Showing posts with label * * * * * 00 Munnurai. Show all posts
Showing posts with label * * * * * 00 Munnurai. Show all posts

முன்னுரை

இந்த வாரம்
மூன்று கவிதைகள் என்னிடம்
வந்து முட்டின

 நேரமில்லாப் பணிச்சுமையில்
பிறகு எழுதலாம் என்று
என் உணர்வுகளின் தாக்கத்தை
ஒத்திப் போட்டு
அவற்றை
வார்த்தைகளாக்காமலேயே
விட்டுவிட்டேன்

இது
கருக்கலைப்புக்குச்
சமம் என்பதை
நான் உணர்ந்திருந்தாலும்
அதுதான்
காலத்தின் கட்டாயம் என்பதை
புரிந்து

மௌனமாய்
அந்த
ஊர்வலத்தில்
நானும்
நகர்ந்துகொண்டே
இருக்கிறேன்
ஒரு மொழிக்குள் 
இன்னொரு மொழி 
நுழைந்து 
ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும்போது 
அழிவது வெறும் சொற்கள் அல்ல, 
அம்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்ட 
மக்களின் அடையாளங்கள், 
கலாச்சார பண்பாடுகள், 
ஆணி வேர்கள் போன்ற 
ஓர் தொன்மை இனத்தின் 
ஆதார அடிப்படைப் பண்புகள் 
அத்தனையும் என்பதை 
என்று நாம் உணரப் போகிறோம்?
மீண்டும் குரங்காவோம் வா

மனிதக் கண்களுக்கு
கிட்டத்தில் உள்ளவையே
தெரியும்

வாசலில் நிற்பவரைக்
காணக்கூட
இனி
டெலஸ்கோப்தான்

முதுகு வளைந்து
மீண்டும்
மனிதன் குரங்கு

காகித எழுத்துக்களை
வாசிக்கவே முடியாது
கணித்திரை எழுத்துக்களே
கண்களுக்குத் தெரியும்

பேச்சைத்
தொலைத்துவிடுவான்
நாளைய மனிதன்

எல்லாம்
எழுத்துக்கள்தாம்

இப்படியே
தட்டிக்கொண்டே
உக்காந்திருந்தால்
வேறென்னதான் ஆகுமாம் :-)

கணினி
செல்பேசி
தொலைக்காட்சி
தருகின்ற
நவீன வாழ்வில்
மனிதன் மீண்டும்
புராதனக் குரங்கு
நிலம் ஒரு பாகம்
உப்புக் கடல் மூன்று பாகம்
அதுதான் பூமி

இயற்கையின் படைப்பில்
கண்ணீர்தான்
அதிகம்

அந்தக் கண்ணீரில்
நீந்தக் கற்றுக்கொண்டால்
கனவுகளைச்
சுதந்திரமாய் விரிக்கலாம்
கண்களின் திரைகளில்

கண்ணீரில் நீந்தும்போது
கவலைகள்
பின்னுக்குத் தள்ளப்படுகின்றன
வெற்றி கொள்ளும்
ஆனந்தங்கள்
முன்னுக்கு வருகின்றன

நம் கனவுகளில்
நாம் மேலும் மேலும்
முன்னேறிக்கொண்டே இருக்கிறோம்

கைகூடாக் கனவுகள்
கண்ணீரில் கரைந்துபோகின்றன

வசந்த வாழ்க்கை
நம் கைகளைப் பற்றிக்கொண்டு
கூடவே வருகிறது

ஒன்பது ஓட்டைகளால்
கழிவுகளை வெளியேற்றுகிறது உடல்
அதனால்தான்
அது ஆரோக்கியமாய் இருக்கிறது

கனவுக் கழிவுகளை மட்டும்
ஏன் சேகரித்துச் சாகிறது
இதயம்

இதயத்தின்
கோடி வாசல்களையும்
திறந்துவிடுவோம்

தொலைந்து போகட்டும்
தொலைந்தே போகட்டும்
கழிவுகள்
நீரலையைப் போன்று
புத்தம் புது அலை
வேறு எதிலும்
உருவாவதில்லை

ஓர் அலை கரை தொட்டால்
அந்த அலையின் நீர்
அடுத்த அலை புறப்படும்போது
எங்கோ எங்கோ
தொலைதூரம் சென்றிருக்கும்

புது நீரில்
புதிது புதிதாக உருவாகும்
ஒவ்வொரு நதியலையும்
நதிக்கு மட்டும் பெருமையல்ல
நமக்கும்தான்

ஏனெனில்
அது ஒரு
வாழ்க்கை ரகசியம்

வாழ்வின்
இன்ப அலையோ
துன்ப அலையோ
இடைப்பட்ட அலையோ
யாவுமே புத்தம் புதியனதான்

பழையது என்ற
நம் எண்ணம்தான்
உண்மையில் பழையது
ஆயிரம் வேர்கள்

ஒரு
மரத்துக்கு மட்டும்
ஆயிரம் வேர்கள் அல்ல
ஒரு
மனிதனுக்கும்
ஆயிரம் வேர்கள்தாம்

வாய்மொழி
வட்டாரமொழி
தாய்மொழி
மரபணு
மரபு
இனம்
குடும்பம்
சமூகம்
மார்க்கம்
தெரு
பிறந்த ஊர்
வளர்ந்த ஊர்
படித்த ஊர்
வாழ்ந்த ஊர்
தாய்நாடு
புலம்பெயர் நாடு
உலகம்
பிரபஞ்சம்

இன்னும்
இன்னுமாய்...
இவை
அத்தனையும்
நெஞ்சு விம்மிப்
பெருமைப்படத்
தகுதி மிகக் கொண்டனதாம்

இவற்றுள் எதுவும்
குறைவும் இல்லை
உயர்வும் இல்லை

அனைத்து வேர்களாலும்
ஆனவனே மனிதன்

இன்னும்
கோடி கோடி
இலைகளையும் கிளைகளையும்
பரப்பிச் செல்பவனே
மனிதன்

துக்கப்படவா வாழ்க்கை

எவ்வழி விரைந்தும் எப்படியேனும்
எட்டிப் பிடித்துக்
கட்டி வைத்துக் கொள்ளல் வேண்டும்
நம்முடனேயே
நமக்குப் பிடித்த யோகங்களை

அன்றி
துக்கப்படவா வாழ்க்கை?

நம்
சந்தோசங்களைக் கொய்ய
நம்மைவிட வேறுயார்
வான்முட்ட
எகிறிக் குதிப்பர்

நம் மகிழ்ச்சிகளை
நாமே மறுக்கும் பாசாங்கு நிலை
பேரவலமல்லவா

இன்றே
இப்பொழுதே
இன்பம் துய்த்து
வாழ்வதே வாழ்க்கை

நாளை என்பது 
உயிரின் தத்துவத்தில்
இல்லவே இல்லை

நேற்றுகளைப்
பாடங்களாக்கி
இன்றுகளை
பரிட்சைகளாக்கி
வென்று வாழ்வதே
வாழ்க்கை
மயான பூமி

நல்ல
உள்ளங்களின்
மெல்லிய
உணர்வுகளைக்
கள்ளமாய்ப்
பயன்படுத்திக் கொள்ளும் 
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்


முரண்கள்

உலகப் புகழ்
மல்லிகைப்
புன்னகைகளுக்குள்
ஒளிந்து கிடக்கின்றன
ஒரு கோடி ரகசியங்கள்

படைத்தவனையே
அடித்து நொறுக்கும்
வசீகர விழிகளில்
கிழிந்து வழிகின்றன
விழிநீர்ப் பேரருவிகள்
...
மென்மையிலும் மென்மை
உண்மையிலும் உண்மை
கருணையிலும் கருணை
கொண்ட இதயங்கள்
எவர்க்கும் தாங்கவியலா
வலிகளைத்
தாங்கிக் கிடக்கின்றன

இணையத்தில் 

என்னைக் கடந்த சில வரிகள்
என்னை இந்த
வரிகளாக்கிப் போயின

பிரியாவிடை

கிட்டத்தட்ட இதுதான் என் முதல் புதுக்கவிதை என்று சொல்லவேண்டும். இதை நான் புதுக்கவிதை எழுதுவதாய் நினைத்து எழுதவில்லை. ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பினை முடிக்கும்போது நண்பர்கள் எல்லோரும் ’ஆட்டோகிராப்’- நினைவுப்பதிவு கேட்டார்கள். என் மனம்போன போக்கில் சுருக்கமாக நான் எழுதிய நினைவுப் பதிவுதான் இது

பிரியாவிடை

நெஞ்சைப் பிளந்தேன்
நினைவில் புதைத்தேன்
நீலவிழி நித்திரையில்
நீ வருவாய்
நான் மலர்வேன்

இனியுன்
நெருப்புச் சிவப்புவிழி
நீர் துடைத்து
நீ நடப்பாய்
என் இனிய நண்பா

தீவிர இறைப்பற்று

தீவிர இறைப் பற்று என்பது நல்ல விசயம்.

இறையின் மீது தீவிர பற்று இருந்தால்
அன்பின் மீதும்
அமைதியின் மீதும்
கருணையின் மீதும்
மன்னிப்பின் மீதும்
தீவிர பற்று இருக்க வேண்டும்.

ஏனெனில்
அவையாக இறைவன் இருப்பதாகத்தான்
அனைத்து வேதங்களும் சொல்கின்றன.

எந்த வாழ்க்கையும் புதிய வாழ்க்கை இல்லை

எந்த வாழ்க்கையும்
புதிய வாழ்க்கை இல்லை.
எல்லா வாழ்க்கையும்
முன்பே வாழப்பட்டவைதாம்

எந்த மனிதரும்
புதிய மனிதரில்லை
எல்லா மனிதரும்
முன்பே பிறந்தவர்கள்தாம்

சிந்தனை ஓர் எல்லைக்குட்பட்டது


சிந்திக்காமல் ஒரு விஷயத்தை நம்புவது வாழ்க்கைக்கு எப்படி தேவையானது ஆகும்?


 
சிந்திக்காமல் என்று ஒரேயடியாய் சொல்லக்கூடாது, சிந்தனை என்பது ஓர் எல்லைக்குட்பட்டது. அதைத்தாண்டி வருவது நம்பிக்கை.

பிறந்ததும் நம்மிடம் இருப்பது நம்பிக்கைதான்.
நம்பிக்கையில்தான் தாயின் பாசத்தைக் காண்கிறோம்
பின் வளர்ந்து நம்பிக்கையில்தான்
ஒரு பெண்ணோடு காதல் கொள்கிறோம்
ஒரு நம்பிக்கையில்தான் நட்பு
இப்படியாய் வாழ்வில் எல்லா நிலைக்ளிலும்
நம்பிக்கையே மின்நிற்கும்
இறுதியாய் நாளை உயிரோடிருப்போம் என்ற
நம்பிக்கையில்தான் வாழ்க்கையே

எத்தனை சிந்தித்தாலும் சரி
வாழ்க்கை என்பது நன்பிக்கைக்குத்தான் வசப்படும்

ஒரத்தநாடு - நான் பிறந்த ஊரு


தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.

தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

வானூறி மழை பொழியும்
     வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
     தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
     கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
     பசியாறும் உரந்தையில்..... நான் பிறந்தேன்.

நெஞ்சிலும் தோளிலும் உரம் மிகுந்தவர்களின் நாடு உரத்தநாடு என்று சொல்வார்கள். சரபோஜி மகாராஜாதான் ஒரத்தநாட்டை ஆண்ட மன்னர்.

ஒரத்தநாட்டின் ராணி முத்தம்பாள் தன் உயிரைத் தந்து ஒரு புதையல் எடுத்ததாகவும், அதைக்கொண்டு 40 அன்ன சந்திரங்களை மன்னர் நிறுவியதாகவும் சொல்வார்கள்.

அதனால் ஒரத்தநாட்டிற்கு முத்தம்பாள் சத்திரம் என்றும் பெயருண்டு. அந்தக் காலத்தில் ஒரத்தநாட்டுச் சத்திரத்தில் வந்தோருக்கெல்லாம் இலவச உணவு உண்டு.

தற்போது அது ஏழை மாணவர்கள் படிப்பதற்கென்று மாற்றப்பட்டுவிட்டது. அதாவது எந்த செலவுமே இல்லாமல் பள்ளிப்படிப்பை ஏழை மாணவர்கள் இங்கே முடிக்கலாம்

சரபோஜி மகாராஜாவின் அரண்மனையில்தான் நான் என் பள்ளிப்படைப்பை முடித்தேன். அரண்மனையின் சுவர் முழுவதும் நிறைத்த மகாராஜாவின் படம் இப்போதும் கம்பீரமாக அங்கே இருக்கிறது. அது பதினோராம் வகுப்புக்கான வகுப்பறையும்கூட

போர் வீரர்கள் பயிற்சிபெற்ற இடம்தான் எங்களுக்கு விளையாட்டு மைதானம்.

அரணமனைக்கு அருகே தெப்பக்குளம் இருக்கும். மகாராணி நீராடிய இடம்.

ஊரின் இருபக்கமும் இரண்டு பெரும் அரசுத் தோட்டங்கள். கீழத்தோட்டம் மேலத்தோட்டம் என்பார்கள்.

கீழத்தோட்டத்தில் மாட்டுப்பண்ணை கோழிப்பண்ணை என்று சில பண்ணைகள் உண்டு. எனவே விலங்கினங்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் மூன்றாம் ஆண்டு முழுவதும் எங்கள் ஊரில்தான்.

பல ஊர்களிலிருந்தும் பாலும் முட்டையும் கோழியும் வாங்க ஒரத்தநாடு வருவோர் பலருண்டு.

மேலத்தோட்டம் என்பது அருமையான இடம். உயரமாக புற்கள் முதல் பெரும் மரங்கள்வரை வளர்க்கப்படும்.

ஊருக்குச் சற்று வெளியே ஓடுவது கல்யாண ஓடை காவிரியிலிருந்து பிரிந்து பிரிந்து வந்து ஓடும் சிற்றாறு

ஒரத்தநாட்டைச்சுற்றி ஏகப்பட்ட கிராமங்கள் உள்ளன.

ஒரத்நாடு தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 21 கிலோமீட்டர்கள்தான்.

எனவே என் ஊர் என்று தஞ்சையை அழைத்து என் நான்காம் தொகுப்பில் நான் எழுதிய கவிதை இது:

என் மண்ணில் விழுந்ததும் நான் அழுதேன் அழுதேன். ஏன் அழுதேன்? என் ஊரில் என்னை இறக்கிவிடாமல் இதுவரை ஏனம்மா உன் வயிற்றிலேயே பூட்டிவைத்திருந்தாய் என்ற கோபத்தில் இருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது என் ஊரில்?


வானூறி மழைபொழியும்
.      வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
.      தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி
      கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
     பசியாறும் தஞ்சாவூர்

தேரோடித் தெருமிளிரும்
     திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
     மதமோடி உறவாடும்

வேரோடிக் கலைவளரும்
      விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
.     பொன்னோடும் தஞ்சாவூர்

சேறோடி நெல்விளைத்து
      ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
     கண்ணோடிக் கறிசமைத்து

நீரோடி வளர்வாழை
       நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
      விண்ணோடும் தஞ்சாவூர்

வாய்மணக்கும் வெத்திலைக்கும்
       வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
       கைமணக்கும் பட்டுக்கும்

சேய்மணக்கும் சேலைக்கும்
       சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
       தரம்மணக்கும் தஞ்சாவூர்

தலையாட்டும் பொம்மைக்கும்
      அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
      சிலைகாட்டும் சோழனுக்கும்

மழைகூட்டும் மண்ணுக்கும்
      பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
      எழில்காட்டும் தஞ்சாவூர்

கனடாவில் தமிழனின் புலம்பெயர் வாழ்வு


நம்மூர் வாழ்க்கை மாட்டுவண்டியைப் போன்றது. இரண்டு மாட்டை வாங்கிப் பூட்டிவிட்டால் வண்டி தானே ஓடிக்கொண்டிருக்கும். கனடிய வாழ்வென்பதோ மிதிவண்டியைப் போன்றது. ஒவ்வொரு முறையும் உயிரழுந்த உயிரழுந்த மிதிப்பதை நிறுத்தினால் அந்த நிமிடமே நாம் மரண மிதிபடுவோம்.

உண்மைதான், பலருக்கும் இங்கே உறங்கவும் பொழுதின்றி இருபணி முப்பணியென்று செக்குப்பிராணி வாழ்க்கைதான். கிரடிட் கார்ட் என்பதை எவரும் பிழையாக மொழி பெயர்க்காதீர்கள் கடனட்டை என்பது தவறு கடவுள் அட்டை என்பதே சரி. அது இல்லாமல் கோவில் உண்டியலில் விழுந்த செல்லாக்காசுதான் கனடிய வாழ்வு.

படிக்கத்தான் அனுப்பினோம் மகனை பள்ளியில் சேர்ந்த ஒராண்டுக்குள் மகனே இல்லை என்றாகிவிட்டது மருந்துக்கு விருந்தாகி மறைந்தே போனான். பெண் பிள்ளைகள் மட்டுமென்ன ஆளுக்கு நாலு காதல் வீசி எட்டுபேரைப் புதைத்துவிடுகிறார்கள். உண்மைதான், பிள்ளைகளை நம் பண்பாட்டுக்குள் கட்டிவைப்பதென்பது நயாகராவை முந்தானையில் ஏந்துவதைப் போன்றதுதான். தமிழனின் அடுத்த சந்ததியை அழித்தெடுக்க மிகுந்த கவர்ச்சிகாட்டி நிற்கிறது மேற்குலகக் கலாச்சாரம்.

குளிரும் இங்கே கொடுமைதான். உடம்பைக் கனக்கவைத்து உயிரை உறையவே வைத்துவிடுகிறது.

ஆகவே இந்தப் புலம்பெயர் வாழ்வென்பது தேவைதானா என்ற கேள்வி எழுவது உண்மைதான். குளிர் குதறிக் கிழிக்க, வேலை விழிக்குள் விரலாட்ட, வருமானம் முகத்தில் கரிபூச, பிள்ளைகள் உயிரில் ஆணியடிக்க இந்தப் புலம்பெயர் குடும்ப வாழ்வு தேவைதானா என்ற கேள்வி நியாயமானதுதான்.

ஆனால், ஒரே ஒரு கேள்வி உங்களிடம் உண்மையா இல்லையா சொல்லுங்கள். தமிழ் ஈழம் இலங்கையில் மலரப்போவது நாளை இன்றே மலர்ந்திருப்பது கனடாவில் உண்மையா இல்லையா சொல்லுங்கள்.

உழைப்பிருந்தால்தானே எங்கும் பிழைப்பிருக்கும் நல்ல உழைப்பிருந்தால் கடவுள் அட்டை உன் கட்டைவிரலாகாதா?

உன் வீட்டில் தமிழிருந்தால் தமிழ்ப்பிள்ளை எப்படித் தடம்மாறும்? தமிழ் வெறும் மொழியல்ல தமிழா கற்புமிக்க பண்பாட்டின் பாடசாலை கலையாத கலாச்சாரத்தின் அடையாளம்.

தமிழர்தம் உடலின் உள்ளே திரண்டோடும் இரத்தம் தமிழாக வேண்டும். தமிழர்தம் விழியின் உள்ளே திரையேறும் கனவும் தமிழாக வேண்டும். தமிழர்தம் உள்ளத்துள்ளே
தினமோடும் எண்ணம் தமிழாக வேண்டும். தமிழர்தம் உயிரின் உள்ளே துடிக்கின்ற துடிப்பும் தமிழாக வேண்டும்.

நம் புலம்பெயர் வாழ்வில் நான் மிகப்பெரும் தவறென்னு எண்ணுவது ஒன்றே ஒன்றைத்தான். ஊரில் என் விடலைப்பருவத்தில் கவிதை கவியரங்கம் கருத்தரங்கம் பட்டிமன்றம் என்பன வருகிறதென்றால் தமிழ் கேட்டு நெகிழ உருக உள்ளமும் உயிரும் உயர கேளிக்கைகளை எல்லாம் துறந்து ஓடிச்சென்று செவி விரித்துக் காத்துக்கிடப்பேன். எங்கே அந்த இளைஞர்கள் இங்கே? இளைஞர்களைத் தமிழின்பால் ஈர்க்காமல் புலம்பெயர் வாழ்வு புழுதிவாழ்வாகித்தான் போகும். நாம் அவர்களின் பக்கம் திரும்புவதாக அவர்கள் தமிழின் பக்கம் உருகுவதாக இந்த மேடைகள் அமையவேண்டும். இதுவே இன்றைய என் உறுதியான வேண்டுகோள்.

அடுத்தது குளிர். நெஞ்சில் நெருப்பிருந்தால் கொடும் பனியும் கொடிய குளிரும் உன்னைக் கும்பிட்டு விலகாதா? எதையும் தாங்கும் இதயம் கொண்ட தமிழனை குளிர் வவ்வால் கொன்றா போடும்? என் முதற்பணி நேர்காணலில் நிறுவன அதிபர் இத்தாலியர் கேட்டார் பனியிங்கே கொல்லுமே வாழ முடியுமா உன்னால்? நொடியும் தாமதிக்காது குரலுயர்த்திக் கேட்டேன் உன்னால் இயலுமென்றால் என்னால் இயலாதா? மறுபேச்சின்றி அப்பொழுதே பணியொப்பந்தம் கையெழுத்தானது.

ஈழத்தமிழா, பிறந்த மண்ணை உயிர்முத்தமிட்டு ஈர உதடுகளில் இரத்தம் கசியக் கசிய தாய் நாட்டைவிட்டு விதி விரட்டிய திசைகளெங்கும் சிதறி ஓடும் அவலத்துக்கு ஆளானாய் நீ. ஆனால் வந்த இடம் எப்படி? சொர்க்க பூமியல்லவா?

லஞ்சம் ஊழல் சாதிவெறி மதவெறி அழுகல்-அரசியல் கற்பழிப்பு கிட்னி திருட்டு என்று தாய்மண்ணின் சீர்கேடுகளைப் பட்டியலிட்டு நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளத் தேவையில்லை.

ஏற்றத்தை நோக்கியதொரு மாற்றம் புலம்பெயர்பு புலம்பெயர்வின்றி சிறு புல்லுக்கும் வளர்ச்சியில்லை. புலம்பெயர்வென்பது இன்று நேற்று நிகழும் செயலல்ல. அன்று புலம்பெயர்ந்ததைப் பாடி எத்தனை எத்தனை பாலைத்திணைப் பாடல்கள்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி பாடினான் ஆனால் கனடாவுக்கும் ஊருக்குமே இன்று பாலம் வந்துவிட்டது புலம்பெயர்வுகளைப் பூசைக்குரியதாய் ஆக்கிவிட்ட ஆகாயப் பாலம்.

திரையில் வந்த புலம்பெயர்வுப் பாடல் ஒன்று என் கண்களை உருக்கித் திரவமாக்கியது.

விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்

அந்த அழுகையையும் கண்ணீரையும் கருணையோடு துடைத்து பஞ்சு மஞ்சம் தந்த சுவனம் இந்த நாடு.

இரவும் உறங்கிப்போகும் இரவுகளில் உறங்காத இருபத்துநாலு மணிநேர தமிழ் வானொலிகள். தமிழ்த் தொலைக்காட்சிகள் தமிழ்ச் செய்தித் தாள்கள். தமிழிலேயே பேசலாம் என்ற வழக்காடு மன்றங்கள். 'வருக வருக' என்று முகப்பில் தமிழில் வரவேற்கும் கனடா தேசக் கோபுர நுழைவாயில் என்று இப்படியாய் எத்தனை எத்தனை அடுக்கலாம்.

நம்மூரில்கூட அவசரப்பிரிவுக்கு ஐசியூ என்றுதானே எழுதியிருக்கிறார்கள் ஆனால் கனடாவில் அழகு தமிழிலல்லவா எழுதியிருக்கிறார்கள்.

வாரம் தவறாமல் எங்கோ ஓர் இடத்தில் கலீர் கலீர் எனக் கேட்கும் சலங்கையொலி. கொட்டும் பனியிலும் முத்தமிழ் விழாக்கள், பட்டிமன்றங்கள் கவியரங்கங்கள், புத்தக வெளியீடுகள் பழைய மாணவர் சங்கங்களின் கூட்டங்கள்.

கவிப்பேரரசு முதல் ஆச்சி மனோரமா வரை அனைவரும் வந்து தமிழ்மண் வாசணையை இதயத்தில் கொட்டிவிட்டுச் செல்கிறார்களே?

சொல்லுங்கள், ஈழத்தமிழர்களுக்கு கனடா இரண்டாவது தாயகமா? முதலாம் தாயகமல்லவா முதன்மைத் தாயகமல்லவா? அகதிகளாக வாழாமல் குடிமக்களாய் வாழும் வாழ்வு எத்தனை ஏற்றம்?

ஆனால் இங்கே சிலர் என்ன செய்கிறார்கள்? புலம்பெயர்ந்தது வாழ்வு தேடியல்லவா ஆனால் வீழ்ந்துபோகவே எண்ணம் கொண்டு தங்கள் குழிகளைத் தாங்களே வெட்டிக்கொள்ளும் கேடுகெட்ட மண்வெட்டிகளாய் ஆகிப்போனார்களே இங்கே சிலர்.

புலம்பெயர்ந்த தமிழா உனக்கு ஏனடா ஏக்கே 47. அதோபார் உன் அம்மா அப்பா உன்னால் தனித்து விடப்பட்டு மன அழுத்தத்தால் மடிந்துபோகிறார்கள். அழிந்துபோக மட்டுமே ஆசைப்படும் தமிழனே கேள். இது கருணை மிக்க நாடு நல்ல மக்களைக் கொண்ட சொர்க்க பூமி. இங்கே உன் பாவங்களைக் கழுவிக்கொள். மனிதனாய் இனியாவது வாழப் பழகு. தமிழையும் தமிழினத்தையும் தரணி மேடையில் வெட்கித் தலைகுனியச் செய்யாதே. இந்தக் கருணைக் கனடாவில் தரமான உயரினம் நம் தமிழினம் என்று காட்டு.

புதைத்ததும் புதைந்ததும் போதும் போதுமடா தமிழா. பண்பும் புகழும் பாரம்பரியத் தமிழ் அறமும் மீட்டெடுப்பொம் வா.

தமிழ் அடையாளம் தொலைத்துவிட்டு வாழும் தமிழனை தமிழ் மண்ணிலும் காண்கிறேன் புலம்பெயர்ந்த மண்ணிலும் காண்கிறேன். தமிழ் அடையாளம் தொலைக்காமல் ஆண்டாண்டு காலமாகப் புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் உண்மைத் தமிழர்களையே நான் என்றும் போற்றுகிறேன். எங்கே வாழ்கிறோம் என்பதைவிட நாம் எப்படி வாழ்கிறோம் என்பதே நம் அடையாளத்தைத் தக்க வைக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே தமிழனின் பண்பாடு.

ஒரு மனிதன் புலம்பெயரும் போது தன் விழுதுகளைத்தான் பரப்புகிறான். அவன் வேர்கள் தான் பிறந்த மண்ணில்தான் அழுத்தமாகக் கிடக்கின்றன. ஒருவனின் தாய் எப்படி மாற்றப்படமாட்டாளோ அப்படித்தான் பிறந்த இடமும்.

தாய், மண், பண்பு என்ற அடையாளங்களோடு போகுமிடத்தில் கிளை பரப்புவதும் இலை விரிப்பதும் கலாச்சாரக் கலப்பு கொள்வதும் சிறந்த பண்புகளை ஏற்றுக்கொள்வதும் இயல்பானது உயர்வானது.

புலம்பெயர்வு என்பது பிழையல்ல அது ஓர் உயர்வு. ஒரு பெண் பிறந்த இடத்திலிருந்து தன் புகுந்த வீட்டிற்குப் புலம்பெயர்கிறாள் அவள்தான் உன் தாய். ஓர் உயிர் கர்ப்பப்பையிலிருந்து பூமிக்குப் புலம்பெய்கிறது அதுதான் நீ.

மனிதன் முதலில் ஆப்பிரிக்காவில் பிறந்தான் பின் எங்கும் புலம்பெயர்ந்தான் என்கிறது சரித்திரமும் அறிவியலும். பறவைகள் புலம்பெயர்ந்த வண்ணம் இருக்கின்றன. அவை பொருளுக்காகவா புலம்பெயர்கின்றன? வாழ்விற்காகப் புலம்பெயர்கின்றன. வாழ்விற்காகப் புலம்பெயர்வதில் தவறே இல்லை.

மனித வாழ்வில் எது மிக மிக அவசியமானது? சாதி, மதம், இனம், மொழி, மண் என்ற எதுவும் இல்லை மனிதம்... மனிதம் மட்டும்தான் தமிழா.

இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தந்த மகாத்மா காந்தி புலம்பெயர்ந்து வாழ்ந்தவர். இந்தியப் பெண்ணாகவே மாறிவிட்ட சோனியா காந்தியும் புலம்பெயர்ந்தவர். தேம்பாவணி வீரமாமுனிவரை அறிவீர்கள் அவர் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்ததோடு தன் பெயரைத் தமிழ்ப்பெயராகவே மாற்றிக்கொண்டவர்.

அன்னை தெரிசா எந்த நாடு அவர் ஏன் புலம்பெயர்ந்தார் காசுக்காகவா புகழுக்காகவா பாதுகாப்பிற்காகவா? அவரின் ஆத்மா கருணைமிக்க அந்தப் புலம்பெயர்வில்தானே துடித்துக்கொண்டிருந்தது.

நீர் தன் புலம் பெயராமல் உலகுக்கு மழை இல்லை. பயிர் தன் புலம் பெயராமல் மக்களுக்குச் சோறு இல்லை. நதி தன் புலம்பெயராமல் கடல்சேர வழியில்லை. புலம்பெயராத மரங்கள்கூட தங்கள் விதைகளைப் புலம்பெறச் செய்துவிடுகின்றன.

அந்தக் காலத்தில் வந்த சுனாமிதான் பூம்புகார் மக்களைப் புலம்பெயரச் செய்தது. இலங்கைத் தீவு இந்தியாவிலிருந்து கடலால் புலம்பெயர்க்கப்பட்டிருக்கலாம். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புலம்பெயர்வு என்பது நிகழும் அது இயற்கையின் விதி. அகிலமெங்கிலும் நிகழும் அயராத புலம்பெயர்வுகளே மனிதனையும் மனிதநேயத்தையும் இயமத்தில் ஏற்றும் வல்லமை கொண்டவை என்று கூறி விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்

(பிப்ரவரி 16, 2008ல் கனடா எழுத்தாளர் இணையம் ஏற்பாடு செய்த அரங்கத்தில் பேசியது)

8 பண்பாடு கலாச்சாரம் நாகரிகம்


தனிமையிலும் மனதிலும் ஒரு வாழ்க்கையும் ஊருக்கும் உலகுக்கும் ஒரு வாழ்க்கையும் வாழ்வதுதான் உயர்ந்த பண்பாடு சிறந்த கலாச்சாரம் கடைபிடிக்க வேண்டிய நாகரிகம்

ரகசியங்கள் அத்தனையும் பாதுகாக்கப்பட்டவன் சிறந்த பண்பாடு உடையவன்.

ரகசியங்கள் அம்பலமாக்கப்பட்டவன் பண்பாடு சிதைத்தவன்

ரகசியம் கண்டுபிடிக்கப்படும்போது தெரியாமல் செய்துவிட்டேன் இனி நல்வழியில் செல்வேன் என்று சத்தியம் செய்துவிட்டு ரகசியம் காப்பதில் முன்பை விட அதிக அக்கறை கொண்டு தன் வழமையான தவறுகளில் மூழ்குபவன் பண்பாடு உடையவன்

தெரிந்தது தெரிந்துபோய்விட்டது இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்று விட்டுவிடாமல், கண்டு பிடிக்கப்பட்ட தவறுகளை மறைக்க பெரும் தவறுகளைச் செய்துகொண்டு அவற்றையும் மறைத்து பொய்ச் சத்தியங்கள் பொழிந்து வாழ்பவன் பண்பாடு காப்பவன்.

இப்படியாய் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் என்பதெல்லாம் தனிமனித வக்கிரங்களை மூடும் அழகான போர்வைகள்.

இவை இவ்வாறு இருக்க ஊர், நாடு, உலகம், மொழி, இனம் என்று எல்லாம் கடந்து ஓர் பண்பாடு உண்டு. ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தை மனதில் கொண்டு செயல்படுவதும், ஒளிவு மறைவு இன்றியும் அடுத்தவர் சுதந்திரம் காத்தும் தன் சுதந்திரம் அனுபவித்தும் வாழ்வது உயர்ந்த பண்பாடு கலாச்சாரம் நாகரிகம்.

4. உங்கள் ஊர் பற்றியும் அங்கே ஊற்றெடுத்த கவிதைகள் பற்றியும் கூறுவீர்களா?



லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்

வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்... நான் பிறந்தேன்.

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

ஏழெட்டு வயதிலேயே செவிகளில் விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற சின்னச் சின்னக் கவிதைகளும் என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு 'எழுது செல்லம்' என்று வார்த்தைகளை ஊட்டிவிட்டன. இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட வார்த்தைகளில் கிறங்கினேன். அதனால் எழுதத் தொடங்கினேன். பள்ளியில் கற்றறிந்த அரிச்சுவடி மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரை வீச்சுக்கும் இடையில் ஓர் ஆசனமிட்டு என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.

உச்ச உணர்வுகளின் தாக்கத்தில், அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு, சிந்தனா முற்றத்தில் கற்பனை ஆடைகட்டிப் பிரசவிப்பதே எனக்குக் கவிதைகளாகின. என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை, எனக்குப் பிடித்த வண்ணமாய், என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய் நான் பிடித்து வைத்தேன்.

பூவும் பொன்மின்னலும்

பூப்பூக்கும் ஓசை
அந்தப் பூவிற்கே கேட்பதில்லை

பொன் மின்னல் பூக்கும் ஓசையோ
இந்த பூமியெங்கும் கேட்கும்

பூவும் நான்
பொன்மின்னலும் நான்

ஆசை



இன்னும்
ஒரு
ஜென்மம்
கவிதைகளோடு
மட்டும்

மொழியாக்கமென்றால்...


சிந்தையில் ஊறும்
சொந்தக்
கருத்தெழுதியே
வலுப்பெற்ற
கரமிது
மொழியாக்கமென்றால்
கொஞ்சம்
முடங்கிக்கொள்கிறது