24

அன்பே
நீ எங்கிருக்கிறாய்

செலவே செய்யாமல்
பல்யுகக் காதலை
நான்
அப்படியே வைத்திருக்கிறேன்
பத்திரமாய்

உன் என்னை
என் உன்னில் கரைக்க
எப்போது வருவாய்

மென்மையானதா?

இல்லையன்பே இல்லை
பெருங்கொடுஞ் சுமையானது
என் காதல்

உன்
வானம் விழுந்து
பலகோடி நட்சத்திரங்களாய்
வெடித்துச் சிதறுண்டால்தான்
இந்நொடியே பூக்கத் தவிக்கும்
புதுப்பூவின் உள்வட்ட இதழ்களைவிட
மென்மையானதாகும்
என் காதல்

கொத்துக் கொத்தான கோள்களாய்
உனக்குள்
சுற்றிச் சுற்றித் திரிந்தால்தான்
இல்லாப்பொருளினும்
மெல்லியதென்றாகும்
என் காதல்

சிறுசிறு இழைகளாய்
உனக்குள்
பிரிந்து பிரிந்து பெருகினால்தான்
காற்றே இல்லா இடத்திலும்
அலையலையாய்ப் பறப்பதாகும்
என் காதல்

அன்பே
நீ எங்கிருக்கிறாய்

செலவே செய்யாமல்
பல்யுகக் காதலை
நான்
அப்படியே வைத்திருக்கிறேன்
பாதுகாப்பாய்

பூமியைக்
கழுத்தில் கட்டிக்கொண்டு
சூரியனுக்குள் விழும்
பெருங்கொடுஞ் சுமையானது
என் காதல்

பில்லியன்களில் பெண்கள் இருந்தும்
செலவே செய்யாமல்
அப்படியே வைத்திருக்கிறேன்
என் காதலை
உனக்கே உனக்காக

எப்போது வருவாய்
அன்பே

அதை நீ
இப்போதும் சொல்லாவிட்டால்
வேறு எப்போதுமே
சொல்ல வழியற்றதாய்
என்னைத்
தின்று செரித்துக்கொள்ளும்
ஜென்மங்களில் தீராத
என் காதல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்