ரிதா ரிதா




ரிதா ரிதா

பலநேரங்களில் எனக்குக் கவிதை எழுதுவது மழை பொழிவதைப் போல்தான். ஆனால் அது உணர்வுகளின் ஒய்யார மழை. என் உள் முகில்கள் நீர்சுரந்து நீர்சுரந்து கருத்து நிற்கும் பின் ஒரு தனிமைச் சந்தர்ப்பத்தில் சட்டென்று கொட்டிவிடும். பெரும்பாலும் அதன்பின் அக்கவிதையில் மாற்றங்கள் தேவைப்படாது. தேவைப்படும்போது நான் மாற்றங்களை நிச்சயமாகச் செய்வேன். ஆனால் அப்படி எந்த மாற்றமும் செய்யாத கவிதை இது. 

.
பனி பொழிந்த ஓர் இரவில்
கத்தி முனையில் கத்தாமல் பிறந்த
சித்தாரமே என் சென்பகமே...
.
என் மகள் பெற்றெடுத்த மகளே
ரிதா ரிதா
.
தேன் மலரா தீஞ்சுவையா
தஞ்சைத் தமிழா தாரகையா
என் தங்க நிலவே பொன் மகளே
ரிதா ரிதா
.
பெண்களெல்லாம் பிறந்தபின்தான்
அழகு நிலையம் செல்வார்கள்
நீ மட்டும்தான் தங்கி இருந்த சொர்க்கபுரியிலேயே
அழகு நிலையப் பணியையும்
முடித்துக்கொண்டு பிறந்திருக்கிறாய்
.
ரிஸ்வானா உன் தாய்
என்பதின் சுருக்கமா உன் பெயர்
ரிதா
.
உன் கண்கள் கண்டேன்
செவிகள் பார்த்தேன்
கைவிரல் தடவினேன்
கன்னம் முகர்ந்தேன்
பனி மென்மை பரிசித்தேன்
பவள இதழ் தொட்டேன்
கன்னங்கரு முடி வருடினேன்
உறங்கும் பேரழகு ரசித்தேன்
.
அடடா நம் குடும்ப அழகை
இப்படி அச்சடித்து அள்ளிக்கொண்டுவர
வயிற்றுக்குள்ளேயே
நீ வரம்கேட்டு வாங்கிவந்தாயா
.
அழுகின்ற குழந்தை
பால் குடிக்கும் என்பார்கள்
பால் குடிக்கக்கூட அளவோடு அழும்
உன் பக்குவத்தை
நீ எங்கிருந்து பாடம் கற்று வந்தாய்
.
பால் பொழியும் உன் பூ முகம் கொண்டு
எனக்குப் பாசம் பொழிய வந்தாயா


உன் அன்னையின் தந்தைக்கு
நீ அன்னையாக வந்தாயா


உன் சிறு கொள்ளைச் சிரிப்பில்
என் சாபங்களைச் சிதறடிக்க வந்தாயா
.
என் தோட்டங்களிலெல்லாம்
இன்று ஒரே ஒரு பூதான்
ரிதா
.
என் இதயத்தைக் கோதிவிடும்
உன் சின்னஞ்சிறு தலையைக் கோதுவதுதான்
இனி எனக்கு எல்லாமும்
என் உயிர் ரிதா ரிதா

No comments: