01 வாழப் பரிந்துரைக்கும் வண்ணக் கவிதைகள்


கவிதை

உச்சரிக்கும் ஒவ்வொருமுறையுமே
உள்ளக் கிளைகளிலிருந்து
ஆயிரமாயிரம் பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன

உள்ளுக்குள் வாழும் கல்லுக்கும்
சிறகுகள் முளைத்து
உயரே உயரே
எழுந்து எழுந்து பறக்கின்றது

எந்தப் புண்ணியவான் சூட்டியது
இத்தனை அழகுப் பெயரை

கவிதை

உணர்வுகளை
மொழியாய் மொழி பெயர்க்கும்
ஓர் அழியாக் கலை

மொழியின் உயிர்
உயிரின் மொழி

உயிர்த் துடிப்புகளை
அப்படி அப்படியே காலன் தின்னாததாய்ச்
சேமித்து வைக்கும் உயிர்ப் பெட்டகம்

தன்னுள் கிளர்ந்த உணர்வுத் தீயை
துளியும் தணியாமல்
வெள்ளைத் தாள்களில்
பற்றியெரிய வைப்பதெப்படி
என்னும் கடுந்தவிப்பில்
கவிஞன் தன்னையே செதுக்கி
உயிர்ப்பித்த தவம்

சத்திய கவிதைகளில்
சித்தம் நனையும்போது
இளமை துளிர்க்கின்றது
அந்த உயிர் நீடிக்கின்றது

கவிதை

இயந்திரங்கள் மனிதனை இயக்க
பழுதாகும் இன்றைய வாழ்வை
கருணையோடு அள்ளியணைத்துச்
சரிசெய்யும் மருத்துவம்

கற்பனையிலும்
வந்துபோகாத மனித இயல்பைக்
கர்ப்பமாய்ச் சுமந்து
மனித குலத்தின்மீது
மழையாய்ப் பொழிவிக்கும் அக்கறை மேகம்

அதிநுட்ப அறிவியல் விருத்தி
தூரங்களையெல்லாம்
சுருக்கிச் சூறையாடியபோது
கூடவே சுருங்கிப்போன
நம் மனங்களையும்
வாழ்க்கைச் சுவைகளையும்
மலர்த்தித்தரும் சந்தனக் காற்று

இறுக்கத்தின் எண்ணங்களில்
தேங்கித் தேங்கி நிரம்பி வழியும்
விரக்திக் கேள்விகளால்
வெட்டுப்படும் பந்தங்களை
ஒட்டவைக்கும் உயிர்ப் பசை

பொருள்மட்டுமே தேடும் சிறுமை வாழ்வை
ரசித்துச் சுவைத்து வாழும்
அருமை வாழ்வாக்கும் அழகு தேவதை

நாளைகளில் நம்பிக்கை இல்லாக்
கோழைகளாக்கும் இந்த நூற்றாண்டுகளின்
பிரம்மாண்டங்களில்
நால்திசை நாடுகளும்
இடுப்பில் அணுகுண்டுகளைத்
தூக்கி வைத்துக்கொண்டு நிலாச் சோறு ஊட்ட

உலகம்
ஒரு நொடியில் பொடியாகும் அபாயம்
நம் நிழலைக் கிள்ளியெறிந்துவிட்டு
அந்த இடத்தை அபகரித்த
பெருமிதத்தில் மந்தகாசிக்க

விழிகளில் நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப் பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும் அன்புக் கரம்

கவிதை

Comments

இத்தனை அருமையாக கவிதைக்கு விளக்கம் யாருமே கொடுத்ததில்லை. அருமை அருமை
இந்தக் கவிதைதான் நான் வெளியிட்ட முதல் கவிதை நூலில் முதல் கவிதையாக வெளியிட்டது சீனா. உங்கள் பாராட்டுக்கு நன்றி.
nidurali said…
கவிஞர் புகாரி ஒரு மொழியின் உயிர் உயிரின் மொழி . கவிதைக்கு கவிதை எழுதும் வல்லமை கவிஞர் புகாரிக்கு உண்டு. இக் கவிதை காலமெல்லாம் நிலைக்கும்.
கவிதை அருவியில் குளித்து மகிழ்வோம்.
nidurali said…
இந்தக் கவிதைதான் கவிஞர் புகாரி வெளியிட்ட முதல் கவிதையா.நம்ப முடியவில்லை ! விளையும் பயிர் முளையிலே தெரிந்துவிட்டது
Kavina said…
கவிதை

உணர்வுகளை
மொழியாய் மொழி பெயர்க்கும்
ஓர் அழியாக் கலை

மொழியின் உயிர்
உயிரின் மொழி

- அற்புதம் அற்புதம்...
கவிதையை நேசிக்கும் ஒவ்வொருவரும், இந்த கவிதையையும் நேசிப்பார்.
கவிதைக்கே கவிதையா?!

அருமை ஐயா...
Kannan said…
மிக்க நன்று.
Kannan said…
மிக்க நன்று.
RangaSankari said…
புகாரிக்கு அன்புடன்

படித்தேன் புரிந்தேன்
அறிந்தேன் அயர்ந்தேன்
வியந்தேன் வினவினேன்
விடைதேடி எழுதினேன்
இன்று தான் கண்டேன்
இதுவரை எழுதிய எழுத்தை
இனியுன் வாசகி நான்
எனக்குமாய் எழுதுவாயா??
நால்திசை நாடுகளும் இடுப்பில்

அணுகுண்டுகளை வைத்து கொண்டு

நிலா சோறு ஊட்டுகையில் ....நல்ல கற்பனை

உலகை தவிடு பொடியாகும் கொடுமையான தொழில் நுட்பம்

அணு ..கவிதை மதியை குளிரூட்டும் ..

அன்புகவி புகாரி அவர்களின் கவிதையை ,தமிழ் சாண்டோரே

பாராட்டியது யாம் அறிந்ததே ..இருப்பினும் எனது கர ஓசையும் அதில் கலக்கட்டும் ..,
அன்பு கவி புகாரி .

அதிரை நிருபரில் கவிதை விதைக்க

விதை போட்டு நாளாயிற்று ..

முளை விடுமா .துளிர் விடுமா

செடியாகி ..பூ பூத்து குலுங்குமா ..

கவிதை மனம் வீசுமா ..கவிக்காக

காத்திருக்கும் கவி விதைப்போர் கூட்டம்

ஒரு புறம் என்னை போன்ற கவி நுகர்வோர்

மறுபுறம் ..கவியின் கருத்து கண்டு

புளங்காகிதம் கொள்ளவும் கருவை மறுத்து

சொற்போர் செய்யவும் நல்ல களம் காத்திருக்கிறது

வாருங்கள் கவியுடன் பின்னூட்டம் விழி பிதுங்கட்டும்...
ஜமுனா said…
நீண்ட நாட்களுக்குப் பிறகு படித்ததில் பிடித்தது.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ