என் பதின்ம வயதுகளில் நான் ஏராளமான கவிதைகள் எழுதி இருக்கிறேன். சவுதி அரேபியா சென்றபோது பாதுகாப்பாய் இருக்கும் என்று வீட்டில் விட்டுச் சென்ற எல்லாம் எப்படியோ குப்பைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன. அவை பெரும்பாலும் சந்தக் கவிதைகள். இணையாக புதுக்கவிதைகளும் எழுதி வைத்திருந்தேன். அவற்றுள் சில எனக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தன. நான் மகிழ்ந்துபோனேன்.
அப்படி சிக்கிய கவிதைகளுள் ‘புதுச்செருப்பு’ என்ற இக்கவிதையும் ஒன்று. சேகரித்த இக்கவிதையையும் பல ஆண்டுகளாய் நான் பார்க்காமலேயே இருந்துவிட்டேன். இன்று பழைய குப்பைகளை ஒழுங்கு செய்யும்போது கையில் சிக்கியது. வாசித்துப் பார்த்தேன்.
அவ்வயதில் என் கவிதை ஆர்வமும் நடையும் கண்டேன். யாரோ எழுதியதை ரசிப்பதைப் போல ரசித்தேன். செருப்புக்கெல்லாம் கவிதையா என்று முதலில் கேள்வி எழுந்தது. பின் கவிதை மனம் என்பது எப்படி விளையாடுகிறது பார் என்று பெருமைப் பட்டுக்கொண்டேன்.
எல்லா நதிகளும் சிறு துளிகளாய்ப் புறப்பட்டவையே என்ற உண்மையும் புரிந்தது. என் கையெழுத்தில் கவிதையைப் பாருங்கள் லை போன்ற எழுத்துக்கள் எப்படி எழுதப்பட்டிருக்கின்றன என்று. இன்றும் காகிதத்தில் எழுதினால் எனக்கு அப்படித்தான் எழுத வருகிறது பெரும்பாலும்.
இந்தக் கவிதையை நான் எந்த வயதில் எழுதி இருப்பேன் என்று கண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்...
புதுச் செருப்பு...
என்
பாதப் பிசாசுகளுக்குத்
தாரங்களாகி
என்
உண்டு கொழுத்த
மொத்தப் பளுவையும்
சுமக்க மாட்டாமல்
கிரீச்சிட்டுக் கதறி...
பின்
மரத்துப்போய்
உணர்ச்சியற்றுக் கிடந்து...
மேனிப் பொழிவுகளை
கால பூதங்களுக்கு
அபிசேகித்தபின்
கண்களிழந்து...
காதுகளறுந்து...
என்
பாத மேனியின்
முக்காலை
தரைப் பரத்தைக்கு
சந்தோசமாய்
தாரைவார்த்துக்
கொடுத்துவிட்டபின்
என்னைவிட்டு
எட்டிப்போக எடுத்துக்கொண்ட
சுதந்திரப் போராட்டத்தின்
முடிவாய்...
சுரண்டுவதற்கு
இனி இங்கே
என்ன இருக்கிறது....
என்று இந்தியாவை
விட்டுச் சென்ற
வெள்ளைக்கார அட்டைகளைப் போல....
நானும்...
விடுதலை என்ற
பொய்த் தலைப்பில்
சமாதிகளுக்கு
வழிகாட்டிய பின்...
கையைக் கடிக்கும்
‘பட்ஜெட்’டை அவமதித்தி
நேற்றுதான் வாங்கினேன்
காலைக் கடிக்கும்
புதுச்செருப்பு
அன்புடன் புகாரி
No comments:
Post a Comment