வேலையில்லாப் பட்டதாரிகள்
வெறுந்தரையில் விரயமாகும்
விளைநில நீரூற்றுகள்
கல்லூரிச் சந்தைகளில்
வியாபாரக் கலைஞர்களால்
அஞ்சலில் சேர்க்கப்பட்ட
முகவரி இல்லாத
சிபாரிசுக் கடிதங்கள்
பெட்ரோலில் கையலம்பும்
அராபியச் சோம்பேறிகளிடம்
ரியாலுக்கு விக்கலெடுக்கும்
ஒட்டகக் கூட்டங்கள்
இளமை மலர்காய
வீடுநிலம் கைமாற
கல்லூரிக் கட்டிடங்களில்
தூண்களாகவே உருமாறி
மலடான பட்டங்கள் பெற்று
'வேலை காலியில்லை'
அறிவிப்புகளை அவமதித்து
அலுவலகப் படிக்கட்டுகளில்
இரத்தப் பாதங்களைப்
பதித்துப் பதித்து ஓய்ந்து
போதிமர நிழலிலே
படுக்கையை விரித்துவிட்ட
இவர்கள்
இன்று
விழிகளில் விரக்தி வழியத்தான்
அலைகிறார்கள்
எனினும் நெஞ்சில்
கனலைச் சேகரிக்கிறார்கள்
புரட்சிக் கரங்களை உயர்த்தி
நிச்சயம் ஒருநாள் இவர்கள்
எரிமலைக் குழம்புகளாய் எழுவார்கள்
அன்றே நம்
சுரண்டல் மந்திரிகள் எழுதும்
இந்தியாவின் தலையெழுத்துகள்
பொசுக்கப் பட்டு
புதிய அட்சரங்கள் பொறிக்கப்படும்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தேடித்தேடி அலைந்து தேவைகள் சிதறிய போது
சித்தம் வெறுத்து சிந்தனையில் திசை மாறுகின்றார்கள்.
காலத்தில் கிட்டாத எதுவும் நல்ல தல்ல
அதன் விளைவுகளும் நல்ல தல்ல
அன்புடன் ..... செல்வி ஷங்கர்
Post a Comment