புரியாத கவிதைகள்


உள்ளேறி உசுப்பும்
உன்னதங்களை
ஊரேறி உரைக்கும்
உள்ளுரமுமின்றி

சொல்லேறிச் சுடரும்
சுயவானம் வரையாது
எழுத்தாணி மூடும்
நிம்மதியுமின்றி

சுற்றிச் சுற்றியே
தொடுதூரப் புள்ளிகளை
வெற்று
வட்டமடிக்கிறார்

புள்ளியும் சிக்காமல்
வட்டமும் வசப்படாமல்
புதிர்புதிராய் நிறைகின்றன
புரியாத கவிதைகள்

3 comments:

Anonymous said...

பல கவிஞர்கள் ஆரம்ப நிலைக் கவிஞர்கள். எழுத எழுத மெருகேறும். அது வரை பொறுத்துத் தான் ஆக வேண்டும். புதிர் புதிராய் புரியாத கவிதைகள் அனுபவசாலிகளும் எழுதுகிறார்கள். கேட்டால் புரிந்து கொள்ளும் திறன் நமக்கில்லை என்கிறார்கள். நவீன ஓவியம் புரிவதில்லை. அவர்களுக்குப் புரிகிறதாம். நன்று. புரிந்தவற்றைப் படிப்போம். மற்றவற்றைத் தவிர்ப்போம்.

அன்புடன் ..... சீனா

ரிஷான் said...

மிக மிக அழகான, ஆழமான, அருமையான கவிதை நண்பரே.
கவிதையெனச் சொல்லிக் கொண்டு சொல்ல வரும் விடயத்தைத் தெளிவாகச் சொல்லத் தெரியாமல் அல்லது முடியாமல், தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பும் கவிதைகளை எழுதி வருபவர்களுக்கு உங்கள் ஒரு கவிதையிலேயே பல விடயங்களையும் தெளிவு படுத்தி விட்டீர்கள்.


//உள்ளேறி உசுப்பும்
உன்னதங்களை
ஊரேறி உரைக்கும்

உள்ளுரமுமின்றி//

மிகச் சரி..கவிஞர்களுக்கு முதலில் உள்ளுரம் முக்கியம்.
அதுதான் நிலைக்கச் செய்யும். பல விடயங்களை உரைக்கச் செய்யும்.

//சுற்றிச் சுற்றியே

தொடுதூரப் புள்ளிகளை
வெற்று வட்டமடிக்கிறார்

புள்ளியும் சிக்காமல்
வட்டமும் வசப்படாமல்
புதிர்புதிராய் நிறைகின்றன

புரியாத கவிதைகள்//

மிகவும் ரசித்தேன்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே !

சீனா said...

அன்பின் புகாரி

உண்மை உண்மை - கவிஞர்கள் சிலர் கவிதை என்ற பெயரில் எழுதும் சில வரிகள் உண்மையிலேயே குழப்புகின்றன - என்ன கவிதையின் உட்கருத்து என்பதனையே மறந்து விட்டு - ஏதேதோ எழுதி விட்டுச் செல்கின்றனர், அவர்களின் கவைதையும் அவர்கள் போலவே குழம்புகின்றன - சரியான கவிதை - நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா