இருபத்திநாலு மணி நேரத்தில்
இருநூற்றி நாற்பது வினோதங்கள்

எதையும்
தப்பாமல் செய்யும் நானேதான்
தம்பிக்குத் தபால் எழுதி
தாசில்தாருக்கு அனுப்பிவைத்தேன்

அலுவலகத்தில் சுறுசுறுப்பாய்
ஏதேதோ செய்தேன்
அது எதுவுமே என் நிறுவனத்திற்குத்
தேவையே இல்லை

கணினியின் சாளரங்களில்
காட்டுப் பூனைகள் பல
பதுங்கிக் கிடப்பதுபோல்
என் விரல்களுக்குள் சிக்காமல்
மின்னெலி
துள்ளிக்கொண்டே இருந்தது

நலமா என்று கேட்டு
என் மின்னஞ்சல் பெட்டிவிழுந்த
அத்தனை நட்பு மடல்களையும்
கன்னாபின்னாவென்று வைதுவைத்து
பதில் பொத்தானை அழுத்திவைத்தேன்

மதிய உணவிற்கு 'ஹாட் டாக்' வாங்கி
இரண்டாவது கடியாக
என் கட்டை விரலைக்
கடித்து முடித்தேன்
கூடவே ’ஹாட் டாக்’ என்றால்
சுடுநாய் என்று
தூய தமிழில்
மொழிபெயர்த்து மகிழ்ந்தேன்

ஐந்தாவது தளத்தில் ஏறவேண்டிய
கோ-ட்ரான்சிட் ரயிலுக்காக
மூன்றாவது தளதில்
மூன்று மணி நேரமாய்
நின்றுகொண்டிருந்தேன்

கவிதை நூல் ஒன்றைப் பிரித்து
முதல் வரியை மட்டும்
முந்நூறுதரம் வாசித்தேன்

என் சீறுந்தில் அமர்ந்து
(அதாங்க ’என் காரில் அமர்ந்து’)
சாவியிடாமலேயே உந்து விசையை
(உந்துவிசை புரிந்திருக்குமே)
அழுத்திக்கொண்டிருந்தேன்

என் பெயரை
யாரோ கூவிக் கூவி அழைக்க
செத்துப் போன எவனையோ
அழைக்கிறார்களே என்று
விடுவிடுவென்று வீடுவந்து சேர்ந்தேன்

அன்பே
இதுபோல் என்னால்
இனியொருநாளை
கைகால்களில்
சங்கிலி பூட்டிக்கொள்ளாமல்
கடத்த முடியாது

செல்வழி
நீ என் செவியில்
சொல்லின்றி கிசுகிசுத்ததைச்
சத்தமாய் நீயே சொல்லிவிடு
நம் சத்தியத் தமிழால்


காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
சிறகுகள் இருந்தும்

சிறகுகள் இருந்தும் பறக்காத பறவை
தனக்கே தனக்கான சிறை

கனவுகள் இருந்தும் கனியாத கண்கள்
சந்தோசம் விலக்கிடும் திரை

இயல்புகள் மறுத்து ஏங்கும் உள்ளம்
வளர்ந்தும் வளராத குறை

உணர்வுகள் இருந்தும் வாழாத உயிர்கள்
மயான நெருப்புக்கே இரை
நிகழும் வாழ்க்கையாக

தெய்வம் கல்லாகும்
கல் தெய்வமாகும்
ஒரு கால வெள்ளத்தில்

மறந்தது துளிர்க்கும்
துளிர்த்தது மறக்கும்
ஒரு கால வெள்ளத்தில்

தர்மம் அதர்மமாகும்
அதர்மம் தர்மமாகும்
ஒரு கால வெள்ளத்தில்

மரணச் சங்கடங்கள்
உயிரோடு நிரந்தரம்
ஆனபின்
நியாய தர்மங்கள்
குப்பை மேடுகள்

சட்டதிட்டங்கள்
சாம்பல்
பொட்டலங்கள்

யாரிடம் இருக்கின்றன
நளிந்த இதயம் வருடும்
தோகை விரல்கள்

மாற்று நினைவு பொருத்த
எந்த விஞ்ஞானத்துக்கு
வக்கு இருக்கிறது

மன உயிர் பிரிந்தபின்
உடல் உயிர்
ஒட்டி இருப்பதல்லவா
நரகம்

அன்றாடம்
உறவுகள் பொய்களாக
தேவைகளே நிஜங்களாக
அடடா... அதுவே
நிகழும் வாழ்க்கையாக
மரணத்தைத் தேடிய ஒரு தெரு முனையில்

மரணத்துக்கு
அவனிடம் பசியில்லை
மரணம் மீதோ
அடங்காப் பசி அவனுக்கு

ருசியில்லாப் பண்டம்
அவனை
மரணம் மறுதலிக்கிறது

தெருத் தெருவாய்
அலைந்தாலும்
தரிப்பிடமில்லா வாகனம்

உயர உயரப் பறந்தாலும்
உறையும் கூடில்லாப்
பறவை

அவனை
மென்று மென்று பார்த்து
இடம்பாதி வலம்பாதியாய்த்
துப்பிவிட்டுப்
பறந்துபோயிற்று அவனது
மரணம்

மிச்ச எலும்புகளைப்
பொறுக்கி எடுத்துப்
புதைத்துப் பார்த்தான்

கிழிந்த தசைத்
தொங்கல்களை
நெருப்புக் கூட்டி
எரித்துப் பார்த்தான்

விடைதரா விருந்தாளியாய்
வேதனை மட்டுமே
அவனிடம் தங்கிக் கொண்டது

வேறொரு புண்ணிய உடல்தேடி
எங்கோ அலைந்துகொண்டிருக்குமோ
அவனுக்கே அவனுக்கான
மரணமும் கூட என்று அவன்
அலைந்து திரிந்தான்

திரிந்த தெருக்களின்
வசந்த முனை ஒன்றில்
அவன் எதைச் சந்தித்தான்
என்று எவராவது சொல்லுங்கள்

ஏனேனில்
மரணம் தேடிக் கிடந்தவன்
பலம் கொண்டமட்டும்
தன் சகல சாட்டைகளாலும்
விரட்டியடித்துக் கொண்டிருக்கிறான்
அவனது மரணத்தை இன்று
கவிதைகள் நிரம்பிய
நிலவுக்குள்

வீசும்
அலைகளின் மீது

இமைத் துடுப்புகள்
அசைத்து

விழிப்படகுகள்
நீந்த

தனித்த தீவுகளுக்குள்
ஒதுங்கி

சிலிர்ப்புச்
சிறகசைத்து

இளைப்பாறுகின்றன
நெஞ்சக் குஞ்சுகள்

அன்புடன் புகாரி
20121223

உன் கண்ணீரை
என் கைகளில் ஏந்திக்கொள்கிறேன்

உன் கனவுகள்
நிறைவேறும் வழி சொல்கிறேன்

உன் துயரங்கள்
கரைந்துபோகும் உறவுதருகிறேன்

உன் இதயத்தில்
இருந்துகொண்டு நீயாகிறேன்

உன் தோல்விகளைச்
சுமக்கின்ற தோளாகிறேன்

உன் வெற்றிகளைக்
கொண்டாடும் பூக்களாகிறேன்

உன் குழந்தை மனச்
செயல்களை ரசித்துக்கொள்கிறேன்

உன் திறமை தேடிப்
பாராட்டி உன் வானமாகிறேன்

உன் உணர்வோடு
உணர்வாகும் நிலையாகிறேன்

உன் உயிரோடு
உயிர் கோக்கும் உயிராகிறேன்

ஆகையினால் என் அன்பே...

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
சந்தனப் பேழைகள் சிந்தினவோ

சவுதியின் வரண்ட பாலையிலிருந்து விடுப்பில் ஊர்வந்தேன். வந்தவன் காடம்பாறையின் மலைக்காடுகளில் முதன் முறையாக வாசம் செய்தேன். அந்த ஈர நாட்களில் எழுதியதே இந்தச் சந்தக்கவிதை


சந்தனப் பேழைகள் சிந்தினவோ
           சாயங்காலமாய்ப் பூத்ததுவோ
சிந்தையில் மணக்கும் அவ்வேளைதனில்
           சீட்டியடித்து நான் புறப்பட்டேன்

தந்தங்கள் இல்லா யானைகளாய்
           தரிசனம் தந்தன மாமலைகள்
சிந்துகள் பாடியே அருவிமகள்
           சித்திரம்போல் மண் மடிவீழ்ந்தாள்

வந்தனம் பாடிய வண்டுகளோ
           வந்த என் வரவை ஆதரிக்க
எந்தவோர்ப் பூவினில் ராசவண்டு
           எத்துணை சுகங்கள் அள்ளிடுமோ

அந்த நற்பூவின் மனதினைப்போல்
           ஆனந்தமாய் நான் நன்றியென்றேன்
வந்ததும் கண்களைத் தேனமுதாய்
           வருடியப் பசுமைகள் வாழ்கவென்றேன்

துள்ளித் துள்ளியோர் மான்கன்று
            தூரத்தில் ஓடிய அழகு சொர்க்கம்
அள்ளித் தெளித்தச் சந்தனமாய்
            அங்கோர் அழகுப் பூந்தோட்டம்

சொல்லிச் சிரித்திடக் குரங்குகளோ
            சொடுக்கிடும் பொழுதில் என் பழந்திருடி
தள்ளி நின்றவோர் நெடுமரத்தின்
            தனிந்த கிளையினிற் தாவினவே

சில்லென வீசியக் குளிர்வாடை
            சிலிர்த்திட வைத்தது என்னுயிரை
நில்லெனக் கூவிட வேண்டும் வண்ணம்
            நிலைத்துப் பொழிந்தது பனித்தூரல்

உள்ளமோ மகிழ்வின் உச்சியிலே
            உடலோ ஆடிட வாடையிலே
இல்லை இச்சுகத்துக்கு ஈடுயிணை
            இடிபடும் பட்டிணத் தெருக்களிலே

மன்மத அம்புகள் எய்தவண்ணம்
            மாலையும் இரவாய் மாறிவர
வண்ண நிலவோ மலைமுகட்டில்
            வந்து வனப்பாய் நின்றிருந்தாள்

இன்று ஏன் புதிதாய் அம்புலிக்கு
            இல்லாப் பொலிவு வந்ததென்றே
கண்ணிமை அசைக்க நான்மறந்து
            கண்ணுக்குள் ஏந்திக் களிப்படைந்தேன்

கண்களை மூடிட கிடைத்ததங்கே
            கனவினில் வருகிற தனியில்லம்
எண்ணும் போதே மனம் சிலிர்க்கும்
            இரவின் தனிமையில் என் வீட்டின்

முன்னும் பின்னும் ஏதேதோ
            முரட்டுக் காலடிச் சத்தங்கள்
கண்களைச் சுருக்கி சன்னல்வழி
            கண்டேன் ஓரிரு கரடிகளை

மெல்லப் புலர்ந்ததும் அதிகாலை
            மேனியிற் புதியதோர் மினுமினுப்பு
வெள்ளை வெள்ளையாய்ப் புகைபோலே
            முல்லையில் நெய்த குடில்வனப்பில்

பள்ளியறை என முகிலினங்கள்
            படுத்து உறங்கின மலைமுகட்டில்
அள்ள அள்ள அவ்வழகெல்லாம்
            அடிமனம் வரைக்கும் பாய்ந்தனவே

மெள்ளத் துள்ளிநான் ஆடியோடி
            மிதந்தேன் அருவியின் மடியினிலே
சொல்லி முடியாச் சுகங்கோடி
            சொர்க்க வெளியில் எனைத்தள்ளி

இல்லை இல்லை நான் திரும்பவில்லை
            எனக்கிம் மலையே யாவுமென
சொல்லி விடடா ஊருக்கென
            சொல்லின சுகங்கள் சுகங்களெங்கும்
என்றும் நீ வரமாட்டாய்...

எல்லாமும் ஆனதுபோல்
          இம்மண்ணில் பூத்த பின்னர்
முள்ளில் கால் நோகுதென்றே
          முனகித்தான் பயனேது

சொல்லில் தினம் புண்ணாகிச்
          சுரக்கும் விழி ஏனெதற்கு
உள்ளத்தில் உருக்கொள்ளும்
         ஒப்பாரி தந்ததெது

ஒன்றுபோல வயிறுமனசு
         உடலென்ற பெருந்தொடரோ
என்றென்றும் இயம்புகின்ற
         ஒற்றைச்சொல் பசியன்றோ

வன்மையாக வாட்டுமிந்த
         வளர்பசிக்கு நசிந்துபோக
மண்ணில் நீ மலர்ந்ததென்ன
         எவரிடத்தோ யாசித்தா

கல்தாண்டி கடல்தாண்டி
         காற்றெனவே பறந்தாலும்
எல்லைக்கு அப்பாலும்
        இருளன்றி வேறேது

இல்லையொளி எங்குமென
         எண்ணிமட்டும் ஓயாதே
உள்ளத்தில் தேடிப்பார்
        உள்ளேதான் ஒளியுண்டு

பெண்ணுக்குள் உதயமாகும்
        பிறப்புக்கள் விபத்துக்கள்
மண்ணுக்குள் அமைதிதரும்
        மரணங்கள் பாக்கியங்கள்

இன்னும்கேள் இவையிரண்டின்
        இடைவந்த வாழ்க்கையோ
உண்மையல்ல உண்மையல்ல
        உடைதரித்தப் பொய்வனப்பே

உண்மையெங்கே என்றுநீயும்
        ஓயாமல் தேடித்தினம்
உன்நாட்கள் செலவழிய
        உண்டாகும் மாற்றமோ

என்றைக்கோ தேடிநின்ற  
         எவரெவரின் சுவடுகளில்
இன்றைக்கும் உன்பாதம்
         உருவாக்கும் புதுச்சுவடே

உண்மைதான் புத்துயிரே
          உன்பாதம் மட்டுமல்ல
பெண்ணுக்குள் புதையுண்டு
         பிறந்தபெருங் கூட்டத்தின்

வன்மையான பாதங்கள்
         வான்தொட்டுத் தேடிநின்று
மண்தந்த அழைப்பேற்று
         மரணத்தில் நிறுத்தினதாம்

என்மனதிற் பட்டதைநான்
         என்றென்றும் சொல்லிவைப்பேன்
இன்றும்நான் சொல்லுகின்றேன்
         இசைவாயோ மாட்டாய் நீ

உன்நாட்கள் முடியும்வரை
         உலகலாவித் தேடிநிற்பாய்
உன்னைமட்டும் விட்டொழித்து
         உறங்கிடுமோ பசியின் விசை

என்சொல்லும் கேளாமல்
         எங்கெங்கோ தேடிநிற்பாய்
உண்மைதனைக் கண்டறிந்தால்
         உடன்வந்து கூறிவிடு

உன்னைநான் எதிர்பார்த்து 
         உயிர்பிரியும் வரையிருப்பேன்
என்னறிவு உரைப்பதுவோ
         என்றும் நீ வரமாட்டாய்
அஞ்சோன் அஞ்சு 

அஞ்சாத சிங்கம்போல்
அஞ்சுபத்திப் பாடவந்தேன்
அய்யாவும் அம்மாவும்
அக்கறையாக் கேப்பியளா
கொஞ்சம் அக்கறையாக் கேப்பியளா

நஞ்சோடு நாகந்தான்
அஞ்சுதலை விரிச்சாக்கா
நடுநடுங்கிப் போவியளா
குலைநடுங்கிச் சாவியளா
சும்மா குலைநடுங்கிச் சாவியளா

பஞ்சநதிப் பாஞ்சோடும்
பஞ்சாப்ப பாத்தியளா
பஞ்சாப்பு வரப்புக்கும்
பக்கத்துல நிப்பியளா
அய்யா பக்கத்துல நிப்பியளா

அஞ்சுவிரல் இல்லாம
கையுமொரு கைதானா
அஞ்சுபுலன் இல்லாம
உசுருமொரு உசுர்தானா
அய்யா உசுருமொரு உசுர்தானா

சொகமுன்னா என்னான்னு
அளந்துத்தான் பாத்தியளா
சொர்க்கத்தை அளப்பதுக்கும்
அஞ்சேதான் வேணுமுங்க
அய்யா அஞ்சேதான் வேணுமுங்க

மகராசந் தங்கிவர
மாளிகையா விடுதிங்க
மாளிகையின் சொகத்துக்கு
நச்சத்திரம் அஞ்சுங்க
அய்யா நச்சத்திரம் அஞ்சுங்க

அஞ்சுமணிக் காலையிலும்
அஞ்சுமணி மாலையிலும்
ஆகாயத் திரையெல்லாம்
அழகுன்னா அழகுங்க
அய்யா அழகுன்னா அழகுங்க

அஞ்சருவி பாத்தியளா
அம்புட்டுந் தேனுங்க
அழுக்கோடு நெஞ்சத்தை
அலசித்தான் போகுங்க
சும்மா அலசித்தான் போகுங்க

அஞ்சுக்கே எந்திரிச்சா
ஆயுளுக்கே தெம்புங்க
அஞ்சுமணிக் காத்துக்கு
அம்புட்டும் பூக்குங்க
அய்யா அம்புட்டும் பூக்குங்க

அஞ்சுமணி ஆனாக்கா
அலுவலகம் விட்டாச்சு
அஞ்சுநாளு போனாக்கா
அந்தவாரம் முடிச்சாச்சு
சோரா அந்தவாரம் முடிச்சாச்சு

அஞ்சேதான் பருவமுங்க
அவனியிலே பெண்ணுக்கு
ஆரம்பம் கொழந்தைபின்
சிறுமியாயாகி சிறகடிப்பாள்
சின்னச் சிறுமியாய்ச் சிறகடிப்பாள்

நெஞ்சத்தைப் பஞ்சாக்கும்
கன்னியவள் மனைவியாகி
நெறமாசங் கொண்டாடி
தாயாகி நெறஞ்சிடுவாள்
அருமைத் தாயாகி நெறஞ்சிடுவாள்

அஞ்சு அறைப் பெட்டித்தான்
அடுக்களைக்கு பொக்கிசங்க
அஞ்சில்லாச் சாப்பாட்டில்
அடுப்புக்கும் வெறுப்புங்க
அய்யா அடுப்புக்கும் வெறுப்புங்க

அஞ்சுப்பொன் சிறப்புங்க
அஞ்சுப்பால் அறிவீங்க
அஞ்சுபெரும் காவியங்கள்
அழகுதமிழ் சொல்லுங்க
அய்யா அழகுதமிழ் சொல்லுங்க

அஞ்சுக்கே வளையாட்டி
அம்பதுக்கும் வளையாது
அஞ்சோடு சேராட்டி
பாடந்தான் ஏறாது
பள்ளிப் பாடந்தான் ஏறாது

அய்யெட்டு ஆனாத்தான்
அமைதிக்கே வருவீங்க
அதுவரைக்கும் ஆடாத
ஆளுந்தான் ஏதுங்க
அய்யா ஆளுந்தான் ஏதுங்க

அஞ்சேதான் பூதங்கள்
அந்நாளில் சொன்னாங்க
அஞ்சுக்குள் அடங்கித்தான்
அத்தனையும் சுத்துதுங்க
அய்யா அத்தனையும் சுத்துதுங்க

அஞ்சாம மேடையில
ஆனவரைச் சொல்லிப்புட்டேன்
அய்யாவே அம்மாவே
அசரடிங்க கையத்தட்டி
சும்மா அசரடிங்க கையத்தட்டி

(மார்ச் 2002)
சந்தவசந்த கவிதைக் குழுமத்தில் ஆளுக்கு ஓர் எண் கொடுத்து கவிதை எழுதச் சொன்னார்கள். எனக்கு வந்தது ஐந்து. நானும் எழுதினேன். அது ஒரு காலம். இதையும் கவிதைக் கணக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள், தப்பில்லை!