ஒவ்வொன்றாய் ஊதியணைத்துக்கொண்டு


ஏணிப் பொழுதுகளில்
இதயம் ஏற்றிவைத்த
பல்லாயிரம் கோடி தீபங்களை
ஒவ்வொன்றாய்
ஊதி அணைத்துக்கொண்டு
இருளின்
கறுத்த உதடுகள்

ஆளுமை அதிகரிப்பில்
இருளுக்கு இணை இருளே

ஒளியை
ஊதி அணைத்துப்
பூரித்துப் போவதில்
எப்போதும் அது ஓர்
பிறந்தநாள் பிள்ளை

இருள் நஞ்சில்
இதயம்
எத்தனைதான்
புதைந்துபோனாலும்
விழிகளென்னவோ
வெளியேறத் துடிக்கும்
வெறியோடுதான்

அணைய மறுத்து
அல்லாடும்
அந்த ஒற்றைத் தீபமே
போதும் உயிருக்கு

மீண்டும்
அத்தனை தீபங்களையும்
ஏற்றிவிடலாம் என்ற
விடாப்பிடி நம்பிக்கையோடு
சாகாமல் கிடக்கும்
தன் உயிர்த் தேடல்களை
உணர்வுகளில் பூட்டிக்கொண்டு

2 comments:

Anonymous said...

//மீண்டும்
அத்தனை தீபங்களையும்
ஏற்றிவிடலாம் என்ற
விடாப்பிடி நம்பிக்கையோடு
சாகாமல் கிடக்கும்
தன் உயிர்த் தேடல்களை
உணர்வுகளில் பூட்டிக்கொண்டு//

நம்பிக்கையூட்டும் கவிதை !

cheena (சீனா) said...

//ஒளியை
ஊதி அணைத்துப்
பூரித்துப் போவதில்
எப்போதும் அது ஓர்
பிறந்தநாள் பிள்ளை//

ஒளியை அணைப்பதில் வருத்தத்திற்குப் பதில் பூரிப்பு. இருளின் செயலும் வருந்துவதற்குப் பதில் மகிழ்வு. அதன் தொழில் தர்மமது.

அருமையான சிந்தனை. வாழ்த்துகள்