Showing posts with label * * 22 என் அணிந்துரைகள். Show all posts
Showing posts with label * * 22 என் அணிந்துரைகள். Show all posts

ஜெயபாரதனைப்போல அறிவியல் எழுதும் இன்னொருவர் தமிழில் இல்லை

ஜெயபாரதனைப்போல அறிவியல் எழுதும் இன்னொருவர் தமிழில் இல்லை

ஏறக்குறைய பதினைந்து வருடங்கள் இருக்கும்

நான் என் குடும்பத்தோடு
270 கிலோமீட்டர் தூரம் வாகனம் ஓட்டிக்கொண்டு
கின்கார்டைனிலுள்ள ஜெயபாரதன் வீட்டிற்குச் சென்றேன்

அவரோடு சில தினங்கள் தங்கி நட்பைப் கொண்டாடிவிட்டு
அந்த ஆனந்த நினைவுகளோடு டொராண்டோ வந்துசேர்ந்தேன்
என்றும் எங்கள் நெஞ்சில் பசுமையாய் நிற்கும்
ஓர் அருமையான பயணம் அது

ஜெயபாரதன் தனியேதான் இருந்தார் ஆனால் தனியே இருக்கவில்லை

வீடுநிறைந்த புத்தங்கள் தோட்டம் நிறைந்த செடிகொடிகள்

ஜெயபாரதன் ஒரு விஞ்ஞானிமட்டுமல்ல
கருவேப்பிலைச் செடியை வெகு சிறப்பாகக்
கனடாவில் வளர்க்கும் தேர்ந்த விவசாயியும்கூட

ஜெயபாரதனின் துணைவியார்
மகள்வீட்டிற்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்

மகள்கள் இருவரும் வெள்ளையரை மணந்துகொண்டு
மூத்தவர் ஹாலிபாக்ஸிலும் இளையவர் டொராண்டோவிலும்
குழந்தைகளோடு மகிழ்ச்சியாய் வாழ்வதாகச் சொன்னார்

என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்று
தலைப்புகளை வாசித்து முடிக்கவே எனக்கு நேரம் போதவில்லை

அவற்றுள் பெரும்பாலானாவை தமிழ் நூல்கள்
சற்றே குறைந்த எண்ணிக்கையில் ஏனையவை ஆங்கில நூல்கள்

இலக்கியமும் விஞ்ஞானமும் இரண்டறக் கலந்து
புத்தக அலமாரிகளில் நீக்கமற நிறைந்திருந்தன

ஸ்காட்சிஷ் மக்கள் குடியேறி வாழும் கின்கார்டின் ஓர் அழகிய கிராமம்
அதன் அத்தனை அழகும் ஏரிக்கரைகளில் ததும்பி வழிந்தன

ஓரிடமும் மீதம் வைக்காமல் எங்களை அழைத்துச் சென்று
காட்டிமகிழ்ந்தார் விருந்தோம்பலிலும் சிறந்த ஜெயபாரதன்

இன்று அவர் வயது 84
தன் உடல்நலம் முன்புபோலில்லாமல் குன்றிவருவதாகவும்
உடலுழைப்புகள் குறைந்துவிட்டதாகவும்
வாசிப்பும் எழுத்தும் அதிகரித்துவிட்டதாகவும் சொன்னார்

விழுத்தெழுக என் தேசம் என்ற கவிதைநூல் படைத்திருப்பதாகவும்
வழமைபோல் அதற்கும் என் அணிந்துரை வேண்டும் என்றும்
அன்போடு கேட்டுக்கொண்டார்

நானோ விடுப்பில் தமிழகம் சென்றுவிட்டேன்
இம்முறை இயலாது என்னால் காலதாமதப்படுத்திவிடாமல்
நூலை அச்சிடுங்கள் உங்களின் அடுத்த நூலுக்கு
அணிந்துரை தருகிறேன் என்றேன்

ஆனால் அவரோ என்னை விடுவதாயில்லை
எல்லாம் முடிந்த பின்னும் பதிப்பகத்தார் இறுதி தினம் குறிப்பிட்டு
அதுவும் முடிந்தபின்னும் எனக்காகக் காத்திருப்பதாகவும்
கனடாக் கவிஞரின் அணிந்துரையின்றி நூல் வெளிவராது என்றும்
கராராகச் சொல்லிவிட்டார்

நான் இன்னும் நூலை வாசிக்கவே இல்லை
வாசிப்பேன் ஆனாலும் அதை வாசிக்காமலேயே
எனக்கொரு நீண்ட அணிந்துரை தந்துவிடமுடியும்

அது வேறு எழுத்தாளர்களுக்கோ கவிஞர்களுக்கோ
இயலாததாகவே இருக்கும்

ஏனெனில் அவரை நேரில் சந்தித்து
நெருக்கமாய்க் கண்டுணரும் நற்சூழலைப் பெற்றவன் நான்

யாரிந்த ஜெயபாரதன் என்றால்
அவரின் அறிவியல் கட்டுரைகளைச் சொல்வார்கள் சிலர்
அவரின் கவிதைகளைச் சொல்வார்கள் சிலர்
அவரின் கருத்தாடல்களைச் சொல்வார்கள் சிலர்
நானோ அவரையே யாரென்று சொல்ல வருகிறேன்

இந்த வயதிலும் ஓய்வென்று ஓய்ந்துவிடாமல்
தமிழுக்காக உழைக்கும் பெரிய மனிதருக்கு
என்போன்ற சிறியவன் அணிந்துரை தருவது சரியல்ல
ஆனால் என்னிடமும் அணிந்துரை கேடுப் பெறுவதுதான்
ஜெயபாரதனின் உயர்பண்புகளுள் ஒன்று

அவராகட்டும் அவரின் அறிவாகட்டும்
அவரின் விருந்தோம்பலாகட்டும் அவரின் மரியாதையாகட்டும்
அல்லது அவரின் கலையும் பண்பாடுமாகட்டும்
எல்லாமே தனியுயரத்தைத் தாவிப்பிடித்தவை

டொராண்டோ வாருங்கள் வந்து என்னோடு ஒருவாரமேனும்
தங்கிச் செல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறென் உங்களை என்று
அன்புடன் அழைத்தேன்

அவ்வளவு தூரமெல்லாம் வாகனம் ஓட்டுவது
இயலுவதில்லை புகாரி என்று அன்போடு மறுத்தார்
சரி நான் வருகிறேன் விரைவில் என்று வாக்குக் கொடுத்தேன்

இந்த வயதிலும் அவர் எழுதுகிறார் என்பதே ஒரு கவிதை

ஆயினும் அவரின் இந்தக் கவிதை நூலையும் வாசித்து
கருத்தெழுதாவிட்டால் இந்த அணிந்துரை நிறைவடையாதல்லவா
கூடவே பொருளற்றதாகவும் ஆகக் கூடுமில்லையா

ஆகையினாலேயே கவிதை நூலை வாசித்து முடித்தேன்
இடையிடையே நான் முடிச்சுகள் இட்டுவைத்தவற்றை
இங்கே கொஞ்சம் அவிழ்த்து வைக்கிறேன்

எல்லாம் சொல்லிவிட்டால் நீங்கள் பின்
எதைபின் வாசித்து நேசிக்கப் போகிறீர்கள்

இக்கவிநூலின் தொடக்கத்தில் அவரின் அதீத பற்றுகாரணமாக
இந்திய நாட்டிற்கு தேசிய கீதம் எழுதியிருக்கிறார்
தமிழ் நாட்டிற்கு வாழ்த்துப்பாடல் அமைத்திருக்கிறார்
தமிழ்த் தாய்க்கு வாழ்த்துக் கவிதை கட்டியிருக்கிறார்
கனடிய தேசிய கீதத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
கனடிய தேசத்திற்கு வாழ்த்துப்பா பாடி இருக்கிறார்

இவற்றுக்காக மட்டுமே இந்த நூல் தனியே பாராட்டப்பட வேண்டும்

போதி மரம் தேடி என்ற கவிதையில்

படித்தேன் தெரு விளக்கில்
விடிய விடிய விழித்து
படிக்க வேண்டா வற்றை
படிக்கத் தேவை யானவை எல்லாம்
பட்டப் படிப்பில் இல்லை
படித்தேன், படித்தேன் தேர்வுக்காக
உயர்ந்த மதிப்பெண் வாங்கினேன்
வாழ்வில் கிடைத்தது பெரிய பூஜியம்

பாடத்திட்டத்தின் அவலத்தை எத்தனை அழுத்தமாய்
அனுபவத்தில் தோய்த்துச் சொல்கிறார் பாருங்கள்

பூரண சுதந்திரம் யாருக்கு என்ற கவிதையில்

மசூதியை இரவிலே தகர்த்து
வேரறுப்பது
பூரண சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப் பெட்டி ஆக்குவது
நவகாளிச் சுதந்திரம்
பூரண சுதந்திர நாட்டில்
மதம் பிடித்த யானைகள்
மனித நேயத்தை மிதிக்கும்.
சுதந்திர நாட்டில்
மதக் கோலத் திருவிழா 
கும்ப மேளா !

சுதந்திரம் எப்படிக் கெட்டுச் குட்டிச்சுவராய்ப் போனது என்பதை
காட்சியமைபோடும் உண்மைச் சம்பவங்களின் அணிவகுப்போடும்
சொல்வது சிறப்பல்லவா?

தொடுவானம் என்ற கவிதையில்

தோல்விக்குப் பின்
கற்றது
கால்பந் தளவு !
வெற்றி பெற்ற பின்
கற்றது
கடுகு அளவு !

தோல்விதான் ஆசான் என்பதை எத்தனை அழகாகச் சொல்கிறார்கள் பாருங்கள்

அணு, அகிலம், சக்தி என்ற கவிதையில்

பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
பொரி உருண்டை ஒன்று
பரமாணுக் களாகி,
துணுக்காகி அணுவாகி,
அணுவுக்குள் அணுவாகித்
துண்டுக் கோள்கள் திரண்டு
அண்டமாகி,
அண்டத்தில் கண்டமாகித்
கண்டத்தில்
துண்டமாகிப் பிண்டமாகி,
பிண்டத்தில் பின்னமாகிப்
பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்
பேரளவுச் சக்தி யாகித்
சீராகிச் சேர்ந்து
சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
பிணைந்து பேரொளி யாகிப்
பிரம்மாண்டப் பிழம்பாகி,
பரிதியாகி,
பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
பாசபந்த ஈர்ப்பில்
அணைத்து
அம்மானை ஆடினாள் என்
அன்னை !

தன் அறிவியல் அறிவையும் மெய்ஞான அறிவையும்
இணைத்துக் கலந்து இவர் வடிக்கும் கவிதைகள் வித்தியாசமானவை
பலருக்கும் எழுத இயலாதவை என்றும் சொல்லலாமல்லவா?

ஜெயபாரதன் நூறாண்டுகள் தாண்டி நோய்நொடியின்றி வாழவேண்டும்
அவரின் அறிவியல் கட்டுரைகளால் தமிழுலகை
மேலும் மேலும் மூழ்கடித்தவண்ணமாய் இருக்க வேண்டும்

நானறிந்து ஜெயபாரதனைப்போல அறிவியல் கட்டுடைகளை
நாளெல்லாம் பொழுதெல்லாம் எழுதும் இன்னொருவர் தமிழில் இல்லை

நான் ஜெயபாரதனை பாராட்டுகிறேன் ஒரு கவிஞனாய்
நான் ஜெயபாரதனுக்கு நன்றி சொல்கிறேன் ஒரு தமிழனாய்

உறுதியாகத் தமிழ்த்தாய் பூரிப்பாள் பொங்கி நிற்பாள்
அறிவியல் தமிழெடுத்து தினம் தினம் என்னை நீ
ஆராதிக்கிறாயே என்று

வெற்றி வாழ்க்கை வாழ்கிறீர்கள் ஜெயபாரதன்
எந்நாளும் அழிவே இல்லை உங்களுக்கு

அன்புடன்
கவிஞர் புகாரி
அக்டோபர் 2018, கனடா










அணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து எழுது எழுது

கலாம்!

இந்தப் பெயரை நான் அன்று உச்சரித்ததைப்போலவே இன்றும் உச்சரித்துப் பார்க்கிறேன். நெடுங்காலம் கட்டப்பட்டுக் கிடந்த என் ஞாபக முடிச்சுகள் சட்டென்று தளர்ந்து அவிழ்ந்து கொள்கின்றன. அதிலிருந்து சிதறித் தெறித்து ஓடுபவை முத்துக்களா பவளங்களா மாணிக்கங்களா என்று வகை பிரிக்கத் தெரியாமல் மனதில் ஏறும் சுகத்தை தடுக்கவும் முடியாமல் அப்படியே விட்டுவைக்கிறேன். அது நில்லாமல் மேலே மேலே ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. அந்த சுகத்தின் கால்களில் என் இதயத்தின் சந்துகள் புல்லரித்துச் சிவக்கின்றன.

கலாம் ஒரு கவிஞனாம். அதுவும் மரபு பிறழாமல் வளையாத சொற்களையும் வளைத்துப் பிடித்து தமிழையும் கவிதைகளையும் நிமிர்த்திப் பிடிக்கும் விரல்களைக் கொண்டவனாம்!

அன்று.... பம்பாயின் மழை ஈர வீதிகளில் வளைகுடாக் கனவுகளோடு திரைப்பட நடிகனைப்போல அழகாக நின்ற கலாமை எனக்குத் தெரியும். அதுதான் எனக்கும் அவனுக்குமான முதல் சந்திப்பு..

பின்.... சவுதி அரேபியாவின் பாலைவன மணல் கரைகளில் மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியை விழிகள் விரிந்து மணக்கும் வாசனையோடு கொண்டாடிய
கலாமை எனக்குத் தெரியும்.

அன்புதான் அவன் பெயருக்கான மொழிபெயர்ப்பாய் இருக்க வேண்டும். இது என் ஞாபகப் பேழைகளில் தங்கத் தூசுகளாய் ஒட்டிக்கிடக்கும் நினைவுகளில் இருந்துதான் என்றாலும் அது பிழையாகிப் போகாது என்றே உறுதியாய் நம்புகின்றேன்.

கண்களை அவ்வப்போது சுறுக்கியும் விரித்தும் பேசும் அவனது அந்த நாள் பேச்சுகள் அப்படியே விட்டு விட்டுப் பொழியும் வசந்தகால மழையைப் போல என் விழிகளின் குழிகளில் விழுகின்றன.

இனி இன்று.....

ஒரு நண்பன் வந்து என்னிடம் வாழ்த்துரையோ அணிந்துரையோ கேட்டால் நான் என்ன செய்யவேண்டும்? அவன் ஆக்கங்களை வாசித்து அதனால் எழும் என் மனத் தாக்கங்களைப் பேச வேண்டும். ஆனால் நான் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறேன்?

என்ன செய்வது? எத்தனை காலங்கள் ஓடிவிட்டன? இன்று நீ வளைகுடாவின் அலைப் பரப்பில், நானோ கனடாவின் பனிக்கரைகளில். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் உன்னையும் உன் நினைவுகளையும் அசைபோடாமல் இந்த மனம் எப்படித்தான் உன் கவிதைகளை மேயும்.

நண்பா இனி உன் நண்பனிடம் உன் கவிதைகளுக்கான வாழ்த்துரையைக் கேட்காதே! உன் கண்காணா நட்பின் கதகதப்புக் குகைகளுக்குள் ஒன்று மாற்றி ஒன்றாய்ப் புகுந்து புகுந்து அவன் வெளிவருவதற்கே வெகு நேரம் ஆகிவிடுகிறது.

இன்று உன் முகம் தாடிக்குள் மூடிக்கிடக்கலாம் அல்லது ஞானத்தால் நெற்றி சுறுக்கித் தேடிக்கிடக்கலாம். ஆனால் என்னிடம் இருக்கும் உன் முகம் எதுவென்று தெரியுமா உனக்கு?

ஆமாம் அதே முகம் தான். என் நினைவுகளிலிருந்து விழுந்துவிடாத அந்த முகத்தையே என் கண்முன் நிறுத்தி நான் இன்று இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் மரியாதை இல்லாமல் அவன் இவன் என்றே இன்றும் எழுதுகிறேன். ஒரு கவிஞனாய் இளமைக்குள் ஏறி நின்று என்னை மன்னித்துவிடு.

உன் கவிதைகள்.....

கடலும் மறந்துபோச்சு - உப்பளத்
திடலும் மறந்து போச்சு
உடலும் பெருத்துப் போச்சு
உடலுக்கு நடைப்பயிற்சி என்னாச்சு

இதை நீ என்னிடம் கேட்கிறாயா அல்லது உன்னிடமே கேட்கிறாயா என்று தெரியவில்லை ஆனால் அழகாகக் கேட்டிருக்கிறாய் கலாம்!

சிந்தும் உழைப்பும் சிறந்த தியாகமே
இந்தியச் சந்தை இழந்த உழைப்பினை
அன்னிய நாட்டவர் அங்கீ கரித்தனர்
தன்னிறை என்பதுஎந் நாள்?

ஆகா நண்பா அருமையான கேள்வி. உன் கவிதைகளுள் பல கேள்விகளாகவே இருக்கின்றன. அந்தக் கேள்விகள் யாவும் தோல்விகளுக்குள் துளையிட்டு வெற்றிக் கொடிகளை ஊன்றுகின்றன. வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்.

ஏக்கம் என்பது
தலைவன் தலைவிக்காகக் காத்திருப்பது
கவிஞன் தலைப்புக்காகக் காத்திருப்பது

என்ற உன் கவிதையை வாசிக்கும்போதே சட்டென்று சிரித்துவிட்டேன். கவிதையை எழுதிவிட்டு தலைப்பைத் தேடும் படலம் தலைவி தலைவனைத் தேடும் படலத்தைவிட பெரியதுதான். ஏனெனில் கவிதை என்பது இதயத்திலிருந்து தானே பொங்கிப் பெறுகி வருகிறது. தலைப்போ தலையிலிருந்து கசங்கிக் கசங்கி வருகிறது. அதனால்தான் இன்றெல்லாம் கவிஞர்கள் தலைப்பை விட்டுவிட்டார்கள் இந்தக்காலப் பெண்களைப்போல.

வாசக் கதவை மூடிவிட்டு
வாசிப்பேன் உன் கடுதாசி
நேசக் கதவை திறந்துவச்சு
நெஞ்சுக்குள்ளே பூட்டிவச்சு

அடடா... வளைகுடா வாழ்வு தரும் பிரிவுகளால் எரியும் மூச்சுகள் அந்தச் சூரியனையும்விட பெருநெருப்புப் பந்துகள்தாம். வளைகுடாக் கடலில் உப்பு அதிகம். இவர்களின் பிரிவு தரும் கண்ணீரே காரணமாய் இருக்கலாம். நண்பா எழுது. நிறைய எழுது. வளைகுடாவில் விளைந்து பெருகும் துயரம் எழுது. உன் எழுதுகோல் வளைகுடாக் கண்ணீரின் வேரறுக்கும் வாளாகலாம்.

இப்படியாய் உன் நூல் முழுவதும் நான் நல்முத்துக்களைக் கண்டெடுக்கிறேன். நட்போடு உன்னை வாழ்த்திப் பாராட்டி மகிழ்கிறேன். எழுது எழுது. எண்ணங்களை இழுத்துப் பிடித்து உள்ளங்களை இணைத்துப் பிடித்து உணர்வுகளை உயர்த்திப் பிடித்து எழுது எழுது.

அன்புடன் புகாரி
நோன்புநாள் 2012






  

அணிந்துரை - மலிக்கா - அழகிய கவிதை மலர்கள்

அழகிய கவிதை மலர்கள்

கவிஞர் மலிக்காவின் மனதுக்குள் எப்போதும் மிதந்துகொண்டே இருக்கின்றது ஒரு சுவாரசியம். அந்த சுவாரசியம் அவரின் மனக் குளத்தில் அவ்வப்போது துள்ளித் துள்ளிக் குதிக்கிறது. அது குதிக்கக் குதிக்க உணர்வுகளின் மிருதுவான கரைகளை வருடி வருடி அலையலையாய் எழுந்து வீசுகிறது. அந்த அலைகளைப் பிடித்துப் பிடித்து அதன் நுரைகளைக் குழைத்துக் குழைத்துக் கவிதைகளாக்கித் தன் உயிரின் மடியில் இட்டுக் கொஞ்சுகிறார் கவிஞர் மலிக்கா.

முத்துப்பேட்டையில் பிறந்தார். நான்காம் வகுப்புதான் படித்தார். சின்னஞ்சிறு வயதிலேயே திருமணமும் செய்துகொண்டார். கூடவே வைத்துக்கொள்ளும் உயிர்த் தோழியைப் போல ஒரு மகளையும் பெற்றெடுத்துக்கொண்டார். இன்று துபாயின் பாலைவன மணல் வெளியைக் கவிதை முத்துப் பேட்டையாக்கிக்கொண்டிருக்கிறார். அதை அவர் இப்படிச் சொல்லுகிறார்:

          நான்
          கம்பன்வழி வந்தவளில்லை
          கண்ணதாசன் பேத்தியில்லை
          வாலியின் வார்த்தைகள் கேட்டதில்லை
          வைரமுத்துவின் வாசல் காற்றும் பட்டதில்லை
          ஆனாலும் கவிதை எழுதுகிறேன்

கவிஞர் மலிக்காவின் கவிதைகள் கொத்து மல்லிப் பூக்கள். சின்னச் சின்ன வெண்ணிற இதழ்களால் இதய மொட்டவிழ சிலிர்த்து விரிபவை. சுவாசத்துக்குள் சுகந்தம் ஏற்ற முயல்களாய் தத்தித்தாவி முயல்பவை.

          சன்னலில்லாத வீடு
          இறைவன் தந்த
          சன்னதியின் கூடு

என்று எத்தனை அழகாய் கருவறை வாசத்தைச் சொல்கிறார் பாருங்கள். ’பனிக்குடம் அதனுள் விளையாடும் பச்சிளம்’ என்று தொடங்கும்போதே கவிதை, வாசகர்களின் மனதுக்குள் ஒரு வசந்தத்துக்கான பூக்களைத் தூவத் தொடங்கிவிடுகிறது.

          பூவே! உன்மீது
          புகைபடிய வைத்த காற்றை
          கைது செய்யச்சொல்லி-என்
          காதலனை அனுப்பியுள்ளேன்

காலங்கள்தோறும் காதல் கவிதைகள் நம்மைச்சுற்றி ரீங்காரமிடுகின்றன. ஒருநாளும் ஒருவருக்கும் அந்த உயிரிசை அலுப்பதே இல்லை. ஆனாலும் இந்தக் காதல் கவிதையைப் பாருங்கள். ஓர் அழகான காதல் அந்தக் காதலுக்குள் காதலாய்  இயற்கையின் மீதுள்ள உன்னத காதல் அழுத்தமாய்ச் சிறகடித்துப் பறக்கிறது. சுற்றுச்சூழல் சுகாதாரத்தையும் மாசுகட்டுப்பாட்டையும் முதன்மையாக்கிக் காதலிக்கிறது.

என்னைக் கொஞ்சுவது அப்புறம் இருக்கட்டும் முதலில் இயற்கையை நாசம் செய்யும் காற்றைக் கைதுசெய் என்று தன் காதலனை அனுப்பிவைக்கிறாள் காதலி. காற்றைக் கைதுசெய்ததும் அது கூறிவிடப்போகிறது இயந்திரங்களாகிப்போன மனிதர்கள்தாம் குற்றவாளிகள் என்று.

துன்பம் வந்துன் தோள்தொடுமுன்
கண்முன் வருவேன்
உன் தோள்தாங்கி நிற்பேன்
நட்பானதால்

என்று நட்பின் ஆழத்தைக் கவிதையாக்கி கவிஞர் மலிக்கா மெய்சிலிர்த்துக்கொள்கிறார் ’நட்பின் வலிமை’ என்ற கவிதையில். துன்பம் எல்லோருக்கும் வரும். அதிர்ஷ்டவசமாய் தோள்தரும் நட்பும் எப்போதேனும் அமையக்கூடும். ’உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்பார் வள்ளுவப் பெருமான்.

உடை அவிழ்ந்து விழும்போது அதை உடன் சென்று கட்டும் தன் கரங்களைப் போல நண்பரின் துயரம் தீர்ப்பதே நல்ல நட்பு. ஆனால் துன்பம் வருவதற்கு முன்பே நான் வந்து நிற்பேன் என்று கவிஞர் மலிக்கா உணர்ச்சிவசப்படுவது நெகிழ்ச்சியாய் இருக்கிறது.

’வீரம் வென்றது’ என்ற ஜல்லிக்கட்டு கவிதையில் விலங்குகளின் உயிர்வதை பற்றி கவிஞர் மலிக்கா கண்ணீர்விடுவதும் அதற்காக ஆறறிவைச் சவுக்கால் சொடுக்குவதும் அவரின் கருணை உள்ளத்துக்குச் சான்றாக அமைந்திருக்கிறது.

’தெருவோரம்’ என்ற கவிதை ஓர் அருமையான காட்சியமைப்பு. நறுக்கென்று செருப்பின் ஊசி வறியவனின் கையை மட்டுமல்ல நம் நெஞ்சங்களையும் தைக்கிறது.

காலை மாலை வந்ததும்
சாளரம் வழியே
சரம் சரமாய்க் கவிதைகள் தா

வேண்டும் வேண்டும் என்று கவிதை பாடாத கவிஞர்களே இருக்கமாட்டார்கள். ’காணிநிலம் வேண்டும் பராசக்தி’ என்று கேட்ட பாரதி மட்டுமல்ல அவனுக்கு முந்தைய கவிஞர்களும் அவனுக்குப் பின் வந்த கவிஞர்களும் வேண்டும் வேண்டும் என்று தன் ஆசைகளையும் லட்சியங்களையும் நிறையவே பாடி இருக்கிறார்கள்.

’வீழ்ச்சியுறும் தமிழினத்தில் எழுச்சி வேண்டும்! கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!’ என்று பாடுவார் பாரதிதாசன். ’அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்’ என்ற கண்ணதாசனின் பாடல்வரிகள் நினைவுக்கு வரலாம். 'ராஜராஜனின் வாளைக் கேட்டேன்! வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்! பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்!' என்ற வைரமுத்துவின் கவிதையும் செவியோரம் ஊஞ்சல் கட்ட வரலாம்.

இங்கே மலிக்காவின் வேண்டும் கவிதை எதை வேண்டுகிறது என்று பாருங்கள். காலை வந்து மாலை செல்லும் சூரியனிடம் சரம் சரமாய்க் கவிதைகளை வேண்டுகிறது. அத்தனை காதல் மலிக்காவுக்கு கவிதைகளின் மேல். சூரியனின் ஒவ்வொரு செய்கையிலும் கவிதையையே அவர் காண்கிறார்.

’என்ன பாவம் செய்தேனம்மா’ என்ற கவிதை இப்படித் தொடங்குகிறது:

          அதிகாலை நேரம்
          சேவலென்ற கோழி கூவவில்லை
          காகங்கள் கூடிக் கரையவில்லை
          கட்டிடங்களுக்கு இடையே
          கதகதப்போடு கிளம்பத்துடித்த சூரியன்

துயாயில் விடியும் காலைப் பொழுதை நம்மூரில் விடியும் பொழுதோடு ஒப்பிட்டு  ஏக்கம் கலந்த வரிகளால் எத்தனை அழகாகக் கூறி இருக்கிறார் பாருங்கள். இந்தக் கவிதையின் கடைசி வரிகளுக்குள் பயணப்படும்போது கட்டிடங்களுக்கு இடையில் எழும் சூரியனைப்போலத்தான் மாறிவிட்டது நம் வாழ்க்கையும் என்று கூறத்தோன்றுகிறது.

துபாயில் சேவல் கூவாதா என்று கவிஞர் மலிக்கா ஏங்கித் தவிக்க, ஆப்பிரிக்க நாடு ஒன்றில் அதிகாலையில் தொல்லையாய் இருக்கிறது என்று கூவும் சேவல்களின் கழுத்தை அறுக்க உத்தரவு இட்டிருக்கிறார்களாம். அதற்கும் ஒரு கவிதை எழுதலாம் கவிஞர் மலிக்கா.

’ரகசிய அதிசயம்’ என்ற கவிதையில்

          முத்தமிடும்போது
          முத்திரைபதிக்க
          முன்னுரை இந்த மூக்குத்தி
 
          காதில் சொல்லும்
          காதல் சங்கதியை
          கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
          இந்தக் கம்மல்
 
என்று தொடங்கி பெண்ணின் ஒவ்வொரு அணிகலனையும் சுவாரசியமாகக் காதலுக்குள் இழுத்திருக்கிறார் கவிஞர் மலிக்கா. மூக்குத்தி, கம்மல், சங்கிலி, வளையல், மோதிரம், கொலுசு என்று எல்லாமே காதலுக்கான மிக அத்தியாவசியத் தேவைகள் என்று வழக்காடுவதுபோல் இருக்கிறது அந்தக் கவிதை.

நகை வேண்டும் என்று ஆசைப்படும் மனைவிமார்களுக்கு அருமையான காரணங்களைத் தொகுத்துக் கொடுத்துவிட்டார். காதல் கணவரால் மறுக்க முடியுயாத காரணங்கள் என்பதுதான் இங்கே சிறப்புக் குறிப்பு :-)

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். படிப்பின் அருமையைப் பற்றி தெரியவேண்டுமா கவிஞர் மலிக்காவிடம் கேளுங்கள் என்று கூறலாம்போலத் தோன்றுகிறது. ‘நீலவானில்’ என்ற அவரின் கவிதை ஒன்று போட்டிருக்கும் கோலம் அருமையாக உள்ளது.

          புகழ் வந்து சேர்த்த போதும்
          பெரும் வசதிவாய்ப்பு வந்து போதும்
          படிப்பறிவு இல்லையென்றால்
          பத்தாம் பசலியாகக் கூடும்
          பணக்காரனும் படிக்கவேண்டும்
          பாமரனும் படிக்கவேண்டும்

என்று சொல்லிக்கொண்டே செல்லும் கவிதையின் முத்தாய்ப்பு வரிகள் இப்படி வருகின்றன:

          சில்லென்ற காற்றில்கூட
          சிறு சலசலப்பின் சத்தம் கேட்கும்
          நீ படித்துவிட்டு பட்டம் பெற்றால்
          நீலவானில் - உன்
          கால்கள் நடக்கும்

மிகத் துல்லியமான விசயங்களை உணர்வதற்கும் அந்த வானத்தையே ஏறிமிதித்து நடக்கும் வல்லமை பெறவும் படிப்பு மிகவும் அவசியம் என்று கூறி மக்களைப் படிப்பின் பக்கம் இழுக்கும் கவிஞர் மலிக்கா தன் ஏக்கத்தை இங்கே கொட்டித் தீர்த்திருக்கிறார் என்றே கூறத்தோன்றுகிறது.

கவிஞர் மலிக்காவின் கவிதைகளை வாசித்துச் செல்லும்போது என் எண்ணங்களில் அடிக்கடி வந்து ஊஞ்சலாடியது ஐயன் வள்ளுவனின் ஒரு குறள்தான்:

          குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
          மழலைச் சொல் கேளாதவர்

குழலைவிட யாழைவிட இனிமை நிரம்பியதாய்த்தான் இருக்கின்றன கவிஞர் மலிக்காவின் கவிதைகள்.

கவிஞர் மலிக்கா தான் எப்படி கவிதை எழுத வந்தேன் என்று தன்னைத் தானே பார்த்து ஆச்சரியப்படுவதையும், அப்படி ஆச்சரியப்படுவதையே கவிதையாக்கி மகிழ்வதையும் காண்பதே ஒரு கவிதையாய் இருக்கிறது.

சுவையான நூல்கள் ரசிகர்களை இழுந்துவந்து ஆவலோடு வாசிக்கவைக்கும். இதயத்தில் நுரைத்துவிட்ட கவிதையோ கவிஞர்களை விடாப்பிடியாக இழுத்துவந்து வேறு எப்பணியையும் செய்யவிடாமல் அப்படியே அமர்த்தி அதை எழுத வைக்கும். அப்படியான இனிய அவதிகளுக்குள் அடிக்கடி சிக்குகிறார் கவிஞர் மலிக்கா என்று நிச்சயமாக உணரமுடிகிறது.

மலிக்கா பிறந்த முத்துப்பேட்டையின் கடலோரம் உள்ள அலையாத்திக்காடுகள் அலைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய அலையாத்தி மரங்களால் ஆனவை. அலையாத்தி மரங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. பசுமை விரித்த இலைகளால் மட்டுமின்றி நீருக்கு மேலே எட்டிப் பார்க்கும் வேர்களாலும் அவை சுவாசிக்கக்கூடியவை.

அந்த அலையாத்தி மரங்களைப்போல உள்ளத்தின் உதடுகளால் மட்டுமின்றி உயிரின் இழைகளாலும் கவிதைகளையே சுவாசிக்கின்றார் கவிஞர் மலிக்கா.

கற்றவரெல்லாம் கவிதை எழுதிவிடுவதில்லை. கலைஞர், கண்ணதாசன் போல பள்ளிப்படிப்பைத் தொடராத சிலர் அந்த வானத்தையே கவிதை நட்சத்திரங்களால் நிறைக்காமல் விட்டதில்லை. பள்ளிப்படிப்பைக் கைவிட்டாலும் இவர்கள் கற்பதை ஒருநாளும் கைவிட்டதே இல்லை. கலைஞர் தமிழறிஞர் ஆனார். கண்ணதாசன் கவிதைச் சித்தரானார்.

நல்ல நூல்களைத் தேடிப் படிக்கப்படிக்க கவிதைகளின் பயணங்களை நாளும் பொழுதும் பழகப்பழக கவிஞர் மலிக்கா மேலும் மேலும் சிறகசைத்துப் பறந்து தனக்கான கவிப்பொற் கூட்டை வெகு சிறப்பாகக் கட்டிக்கொள்வார் என்ற நம்பிக்கை உறுதிபடுகிறது. அந்த உறுதியில் திளைக்கும் இந்த மனது கவிஞர் மலிக்காவை நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறது.

அன்புடன் புகாரி
கனடா
கோடை 2010