37

தமிழச்சி

ஆயிற்று
இருபத்தியோராம் நூற்றாண்டு

இதுவரை இல்லாத் துணிச்சலுடன்
எழுந்து நிமிர்ந்து வீறுநடக்கின்றாள்
தமிழச்சி

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
பழைய ஒட்டடைகள் ஏதேனும்
கவ்விப் பிடித்துக்
கவிழ்த்துவிடாமலா போய்விடும்
என்ற அவலாசையில்
வழமை ஆயுதச்
சொல்வண்டுக் கூட்டங்கள்
சூழ்ந்து சுற்றி
நாரகாசமாய் ரீங்கரிக்கின்றன

ஆனாலும்
ஒற்றைச் சுண்டு நகத்தால்
கிள்ளியெறிந்து நடக்கும்
தமிழச்சியின் திண்மை நடை
அழகாய்க் காட்சிப்படுத்துகிறது
வெகுதூரத்திலில்லை
என்றெண்ணியிருந்த அந்த நாள்
இன்றே புலர்ந்த பெருமிதத்தை

அன்புடன் புகாரி

6 comments:

Anonymous said...

super!

Unknown said...

நன்றி

உங்கள் முகம்காட்டிச் சொன்னால் மேலும் மகிழ்வேன்

அன்புடன் புகாரி

Anonymous said...

நன்றாக இருக்கிறது புகாரி. அதிலும் குறிப்பாக கவிதை குறித்து காட்சிப்படுத்தலாய் நடந்த விவாதத்திற்குப் பிறகு சட்டென்று மனதை பற்றிக் கொண்டது கவிதை.

Unknown said...

நன்றி சேவியர்.

அன்புடன் புகாரி

தமிழச்சி said...

அட! கவிதை நல்லாயிருக்கு யாரிந்த தமிழச்சி..

Unknown said...

பார்வை நொறுக்கும்
விழியோடு
பழி வென்று முடிக்கும்
நடையோடு

காட்டுத் தீயாய்
எழுகின்றாள்
பழங் கட்டுகள் எரித்து
நிமிர்கின்றாள்

விகிதம் கேட்டா
அழுகின்றாள்
வெறும் கருணை மனுவா
தருகின்றாள்

உரிமை மீட்டே
எடுக்கின்றாள்
புதுக் கற்பின் பொருளே
அதுவென்றாள்

மலரின் மென்மை
விரல் கொண்டாள்
யுக நெருப்பின் வன்மை
வேர்கொண்டாள்

நிலவின் எழிலாய்
வருகின்றாள்
பல நெற்றிக் கண்கள்
வெடிக்கின்றாள்

கருணை அன்பு
மனங் கொண்டாள்
உயர் காதல் நட்பு
உயிரென்றாள்

தாய்மை தூய்மை
தானானாள்
வளர் அறிவின் தெறிப்பில்
ஓடுடைத்தாள்

என்று நான் என் எண்ணங்களில் செதுக்கிவைத்திருக்கும் ஒரு தமிழ்ப்பெண்

இந்த முகத்தின் சிறு சாயலைக்கூட நான் எங்கு கண்டாலும் வாழ்த்துவேன். அது என் வழமை!