பூக்காரிகளின் புகாரி

MohdAppas Rajak கவிஞர் புகாரியா அல்லது பூக்காரியா என்று கேட்டார் என் கவிதை நூல் ஒன்றைக் கண்டுவிட்டு

முதல்வர் Chandra Bose அன்புடன் புகாரி இதுவும் நல்லா இருக்கு. இது தங்கள் அடைமொழிப் பெயராக மாறிப் புழக்கத்தில் வரப் போகிறது என்றார் நகைச்சுவையாக

பூக்காரிகளின் புகாரி என்றால் என்ன என்று யோசித்தேன், இன்னும் மீளவில்லை -:)

உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று எழுதி முகநூலில் இட்டேன்

*

வந்த பதில்களும் தொடரும் சுவாரசியமும்:

Chandra Bose "பூக்காரப் புகாரி" எனச் சுருக்கிப் பட்டம் வழங்கலாம். தமிழ்ப் பூக்களைக் கவிதையாகத் தொகுத்துத் தருவதால்......

Lion Mansure Pm பூக்களின் புகாரி பொருத்தமாய் இருக்கும்

Kulam Rasool தப்பாக போகுமே. வீட்டிற்கு தெரியாது பார்த்துக் கொள்ளுங்கள்.

குலாம் ரசூல் அவர்களுக்கு என் பதில்:

பூக்காரிகளை எங்கு பார்த்தாலும் நான் எந்த அவசர வேலையில் சென்றாலும் சட்டென்று நின்றுவிடுவேன்.

ஏன் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கும் என் மனைவிக்கும் மல்லிகை முல்லை என்றால் கொள்ளைப் பிரியம்.

இந்தப் பூக்காரிகளால் எனக்குக் கிடைத்த ஆனந்த நாட்கள் மிக அதிகம்

(இந்தக் கடைசி வரியையும் வீட்டிற்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவீர்களே)

அன்புடன் புகாரி
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பில் கனவுகளோடு சேர்கிறேன். அதுவரை தமிழ்வழிக் கல்வியே பயின்ற என்னை ஆங்கிலவழிக் கல்வி என்று காய்ச்சி எடுக்கிறார்கள் பேராசிரியர்கள். ஒரு மண்ணும் புரியவில்லை. கண்களில் ஒரே இருட்டு. அப்போது மதியத்திற்குப்பின் ஒரு தமிழாசிரியர் வந்து அழகு தமிழ் பேசுகிறார். நம்புங்கள் மக்களே சொர்க்கம் என்பது செத்ததும் கிடைக்கும் ஏதோ ஒன்றல்ல. இப்படி அவ்வப்போது கிடைக்கும் பாக்கியம்தான்.

அந்தத் தமிழ்ப் பேராசிரியர் மன்சூர் அலி இளயவராகவே இருந்தார். இங்கே எவராவது கவிதை எழுதுவோர் இருப்பர். அவர்களிடமிருந்து நாளை ஒரு கவிதையை எதிர் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அதோடு கவிதை என்றால் என்ன என்பதை விவரித்தும் கூறியிருந்தார்.

உடனே அமர்ந்து ஒரு கவிதையை அன்று மாலையே எழுதினேன். அந்தக் கவிதைதான் இது. அவர் அடுத்தமுறை வகுப்பு வந்ததும் இந்தக் கவிதையை நீட்டினேன். அவரோ அப்படியே சட்டைப்பையில் செருகிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டார். என் பத்தாம் வகுப்புத் தமிழாசிரியராய் இருந்திருந்தால், அப்போதே வகுப்பில் அதை அலசிப் பேசி என்னை மகிழ்வித்திருப்பார். ஏமாற்றத்தோடு விடுதிக்குச் சென்று மௌனமாகவே இருந்துவிட்டு உறங்கிவிட்டேன்.

ஆனால் அடுத்த நாள் பேராசிரியர் மன்சூர் அலி அவர்கள் என்னை அள்ளி அனைத்ததை சொல்லி மாளாது. தன் நூலகம் அழைத்துச் சென்று அத்தனை நூல்களையும் நீ வாசிக்க வேண்டும் என்று அள்ளிக்கொடுத்தார். அப்படி ஒரு ஆசான் எனக்கு அதன்பிறகு கிடைத்ததாகச் சொல்லமாட்டேன். புகுமுக வகுப்பிற்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அது எனக்கு மகா வருத்தம். கவிஞர் வைரமுத்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஓ மன்சூரா நல்லாத் தெரியுமே என்று கூறினார். சந்திக்கலாம் என்றும் சொன்னார். இன்னும் நிறைய என் நினைவுகளை எழுதலாம். அலுவலகம் ஓட வேண்டும் நேரமாகிவிட்டது. 

அன்று என் தமிழாசிரியர் கேட்டதற்காக நான் எழுதிய கவிதைதான் இது.

தமிழய்யா

தீந்தமிழ்ப் பாடங்களைத்
        தித்திக்கப் புகட்டுமெங்கள் தமிழய்யா
நீந்தும் ஆசையை ஏந்திச் சென்றேன்
        நீர்சொன்ன கவியாற்றில் நீச்சலிட
பூந்திடச்சில துணிவுகளைப் புகுத்தி
        எனதாசையையும் வளர்த்துவிட்டீர்
காந்தம்முன் இரும்பாய்நான்
        கவிபுனைய முற்பட்டேன்

பாந்தமாய்க் கவிவடிக்கப்
       பெருந்துணையோ கருத்தென்றீர்
ஆந்தையாய் விழியுருட்டி
       அலசியுமொரு பலனில்லை
ஏந்துக உணர்சிகளென்றீர்
       எங்கிருந்தும் கிட்டவில்லை
சாந்திகெட்டேன் தமிழய்யா
       கவிவருமோ இச்சிறுவனுக்கு

அன்புடன் புகாரி
19760615



தொன்றுதொட்டும்
தொடர்ந்தும்
வீசப்படும்
அத்தனைக்
கந்தகக் கல்லடிகளுக்கும்

தன்
சுவைமிகு
கனிகளையே
பரிசாய்க் கொடுக்கும்

தமிழ்
என் தாய்மொழி


யானை போவது
எனக்குத் தெரியவில்லையா
அல்லது
எறும்புகளை நசுக்குவதுதான்
என் வேலையா?
நவம்பர் 8,2016
அன்புடன் புகாரி
பக்தி இலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு பக்தி மொழி
என்கிறார்கள்

புறநாநூறு
சங்க இலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு வீர மொழி
என்கிறார்கள்

அகநாநூறு காமத்துப்பால்
காதல் இலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு காதல் மொழி
என்கிறார்கள்

வள்ளுவ
அறிவியல் தடங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஓர் அறிவியல் மொழி
என்கிறார்கள்

குறள்வழி அறம் கண்டு
பிரமித்தவர்கள்
தமிழ் ஓர் அற மொழி
என்கிறார்கள்

இப்படியாய்
வாழ்க்கையின்
அத்தனையையும் கொண்ட
தமிழை
அவரவர் கண்கள் போல் கண்டு
போற்றிப் புகழ்கிறார்கள்

குருடர்களும் யானையும்
கதைதான்
என் நினைவில் வருகிறது

தமிழ்
ஒரு முழுமை மொழி

தமிழில் இல்லாதது
தரணியில் இல்லை

அதைத்
தமிழன் அறியாததுதான்
தமிழுக்குத் தொல்லை

அன்புடன் புகாரி
20171113

உறக்கமெனும் மலர்...

கிழக்கிலிருந்து மேற்காக
மேற்கிலிருந்து வடக்காக
வடக்கிலிருந்து கிழக்காக
கிழக்கிலிருந்து தெற்காக

உருண்டு உருண்டு
புரண்டு  புரண்டு
விழுந்து எழுந்து
கவிழ்ந்து நிமிர்ந்து

எப்படிப் படுத்தாலும்
முழு இரவுக்கும்
வருவேனா என்று
முரண்டு பிடிக்கும்
தூக்கம்

அதிகாலை வந்ததும்
எப்படித் துடித்துத் துடித்துக்
கண்களை விரிக்க முயன்றாலும்
விடாமல் உள்ளிழுத்து
விடியல் மடிகளில் புதைத்து
போர்வைக்குள் அள்ளியணைத்து

உச்ச உறக்கமாய்
தேவ தூக்கமாய்
சொர்க்க நித்திரையாய்
மலரும் அதிசயம்தான்
என்ன என்ன?

உறக்கம் என்பதும்
ஒரு மலரோ
அது
சூரியனின் வரவில்தான்
மலருமோ?

அன்புடன் புகாரி
20171113
சமஸ்கிரத மொழிக்கு
இருக்கை கிடைத்து
ஆயிற்று ஆண்டுகள் பல

தோசைக் கல்லில் விழுந்த
பனித்துளிகளின்
உஷ்ஷ்... பயணம் போல
நோயுற்ற வாழ்வே
இன்றும்
சமஸ்கிருதத்திற்கு

என்ன செய்து
கிழித்ததாம் ஹார்வர்டு

வழக்கொழிந்து
போன மொழி
வாய்மொழியாய்
ஆனதா

வாய்நிறைத்துப்
பேசிக் கொண்டாடும்
மக்கள் மொழியாய்
ஆனதா

வணிகம்தானே
இத்தகைய
கல்வி நிறுவனங்களின்
வேர்களும் விழுதுகளும்

அன்புடன் புகாரி

தமிழா
உன்
நாக்கு எனும்
ஈர
இருக்கையைத்
தமிழுக்குக் கொடு
வேறு
இருக்கைகள்
தானே முளைக்கும்
அன்புடன் புகாரி
அ. முத்துலிங்கம்
உலக இலங்கியங்களைத் தமிழில் தமிழ்வாசம் மாறாமல் தரக்கூடிய அற்புத எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
தமிழ் இலக்கியத் தோட்டம் தன் முதல் இயல்விருதை அவருக்குத்தான் வழங்க வேண்டும்.
அவரின் பணி மற்றும் பின்புலங்களைக் கொண்டு பார்த்தால் இத்தனை இடையூறுகளுக்கும் இடையில் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம் ஏராளம்
வாலிபத்தில் அறுத்துக்கொண்ட எழுத்துத் தொடர்பை மீண்டும் ஓய்வுபெற்றதும் ஒரு காட்டுத் தீ பரவுவதைப் போல பற்றிக்கொண்டது அதிசயம் ஆச்சரியம்.
என் ஐயம் என்னவென்றால் எப்படி இந்த மனிதரால், இத்தனைக் காலம் இத்தனை உணர்வுகளைச் சுமந்து கொண்டு, எழுதாமல்.... காகிதங்களில் இறக்கி வைக்காமல் இருக்க முடிந்தது என்பதேு
அவருக்குத் தமிழின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என் சார்பில் எப்போதும் உண்டு
அன்புடன் புகாரி

201708 கதிர் வீசிடும் காலை

நண்பர் ஹனிபா அழைத்தார். நண்பரே என் மகன் இஸ்லாமிய மரபு மாத விழாவில் ஒரு பாடல் பாடுகிறான். அதற்கான மெட்டினை அனுப்புகிறேன் தமிழில் பாட்டெழுதி அனுப்ப முடியுமா என்று கேட்டார். கனடா வந்த நாளிலிருந்தே நண்பர் ஹனிபாவை நான் அறிவேன்.

எப்போது பாடல் வேண்டும் என்றேன். இன்னும் பத்து நிமிடத்தில் என்றார் ;-)

நானோ சிறகுப்பந்தாட சென்றுகொண்டிருக்கிறேன். எப்படி? ஆனாலும் வேண்டுகோளை அப்படியே விட்டுவிட விருப்பமில்லை. கார் ஓட்டிச் செல்லும்போதே சில வரிகளை எழுதி முடித்தேன். அப்படி உருவான ஒரு பாடல் தான் இது.

இதை இசையமைப்பாளர் நண்பர் ஹாஜி அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அவரும் ஒரு புதுத்தனி மெட்டுப் போட்டு அனுப்பி விட்டு. இன்னும் சில வரிகள் எழுதினால் முழுப்பாடலாய் ஆக்கிவிடலாம் என்று பெருந் தூண்டில் போட்டார்.

நண்பர் ஹனிபா கேட்டது நான்கு வரிகள். இப்போது இது எப்படி வளரப் போகிறதோ தெரியவில்லை. எளிமையான இசைக்கு ஏற்ற என் பாடல் வரிகள் இதோ:

கதிர் வீசிடும் காலை
       உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
        உன்னாலே அல்லாஹ்

நல்வாழ்வினில் பேரருள்
        நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
        நீயே அல்லாஹ்

திருவேதம் நபிநாதர்
        தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் தீனுக்கும்
        நீயே அல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹூ அல்லாஹூ
அல்லாஹூ அல்லாஹ்

அன்புடன் புகாரி
அன்று
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறிய
நற்றமிழ் உலகம்

இன்று
நூற்றிப் பதினெட்டு
நாடுகளுக்கும் மேலேறி

கொட்டும் பனிமூடிய
வழுக்குக் கார்ச் சாலைகளிலும்

வெள்ளைச்
சீருடையணிந்த
வைர வேர்ச் சோலைகளிலும்

விரிந்து பரந்து
தமிழ்மூச்சு வீசித்
தளைத்துக் கிடக்கின்றது

இன்னும் பல நாடுகளுக்கும்
தாவிப் பறக்கின்றது

தமிழா தமிழா
தமிழ் நாட்டைவிட்டுப்
புலம்பெயர்ந்த உலகத் தமிழா

தமிழ் நாட்டிலேயே வாழ்ந்தும்
தமிழைவிட்டுப் புலம்பெயர்ந்த
தரங்கெட்டத் தமிழா

நீ சென்றேறி வாழுமிடத்தில்
முற்றித் தடித்த
உன் முதிர்ந்த நாவினில்
மட்டுமின்றி

அங்கு நீ பெற்றெடுத்த
உன் பிஞ்சுகளின்
கொஞ்சு நாவுகளிலும்
ஈர இருக்கை அமைத்துத்
தமிழைக் கர்வமாய்
வீற்றிருக்கச் செய்யும்
நாள் எந்த நாளடா?

புலம்பெயர் நாடுகளெங்கும்
இலவசத் தமிழ் வகுப்பும்
இலவசத் தமிழ் உணவும்
வழங்கப் போகும்
நாளெந்த நாளடா?

அன்புடன் புகாரி
அடுத்தது
என்ன கமல்?

வாக்களித்துவிட்டு
முற்று முழுதாக
மாற்றி நடப்பவர்களைவிட
வந்து விழுந்த
வார்த்தைகளுக்கு
மாற்றி
விளக்கம் சொல்வது
ஒன்றும்
பாவச் செயலல்ல

எவன்
திருத்திக்கொள்ள
முயல்கிறானோ
அவனைக்
கேலி கிண்டலால்
சுற்றி வளைப்பது
அறம் மதியாக்
கீழ்மனிதக் குற்றம்

ஆனால்
திருத்திக்கொள்ளவே
விரும்பாத தலைகளைக்
கொடுங்கோலர்களாய்
எரிக்காத பூமிக்கு
விமோசனமாய் வருவாயா

அடுத்தது
என்ன கமல்?

அன்புடன் புகாரி
20171108
நவம்பர் எட்டு
ஈராயிரத்துப் பதினாறு
இது கறுப்பு நாள்

கறுப்புப் பணத்தை
ஒழித்த நாளல்ல
ஏழை உயிர்களை அழித்த
கொடுங் கறுப்பு நாள்

கள்ளநோட்டுக்களை
எரித்த நாளல்ல
சிறுதொழில் ஏழைகளை
வறுத்து முடித்த
மயானக் கறுப்பு நாள்

திருடர்களைப்
பிடித்த நாளல்ல
இந்தியப்
பொருளாதாரத்தையே
திருட்டுக்கொடுத்த
மையிருள் கறுப்பு நாள்

நவம்பர் எட்டு
ஈராயிரத்துப் பதினாறு
இது கறுப்பு நாள்

அன்புடன் புகாரி
20171108
நிலா ஒன்றுதான்
ஆனால்
நிலவைப் பற்றிய
எண்ணங்களோ
ஒரு நூறு
ஒரு கோடி

இறைவன் ஒருவன்தான்
ஆனால்
அவனைப் பற்றிய
சிந்தனைகளோ
பல நூறு
பல கோடி

ஒவ்வொரு
சிந்தனைக்காகவும்
பக்தக் கண்களில்
இறைவன்
கணக்கற்றக்
கற்பனைப் பிறப்பெடுக்கலாம்
காலங்கள் தோறும்

ஆனபோதிலும்
பொய்யெல்லாம்
மெய்யாகுமா
உண்மைப் பூதலத்தில்

அன்புடன் புகாரி
காலுக்குக் கால்
கங்காருகளாய்த் தாவித்தாவி
கவிழ்ந்துவிழும்
மானமிலா ஈனத் தலைகள்

முதுகெலும்பை ஒடித்து ஒடித்து
கள்ளக் காசுக்கு
வெட்கமின்றிக் கும்பிடுபோடும்
தலையில்லாக் களைகள்
தமிழ்நாட்டின் பிழைகள்

எழவே முடியாமல்
தமிழனின் மானத்தை
முட்டிபோட்டு முட்டிப்போட்டே
முடித்துப்போடும்
இந்தக் கூத்தை
இன்னும்
எத்தனைக் காலத்தில்தான்
மானத் தமிழன்
மீட்டெடுப்பானோ

மின்னலாய் பாய்ந்து
மீசையோடு வாருங்கள்
சேர சோழ பாண்டியத்
தமிழ்க் காளைக் கன்றுகளே

சவுரிமுடித்த
கவரிமான் கூட்டத்தின்
உயிர்நீக்க வாருங்கள்

மயிர்நீப்பினல்ல
தலையே நீங்கப்பெற்றும்
முண்டங்களாய்
நாற்காலிப் பசையில்
ஒட்டிக்கிடப்பதைத்
துடைத்தெறிய வாருங்கள்

அன்புடன் புகாரி
20171106
உன் இறைவன்
என் இறைவன்
என்று
இரு இறைவன்
உண்டென்றால்
ஒரு இறைவனும்
இல்லை

அன்புடன் புகாரி
நேற்று
ஏரிக்குள்
ஏறினான் குடி

மகிழ்ந்தான்
மிதந்தான்
பெருமையில்

இன்று
குடிக்குள்
ஏறியது ஏரி

மூழ்கினான்
மிதக்கிறான்
நீர்விழுங்கி

தலை கெட்டக்
கமலம் இவன்
கூறுகெட்டக் கூவம்

நாற்றத்தின் முற்றத்தில்
நாசத்தின் உச்சத்தில்
சென்னை

அடடா...
அது உன் அன்னை

அன்புடன் புகாரி
20171105
கனடியப் பகல்நேர மாற்றுநாள்
தமிழில்
தமிழாய்த்
தமிழுக்குத்தா
தமிழா

தமிழ்க் கவிஞர்களை
அவர்கள் வாழும்போது
பெட்டக நிலாக்களாகவும்
அவர்கள்மறைந்தபின்
மறையா
நட்சத்திரங்களாகவும்
போற்றிப்
பாராட்ட வேண்டும்

ஒவ்வொரு கவிஞனும்
தமிழின் உயிருக்கு
உரமூட்டும் மகாசக்தி
வாழும்போதும்
மறைந்தபின்னும்

அன்புடன் புகாரி
நீங்கள் ரசிக்கும்
ரசிப்பைக் கண்டுதான்
நான்
என் கவிதைகளை
ரசிக்கத் தொடங்குறேன்
அன்புடன் புகாரி
தமிழ்
ஒரு வானம்

நட்சத்திரங்கள்தான்
அதில் உண்டு

வார்த்தைகள்
இல்லை

அன்புடன் புகாரி
20171120