ஸ்டெர்லைட் எனும் கருநாகம்

ரத்தினகிரி
மொத்தி அனுப்பும்
குஜராத்
குதறியனுப்பும்
கோவா
மோவாய் பெயர்க்கும்
தமிழ்நாடு மட்டும்
தத்தெடுத்து
உச்சிமுகருமா

தமிழன்
தன் தரங்கெட்டு
அரசியல் அயோக்கியன்
ஆகிவிட்டான்

அதனால்தான்
குரங்குகள் எல்லாம்
தாவிக் குதித்து

நடுவீட்டிலேயே
ஊஞ்சல் கட்டி ஆடுகின்றன

அடுக்களையில்
சிறுநீர் கழிக்கின்றன

படுக்கையறையில்
மலவாய்வு விடுகின்றன

புற்றுநோய் வளர்க்க
தமிழ்மண்ணில்
நாற்றுநடும் தினவை
யார் தந்தார் உங்களுக்கு

இருப்பது
கெடுப்பது போதாதென்று
இன்னொன்றும்
வருகிறதென்றால்
இழிச்சவாயன் தமிழனென்று
எங்கள் நெற்றியில் எழுதி இருப்பதை
நீங்கள் எப்படியோ
வாசிக்கப் பழகிக்கொண்டீர்கள்
என்று அர்த்தமா

அல்லது
நாங்கள் இன்னமும்
யோசிக்கப் பழகவே இல்லை
என்று பொருளா

யோசித்துப்
பொங்கியெழுந்த சிலரையும்
சிறையில் அடைத்தீர்கள்

இப்படிப் பூச்சாண்டி காட்டி
இன்னும் எந்த நஞ்சை
எங்கள் மீது
கக்க இருக்கிறீர்கள்

நாங்கள்
சாதிப்பற்றுச் சோதரர்கள்தாம்
அதைத் தூண்டி
எங்களைப் பிரித்தாளவும்
முடியும்தான்

ஆனால்
அதெல்லாம்
சிறுபொழுதுமாத்திரமே
என்பதை அறிவீர்களா

நீறுபூத்த நெருப்பு
மறத்தமிழன் மார்பு

அது
சிறுமைகண்டு பொங்கும்போது
விம்மித் துடித்தெழும்போது
தடுத்து நிறுத்த இத்தரணியில்
ஒரு சக்தியும் இல்லை

உங்கள் கொட்டங்களை
ஒழித்தழித்து மீட்டெடுப்போம்
தமிழ் மண்ணையும்
தமிழர்தம்
வளமிகு வாழ்வாதாரங்களையும்


தலாக் பற்றிய சுருக்கமான விளக்கம் கீழே: ஒருநாள் அமர்ந்து முழுமையாய் எழுதுவேன்

தலாக் என்றால் ‘விடுவித்தல்’ என்பது பொருளாகும்.

தலாக் கூறி, முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழலாம்.

மூன்றாவது சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது.

இதுதான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டம்.

ஒரு சந்தர்ப்பம் என்பது, சுமார் 4 மாத காலம்

குடும்ப வாழ்க்கையில் பிணக்கம் ஏற்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வருபவன் ”உன்னை தலாக் – விவாகரத்து செய்து விட்டேன்” என்று கூறினால் விவாகரத்து ஆகிவிடும்.

ஆனால் இதனால் திருமண பந்தம் – ஒப்பந்தம் முற்றாக முறிந்து விடாது.

அவனின் மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரைக் காத்திருக்க வேண்டும்.- இந்தக் காத்திருப்பும் அவள் கருவுற்றிருக்கிறாளா என்பதை அறிந்து கொள்வதற்காகவே – இந்த அவகாசத்திங்குள் கணவன், மனைவி இருவரும் எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.

அவள் கர்ப்பிணி என்றால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை திருமண ஒப்பந்தம் முறியாது என்பதை திருக்குர்அன் 65:4 வசனத்திலிருந்து விளங்கலாம்.

இரண்டுமுறை நான்கு நான்கு மாதங்கள் பிரிந்திருப்பதால் இருவரும் மனம் மாறி ஒன்று சேர்ந்துவிடலாம்.

பிரிந்திருக்கும் காலத்தில் இருவரையும் ஒன்று சேர்க்கும்பொருட்டு உறவுகள் நண்பர்கள் எல்லோரும் கலந்துரையாடுவார்கள் அறிவுரைகள் வழங்குவார்கள்.

இதை எல்லாம் கடந்து இருவரும் திருமண முறிவுக்கே தயாராகிவிட்டால், அது நடந்துவிட்டால், பிள்ளைகள் எல்லாம் கணவனின் பொறுப்புதானே தவிர மனைவியின் பொறுப்பில்லை.

அதோடு மகர் என்று கொடுக்கப்பட்ட பெண்ணின் சொத்தை அவளின் வாழ்வாதாரத்திற்காகக் கணவன் மனைவிக்குக் கொடுக்க வேண்டும்.

பின் அந்தப் பெண் மூன்றாவது தலாக்கின் சுமார் 4 மாதங்கள் முடிவடைந்த நிலையில் மறுமணம் செய்துகொள்ள இஸ்லாம் சொல்கிறது

இதில் பெண்ணுக்கு ஏதும் தீங்குள்ளதா? அல்லது ஆணுக்குத்தான் தீங்குள்ளதா?
பாரதிக்கெல்லாம் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமை பேசியவர் முகம்மது நபி அவர்கள்

1. பெண் பிள்ளைகள் பிறந்த உடனேயே புதைத்தார்கள், தடுத்துச் சட்டமே இயற்றினார்

2. பெண் பிள்ளைகளுக்குச் சொத்தில் உரிமை உண்டு என்று உலகில் முதன் முதலில் சொன்னார், சட்டமியற்றினார்

3. பெண்ணும் தனக்குப் பிடிக்காத கணவனை விவாகரத்துச் செய்யலாம் என்று அங்கீகாரம் அளித்தார்

4. தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது என்று சொன்னார்

5. வரதட்சணை கூடாது என்றும் அதற்குப் பதிலாக பெண்ணுக்கு ஆண் மகர் என்னும் காப்புத் தொகையைக் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்

6. பெண் கல்வியை வலியுறுத்தினார்

7. விவாகரத்திற்குப் பின் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பு கணவனுடையது என்று சொன்னார்

8. பெண்ணை திருமணம் செய்யாமல் சின்னவீடாய் வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொன்னார்

9. பெண்கள்மீது நடக்கும் பாலியல் வன்முறைகளை வேறோடு அழிக்கும் கடுந்தண்டனைகளை வகுத்தார்

10. விதவைகள் மறுமணம் சொர்க்கம் செல்ல சிறந்தவழி என்று வலியுறுத்தினார். விதவைகளைத் தானே மறுமணம் செய்து காட்டியும் வழிநடத்தினார்


அன்புடன் புகாரி
///1. கடவுளுக்கு உருவங்கொடுப்பது ஒருவரின் உரிமை என்பதை மறுக்கிறீர்களா? ///
இல்லை
ஆனால் அறியாமை என்று கருதுகிறேன்
///2. கடவுளுக்கு உருவம் கொடுக்கவில்லை என்போம். கடவுள் உங்கள் முன்வந்தால் எப்படி கண்டுபிடிக்கமுடியும்?///
எப்போதும் முன்னால்தானே இருக்கிறார்?
பின்னாலும் இருக்கிறார்
உள்ளேயும் இருக்கிறார்
வெளியேயும் இருக்கிறார்
ஆடையிலா இருக்கிறது பெண்விடுதலை?

கோவணம் மட்டும் கட்டி
முப்பாட்டன்
வயல் உழுதான்

அட
நீ அப்படியா என்று
முப்பாட்டி
சேலையைக் கழற்றி
வீசிவிடவில்லை

திரைப்படங்களில்
ஆல்ப்ஸ் மலையில்
குளிர்ப் பனிப்பொழிவில்
ஆணும் பெண்ணும்
ஆடிப்பாடுகிறார்கள்

அவன்
கோட்டு சூட்டு ஜாக்கெட்டில்

அவளோ
ஜட்டி பாடி வெற்றுத் தொடையில்

இது
பெண்ணின்
ஆடைச் சுதந்திரமா
ஆணின்
ஆசைச் சுதந்திரமா

சுயசிந்தனைப் பெண்டிரே
பெண் விடுதலை என்ற பெயரில்
ஆண்களின்
வணிக வக்கிர வலைகளில்
நீங்களுமா





பெண்ணின் எதிரி

பெண்ணின்
விடுதலைக் கப்பல்
ஆண்களின்
நாகரிகக் கடலில்தான்
அமைதிப் பயணம்
செல்லவியலும்

நல்ல
பண்பாளர்களாய்
வன்முறையற்றவர்களாய்
ஆணினம்
வளர்ந்தால் மட்டுமே
அப் பொன்வானில்
பெண் பிறைநிலாக்கள்
அமுத ஒளிசிந்தி
அமர்க்களமாய் நீந்தும்

ஆண்களை
நாகரிகம் மிக்கவர்களாய்
பண்பாளர்களாய்
வன்முறையற்றவர்களாய்
மாற்றுவதற்கு
எந்த ஓர் ஆணாலும்
எத்தனைக்
குட்டிக்கரணம் போட்டாலும்
இயலாது

ஆனால்
அது பெண்களுக்கோ
வெண்டைக்காய்
நறுக்குவதைப்போல
எளிதானது

எங்ஙனமெனில்
பெண்தானே
அத்தனை ஆணுக்கும் தாய்

அவள்தானே
வளர்த்தெடுக்கிறாள்
ஆண்களை இப்படி

பெண்ணின்
சுதந்திரத்திற்கு
பெண்ணேதானே
எதிரியாகிறாள்
பேடிகளா, இது தமிழ்நாடடா!

பாபர் மஸ்ஜித்
என்று நினைத்துவிட்டார்கள்
பெரியார் சிலைகளை

பாபர் மஸ்ஜிதும்
அம்பேத்கர் சிலையும்
லெனின் சிலையும்
தமிழ்நாட்டில் இருந்திருந்தால்
தெரியும் சேதி

மாணிக்க மலரினைப் போலே
மேன்மையாய் கதீஜா பீவி
மெக்கா என்னும் புனித நாட்டில்
வாழ்ந்தவர் ராணி

ஹாத்தமுந் நபியை அழைத்து
வணிகத்தைப் பேசும் பொழுதில்
கண்டநேரம் கண்ணுக்குள்ளே
காதல் உதயம்
காதல் உதயம்

வணிகமும் வெற்றியானதும்
ரசூலுல்லாஹ் திரும்பி வந்ததும்
திருமணம் பேசத் துணிந்ததே
பூமகளின் நெஞ்சமே

மாணிக்க மலரினைப் போலே
சிரியாவின் கிளர்ச்சிக்காரர்கள் யார்? அவர்களுக்கு என்ன வேண்டும். அமெரிக்க ஏன் கிளர்ச்சிக்காரர்களை ஊக்குவிக்கிறார்கள்? இஸ்ரேலுக்கு இதில் என்ன பங்கு
-நாஞ்சில் பீட்டர்

அந்த அரசியல்தான் உலக நாசத்துக்கே காரணம்

இன்று நேற்றா நடக்கிறது, அந்த உலக அரசியல் இயந்திரம் ஊர்ந்து செல்லும்போது அதனடியில் பல கோடி உயிர்கள் நசுங்கிச் சாகின்றன.

அவர்களுக்கு மதம் பொருட்டில்லை, ஆனால் மதத்தை வைத்து விளையாடுவார்கள்

அவர்களுக்கு இனம் பொருட்டில்லை ஆனால் இனத்தை வைத்து விளையாடுவார்கள்

அவர்களுக்குச் சாதி பொருட்டில்லை ஆனால் சாதியை வைத்து விளையாடுவார்கள்

பிறகு எதுதான் பொருட்டு?

யார் கொம்பன்?
யார் உலக போலீஸ்?
யார் வல்லரசு?

அது ஒன்றுதான் பொருட்டு!

அன்புடன் புகாரி