நீராக நானிருந்தால்

அறிவியல் முட்டி
கணிமடி தட்டி
நவீனம் நுழைந்து
இலக்கியம் அலைந்து
நாட்டுப்புறம் வீசி
நகர்ப்புறம் ஏறி
புத்தம்புதுச் சொற்கள்
பலவாறாய்ச் சுரந்து
மாதம் தவறா
முழு அகராதியாய்
தேக்கி வைத்து
விம்மி நிற்கும்
புத்திரர் மார்களில்
வெற்றிப் பாலருந்தும்
தமிழ்த் தாய்க்கு
அன்பு வணக்கம்

]

நீராக நானிருந்தால்
நீண்டதோர் கவிபொழிவேன்
வேரோடு உயிராகும்
உயர்வினைப் பாடிவைப்பேன்

வேறென்ன சாதிப்பேன்
வேறெவர்தான் சாதிப்பர்

என்
அழுக்கைக் களையவே
எனக்கொன்றும் சக்தியில்லை
ஊருலக அழுக்கையெல்லாம்
கழுவும்
 தூய்மை ஊற்றாகும்

நீராக நானிருந்தால்
வேறென்ன சாதிப்பேன்
விதையோடு முளையாகும்
உயர்வினையே பாடிவைப்பேன்

என்னுள் எரியும் நெருப்பையே
எனக்கணைக்க வழியில்லை
வீரிட்டெழும் எந்நெருப்பையும்
விருட்டென விழுங்கிப்போகும்

நீராக நானிருந்தால்
வேறென்ன சாதிப்பேன்
வானேறி தலைமுட்டும்
உயர்வினையே பாடிவைப்பேன்

என்னுயிர் காக்கவே
எனக்குத் திராணியில்லை
மண்ணுயிர் அனைத்தையும்
மடியிட்டுக் காக்கின்ற

நீராக நானிருந்தால்
வேறென்ன சாதிப்பேன்
வளம்பேணி நிலம்பாயும்
உயிர்வினையே பாடிவைப்பேன்

]

குடுவையில் நீந்தும் தங்கமீனைக்
கண்கள் தழுவும்போதெல்லாம்
பொறாமையே என்னுள் குதிக்கும்

கடல் நடுவே திமிங்கலம்
ராஜநீச்சல் இடும்போதெல்லாம்
உள்ளாசை கிளர்ந்து என்
உயிர்சுட்டே கொதிக்கும்

நீர் வாழ்வே சுகமென்று
உள்ளுதடுகள் படபடக்கும்
.

உயிர் மூலக்கூர்
பரிணாம வேர்
மரணமற்ற நீர்

உறைந்தாலும் உருகும்
ஆவியாகிக்
கரைந்தாலும் சேரும்

நானோ
மரணமுத்திரை குத்தப்பட்ட
சின்னஞ்சிறு காற்றுக் குமிழ்

நெடுநேரம் நீர் மிதக்கவே
சுழலும் நினைப்பொழித்து நாளும்
ஆசைப்புயல் வீசும் நீர்நேசன்

எப்பானமும் நிராகரித்து
நிறமில்லா நீர்ப்பானம் பருகத்தானே
தாகமாகித் தவிப்பேன் பொழுதும்

நீர் தேடி நீர் தேடி
நொடிதோறும்
நெருப்பாகி எரிவேனே

அடடா இன்று
நானே நீராகிப் போனால்...

மிதப்பேனோ எனக்குள் நானே
பருகுவேனோ என்னை நானே
தாகமாவேனோ எனக்காக நானே

....
அது ஓர்
ஞானக் கீர்த்தியல்லவா
எனில் நான் ஞானியாகிறேனா?

ஞானியாய் நானிருந்தால் என்ற
புதுத் தலைப்பல்லவா
வந்தேறிவிட்டதிப்போது


]

நீராக நானிருந்தால்
நீண்டதோர் கவிபொழிவேன்
வேரோடு உயிராகும்
உயர்வினையே பாடிவைப்பேன்
.
அடியாழ் நிறைத்து நீர் நான்
நிலம் காதலிக்கும்
நிச்சயத்தை...

நிலத்தோடு நின்று
நெருப்பைக் காதலிக்கும்
உண்மையை...

நிலத்தோடும்
நெருப்போடும் சேர்ந்து
காற்றைக் காதலிக்கும்
நிரந்தரத்தை...

அந்தக் காற்றோடும் கலந்து
ஆகாயம் காதலிக்கும்
சத்தியத்தை...

நெஞ்சு நீர்பொழியச்
சொல்லிவைப்பேன்

ஆம் மானிடா
பொறாமையில்லா இதயக் காதல்
பொய்மையில்லாப் புனிதக் காதல்
பஞ்சபூதக் காதல்

ஐவரும்
ஐவருக்குள்ளும்
ஐவரையும்
அன்றாடம் காதலித்தே
இந்தப் பிரபஞ்சம் ஆகிறோம்
என்று
உரத்த குரலில் உற்சாகமாய்ச்
சொல்லிவைப்பேன்

எங்களுள் பிறப்பாகி
ஏங்கி அலைந்தாடும் மானிடா
சற்றும் தாமதியாமல்
உண்மைக் காதல் வளர்

எல்லோரையும் எந்நாளும்
இன்பமாய்க் காதலி

எனக்கே சொந்தமென்று
சுருங்கிச் சாகாமல்
சுதந்திரமாய்க் காதலி

அதுவே பஞ்சபூத இயற்கை
இந்தப் பிரபஞ்சக் கொள்கை
என்று சொல்லிவைப்பேன்
.
நீரென்ற நானன்றோ
உயிர்களின் பிறப்புப்பை

தாயின் கர்ப்பப்பையும்
கடலைச்
சுருக்கியதோர் வடிவல்லவா

வெளியேறி நிலம் வீழும்
வேதனைப் பொழுதெல்லாம்
அழுகின்றாய் மானிடா நீ

மீண்டும் நீ நீரில் நீராகும்
ஜென்மம் எங்கே என்றுதானே
கதறுகின்றாய்

அதுவரைக்கும்
அழுகையைத்தானே தினம்
அடையாளமாக்கிக் கொண்டாய்

கண்ணீர்க் கயிறு திரிக்கும்
காரணம் அறிவாயா

அது என்னோடு உன்னை
மீண்டும் பிணைக்கும்
நீர்ப்பாச முயற்சி

நீர் என்ற
சுவனத்திலிருந்து
வெளியெறியப்பட்ட
பாவமே
நீருக்குள் நீராகி
என்றுதான் நீ
நீயாகிப் போவாயோ
மீண்டும்

அதுவரைக்கும்
நீயோர்
நிலவாழ்ப்
பிணம்தானே

எத்தனைக் கூர்வாளால்
எப்படி வகுந்தாலும்….

விலகுவதில்லை
நீர்

கலைவதில்லை
நெருப்பு

அகலுவதில்லை
காற்று

பிரிவதில்லை
ஆகாயம்

நிலமோ
விலகும்

பொழுதுக்கும்
கலையும்
அகலும்
பிரியும்

ஆகையினாலேயே
மனிதன்
நிலம் வாழ்கிறான்
என்றும்
விலகிச் சாகிறான்

சற்றே மாற்றி சிந்திக்கவும்
சட்டென்று மறுதலிக்கும்
பிறப்பை
மண்ணில் கொளுத்திவிட்டு
நீருக்குள் வா
நீ நீராக வா என்றே
செல்லிவைப்பேன்

]

இந்தக் கதை கேட்டாயோ
என்னுயிரே

பழந்தமிழ் திருடிய
திருடனாம் நான்
பரிகாசம் செய்கிறார் தமிழர்

அமுதத் தமிழ்மேல்
அந்த ஆகாயத்திற்கே
அடங்காப் பசி

நினைத்து நினைத்து
நெருப்புக்கோ
நித்திரை கிடையாது

தொட்டுத் தழுவாமல்
காற்றுக்குச்
சிறகுகள் வெடிப்பதில்லை

அந்தத் தீந்தமிழை
பழந்தமிழ்த் தித்திப்பை
தழுவிப் பார்க்கும் ஆசை
எனக்கும் இருக்காதோ
கிறுக்கர்களே

அள்ளிக்கொண்டுபோய்
ஆழத்தில் வைத்து
ஆழமாய் வாசிக்கிறேன்
ஓலைத் தமிழை

அவ்வமுதத் தமிழ்போல்
இன்னுமின்னும் படைக்காமல்
தொலைந்ததே தொலைந்ததே என்றே
புலம்புகிறார் வக்கற்ற இளந்தமிழர்

நீரல்ல நீரல்ல தவறினை
இழைத்ததும் இழைப்பதும்
நீர்தான் நீர்தான் தமிழரே நீரேதான்
என்றே சொல்லிவைப்பேன்

நானே உயிரானேன் உனக்குள்
என்னையே திருடனென்கிறாயே
நன்றி நொடிந்த தமிழா

நான் தினம் உன்னை
வைது வசைபாடுகிறேன் வந்துபார்
ஒவ்வோர் கரையிலும் அலைகளாய்
என்றே சொல்லிவைப்பேன்

]

கர்னாடகாவில் துளிவளர்க்காமல்
இனி தஞ்சாவூரில் வேர்விட்டு
ஒவ்வோர் தமிழனின் வீட்டுக்குள்ளும்
ஓடிவரலாம்தான் நான்

உன் சோம்பேறித்தனத்தைச்
சொறிந்துவிட்டு மேலும்
சரிந்துபோகச் செய்ய
சம்மதமில்லை தமிழா எனக்கு

உன் தமிங்கிலம் விட்டுத்
தமிழ்பாடு - நான்
தானாய் வருவேன் தாளகதியோடு
என்று பாடிவைப்பேன்

உப்பை உதறிவிட்டு
ஒவ்வோர் முறையும் நான்
உன் மண்தேடி வரும்போதெல்லாம்
எது உன் வீடென்ற அடையாளத்தை
வெட்டிச் சாய்த்துவிட்டு - நீ
மொட்டையாய் நிற்கிறாயே
நானென்ன செய்வதாம் நீயே சொல்

பச்சைமரக் கூட்டம் கூட்டி
இச்சையுடன் இலைச்சாமரம் வீசாமல் - என்
பொன்மடிசுரந்து நீருதிருமோ மூடா

கும்பகோணக் கொடுமையில்
பசித்திருந்தது நெருப்பல்லடா
ஊழல்

உறங்கிப்போனது நானல்லடா
நேர்மை

எங்களைக் குறைசொல்லி மேலும்
உங்களைத் தாழ்த்தாதீர் புண்களே

இலங்கை இந்தியச் சிற்றிடையில்
ஓர் ஒட்டியாணம் கேட்டு
பாரதி நாவையே அசையச்செய்தேனே
அசைந்தீரா அற்பங்களே

குடையென்ற குத்தீட்டிகளால்
குதறிக்கிழிக்காதிருந்தால்
உழவனின்
ஒவ்வோர் குரலுக்கும் பொழிவேனே

பயிர்நலம் பேணுபவன் நில்லென்றால்
வாசுகியின் வாளியைப்போல்
பாதி வழியிலேயே வீழாமல் நிற்பேனே

நீர் நட்சத்திரங்களாய் உருவெடுத்து
ஒவ்வோர் வீட்டுக் கூரையுள்ளும்
குளிர் நிறைத்துப் பிரகாசிப்பேனே

சந்திரனில் குடியேறி
மனிதா நீ இங்கேயும் வாழவாவென்றே
வரவேற்றிருப்பேனே

எந்தக் கோள் சென்றாலும்
அந்தக் கோள் வாசலில்
உனக்கு முன்சென்று நான்
ஆரத்தி எடுப்பேனே என்றெல்லாம்
சொல்ல்லிவைப்பேன்

]

உயிர் தந்தேன் உடல் தந்தேன்
உணவும் தந்தேன் - வேறு
என்னதான் தரவில்லை நான்

நானில்லா முத்தமுண்டா
சேர்க்கையுண்டா இல்லை
உயிர்க்கும் கருதானுண்டா

நானே நானாகி
நானுள் நான் வார்த்து
நீந்துகிறேன் நான் நீயாக

இன்னும் போதாமனமா
பாழும் மானிடா கேள்

இனி...

உடலழுக்கைக் கழுவவரும்
உயிர்களின்
உள்ளழுக்கையும் கழுவுவேன்

......நீ எனக்குள் இறங்கு


எனக்குள் மூழ்கி
என்னையே சுவாசிக்க
உயிர்கள் அனைத்துக்கும்
நீர்ச்சுவாசம் வழங்குவேன்

......நீ எனக்குள் இறங்கு


கண்ணீர்ச் சந்துகளில்
ஓடுவதை மட்டும் தவிர்த்து
வேறு எங்கும் நான்
ஓடிவருவேன்

......நீ எனக்குள் இறங்கு


நஞ்சேறும் வஞ்சக மூளையில்
இரத்தமாய் வசிப்பதை மட்டும் தவிர்த்து
வேறு எங்கும் நான்
வசிப்பேன்

......நீ எனக்குள் இறங்கு


உயிர்கள் அனைத்தும்
என் பிள்ளைகளே என்பதால்
என் தாய்மை துறவாமல்
செல்லமாய்த் தலாட்டி
நிம்மதிக்குள் பாதுகாப்பேன்

......நீ எனக்குள் இறங்கு


ஆம் மானிடா
உதயத்தையே நீ நாடு
உன் தாயிடமே வந்து சேரு

......நீ எனக்குள் இறங்கு!

2003 சந்தவசந்தம் மின்குழுமத்தின் நீராக நானிருந்தால் கவியரங்கம்

No comments: