https://www.facebook.com/photo.php?fbid=3055905904434562&set=a.100183646673484&type=3&theater

தமிழ்பற்றி உரையாடினாலே அது ஒரு தனி இன்பம்தான்

இன்று காலை எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்து ஒரு மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

டொராண்டோ தமிழ் இருக்கைக்குத் தேவையான 3 மில்லியன் டாலர்களில் கிட்டத்தட்ட  1 மில்லியன் டாலர்கள் ($50,000 குறைவு)  திரட்டப்பட்டுவிட்ட நற்செய்தியை மிகுந்த மகிழ்வோடு பகிர்ந்துகொண்டார்.

ஓராண்டுக்குள் 1 மில்லியன் டாலர்கள் திரட்டுவதுதான் உச்சநிலைக் குறிக்கோளாய்க் கொள்ளப்பட்டது. ஜூன் மாத இறுதிக்குள் உறுதியாக 1 மில்லியனைத் தாண்டியதாகவே அது வெற்றிநடை போட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

கடந்த ஆண்டு 2018 ஜூன் மாதம்தான் டொராண்டோ தமிழ் இருக்கைக்கான  தொடக்கப்பணி டொராண்டோ பல்கலைக்கழகத்தில் கையெழுத்தானது . இன்னும் ஓராண்டே நிறைவுறாத நிலையில் இது ஒரு  சாதனைதானே?

இச்சாதனையை எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் அயராத உழைப்பு இல்லாவிட்டால் நிகழ்த்துவது மிகக் கடினம்.

அன்று இளவயதில் ஒரு சிறுகதைக்கு விருது வாங்கிய அ. முத்துலிங்கம் அவர்கள் தன் வெளிநாட்டுப் பணிகள் காரணமாக முப்பது ஆண்டுகள் வனவாசம் இருப்பதுபோல எழுதாமலேயே இருந்தார். பணி ஓய்வு பெற்றதும் படபடவென எழுதத் தொடங்கினார். அதுவும் வித்தியாசமாக தனக்கென ஒரு தனிநடை கைவரப் பெற்று எழுதினார். அந்தத் தனி நடை உருவாவதற்குக் காரணம் அவர் எப்போதும் எதையும் இதயத்திலிருந்தே பேசுவதால், அப்படியே எழுதுவதால் என்றுதான் நான் நினைக்கிறேன்.

இன்று அவர் ஏராளமான விருதுகள் குவித்து பெருமை பெற்றதையும்விட, உலகின் தலை சிறந்த எழுத்தாளர் இன்று இவர்தான் என்று  பெரிய பெரிய எழுத்தாளர்களாலேயே புகழப்படுவது பெரிதினும் பெரிதுதான்.

எப்படி அவரைப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியாமல், தமிழ் நாடாய் இருந்திருந்தால் உங்களுக்குச்  சிலை வைத்துவிடுவார்கள் என்றேன். நான் அப்படிப் புகழ்ந்ததற்குக் காரணம் அவரின் எழுத்து மட்டும் அல்ல, தமிழுக்காக அவர் தொடர்ந்து ஆற்றிவரும் பெருஞ்சேவை.

இன்று உலகப் புகழ் பெற்றுவிட்ட கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதும், டொராண்டோ தமிழ் இருக்கையும் அவருடைய சேவைகளுள் முக்கியமானவை.

தானுண்டு தன் எழுத்துண்டு அது பெற்றுத் தரும் பெரும் புகழுண்டு என்று சுயநலமாய் இருந்துவிடாமல், இந்த வயதிலும்  அ. முத்துலிங்கம் அவர்கள் ஓடி ஓடி தமிழ்ச்சேவையில் அயராது உழைப்பதைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை என்பதே உண்மை. வாழும்போதே அவரைப் பாராட்டுவதில் நான் பெருமை அடைகிறேன்.

எதிர்பாராத விதமாகத் தமிழ்நாட்டிலிருந்து டொராண்டோ தமிழ் இருக்கைக்காக யாரென்றே தெரியாதவர்களிடமிருந்தும் நிதி வந்திருக்கிறது, தமிழர் அல்லாத ஒரு வெள்ளைக்காரர்கூட 300 டாலர்கள் அனுப்பி வைத்திருக்கிறார் என்ற தகவல்களை ஆர்வத்தோடு என்னிடம் பகிர்ந்துகொண்டார். மகிழ்ந்தேன்.

உலகத் தமிழர்களே, உங்களின் பங்களிப்பு ஒரு டாலராக இருந்தாலும் சரி, சற்றும் தாமதிக்காமல் உடனே அனுப்பி வையுங்கள், டொராண்டோ தமிழிருக்கையில் அமரப் போகும் தமிழன்னை உங்களை என்றென்றும் வாழ்த்திப் பாராட்டுவாள்.

http://torontotamilchair.ca/

அன்புடன் புகாரி

No comments: