கயிறெடுத்தான் உயிரெடுக்க


உயிரின்
முடிச்சவிழ்க்க
கயிறில்
முடிச்சிட்டான்

சாவைத் தேர்வு செய்ய
வாழ்வே விரட்டுகிறது

தேர்வுதானே
வாழ்க்கை

சாவென்பதும்
வாழ்வென்ற அறிதலோடுதான்
கயிறெடுத்தான் உயிரெடுக்க

இவனைத் தடுக்கும்
மார்க்கமுண்டா உங்களிடம்

பாவச் செயல்
கோழையின் வழி
அவசர முடிவு
சட்டப்படி குற்றம்
நம்பிக்கை வேண்டும்
என்றெல்லாம்
அளந்துகொண்டே போகாதீர்கள்

இதோ கரமென்று
உயிர் காக்காத பூமியில்
இதோ வாழ்க்கை என்று
கயிறு சொல்வதில் தவறில்லை

இருப்பினும்
கயிறெடுத்தவனிடம் கேட்க
என்னிடம் இருக்கிறது
ஒரே ஒரு கேள்வி

நிலம் மாற்றி நட்டாயா
உன் நாற்றுகளை?

பச்சை நிறக் கண்கள்


தம் நிழல்களை
இமைகளாய்க் கொண்ட
பச்சை நிறக் கண்கள்
மனிதநல மேன்மைதனைப்
பொழுதுக்கும்
பார்வையிட்டுக்கொண்டே
காடுகளாய்

தம் சுயநலமே
தாகமாய்க் கொண்ட
குருதிக் கரங்கள்
பச்சை விழி வேரறுக்க
பொழுதுக்கும்
சுற்றியலைந்துகொண்டே
மனிதர்களாய்

21 உயிர்ப்பு


முட்டைக்குள்
கண்மூடிக்கிடக்கும்
குஞ்சு

விதைக்குள்
இலையொட்டிவாழும்
தளிர்

நூலுக்குள்
சிறகு மடித்துறங்கும்
பம்பரம்

மொட்டுக்குள்
இதழ்பூட்டித் துயிலும்
மலர்

காகிதத்தில் எழுத்துப்பெறாமல்
மூச்சுவிடும்
கவிதை

கிழக்கில் வெளிச்சம்மடித்து
மல்லாந்திருக்கும்
சூரியன்

முழுமையற்ற இவையாவும்
வாழ்வெளியில்
அடுத்த கட்டம் தொடாமல்
அடையாளமற்றவைதான்

என்றாலும்...

ஆயுள் முழுவதும்
நினைத்து நினைத்து மீண்டும் புக
இதயத்தைத் துடிக்க வைக்கும்
அற்புத நிலைகள்தாம்
ஐயமே இல்லை

ஆயினும்
முயற்சியும்
முளைவிடும் வலியும்
அதில்வரும் வெற்றியும்தான்
உயிர்ப்பு உயிர்ப்பு உயிர்ப்பு

22 உயிரோடிருக்கலாம்



காதலி மடியில்
அரசியல் வனத்தில்
பக்திக் கடலில்
இலக்கிய வெளியில்
என்று
ஏதோ ஒன்றில்
எல்லாம் அழிய
செத்துப்போ

நாற்பதுக்குப்
பின்னும்
நீ
உயிரோடிருக்கலாம்

39 ஐநாவுக்கும் நைனா


ஐநா அல்ல
ஐயாயிரம் நா சுழன்றாலும்
வல்லரசின்
செவிகளுக்குள்
அழுகுரல்கள்
செல்லவே செல்லாது

ஐநான்னா
அமெரிக்காவுக்கு
அரையணாதான்

அமெரிக்காதான்
ஐநாவுக்கும்
நைனா

43 குடியரசு


இந்தியப் பொய்கையில்
அரசியல் எருமைகள்
நீராடுகின்றன
உரசிக்கொள்கின்றன
முட்டிக்கொள்கின்றன
வீழ்கின்றன எழுகின்றன
இடம்மாறுகின்றன
பாவம்
மக்கள் மீன்களோ
சகதியைச் சுவாசிக்கின்றன

40 என்னோடு பேசாதே


என்னோடு கொஞ்சம்
பேசாமலிருக்க மாட்டாயா?

நான் இந்தத்
தத்துவஞானியின்
உரையைக் கேட்க வேண்டும்
தயவுசெய்து தொல்லை செய்யாதே
அப்படி ஓர் ஓரமாய் ஒதுங்கி நில்

நீ சொல்வதைத்தான்
நான் எப்போதும்
கேட்டுக்கொண்டே இருக்கிறேனே

முக்கியத்தர்களோடு நான்
மூச்சுமுட்ட உரையாடும்போதும்
நரைமுடியைப்போல் நீ
நடுவில் வந்து நிற்கவேண்டுமா

ஏன் அவ்வப்போது
என்னை வேரோடு திருடிக்கொண்டு
நான் சபையில் நிற்கையிலும்
அசிங்கப்படுத்திவிடுகிறாய்

நீ யார்
என் மனதின் நிழலா
அல்லது
மனது ஒளித்துவைத்திருக்கும்
மந்திர மனதா

அவசரத் தேவையில்
நான் அல்லாடும்போது
ஒருநாளும் நீ உடனடி முடிவோடு
என்னிடம் வருவதில்லை

ஆனால்
நான் செய்த தவறை
சகல சாட்சியங்களோடும்
சொல்லிச் சொல்லி என் தலையில்
கொள்ளிவைக்க மட்டும்
முழுச் சக்தியோடு வந்து
நெற்றிப் பொட்டு மேடையில்
சம்மணமிட்டு உட்கார்ந்துவிடுகிறாய்

ஏன் என்னோடு பல நேரங்களில்
பாரபட்சமே இல்லாமல்
முரண்படுகிறாய்

நடந்து முடிந்ததற்கு
நமக்குள் ஒரு வழக்கு தேவையா

என்னைக் குற்றவாளியாக்கி
கூனிக்குறுகச் செய்து
நீ சாதிப்பதுதான் என்ன?

இன்னொரு குரலால்
மறுபரிசீலனைச்
சிந்தனை தொடுக்கும்
நீ என் பலமா

தொட்டதை முடிக்கவிடாமல்
முடித்ததில் திருப்தி தராமல்
அலைக்கழிக்கும் நீ என்
பலகீனமா

என் வெற்றியும் நீ
தோல்வியும் நீதானா?

உள்ளுக்குள் உட்கார்ந்து
நிரந்தர ஆட்சி செய்யும்
என் அதிசயமே

உன்னால்தான்
நான் தனிமைப் பட்டாலும்
அந்தத் தனிமையைச் சுமக்கத் தெம்பற்று
செத்துச் சுடுகாடாகிப்போய்விடாமல்
இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

புலம்பல் ஓர் புண்ணிய நதி


தானே
தனக்காக இசைக்கும்
கண்ணீர்த் தாலாட்டு

மாண்ட மனத்தை
மடியில் கிடத்திக்கொண்டு
மிச்ச மனம்
உதட்டு வாத்தியத்தில்
உயிரைப் பிழிந்து வைக்கும்
ஒப்பாரி

ஆயினும்
புலம்பல் ஓர்
புண்ணிய நதி

அதில் நீராடும்போது
பரிதவித்துப் படபடக்கும்
உயிர்ச் சருகையும்
தீண்ட வழியற்று
கரைகளில்தான்
காத்துக்கிடக்கிறது
மரணத் தீப்பந்தம்

முரண்பட்டுக்கொண்டே


பொன்னாடை போத்தி
கட்டித் தழுவுகின்றனர்
பொழுதுக்கும்

அவர்களோடு
முரண்பட்டுக்கொண்டே
இருக்கும்
எனக்கு

உப்புச் சிறகுகள்
படபடக்க
சங்கடத்தோடு
என் விழிகள்
உள்ளுக்குள்
முகம்பொத்தி
அடித்துக்கொள்கின்றன

என்றாலும்
முரண்படும் நிலைதானே
வெளிச்சவேர் பரப்பி
கிளைவிட்டுத் துளிர்க்கிறது
கவிதையாய்
புரட்சியாய்
வளர்ச்சியாய்...

மெய்ப்பொருள்


வாழ்க்கைக் கவிதைக்குப்
பொருள் விளங்காப்
பொழுதுகளில்
படித்துப்படித்துப்
பெருமகிழ்வு

பொருள் புரிந்த
பிற்பொழுதுகளில்
சுக்கல் சுக்கலாய்க்
கிழித்தெறிய
விழைவு

வாழ்வுக் குமிழைக்
கிழித்ததும்
விளைந்த பொருள்
கண்டு
அமைதியின் கர்ப்பத்தில்
தரிப்பு

வளைகுடா இருட்டில்...


இருட்டில்
உன் நிழல்தேடிக்
காணாமல் தவிக்கிறாய்

ஒவ்வொரு முறையும்
விழிகளில் அடர்த்தியாய்ப்
பூக்கும் கனவுகள்
வந்து சூழும் வரண்ட
பொழுதுகளால்
கருகிக் கருகி உதிர
மிச்சத்தையேனும்
காப்பாற்ற வேண்டுமே
என்ற அச்சத்தில்
அவசர அவசரமாய்
ஓடி வந்தாய்

அன்பும் பாசமும் கூட
விலைப்பட்டியலில்
இடம்பெற்றபின்
காசுதானே இந்தப் பிரபஞ்சம்
என்று உணர்ந்த பின்
அவசர அவசரமாய்
ஓடிவந்தாய்

இன்றோ
இந்த வளைகுடா இருட்டில்
எது இருந்தும்
எது இல்லாவிட்டாலும்
காலைச் சுற்றிக்கிடந்த
உன் நிழல் தேடிக்
காணாமல் தவிக்கிறாய்