நிலம் ஒரு பாகம்
உப்புக் கடல் மூன்று பாகம்
அதுதான் பூமி

இயற்கையின் படைப்பில்
கண்ணீர்தான்
அதிகம்

அந்தக் கண்ணீரில்
நீந்தக் கற்றுக்கொண்டால்
கனவுகளைச்
சுதந்திரமாய் விரிக்கலாம்
கண்களின் திரைகளில்

கண்ணீரில் நீந்தும்போது
கவலைகள்
பின்னுக்குத் தள்ளப்படுகின்றன
வெற்றி கொள்ளும்
ஆனந்தங்கள்
முன்னுக்கு வருகின்றன

நம் கனவுகளில்
நாம் மேலும் மேலும்
முன்னேறிக்கொண்டே இருக்கிறோம்

கைகூடாக் கனவுகள்
கண்ணீரில் கரைந்துபோகின்றன

வசந்த வாழ்க்கை
நம் கைகளைப் பற்றிக்கொண்டு
கூடவே வருகிறது

ஒன்பது ஓட்டைகளால்
கழிவுகளை வெளியேற்றுகிறது உடல்
அதனால்தான்
அது ஆரோக்கியமாய் இருக்கிறது

கனவுக் கழிவுகளை மட்டும்
ஏன் சேகரித்துச் சாகிறது
இதயம்

இதயத்தின்
கோடி வாசல்களையும்
திறந்துவிடுவோம்

தொலைந்து போகட்டும்
தொலைந்தே போகட்டும்
கழிவுகள்
கருணைதான்
மனித குலத்தின்
ஒற்றைத் தேவை

கருணைதான்
மனிதர்களின்
ஒற்றை அடையாளம்

கருணைதான்
உயிர் காக்கும்
ஒற்றைக் கவசம்

கருணைதான்
ஐம்புலன்களின்
ஒற்றை மகுடம்

கருணைதான்
உறவின் நட்பின்
ஒற்றை அடிப்படை

கருணைதான்
வாழ்க்கைக்கான
ஒற்றை ஆதாரம்

சாதுர்யமாகச் செயல்படுவதுதான்
சாதனை என்று நினைக்கிறார்கள்
அது பிழை
கருணையோடு செயல்படுவதுதான்
மானுடம் காக்கும் அறிவுடைமை

கருணைதான்
இறைவன்

கருணைதான்
இதயக்கூட்டில்
இதயம் வாழ்வதற்கான
ஒரே அத்தாட்சி
கொல்லாப்பாவம்
*
சிதறியடிக்கும் சேறு 
நம் மூக்கில்
வேண்டாம்தான்
கண்டதிலும் கல்லெறிய
*
சாக்கடைப் பன்றி 
உரச வருங்கால் 
ஓடவேண்டும்தான் 
வீட்டிற்குள்
*
ஆனபோதிலும்
உள்ளறைக்குள்ளேயே
வெறிநாய் நுழைந்துவிடின்
தயங்கத்தான் வேண்டுமா
கொன்றுபோட
இன்று நான் அவனைச் சந்தித்தேன்

கண்டுகொள்ளாதவர்களின் முன்
கதறி அழுவதே
வாடிக்கையாகிவிட்டது
அவனுக்கு

காரியம் கருதி
கண் கசக்குபவர்களைக்
கண்டுகொள்ளாமல் இருக்கவும்
தெரியவில்லை

மரணத்தைச் சுமப்பவன்தான்
மனிதன்

இவனோ
நொடிக்கு நூறு என்று
செத்து செத்து விழும்
தன்னுடைய பிணத்தையே
உயிரின் எலும்புகளும்
முறிய முறிய சுமந்து திரிகிறான்

என்ன பிழை
என்று அவனை இழுத்து
கண்களுக்குள் இறங்கிப் பார்த்தேன்

அங்கே
துடியாய்த் துடித்துக்கொண்டிருந்த
பஞ்சு நெஞ்சம் ஒன்று
கனிந்துருகி
வழிவதைக் கண்டேன்

அட
இதுவா சேதி

எடுத்து எறியடா
அந்த
வெட்கமில்லா இதயத்தை
என்று
ஒரு வார்த்தையை
ஆயிரம் முறை
அசந்த உறக்கத்திலும் கேட்கும்படி
அழுத்திச் சொல்லிவிட்டு
வந்தேன்

யார் யார் எத்தனை சதவிகிதம்?

ஒரு மார்க்கத்தில் (மதத்தில்)

1. மார்க்கத்தின் அடிப்படையோடு இயைந்து எவருக்கும் தீங்கின்றி அமைதியாக வாழ்பவர்கள்.

2. மார்க்கத்தின் பெயரால் அறியாமையில் உள்ளவர்களை பயன்படுத்தி புகழ், பொருள், அதிகாரம் பெற்று ஊரை நாட்டை உலகை நாசம் செய்பவர்கள்

3. அறிந்துகொள்ளும் எண்ணமே இல்லாமல் அறியாமையில் இருக்கும் மக்கள். பயம் காரணமாக எதையும் நம்புவார்கள்.

4. மதத்தைக் கண்மூடித்தனமாகக் கண்டு தவறான அழிவுத் திசையில் வெறிபிடித்து அலையும் அடிப்படைவாதிகள்

5. எனக்கு மார்க்கம் பிறப்பால் வந்தது. மற்றபடி எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று நாட்டின் சட்ட ஒழுங்கினைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்.

இந்தப் பிரிவுகளில் நீங்கள் யார்?

அல்லது ஆறாவதாக ஒரு பிரிவா?
எத்தனை பேரிடம்
ஏமாந்தான் என்பதைப்
புலம்பித் தீர்ப்பான்
ஆண்

எத்தனை பேரிடம்
ஏமாந்தாள் என்பதை
மறைத்துப் பேசுவாள்
பெண்

ஆகையால்தான்
காதல் தோல்விக்
கவிதைகள் எல்லாம்
ஆண்களிடமிருந்தே
வந்துகுவிகின்றன 

நண்பர்கள்

கண்குட்டைகளின்
கைக்குட்டைகள்
நண்பர்கள்

ஏனோ இந்த இணையம்

வாயிலின் சின்னஞ்சிறு துவாரங்களையும்
அக்கறையாய் அடைக்க அடைக்க
அத்தனையையும் தாண்டிக்கொண்டு
வந்து வந்து விழும் வற்றா
Spam-கழிசடை மடல்கள்

விட்டேனா பாரென்று துரத்தித் துரத்தி
ரகசியத் தகவல்களை
அசந்த கணத்தில்
சாதுர்யமாய்க் களவாட
தடாலடியாய் விரட்டும்
Phishing-ஏமாற்று அஞ்சல்கள்

வெறுப்பிலும் கடுப்பிலும் கிடத்தி
எல்லையிலா எரிச்சலை ஊட்டி
வாட்டி வதைக்க
வகை வகையாய் புறப்பட்டு
தினந்தினம்
புரியாப் பனிமூட்டமாய்ச் சூழ்ந்து
கண்கட்டி உள்நுழையும்
Virus-கிருமி மடல்கள்

நிம்மதியில் அசரவிடாமல்
அக்கறையாய்க் காத்து வைத்திருக்கும்
ஆவனங்களைச் சூரையாட
சித்துமுத்து வேலைகாட்டி உள்நுழைய
வெறிகொண்டலையும்
Hackers-திருடர்கள்

இன்னும் இவைபோல் எத்தனையோ
ஏராளம் ஏராளம் என்று
பிலுபிலுத்துக் கிடந்தும்
ஏனொ இந்த
Internet-இணையம்
கசப்பதே இல்லை
மூன்று வயதில்
என்னை
என் தாயிடமிருந்து
பிரித்தார்கள

பள்ளிக்கு அனுப்பி
வைத்தார்கள்

அ எழுது என்றார்கள்
அ எழுதினேன்

ஆ எழுது என்றார்கள்
ஆ எழுதினேன்

இ எழுது என்றார்கள்
நான் அழுதுவிட்டேன்

முக்காடு
போட்டுக்கொண்டு
சிரித்த முகத்துடன்
இருக்கும்
என் அம்மாவைப் பார்த்தால்
’இ’ என்ற
உயிரெழுத்து போலவே
இருக்கும்