சொர்க்கம்

உதட்டில்
மௌனம்
குடியிருக்கும்போது
உள்ளத்தில்
சொர்க்கம்
கட்டப்பட்டுக்
கொண்டிருக்கிறது

புடலங்காய்ப் பந்தல்

காலில் கல்கட்டி
சுமையோடு தொங்கும்
புடலங்காய்கள்

நிமிர்த்தி
வளர்த்தால்தான்
நல்ல விலைக்குப்
போகும் சந்தையில்

இயல்போடு
வளர
புடலங்காய்களுக்கு
வழியே இல்லை

சுமைகள்
நீங்கும்போதும்
சாம்பாருக்குள்
செத்துவிடுகின்றன

மனிதர்கள்தாம்
இப்போது அதிகம்
தொங்குகிறார்கள்
புடலங்காய்ப் பந்தல்களில்

32 யாழ்நிலக் கவிதைகள்


இன வெறுப்பின்
நச்சு விரல்கள் கிளறக் கிளற
நெடிது பொங்கும்
எரிமலைக் குழம்புகளின்
ஊற்றுப் பதிவுகள்

சூழலின் முதலைப் பற்களால்
கடிபடும் மனக்குதிரைகள்
வெறிகொண்டமட்டும்
அழுந்தி அழுந்தி பதிக்கும்
ரணத் தடங்களின்
ரத்த மலர்கள்

37

தமிழச்சி

ஆயிற்று
இருபத்தியோராம் நூற்றாண்டு

இதுவரை இல்லாத் துணிச்சலுடன்
எழுந்து நிமிர்ந்து வீறுநடக்கின்றாள்
தமிழச்சி

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
பழைய ஒட்டடைகள் ஏதேனும்
கவ்விப் பிடித்துக்
கவிழ்த்துவிடாமலா போய்விடும்
என்ற அவலாசையில்
வழமை ஆயுதச்
சொல்வண்டுக் கூட்டங்கள்
சூழ்ந்து சுற்றி
நாரகாசமாய் ரீங்கரிக்கின்றன

ஆனாலும்
ஒற்றைச் சுண்டு நகத்தால்
கிள்ளியெறிந்து நடக்கும்
தமிழச்சியின் திண்மை நடை
அழகாய்க் காட்சிப்படுத்துகிறது
வெகுதூரத்திலில்லை
என்றெண்ணியிருந்த அந்த நாள்
இன்றே புலர்ந்த பெருமிதத்தை

அன்புடன் புகாரி

38 பனிக்கரடி முழுக்கு


அஞ்சு...

டொராண்டோ, கனடா
ஜனவரி 1, 2008 செய்வாய்
உயிரை உறையவைக்கும்
கடுங்குளிர்


நாலு....

ஒண்டாரியோ ஏரி
பனிக்கட்டிகள் மிதக்கும்
சிலீர் நீர்


மூணு....

ஆவிபறக்கும் சுடுநீர் மழையில்
குளித்துவிட்டு வெளிவந்தாலே
போர்வை தேடும் நாட்கள்


ரெண்டு...

கையில் சுடச்சுட சூப்பும்
உடலைச் சுற்றிய
துவாலை ஆடையுமாய்
ஏரியின் கரைகளில்
பலநூறு நீச்சல் வீரர்கள்


ஒண்ணு...

பத்துவயது முதல்
பாதிகிழம்வரை
ஆணும் பெண்ணுமாய்
இதோ இதோ என்று
துடித்துக்கொண்டு


ஓடு....குதி...

துவாலையைத்
தூர எறிகிறார்கள்
சரசரவென்று
ஏரிக்குள் விழுகிறார்கள்

உயிர்
துடியாய்த் துடிக்கிறது

வீல் வீல்
என்ற அலறல்கள்

முங்கு முங்கு
என்ற கூச்சல்கள்

சிலர் முங்க
சிலர் பின்வாங்க
அம்மாடியோவ்...

கரையில்
பல்லாயிரம் டாலர்கள்
வசூல்

உலகில்
சுகாதார நீருக்கு ஏங்கும்
ஏழை நாடுகளுக்கு
இந்த நன்கொடை...

நீர் நன்கொடை

இவ்வாண்டின் பெரும்பகுதி
சூடானின்
நீர்ச் சுகாதாரத்திற்கு...

வாங்க வாங்க கனடாவுக்கு
நாமும் முங்குவோம்...
இது பனிக்கரடி முழுக்கு

http://www.thestar.com/News/article/290378 http://toronto.ctv.ca/servlet/an/local/CTVNews/20080101/Polar_dip_080101/20080101?hub=TorontoHome

ஒவ்வொன்றாய் ஊதியணைத்துக்கொண்டு


ஏணிப் பொழுதுகளில்
இதயம் ஏற்றிவைத்த
பல்லாயிரம் கோடி தீபங்களை
ஒவ்வொன்றாய்
ஊதி அணைத்துக்கொண்டு
இருளின்
கறுத்த உதடுகள்

ஆளுமை அதிகரிப்பில்
இருளுக்கு இணை இருளே

ஒளியை
ஊதி அணைத்துப்
பூரித்துப் போவதில்
எப்போதும் அது ஓர்
பிறந்தநாள் பிள்ளை

இருள் நஞ்சில்
இதயம்
எத்தனைதான்
புதைந்துபோனாலும்
விழிகளென்னவோ
வெளியேறத் துடிக்கும்
வெறியோடுதான்

அணைய மறுத்து
அல்லாடும்
அந்த ஒற்றைத் தீபமே
போதும் உயிருக்கு

மீண்டும்
அத்தனை தீபங்களையும்
ஏற்றிவிடலாம் என்ற
விடாப்பிடி நம்பிக்கையோடு
சாகாமல் கிடக்கும்
தன் உயிர்த் தேடல்களை
உணர்வுகளில் பூட்டிக்கொண்டு