அணிந்துரை - மலிக்கா - அழகிய கவிதை மலர்கள்

அழகிய கவிதை மலர்கள்

கவிஞர் மலிக்காவின் மனதுக்குள் எப்போதும் மிதந்துகொண்டே இருக்கின்றது ஒரு சுவாரசியம். அந்த சுவாரசியம் அவரின் மனக் குளத்தில் அவ்வப்போது துள்ளித் துள்ளிக் குதிக்கிறது. அது குதிக்கக் குதிக்க உணர்வுகளின் மிருதுவான கரைகளை வருடி வருடி அலையலையாய் எழுந்து வீசுகிறது. அந்த அலைகளைப் பிடித்துப் பிடித்து அதன் நுரைகளைக் குழைத்துக் குழைத்துக் கவிதைகளாக்கித் தன் உயிரின் மடியில் இட்டுக் கொஞ்சுகிறார் கவிஞர் மலிக்கா.

முத்துப்பேட்டையில் பிறந்தார். நான்காம் வகுப்புதான் படித்தார். சின்னஞ்சிறு வயதிலேயே திருமணமும் செய்துகொண்டார். கூடவே வைத்துக்கொள்ளும் உயிர்த் தோழியைப் போல ஒரு மகளையும் பெற்றெடுத்துக்கொண்டார். இன்று துபாயின் பாலைவன மணல் வெளியைக் கவிதை முத்துப் பேட்டையாக்கிக்கொண்டிருக்கிறார். அதை அவர் இப்படிச் சொல்லுகிறார்:

          நான்
          கம்பன்வழி வந்தவளில்லை
          கண்ணதாசன் பேத்தியில்லை
          வாலியின் வார்த்தைகள் கேட்டதில்லை
          வைரமுத்துவின் வாசல் காற்றும் பட்டதில்லை
          ஆனாலும் கவிதை எழுதுகிறேன்

கவிஞர் மலிக்காவின் கவிதைகள் கொத்து மல்லிப் பூக்கள். சின்னச் சின்ன வெண்ணிற இதழ்களால் இதய மொட்டவிழ சிலிர்த்து விரிபவை. சுவாசத்துக்குள் சுகந்தம் ஏற்ற முயல்களாய் தத்தித்தாவி முயல்பவை.

          சன்னலில்லாத வீடு
          இறைவன் தந்த
          சன்னதியின் கூடு

என்று எத்தனை அழகாய் கருவறை வாசத்தைச் சொல்கிறார் பாருங்கள். பனிக்குடம் அதனுள் விளையாடும் பச்சிளம்என்று தொடங்கும்போதே கவிதை, வாசகர்களின் மனதுக்குள் ஒரு வசந்தத்துக்கான பூக்களைத் தூவத் தொடங்கிவிடுகிறது.

          பூவே! உன்மீது
          புகைபடிய வைத்த காற்றை
          கைது செய்யச்சொல்லி-என்
          காதலனை அனுப்பியுள்ளேன்

காலங்கள்தோறும் காதல் கவிதைகள் நம்மைச்சுற்றி ரீங்காரமிடுகின்றன. ஒருநாளும் ஒருவருக்கும் அந்த உயிரிசை அலுப்பதே இல்லை. ஆனாலும் இந்தக் காதல் கவிதையைப் பாருங்கள். ஓர் அழகான காதல் அந்தக் காதலுக்குள் காதலாய்  இயற்கையின் மீதுள்ள உன்னத காதல் அழுத்தமாய்ச் சிறகடித்துப் பறக்கிறது. சுற்றுச்சூழல் சுகாதாரத்தையும் மாசுகட்டுப்பாட்டையும் முதன்மையாக்கிக் காதலிக்கிறது.

என்னைக் கொஞ்சுவது அப்புறம் இருக்கட்டும் முதலில் இயற்கையை நாசம் செய்யும் காற்றைக் கைதுசெய் என்று தன் காதலனை அனுப்பிவைக்கிறாள் காதலி. காற்றைக் கைதுசெய்ததும் அது கூறிவிடப்போகிறது இயந்திரங்களாகிப்போன மனிதர்கள்தாம் குற்றவாளிகள் என்று.

துன்பம் வந்துன் தோள்தொடுமுன்
கண்முன் வருவேன்
உன் தோள்தாங்கி நிற்பேன்
நட்பானதால்

என்று நட்பின் ஆழத்தைக் கவிதையாக்கி கவிஞர் மலிக்கா மெய்சிலிர்த்துக்கொள்கிறார்நட்பின் வலிமைஎன்ற கவிதையில். துன்பம் எல்லோருக்கும் வரும். அதிர்ஷ்டவசமாய் தோள்தரும் நட்பும் எப்போதேனும் அமையக்கூடும். உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்புஎன்பார் வள்ளுவப் பெருமான்.

உடை அவிழ்ந்து விழும்போது அதை உடன் சென்று கட்டும் தன் கரங்களைப் போல நண்பரின் துயரம் தீர்ப்பதே நல்ல நட்பு. ஆனால் துன்பம் வருவதற்கு முன்பே நான் வந்து நிற்பேன் என்று கவிஞர் மலிக்கா உணர்ச்சிவசப்படுவது நெகிழ்ச்சியாய் இருக்கிறது.

வீரம் வென்றது என்ற ஜல்லிக்கட்டு கவிதையில் விலங்குகளின் உயிர்வதை பற்றி கவிஞர் மலிக்கா கண்ணீர்விடுவதும் அதற்காக ஆறறிவைச் சவுக்கால் சொடுக்குவதும் அவரின் கருணை உள்ளத்துக்குச் சான்றாக அமைந்திருக்கிறது.

தெருவோரம் என்ற கவிதை ஓர் அருமையான காட்சியமைப்பு. நறுக்கென்று செருப்பின் ஊசி வறியவனின் கையை மட்டுமல்ல நம் நெஞ்சங்களையும் தைக்கிறது.

காலை மாலை வந்ததும்
சாளரம் வழியே
சரம் சரமாய்க் கவிதைகள் தா

வேண்டும் வேண்டும் என்று கவிதை பாடாத கவிஞர்களே இருக்கமாட்டார்கள். ’காணிநிலம் வேண்டும் பராசக்தி என்று கேட்ட பாரதி மட்டுமல்ல அவனுக்கு முந்தைய கவிஞர்களும் அவனுக்குப் பின் வந்த கவிஞர்களும் வேண்டும் வேண்டும் என்று தன் ஆசைகளையும் லட்சியங்களையும் நிறையவே பாடி இருக்கிறார்கள்.

வீழ்ச்சியுறும் தமிழினத்தில் எழுச்சி வேண்டும்! கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!’ என்று பாடுவார் பாரதிதாசன். ’அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்என்ற கண்ணதாசனின் பாடல்வரிகள் நினைவுக்கு வரலாம். 'ராஜராஜனின் வாளைக் கேட்டேன்! வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்! பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்!' என்ற வைரமுத்துவின் கவிதையும் செவியோரம் ஊஞ்சல் கட்ட வரலாம்.

இங்கே மலிக்காவின் வேண்டும் கவிதை எதை வேண்டுகிறது என்று பாருங்கள். காலை வந்து மாலை செல்லும் சூரியனிடம் சரம் சரமாய்க் கவிதைகளை வேண்டுகிறது. அத்தனை காதல் மலிக்காவுக்கு கவிதைகளின் மேல். சூரியனின் ஒவ்வொரு செய்கையிலும் கவிதையையே அவர் காண்கிறார்.

என்ன பாவம் செய்தேனம்மா என்ற கவிதை இப்படித் தொடங்குகிறது:

          அதிகாலை நேரம்
          சேவலென்ற கோழி கூவவில்லை
          காகங்கள் கூடிக் கரையவில்லை
          கட்டிடங்களுக்கு இடையே
          கதகதப்போடு கிளம்பத்துடித்த சூரியன்

துயாயில் விடியும் காலைப் பொழுதை நம்மூரில் விடியும் பொழுதோடு ஒப்பிட்டு  ஏக்கம் கலந்த வரிகளால் எத்தனை அழகாகக் கூறி இருக்கிறார் பாருங்கள். இந்தக் கவிதையின் கடைசி வரிகளுக்குள் பயணப்படும்போது கட்டிடங்களுக்கு இடையில் எழும் சூரியனைப்போலத்தான் மாறிவிட்டது நம் வாழ்க்கையும் என்று கூறத்தோன்றுகிறது.

துபாயில் சேவல் கூவாதா என்று கவிஞர் மலிக்கா ஏங்கித் தவிக்க, ஆப்பிரிக்க நாடு ஒன்றில் அதிகாலையில் தொல்லையாய் இருக்கிறது என்று கூவும் சேவல்களின் கழுத்தை அறுக்க உத்தரவு இட்டிருக்கிறார்களாம். அதற்கும் ஒரு கவிதை எழுதலாம் கவிஞர் மலிக்கா.

ரகசிய அதிசயம் என்ற கவிதையில்

          முத்தமிடும்போது
          முத்திரைபதிக்க
          முன்னுரை இந்த மூக்குத்தி
 
          காதில் சொல்லும்
          காதல் சங்கதியை
          கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
          இந்தக் கம்மல்
 
என்று தொடங்கி பெண்ணின் ஒவ்வொரு அணிகலனையும் சுவாரசியமாகக் காதலுக்குள் இழுத்திருக்கிறார் கவிஞர் மலிக்கா. மூக்குத்தி, கம்மல், சங்கிலி, வளையல், மோதிரம், கொலுசு என்று எல்லாமே காதலுக்கான மிக அத்தியாவசியத் தேவைகள் என்று வழக்காடுவதுபோல் இருக்கிறது அந்தக் கவிதை.

நகை வேண்டும் என்று ஆசைப்படும் மனைவிமார்களுக்கு அருமையான காரணங்களைத் தொகுத்துக் கொடுத்துவிட்டார். காதல் கணவரால் மறுக்க முடியுயாத காரணங்கள் என்பதுதான் இங்கே சிறப்புக் குறிப்பு :-)

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். படிப்பின் அருமையைப் பற்றி தெரியவேண்டுமா கவிஞர் மலிக்காவிடம் கேளுங்கள் என்று கூறலாம்போலத் தோன்றுகிறது. நீலவானில்என்ற அவரின் கவிதை ஒன்று போட்டிருக்கும் கோலம் அருமையாக உள்ளது.

          புகழ் வந்து சேர்த்த போதும்
          பெரும் வசதிவாய்ப்பு வந்து போதும்
          படிப்பறிவு இல்லையென்றால்
          பத்தாம் பசலியாகக் கூடும்
          பணக்காரனும் படிக்கவேண்டும்
          பாமரனும் படிக்கவேண்டும்

என்று சொல்லிக்கொண்டே செல்லும் கவிதையின் முத்தாய்ப்பு வரிகள் இப்படி வருகின்றன:

          சில்லென்ற காற்றில்கூட
          சிறு சலசலப்பின் சத்தம் கேட்கும்
          நீ படித்துவிட்டு பட்டம் பெற்றால்
          நீலவானில் - உன்
          கால்கள் நடக்கும்

மிகத் துல்லியமான விசயங்களை உணர்வதற்கும் அந்த வானத்தையே ஏறிமிதித்து நடக்கும் வல்லமை பெறவும் படிப்பு மிகவும் அவசியம் என்று கூறி மக்களைப் படிப்பின் பக்கம் இழுக்கும் கவிஞர் மலிக்கா தன் ஏக்கத்தை இங்கே கொட்டித் தீர்த்திருக்கிறார் என்றே கூறத்தோன்றுகிறது.

கவிஞர் மலிக்காவின் கவிதைகளை வாசித்துச் செல்லும்போது என் எண்ணங்களில் அடிக்கடி வந்து ஊஞ்சலாடியது ஐயன் வள்ளுவனின் ஒரு குறள்தான்:

          குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
          மழலைச் சொல் கேளாதவர்

குழலைவிட யாழைவிட இனிமை நிரம்பியதாய்த்தான் இருக்கின்றன கவிஞர் மலிக்காவின் கவிதைகள்.

கவிஞர் மலிக்கா தான் எப்படி கவிதை எழுத வந்தேன் என்று தன்னைத் தானே பார்த்து ஆச்சரியப்படுவதையும், அப்படி ஆச்சரியப்படுவதையே கவிதையாக்கி மகிழ்வதையும் காண்பதே ஒரு கவிதையாய் இருக்கிறது.

சுவையான நூல்கள் ரசிகர்களை இழுந்துவந்து ஆவலோடு வாசிக்கவைக்கும். இதயத்தில் நுரைத்துவிட்ட கவிதையோ கவிஞர்களை விடாப்பிடியாக இழுத்துவந்து வேறு எப்பணியையும் செய்யவிடாமல் அப்படியே அமர்த்தி அதை எழுத வைக்கும். அப்படியான இனிய அவதிகளுக்குள் அடிக்கடி சிக்குகிறார் கவிஞர் மலிக்கா என்று நிச்சயமாக உணரமுடிகிறது.

மலிக்கா பிறந்த முத்துப்பேட்டையின் கடலோரம் உள்ள அலையாத்திக்காடுகள் அலைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய அலையாத்தி மரங்களால் ஆனவை. அலையாத்தி மரங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. பசுமை விரித்த இலைகளால் மட்டுமின்றி நீருக்கு மேலே எட்டிப் பார்க்கும் வேர்களாலும் அவை சுவாசிக்கக்கூடியவை.

அந்த அலையாத்தி மரங்களைப்போல உள்ளத்தின் உதடுகளால் மட்டுமின்றி உயிரின் இழைகளாலும் கவிதைகளையே சுவாசிக்கின்றார் கவிஞர் மலிக்கா.

கற்றவரெல்லாம் கவிதை எழுதிவிடுவதில்லை. கலைஞர், கண்ணதாசன் போல பள்ளிப்படிப்பைத் தொடராத சிலர் அந்த வானத்தையே கவிதை நட்சத்திரங்களால் நிறைக்காமல் விட்டதில்லை. பள்ளிப்படிப்பைக் கைவிட்டாலும் இவர்கள் கற்பதை ஒருநாளும் கைவிட்டதே இல்லை. கலைஞர் தமிழறிஞர் ஆனார். கண்ணதாசன் கவிதைச் சித்தரானார்.

நல்ல நூல்களைத் தேடிப் படிக்கப்படிக்க கவிதைகளின் பயணங்களை நாளும் பொழுதும் பழகப்பழக கவிஞர் மலிக்கா மேலும் மேலும் சிறகசைத்துப் பறந்து தனக்கான கவிப்பொற் கூட்டை வெகு சிறப்பாகக் கட்டிக்கொள்வார் என்ற நம்பிக்கை உறுதிபடுகிறது. அந்த உறுதியில் திளைக்கும் இந்த மனது கவிஞர் மலிக்காவை நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறது.

அன்புடன் புகாரி
கனடா
கோடை 2010







No comments: