2- 2- 2015
டொராண்டோவின் பிப்ரவரி மாதம் பனிப்பொழிவுக்குப் பெயர் போன மாதம். அப்போதெல்லாம் மறக்கமல் இக்கவிதையை நான் பகிர்ந்துகொள்கிறேன். ஒவ்வொருமுறையும் அது நேசிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமானதுதான் எனக்கு
டிசம்பர் - ஜனவரி - பிப்ரவரி 2014
2013ல் தான் பனி தன் பணியைத் தீவிரமாகச் செய்தது என்று நினைத்திருந்தேன். ஆனால் 2014 வந்த பனியும் பலிங்கு நீர்ப் பனிப்பொழிவும் சரித்திரம் காணாதது. இங்கே 40 ஆண்டுகாலமாக வாழ்வோரும் கண்டதில்லையாம் இப்படி ஓர் பனிப்பொழிவை.
என்னாச்சு? ஏன் இந்தப் பனித்தாண்டவம்? இனி வரும் வருடங்களின் நிலை என்ன? அச்சம் ஊட்டுவதாகவே இருக்கிறது நண்பர்களே.
பிப்ரவரி 8, 2013 வெள்ளிக்கிழமை
பனி என்றால் உங்க வீடுப்பனி எங்க வீட்டுப்பனி இல்லை. அப்படி ஒரு பனி. டொராண்டோவில் பனிப்புயல் வீசுகிறது.
சாலைகளெல்லாம் புதைமணில் மூழ்கிய யானைகளைப்போல மூழ்கிக்கிடக்கின்றன.
வீடுகளெல்லாம் வெண்ணையில் விழுந்த திராட்சைகளாய் வழுக்கிக் கிடக்கின்றன.
பள்ளிக்கூடம், பேருந்து சேவை, விமான பயணம் எல்லாம் களேபரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளன.
வாகனத்தை எடுத்து ஓட்டினால் அது சாலையில் வழுக்கும் வழுக்கலில் வாழ்க்கை கிடந்து அல்லாடித் தவிக்கின்றது. அடுத்த காருக்கு முத்தமிட ஆவல் கொண்டு அலைகிறது. சிக்னலுக்கு நிற்க மறுக்கிறது. வளைக்கும்போது வேறு திசை பயணப்படுகிறது. பள்ளத்துக்குள் விழுந்து படுத்துக்கொள்ள ஆசைப்படுகிறது. ஸ்டியரிங்கும் டயரும் ஒத்துப் போக மறுத்து விவாகரத்துச் செய்துகொள்கின்றன.
ஆனாலும்.... நான் இப்படி ஓர் பனியை முதன் முதலில் பார்த்தபோது எழுதிய கவிதை நெஞ்சில் அமுதப்பனியைத்தான் இன்றும் பொழிகிறது.
*
அடடா
இது என்ன அழகு
ஆகாயம் பூமி இடைவெளி நிறைத்து
இனிப்பாய் அசையும்
இந்த மல்லிகைப் பூப்பந்தல்
எவரின் உபயம்
வெள்ளிக் காசுகளை அள்ளி இறைத்து
ஒருவரையும் விடாமல்
உயர்த்திப் பாராட்டும்
இது என்ன விழா
பூமிக்கு இது
கீழ் நோக்கிப் பொங்கும்
பனிப் பொங்கலா
நிறங்களில் அழகு
வெண்மையே என்று
தீர்மானம் நிறைவேற்றும்
கலை மேடையா
.
மரக்கிளைகள் எங்கிலும்
பல்லாயிரம் கொக்குகள்
குட்டித்தூக்கம் போட்டுக்
கொண்டாடுவது போல்
ஓர் அழகு
மத்து எங்கோ தெரியவில்லை
ஆனால் மோர் கடைந்து
இங்கு எவரோ
ஒரு யுகத்துக்கே
வெண்ணை திரட்டுகிறார்
வாசலில் மட்டுமின்றி
கண்களிலும்
கண்களில் மட்டுமின்றி
மனங்களிலும்
மனங்களில் மட்டுமின்றி
உயிர்களிலும்
அந்தப்
பனிப் பெண்ணின்
பல கோடி விரல்கள்
எழிற் கோலமிடுகின்றன
.
அனைத்தையும்
அணைக்கும்
கருணைப் பனியே
வெள்ளிக்கிண்ண பூமியில்
பனிப் பால் வார்க்கும்
அன்புத் தாயா நீ
மொத்தமாய்
நீ என்ன
முத்து வியாபாரம் செய்கிறாயா
வெள்ளை இதழ்கள் விரித்து
நீ சிந்தும்
மாபெரும் புன்னகையா இது
மனிதர்கள் யாவரும்
ஓர் நிறமே என்று
சமத்துவம் பேச வந்தாயா
எழுத்தாணியும் தெரியவில்லை
எழுதும்
கவிஞனையும் காணவில்லை.
ஆனால்
பரிசுத்தமான
வெள்ளைத் தாள்கள்
எங்கெங்கிலும்
வந்து வந்து விழுகின்றன
உற்றுப் பார்த்தால்
உள்ளே கவிதை வரிகள்
.
உன்னை
அள்ளி விளையாட
ஆயுள் போதவில்லை
உன் பூப் பந்துகளை எறிய
உள்ளங்களில் எரியும்
உணர்வுகளுக்கு அளவில்லை
உன்னைக் கண்டு
என் அலுவல் மறந்தேன்
காதல் மறந்தேன்
கவிதை மறந்தேன்
ஏன்
என்னையே மறந்து போனேன்
கைகளை விரித்துக் கொண்டு
சுற்றி சுற்றித் திரிகிறேன்
எனினும்
போதுமென்ற மனம் மட்டும்
வரக் கண்டிலேன்
நீயோர் அற்புத ஓவியன்
ஒற்றை வர்ணம் குழைத்து
நீ தீட்டுவது ஒரு வினோதம்
வெள்ளை வயலில்
வைரமணிப் பயிர் செய்து
உள்ளத்துக்கு உணவளிக்கும்
மகோன்னதமே நீ வாழ்க
2 comments:
Arumai ...arumai...I like to read many times.''..வெள்ளை வயலில்
வைரமணிப் பயிர் செய்து
உள்ளத்துக்கு உணவளிக்கும்
மகோன்னதமே நீ வாழ்க..'' me too...
mikka nanry.
Erai asi niraiyaddum.....
Vetha. Elangathilakam.
நீயோர் அற்புத கவிஞ்ர்
நீர் கவிதை தீட்டுவது வினோதமில்லை
என்னையே மறந்து போனேன்
உம் எழில் நடை கண்டு
கண்களில் மட்டுமின்றி
மனங்களிலும் ஒட்டி நிற்கின்றது
உவகையாய் யெடுத்து துறைத்தீர்
உள்ளமதில் மகிழ்வைத் தந்தீர்
உயர்வாய் எண்ணம் கொண்டீர்
உள்ளமதில் உவகைப் பெருக
இவ்வையகம் உவகைப் பெற ஏட்டில் எழுதி வைத்தீர்
இயல்பான நடை கண்டு இரும்பூது எய்துகின்றேன்
Post a Comment