நெஞ்சுக்கு நிறைவான ஒருநாள் - இது
மாண்புறு நோன்புக் கஞ்சித் திருநாள்

செய்யவேண்டும் செய்யவேண்டும் என்று சில வருடங்களாய்ச் சிந்தனையில் மட்டுமே இருந்த அந்த நாள் இந்த வருடம் நிகழ்ந்தேவிட்டது.

ஆனந்தக் காற்றில் அசைந்தாடுகின்றன என் இதயத்தின் உணர்வு இழைகள்.

முஸ்லிம் அல்லாத என் டொராண்டோ அன்புச் சகோதர்களையும் சகோதரிகளையும் அழைத்து ரமதான் நோன்புக் கஞ்சி பறிமாறும் பரவச நிகழ்ச்சி.

2019 மே மாதம் 24ம் தேதி நோன்பு திறக்கும் நேரமான இரவு 8:45 வரை அனைவரும் காத்திருந்தார்கள். ஒரே சமயத்தில் அனைவரும் நோன்புக் கஞ்சியை ருசி பார்த்தார்கள்.

பசி என்ற ஒன்று இல்லையென்றால் ருசி என்ற ஒன்றே இருக்காது.

இயன்றவரை நான்கு அல்லது ஐந்து மணி நேரமாவது நீர் அருந்தாமல் வாருங்கள் என்று அன்பு அழைப்பு விடுத்திருந்தேன். அப்படியே செய்திருந்தார்கள் என் அன்பிற்கினிய நண்பர்கள்.

ஏங்கித் தவித்திருந்த நாக்கின் நரம்புகளில் மாண்புறு நோன்புக் கஞ்சி ஒரு திருவிழாவே நிகழ்த்தியது.

எங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும், அசைவமே உண்ணாத ஸ்ரீவித்யா என்னிடம் வெஜிடேரியன் நோன்புக் கஞ்சி குடிக்க ஆசை சார் என்றார்.

அதுவரை என் எண்ணத்தில் மட்டுமே சுற்றிச் சிற்றி வந்த அந்த என் விருப்பம் அன்று செயலில் இறங்கியது. மனைவியிடம் கேட்டேன், தாராளமாக என்றார். ஒருவருக்காக மட்டும் என்று செய்யாமல், ஊர் கூட்டிச் செய்ய வேண்டும் என்ற என் விருப்பமும் நிறைவேறியது.

இந்நிகழ்ச்சி இவ்வாண்டு தொடங்கக் காரணமாய் இருந்த ஸ்ரீவித்யாவிற்கும், என் அழைப்பை ஏற்று இன்முகத்தோடும் குழந்தைகளோடும் வந்து குவிந்த பாச நெஞ்சங்களுக்கும் என் நன்றி மாமழை.

இனி இந்த நோன்புக் கஞ்சித் திருவிழா வருடா வருடம் நிகழும். முப்பது நாட்களில் ஓர்நாள் என் இந்துச் சகோதர்களும் என் கிருத்துவச் சகோதரர்களும் குடும்பத்தோடு அழைக்கப் படுவார்கள்.

மாண்புறு நோன்புக் கஞ்சி வாஞ்சையாய் வழங்கப்படும்.

கனடாவிலிருந்து அன்புடன் புகாரி
https://www.facebook.com/anbudanbuhari/posts/3073963915962094

No comments: