மீட்கப்படுவார் கடவுள்


சுடர்விட்டு
எரிகிறது கொள்ளி
அணையப் போகும்முன்
ஆரவாரமாய் வெகுண்டெழுந்து

இந்த நூற்றாண்டின்
பாதி நடையிலேயே
மிதிபட்டு மரணிக்கும்
அத்தனை மதங்களும்

இதற்கிடையில்
நவீன மதமென்று
எந்த நாசூக்கு நஞ்சையும்
பிஞ்சுகளின் நெஞ்சில்
நட்டுவிடக்கூடாதே
என்ற கவலையையும்

மூளையைச் செப்பனிட
முப்பத்து முக்கோடி பணிகள்
புத்தம் புதிதாய்ப் பூத்திருக்கின்றன
என்ற ஆறுதலும்
பரிசோதனைக்காக மட்டுமே
இனி மலம் நோண்டுவார்கள்
என்ற உறுதியும்
ஊதித் தள்ளுகிறது

மின்சாரம் நசுக்கிய பேய்கள்
சிரிப்புத்தொடரில் மட்டுமே
சிக்கிக்கொண்டதைப்போல
சித்ரவதைபடப்போகும் மதங்களுக்கு
இப்போதே மத்தாப்பு கொளுத்தி
அனுதாபம் கொண்டாடலாம்

மனித இருட்சிறையிலிருந்து
மீட்கப்படுவார் கடவுள்

வேலையில்லாப் பட்டதாரிகள்


வெறுந்தரையில் விரயமாகும்
விளைநில நீரூற்றுகள்

கல்லூரிச் சந்தைகளில்
வியாபாரக் கலைஞர்களால்
அஞ்சலில் சேர்க்கப்பட்ட
முகவரி இல்லாத
சிபாரிசுக் கடிதங்கள்

பெட்ரோலில் கையலம்பும்
அராபியச் சோம்பேறிகளிடம்
ரியாலுக்கு விக்கலெடுக்கும்
ஒட்டகக் கூட்டங்கள்

இளமை மலர்காய
வீடுநிலம் கைமாற
கல்லூரிக் கட்டிடங்களில்
தூண்களாகவே உருமாறி

மலடான பட்டங்கள் பெற்று
'வேலை காலியில்லை'
அறிவிப்புகளை அவமதித்து
அலுவலகப் படிக்கட்டுகளில்
இரத்தப் பாதங்களைப்
பதித்துப் பதித்து ஓய்ந்து

போதிமர நிழலிலே
படுக்கையை விரித்துவிட்ட
இவர்கள்

இன்று
விழிகளில் விரக்தி வழியத்தான்
அலைகிறார்கள்
எனினும் நெஞ்சில்
கனலைச் சேகரிக்கிறார்கள்

புரட்சிக் கரங்களை உயர்த்தி
நிச்சயம் ஒருநாள் இவர்கள்
எரிமலைக் குழம்புகளாய் எழுவார்கள்

அன்றே நம்
சுரண்டல் மந்திரிகள் எழுதும்
இந்தியாவின் தலையெழுத்துகள்
பொசுக்கப் பட்டு
புதிய அட்சரங்கள் பொறிக்கப்படும்

என்ன கவிஞன் நான்


என்ன கவிஞன் நான்

இங்குதான் எனச்சொல்லி
என் சுட்டுவிரல் தொட்டுவிடாமல்
எங்கெங்கிலுமே
காட்டாறாய்ப் பிரவாகமெடுக்கும்
என் ஆத்மத் துடிப்புகளுக்குச்
சரியான வார்த்தை வடிகால்
தேடத் தெரியாமல்

என்ன கவிஞன் நான்

அறிவே
உள்ளே கனலும் என்
நெஞ்ச எரிமலை
மிகச் சத்தமாய் வெடிக்க
நித்தம் முடிவு வெல்லாத
ஆவேசச் சொற் குழம்புகளை
என்னுள் கொப்பளிக்கச் செய்

இல்லையேல்
வெறித்தனமாய் என்னுள்
எழுந்து எரியும்
அந்த ராட்சசத் துடிப்புகளையேனும்
அணுவளவும் மிச்சமின்றி
தீயச் செய்
என்ன விலை தந்து இந்த இருட்டை
எனக்கே தெரியாமல் நான்
இங்கே அழைத்து வந்தேனோ

இதய இழைகளால் நெய்த
தலையணை தருகிறேன் நான்
படுத்துறங்கும் சுகமில்லை உனக்கு

ஏங்கி நிற்கும் உன் இதயக் கூட்டுக்குள்
நான் எங்கோ சிதைவுற்று
முகமின்றித் திரிகிறேன்

வெற்றுச் சதைப் பிண்டமாய்
வீழ்ந்து கிடக்கிறேன்
இனி நானுன் அடுப்புக்கேனும்
ஆவேனோ அறியேன்

யார் யாரோ அணிவிக்கும்
போலிக் கண்ணாடிகளைக்
கழற்றியெறிந்துவிட்டு என் உள்ளே பார்
உனக்கான உயிரின் நடுக்கம் தெரியும்

அடிமனதில் நேசிப்பே நிறைந்திருந்தும்
அலையோரங்களில் துயரங்களல்லவா
நுரை உமிழ்கின்றன

உன் கனவு மெய்ப்பட நானும்
என் கனவு மெய்ப்பட நீயும்
ரத்தம் கொட்டவும்
தயாராய்த்தான் எழுந்தோம்

பறக்க முடியாத வண்ணத்துப் பூச்சிகளாய்
நம்மைப் படுக்கவைத்துச்
சிரிக்கிறதே பொல்லாத சூழ்ச்சி

உடைந்து ஒட்டவைக்கப்பட்ட
என் கைகளை
தளர்ந்த கால்களோடு குவித்து
நிரந்தர மடி ஏந்துகிறேன்
புதைந்து கொள்ளும் சுகம்
என்றுதான் வருமோ உனக்கு

வாழ்க்கை இனிமையானது


வாழ்க்கை என்ற அரிய பயிர்
கருகியபின் ஓடிவரும்
அழகு நீரோடைதான்
அனுபவமாம்
விரக்தியோடு சொன்னார்கள்
கண்டுணர்ந்தவர்கள்

ஆயினும் என்னைப்
புதுப்பிக்கும் மனத்தோடு
பொறுமையாய்க் காத்திருந்தேன்

கடந்த கணங்களின்
அழுக்குச் சுவடுகளைக்
கழுவிக்கொண்டே நடந்தேன்

முடிந்த துயரத்தின்
இருட்டுப் பிடியிலிருந்து
உயிர்த்தெழும் உர உயிராய்ப்
பூத்தெழுந்தேன்

உச்ச இறுக்கத்தில்
சிக்கிக் கிடந்ததால்
அது வைரம்

தப்புகளும் தவறுகளும்
வாழ்வின் தடங்கள்

அந்த
ஓடுகளை உடைத்துக்கொண்டு
புதிய பிறப்புகள்
மீண்டும் மீண்டும் பூக்கும்

வாழ்க்கை எப்போதும்
வசந்த வரங்களைப்போல
வந்துகொண்டே இருக்கும்

உடல் ஒன்றுதான்
உயிர் பிரியுமுன் வரும்
ஜென்மங்களோ ஆயிரம்

வாசலைத்
திறந்துவைப்போம்
நம்பிக்கை கொண்ட
வாழ்க்கை இனிமையானது

கவிதை கிடைத்துவிட்டது


ஒரேயொரு கவிதையேனும்
எழுதிவிடவேண்டுமென்று
ஒரு கதாசிரியனுக்கு
உயிருறங்காத தாகம்

பிடித்தச் சிறுகதையொன்றை
பிடித்துக் கட்டுகிறான்
கொம்பில்

வாக்கியம் வாக்கியமாய்
உரித்தெடுக்கிறான்
நடுப்புள்ளிவிட்டு
நழுவிய குற்றவாளிகளென்று

வார்த்தை வார்த்தையாய்க்
கத்தரிக்கிறான்
அனாவசியத் தொந்தியென்ற
அவசியத் தீர்மானத்தோடு

எழுத்து எழுத்தாய்க்
கிள்ளியெறிகிறான்
சொல்லிலும் வேண்டுமே
சுருக்கமென்று

வாசித்து வாசித்துத்
துள்ளித்துள்ளி குதிக்கிறான்
கவிதை வந்துவிட்டதென்று

நெடிதாய்க்
காய்ந்துகிடந்த சுடுகாடு
நொடிப்பொழுதில் ஈரமாகிறது

கண்ணீர்


சில நேரங்களில்
சில ராட்சச சோகக் கணைகள்
நம் நெஞ்ச அமைதியை
மிகக் கொடூரமாய்த் தகர்க்கும்

அவை
அநீதி மேலெழும்பும்
மரணக் கணங்கள்

அது பொழுதில்
ஒரே ஓர் அழுகை
நெருப்பில் வீசிய
உப்புக் கல்லைப் போல
மிகச் சப்தமாய் வெடிக்க

நம் விழிகள்
ஒரு சுடு மழையைச்
சுத்தமாய்ப் பொழியுமானால்
ஆறுதல் என்னும் அருமருந்து
பிறர் தயவின்றியே
அதனினும் பூரணமாய்
நம் நெஞ்ச நிலங்களை
அருவி நீரென நனைக்கும்.