென்ற எல்லாம் எப்படியோ குப்பைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன. அவை பெரும்பாலும் சந்தக் கவிதைகள். இணையாக புதுக்கவிதைகளும் எழுதி வைத்திருந்தேன். அவற்றுள் சில எனக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தன. நான் மகிழ்ந்துபோனேன்.

அப்படி சிக்கிய கவிதைகளுள் ‘புதுச்செருப்பு’  என்ற இக்கவிதையும் ஒன்று. சேகரித்த இக்கவிதையையும் பல ஆண்டுகளாய் நான் பார்க்காமலேயே இருந்துவிட்டேன். இன்று பழைய குப்பைகளை ஒழுங்கு செய்யும்போது கையில் சிக்கியது. வாசித்துப் பார்த்தேன்.

அவ்வயதில் என் கவிதை ஆர்வமும் நடையும் கண்டேன். யாரோ எழுதியதை ரசிப்பதைப் போல ரசித்தேன். செருப்புக்கெல்லாம் கவிதையா என்று முதலில் கேள்வி எழுந்தது.  பின் கவிதை மனம் என்பது எப்படி விளையாடுகிறது பார் என்று பெருமைப் பட்டுக்கொண்டேன்.

எல்லா நதிகளும் சிறு துளிகளாய்ப் புறப்பட்டவையே என்ற உண்மையும் புரிந்தது. என் கையெழுத்தில் கவிதையைப் பாருங்கள் லை போன்ற எழுத்துக்கள் எப்படி எழுதப்பட்டிருக்கின்றன என்று. இன்றும் காகிதத்தில் எழுதினால் எனக்கு அப்படித்தான் எழுத வருகிறது பெரும்பாலும்.

இந்தக் கவிதையை நான் எந்த வயதில் எழுதி இருப்பேன் என்று கண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்...

புதுச் செருப்பு...

என்
பாதப் பிசாசுகளுக்குத்
தாரங்களாகி
என்
உண்டு கொழுத்த
மொத்தப் பளுவையும்
சுமக்க மாட்டாமல்
கிரீச்சிட்டுக் கதறி...

பின்
மரத்துப்போய்
உணர்ச்சியற்றுக் கிடந்து...

மேனிப் பொழிவுகளை
கால பூதங்களுக்கு
அபிசேகித்தபின்
கண்களிழந்து...
காதுகளறுந்து...
என்
பாத மேனியின்
முக்காலை
தரைப் பரத்தைக்கு
சந்தோசமாய்
தாரைவார்த்துக்
கொடுத்துவிட்டபின்

என்னைவிட்டு
எட்டிப்போக எடுத்துக்கொண்ட
சுதந்திரப் போராட்டத்தின்
முடிவாய்...

சுரண்டுவதற்கு
இனி இங்கே
என்ன இருக்கிறது....
என்று இந்தியாவை
விட்டுச் சென்ற
வெள்ளைக்கார அட்டைகளைப் போல....

நானும்...
விடுதலை என்ற
பொய்த் தலைப்பில்
சமாதிகளுக்கு
வழிகாட்டிய பின்...

கையைக் கடிக்கும்
‘பட்ஜெட்’டை அவமதித்தி
நேற்றுதான் வாங்கினேன்
காலைக் கடிக்கும்
புதுச்செருப்பு

அன்புடன் புகாரி