பிறந்தநாள் நீ மலர்ந்த நாள்

அந்த
ஒற்றை நாள் மட்டுமே
உன்னால்
தேர்ந்தெடுக்கப்படவே முடியாத
உன் சிறப்பு நாள்

உன் இறுதிநாள்
தீர்மாணிக்கப்பட்டிருக்கும்போது
அதை அறிய நீ இருக்க மாட்டாய்

ஆக...
இறைவனால் தீர்மானிக்கப்பட்டு
உன் கைகளில் தவழும் உன் நாள்
உன் பிறந்தநாள் மட்டுமே

அந்த நாளின்
மேன்மையைக் கொண்டாடு
அதைத் தந்த இறைவனிடம்
உன் அன்பை அள்ளிக் கொட்டு
சின்னச் சின்னக் கண்ணீர் முத்துக்களால்
நன்றி நதி பெருக்கு

உன்
ஒவ்வொரு பிறந்தநாளும்
இறைவனை நீ தேடிச் செல்லும்
தங்கப் படிக்கட்டுகள்

இடையிலேயே தடுக்கி விழுந்துவிடாமல்
அருளப்பட்ட இறுதிப் படிக்கட்டுவரை
இன்பமாய் இனிமையாய்
உன்னையே நீ பாராட்டி
ஊரறிய உன் வயதைச் சொல்லி
நிதானமாய் ஏறிச் செல்

எத்தனை காய்ந்த வயிறுகளை
நிறைக்க இயலுமோ
அத்தனையையும் நிறைத்துக்
கொண்டாடு

ஒரே ஒரு புது நட்பையாவது
பெற்றுப் போற்று

கசந்துபோன உறவுகளில்
ஏதோ ஒன்றையாவது
மீட்டெடுத்து அள்ளியணை

உன் ஒவ்வொரு பிறந்தநாளிலும்
உன் கசடுகளைக் களைந்த
புத்தம் புதியவனாய்ப் பிறந்து சிரி

உன்னாலும் தீர்மானிக்க முடிந்த
இன்னும் எத்தனை எத்தனை
உன் பிறந்த நாட்கள்
உன் முன் உனக்காகக் காத்திருக்கின்றன

பார் மகிழ்
கொண்டாடு குதூகலி

அன்புடன் புகாரி
20161028

1 comment:

mohamedali jinnah said...

உன்
ஒவ்வொரு பிறந்தநாளும்
இறைவனை நீ தேடிச் செல்லும்
தங்கப் படிக்கட்டுகள்