அணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து எழுது எழுது

கலாம்!

இந்தப் பெயரை நான் அன்று உச்சரித்ததைப்போலவே இன்றும் உச்சரித்துப் பார்க்கிறேன். நெடுங்காலம் கட்டப்பட்டுக் கிடந்த என் ஞாபக முடிச்சுகள் சட்டென்று தளர்ந்து அவிழ்ந்து கொள்கின்றன. அதிலிருந்து சிதறித் தெறித்து ஓடுபவை முத்துக்களா பவளங்களா மாணிக்கங்களா என்று வகை பிரிக்கத் தெரியாமல் மனதில் ஏறும் சுகத்தை தடுக்கவும் முடியாமல் அப்படியே விட்டுவைக்கிறேன். அது நில்லாமல் மேலே மேலே ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. அந்த சுகத்தின் கால்களில் என் இதயத்தின் சந்துகள் புல்லரித்துச் சிவக்கின்றன.

கலாம் ஒரு கவிஞனாம். அதுவும் மரபு பிறழாமல் வளையாத சொற்களையும் வளைத்துப் பிடித்து தமிழையும் கவிதைகளையும் நிமிர்த்திப் பிடிக்கும் விரல்களைக் கொண்டவனாம்!

அன்று.... பம்பாயின் மழை ஈர வீதிகளில் வளைகுடாக் கனவுகளோடு திரைப்பட நடிகனைப்போல அழகாக நின்ற கலாமை எனக்குத் தெரியும். அதுதான் எனக்கும் அவனுக்குமான முதல் சந்திப்பு..

பின்.... சவுதி அரேபியாவின் பாலைவன மணல் கரைகளில் மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியை விழிகள் விரிந்து மணக்கும் வாசனையோடு கொண்டாடிய
கலாமை எனக்குத் தெரியும்.

அன்புதான் அவன் பெயருக்கான மொழிபெயர்ப்பாய் இருக்க வேண்டும். இது என் ஞாபகப் பேழைகளில் தங்கத் தூசுகளாய் ஒட்டிக்கிடக்கும் நினைவுகளில் இருந்துதான் என்றாலும் அது பிழையாகிப் போகாது என்றே உறுதியாய் நம்புகின்றேன்.

கண்களை அவ்வப்போது சுறுக்கியும் விரித்தும் பேசும் அவனது அந்த நாள் பேச்சுகள் அப்படியே விட்டு விட்டுப் பொழியும் வசந்தகால மழையைப் போல என் விழிகளின் குழிகளில் விழுகின்றன.

இனி இன்று.....

ஒரு நண்பன் வந்து என்னிடம் வாழ்த்துரையோ அணிந்துரையோ கேட்டால் நான் என்ன செய்யவேண்டும்? அவன் ஆக்கங்களை வாசித்து அதனால் எழும் என் மனத் தாக்கங்களைப் பேச வேண்டும். ஆனால் நான் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறேன்?

என்ன செய்வது? எத்தனை காலங்கள் ஓடிவிட்டன? இன்று நீ வளைகுடாவின் அலைப் பரப்பில், நானோ கனடாவின் பனிக்கரைகளில். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் உன்னையும் உன் நினைவுகளையும் அசைபோடாமல் இந்த மனம் எப்படித்தான் உன் கவிதைகளை மேயும்.

நண்பா இனி உன் நண்பனிடம் உன் கவிதைகளுக்கான வாழ்த்துரையைக் கேட்காதே! உன் கண்காணா நட்பின் கதகதப்புக் குகைகளுக்குள் ஒன்று மாற்றி ஒன்றாய்ப் புகுந்து புகுந்து அவன் வெளிவருவதற்கே வெகு நேரம் ஆகிவிடுகிறது.

இன்று உன் முகம் தாடிக்குள் மூடிக்கிடக்கலாம் அல்லது ஞானத்தால் நெற்றி சுறுக்கித் தேடிக்கிடக்கலாம். ஆனால் என்னிடம் இருக்கும் உன் முகம் எதுவென்று தெரியுமா உனக்கு?

ஆமாம் அதே முகம் தான். என் நினைவுகளிலிருந்து விழுந்துவிடாத அந்த முகத்தையே என் கண்முன் நிறுத்தி நான் இன்று இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் மரியாதை இல்லாமல் அவன் இவன் என்றே இன்றும் எழுதுகிறேன். ஒரு கவிஞனாய் இளமைக்குள் ஏறி நின்று என்னை மன்னித்துவிடு.

உன் கவிதைகள்.....

கடலும் மறந்துபோச்சு - உப்பளத்
திடலும் மறந்து போச்சு
உடலும் பெருத்துப் போச்சு
உடலுக்கு நடைப்பயிற்சி என்னாச்சு

இதை நீ என்னிடம் கேட்கிறாயா அல்லது உன்னிடமே கேட்கிறாயா என்று தெரியவில்லை ஆனால் அழகாகக் கேட்டிருக்கிறாய் கலாம்!

சிந்தும் உழைப்பும் சிறந்த தியாகமே
இந்தியச் சந்தை இழந்த உழைப்பினை
அன்னிய நாட்டவர் அங்கீ கரித்தனர்
தன்னிறை என்பதுஎந் நாள்?

ஆகா நண்பா அருமையான கேள்வி. உன் கவிதைகளுள் பல கேள்விகளாகவே இருக்கின்றன. அந்தக் கேள்விகள் யாவும் தோல்விகளுக்குள் துளையிட்டு வெற்றிக் கொடிகளை ஊன்றுகின்றன. வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்.

ஏக்கம் என்பது
தலைவன் தலைவிக்காகக் காத்திருப்பது
கவிஞன் தலைப்புக்காகக் காத்திருப்பது

என்ற உன் கவிதையை வாசிக்கும்போதே சட்டென்று சிரித்துவிட்டேன். கவிதையை எழுதிவிட்டு தலைப்பைத் தேடும் படலம் தலைவி தலைவனைத் தேடும் படலத்தைவிட பெரியதுதான். ஏனெனில் கவிதை என்பது இதயத்திலிருந்து தானே பொங்கிப் பெறுகி வருகிறது. தலைப்போ தலையிலிருந்து கசங்கிக் கசங்கி வருகிறது. அதனால்தான் இன்றெல்லாம் கவிஞர்கள் தலைப்பை விட்டுவிட்டார்கள் இந்தக்காலப் பெண்களைப்போல.

வாசக் கதவை மூடிவிட்டு
வாசிப்பேன் உன் கடுதாசி
நேசக் கதவை திறந்துவச்சு
நெஞ்சுக்குள்ளே பூட்டிவச்சு

அடடா... வளைகுடா வாழ்வு தரும் பிரிவுகளால் எரியும் மூச்சுகள் அந்தச் சூரியனையும்விட பெருநெருப்புப் பந்துகள்தாம். வளைகுடாக் கடலில் உப்பு அதிகம். இவர்களின் பிரிவு தரும் கண்ணீரே காரணமாய் இருக்கலாம். நண்பா எழுது. நிறைய எழுது. வளைகுடாவில் விளைந்து பெருகும் துயரம் எழுது. உன் எழுதுகோல் வளைகுடாக் கண்ணீரின் வேரறுக்கும் வாளாகலாம்.

இப்படியாய் உன் நூல் முழுவதும் நான் நல்முத்துக்களைக் கண்டெடுக்கிறேன். நட்போடு உன்னை வாழ்த்திப் பாராட்டி மகிழ்கிறேன். எழுது எழுது. எண்ணங்களை இழுத்துப் பிடித்து உள்ளங்களை இணைத்துப் பிடித்து உணர்வுகளை உயர்த்திப் பிடித்து எழுது எழுது.

அன்புடன் புகாரி
நோன்புநாள் 2012






  

No comments: